அரசியல்
அலசல்
Published:Updated:

நீரா ராடியா டேப்ஸ்... புயல் ஒன்று ‘புஸ்’ஸானது!

நீரா ராடியா
பிரீமியம் ஸ்டோரி
News
நீரா ராடியா

நீரா ராடியா தொலைபேசி உரையாடல்களை முழுமையாக வெளியிட வேண்டுமென்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

ஐ.மு.கூ-2 அரசை வீழ்த்திய கணைகளில் ஒன்று ‘நீரா ராடியா ஒலிநாடா’ விவகாரம். தற்போது, ‘எந்த முகாந்திரமும் இல்லை’ என்று, அது தொடர்பான வழக்குகள் அனைத்தும் முடித்துவைக்கப்பட்டிருக்கின்றன.

கென்யா நாட்டில், ஒரு பஞ்சாபிக் குடும்பத்தில் பிறந்த நீரா ராடியா, 1994-ல் இந்தியாவுக்கு வந்து விமான சேவை நிறுவனங்களில் ஆலோசகராக இருந்தார். ஒருகட்டத்தில், ‘லாபியிஸ்ட்’டாக மாறிய அவர், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் டீலிங்குகளை செய்து கொடுத்தார். மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் உயரதிகாரிகள், முன்னணித் தொழிலதிபர்கள், ஊடகவியலாளர்கள் என அதிகார மையங்களுடன் மிக நெருக்கமாக இருந்தார் அவர். இதனால் 2007-2009 காலகட்டத்தில், வருமான வரித்துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியைப் பெற்று நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்களை ரகசியமாகப் பதிவுசெய்தது. ஒன்றல்ல இரண்டல்ல, ஏறத்தாழ நீரா ராடியாவின் 8,000 தொலைபேசி உரையாடல்கள் அவ்வாறு பதிவுசெய்யப்பட்டன.

நீரா ராடியா டேப்ஸ்... புயல் ஒன்று ‘புஸ்’ஸானது!

2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று, மன்மோகன்சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியமைத்தது. அப்போது, அமைச்சரவை ஒதுக்கீட்டில் நீரா ராடியாவின் ‘செல்வாக்கு’ பெருமளவு பிரதிபலித்தது. அதிகார மையங்களுடன் அவர் நடத்திய தொலைபேசி உரையாடல்கள், அவர் பேசிக்கொடுத்த பல ‘பிசினஸ் டீல்’கள் அனைத்தும் 2010-ம் ஆண்டு பத்திரிகைகளில் கசிந்தன. ‘ராடியா டேப்ஸ்’ என்று குறிப்பிடப்படும் அந்த உரையாடல்கள் இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.அப்படித்தான், 2ஜி விவகாரமும் பூதாகரம் எடுத்தது. கடைசியில், அன்றைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜினாமா செய்யும் நிலைமையும் ஏற்பட்டது.

அடுத்தடுத்து, தொழிலதிபர் ரத்தன் டாடா, தி.மு.க எம்.பி கனிமொழி, ஊடகவியலாளர்கள் பர்க்கா தத், வீர் சிங்வி, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வளர்ப்பு மகன் ரஞ்சன் பட்டாச்சார்யா உட்பட பல முக்கியப் பிரமுகர்களுடன் நீரா ராடியா நடத்திய தொலைபேசி உரையாடல்கள் வெளியே கசிந்தன. ‘தனிநபர்களின் தொலைபேசி உரையாடல்கள் பத்திரிகைகளில் வெளியானது எப்படி?’ என்று தொழிலதிபர் ரத்தன் டாடா கொந்தளித்தார். ‘உங்கள் அலட்சியம்தான் காரணம்’ என்று மத்திய அரசைச் சாடினார் அவர்.

நீரா ராடியா தொலைபேசி உரையாடல்களை முழுமையாக வெளியிட வேண்டுமென்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ஒரு சீலிடப்பட்ட உறையில் அறிக்கை யைத் தாக்கல் செய்தது சி.பி.ஐ. ரத்தன் டாடா, ‘அந்தரங்க உரிமை’ கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணை நடைபெற்றபோது, நீரா ராடியா தொலைபேசி உரையாடல் பதிவுகளில் குற்றச் செயல்பாடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்தது. தற்போது, நீரா ராடியா டேப்ஸ் தொடர்பான 14 வழக்குகளும் ‘உள்ளே ஒன்றும் இல்லை’ என முடித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

காங்கிரஸ் ஆட்சியில் புறப்பட்ட புயல், யாருக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் பா.ஜ.க ஆட்சியில் கரையைக் கடந்திருக்கிறது!