Published:Updated:

நிலம் நீர் நீதி! - நிரம்பிய ஏரிகள்... பொங்கிய நன்றிகள்!

விகடன் + வாசகர் கூட்டணிக்கு வெற்றி

பிரீமியம் ஸ்டோரி
சாலமங்கலம் ஏரி, நரியம்பாக்கம் ஏரி, சிறுமாத்தூர் ஏரி என ஒவ்வோர் ஏரியும் கடல்போலத் தளும்பிக் கிடக் கிறது. சமீபத்திய ‘நிவர்’, ‘புரெவி’ புயல்கள் கொண்டுவந்து சேர்த்த மழைநீர், கரையோடு விளையாடுவது கண்கொள்ளாக் காட்சி!

கடந்த ஐந்து ஆண்டுகளாக வாசகர்களோடு கைகோத்து, விகடன் குழுமத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் `நிலம்... நீர்... நீதி!’ திட்டம் நீங்கள் அறிந்ததே. இந்தத் திட்டம் கையிலெடுக்கப்பட்ட நோக்கமே, தமிழகத்திலுள்ள அனைத்து நீர்நிலைகளும் முறையாகத் தூர்வாரப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, எதிர்காலச் சந்ததியின் நீர்த்தேவையை நூறு சதவிகிதம் உறுதிப்படுத்த வேண்டும். அத்தோடு, வெள்ளக் காலங்களில் மக்களின் வசிப்பிடங்களுக்கு ஆபத்து நிகழாமல் தடுப்பதை, தமிழக அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.

அதாவது, அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில், ஒருசில நீர்நிலைகளைச் சீரமைத்துக் கொடுக்கலாம் என்பதுதான் திட்டம். இதற்காக வாசகர்களிடம் நாம் வேண்டுகோள் வைக்க, அவர்கள் சுமார் ஒரு கோடி ரூபாயை அள்ளி வழங்கினர். அத்துடன் விகடன் குழுமத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதையடுத்து, நீர்நிலை சார்ந்த பணிகளில் பங்காற்றிவரும் நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

நரியம்பாக்கம் ஏரி
நரியம்பாக்கம் ஏரி

நூறு சதவிகிதம் திட்டங்கள் தயாரானதும், விகடன் குழுமத்தில் அறப்பணிகளுக்காக இயங்கிவரும் வாசன் அறக்கட்டளையின் மேற்பார்வையில், 2016-ம் ஆண்டு முதல் பணிகள் தொடங்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சாலமங்கலம், நரியம்பாக்கம் மற்றும் சிறுமாத்தூர் ஆகிய ஏரிகள் தூர்வாரப்பட்டு, கரைகள் சீரமைக்கப்பட்டு, பலப்படுத்தப்பட்டு போதுமான நீர் தொடர்ந்து தேக்கிவைக்கப்பட்டுவருகிறது.

விகடன் குழுமம் மற்றும் வாசகர்கள் கரம்கோத்து இதைச் சாதித்துக் காட்டியதைத் தொடர்ந்து, தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டில் குடிமராமத்துப் பணிகளைத் தொடங்கியது. தமிழகம் முழுக்கவே இத்தகைய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பெரும்பாலான ஏரிகள் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்படவே, தற்போது ஒவ்வொரு ஏரியும் கடல்போலக் காட்சியளிக்கிறது. அதேசமயம், அத்தனை ஏரிகளிலுமே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பது கவலையைக் கூட்டுகிறது. ஏரிகள் தூர்வாரப்பட்டும் அதன் முழுப்பலன் கிடைக்காமல் போய்க்கொண்டிருக்கிறதே என்பதுதான் நம் கவலையே. 2015 பெருவெள்ளத்துக்குப் பிறகும்கூட ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கும் நீர்நிலைகளைப் பார்க்கும்போது கண்ணீர்தான் பெருக்கெடுக்கிறது. இவற்றைப் பற்றி பிறகு பார்க்கலாம். முதலில், ‘நிலம்... நீர்... நீதி!’ திட்டத்தின்கீழ் சீரமைக்கப்பட்ட சாலமங்கலம், நரியம்பாக்கம், சிறுமாத்தூர் ஏரிகளின் நிலையைப் பார்த்துவிடலாம்.

சிறுமாத்தூர் ஏரி
சிறுமாத்தூர் ஏரி

பெருவெள்ள பாதிப்பைத் தொடர்ந்து, பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டே ‘நிலம்... நீர்... நீதி!’ திட்டத்தின்கீழ் தூர்வாரும் பணிகள் நடத்தப்பட்டன. 71 ஏக்கர் பரப்பளவுள்ள நரியம்பாக்கம் ஏரியில் 1.3 கி.மீ நீளமுள்ள கரைகளை அகலப்படுத்தி நான்கடி உயர்த்திக் கொடுத்தோம். ஆக்கிரமிப்பு நிகழாதவாறு கரைக்கு எதிர்ப்புறமுள்ள பகுதியில் தண்ணீர் உள்ளே வருவதற்கு வழிவிட்டு, மண்ணைக்கொண்டு எதிர்க்கரை அமைத்தோம். அது இந்த ஏரிக்கு நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது. சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்றுவருகிறது. இது குறித்துப் பேசிய நரியம்பாக்கம் கௌசல்யா, ``நாங்க 100 நாள் வேலைக்குக்கூட போகாம களையெடுக்கிற வேலைக்கு வந்திருக்கோம். அதுக்குக் காரணமே எங்க ஊரு ஏரியை நீங்க சீரமைச்சுக் கொடுத்ததுதான். அப்படியே இந்த மதகையும், கலங்கலையும் சரிபண்ணிக் கொடுத்தீங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும்’’ என்றார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் சரிசெய்யப் பட்டிருக்கும் கலங்கல் வழியே தண்ணீர் கசிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஏரியைத் தூர்வாரி சீரமைத்தபோதே நம்மிடம் சொல்லியிருந்தால் மதகு மற்றும் கலங்கல் இரண்டையும் சீரமைத்துக் கொடுத்திருப்போம். ஆனால், ‘100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் நாங்களே அதைச் செய்துகொள்கிறோம்’ என்று சொல்லியிருந்தது குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம். தற்போது ஏரி சீரமைப்பு தொடர்பான நம்முடைய பணிகளை முடித்துவிட்ட நிலையில், சுமார் 19 லட்சம் ரூபாய் செலவில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மூலமாக இந்த ஏரியின் கலங்கல் சரிசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இரண்டே மாதத்தில் அதில் நீர் கசிவதுதான் வேதனை!

140 ஏக்கர் பரப்பளவுள்ள சிறுமாத்தூர் ஏரியையும் கரைகளை அகலப்படுத்தி, உயர்த்திக் கொடுத்தோம். சிறுமாத்தூர் ஏரியின் மூலமாக நெல், சவுக்கு விவசாயம் செழித்துவருகிறது. அருகிலுள்ள விவசாயக் கிணறுகளில் தண்ணீர் நிரம்பியிருக்கிறது. ‘‘இந்த ஏரியைச் சீரமைச்சதுக்குப் பிறகுதான் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்குப் பிரச்னையில்லாம ஓட்டிட்டுப் போக முடியுது. ஊர் மக்களோட குடிநீர் தேவைக்காகக் கிணறு ஒண்ணையும் வெட்டியிருக்கிறோம். அதுல தண்ணி நிரம்பி நிக்குது. மதகிலிருந்து தண்ணி கசியுது. அதையும் சரிசெஞ்சு கொடுங்க’’ என்று கேட்டனர் கிராமத்தினர்.

சாலமங்கலம் ஏரி
சாலமங்கலம் ஏரி

இந்த ஏரியின் கலங்கலையும் மதகையும் சரிசெய்ய அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் வாயிலாக அனுமதி கோரியிருந்தோம். ஆரம்பத்தில் அனுமதி கொடுத்தவர், ஓரிரு மாதங்களுக்குப் பிறகு, ‘நாங்களே செய்துகொள்கிறோம்’ என்று அனுமதியை ரத்துசெய்துவிட்டார். ஆனால், இன்றுவரையில் கலங்கல் மற்றும் மதகு இரண்டுமே சரிசெய்யப்படவில்லை. ஏரியில் ஆக்கிரமிப்பு நிகழாதவாறு எதிர்ப்புறம் நீண்ட குழி எடுத்திருந்தோம். அதையும் மீறி சுமார் ஐந்து ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, விவசாயம் நடக்கிறது. ஏரிக்குள்ளேயே ஆங்காங்கே கிணறுகள் தோண்டி, மின் இணைப்போடு மோட்டார்கள் பொருத்தி பாசனம் செய்து விவசாயம் செய்துவருகிறார்கள்.

பொதுப்பணித்துறையின் கீழுள்ள 103 ஏக்கர் பரப்பளவுள்ள சாலமங்கலம் ஏரியையும் கரைகளை உயர்த்தி பலப்படுத்திக் கொடுத்தோம். இந்த ஏரியின் தற்போதைய நிலை குறித்து பேசிய சாலமங்கலம் கிராமத்தினர், ‘‘நீங்க அமைச்சு கொடுத்த கரையால இன்னும் 20 வருஷத்துக்குப் பிரச்னை இருக்காது. ஆக்கிரமிப்பு செய்யாம இருக்க கரைக்கு எதிர்ப்புறத்துல குழி எடுக்கப்பட்டுச்சு. ஆனா, அதையும் மீறி ஆக்கிரமிப்புகள் நடக்குது. ஏரியில தண்ணி நிரம்பி கலங்கல் வழியா வெளியேறிக்கிட்டு இருக்கு. இந்தத் தண்ணிதான் அடையாறு ஆத்துல போய்ச் சேருது. இந்த ஏரியில கலங்கலுக்குப் பக்கத்துல குப்பைகள் கொட்டப்படுது. ஏரியோட கரைகள்ல அங்கங்கே தண்ணி பாட்டில்களையும், சரக்கு பாட்டில்களையும் குடிகாரங்க போட்டுட்டுப் போயிடறாங்க’’ என்று கவலை பொங்கக் குறிப்பிட்டனர்.

வாசகர்கள் உதவியோடு விகடன் குழுமத்தின் சார்பாக மூன்று ஏரிகளையும் முழுமையாகச் சீரமைத்துக் கொடுத்தோம். தற்போது இந்த ஏரிகள், விவசாயத்துக்கும் கால்நடைகளுக்கும் பலன் தரும் வகையில் நிரம்பிக்கிடப்பதைப் பார்க்கும்போது நோக்கம் நிறைவேறிய பெருமிதம் மேலிடுகிறது. அத்தனை புகழும், விகடனின் வேண்டுகோளை ஏற்று ஒரு கோடி ரூபாயைக் குவித்த வாசகர்களையே சாரும். அதேபோல, இந்தத் திட்டத்தை விகடன் மேற்கொள்வதற்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா உடனடியாக அனுமதி அளித்ததை இங்கே கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவருடைய உத்தரவுக்கு இணங்க பொதுப்பணித் துறையின் அன்றைய செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ்., பொதுப்பணித்துறை பாலாறு படுகை செயற்பொறியாளர் பக்தவத்சலம், குஜராஜ், ராதாகிருஷ்ணன் மற்றும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உட்பட அரசு அதிகாரிகள் அனைவரும் தேவையான உதவிகளை நமக்குச் செய்து கொடுத்தனர். அத்துடன் சாலமங்கலம், நரியம்பாக்கம் மற்றும் சிறுமாத்தூர் கிராம மக்களும் நமக்கு முழுமையாக ஒத்துழைப்பு நல்கினர்.

இந்த மூன்று ஏரிகளிலும் தற்போது நிறைந்திருக்கும் நீர், இவர்கள் அனைவருக்கும் நன்றி சொன்னபடியே அலையடித்துக் கொண்டிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு