Published:Updated:

நீலகிரி: 4 மாதங்களுக்குப் பிறகு ஊட்டிக்கு வந்த மலை ரயில்! - பாட்டுப் பாடி வரவேற்ற ஊழியர்கள்

நீலகிரி மலை ரயில்
நீலகிரி மலை ரயில்

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக நீலகிரி மலை ரயில் சேவை முடக்கப்பட்டிருந்த நிலையில், புதிய தளர்வுகளின் அடிப்படையில் மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பல் சக்கர தண்டவாள அமைப்பைக்கொண்டுள்ள, யுனெஸ்கோவின் பாரம்பர்ய அந்தஸ்தைப் பெற்று நூற்றாண்டுகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த மலை ரயிலில் பயணிப்பதற்காகவே உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஆண்டு முழுக்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர். பல இடர்களுக்கு மத்தியிலும் சளைக்காமல் ஓடிக்கொண்டிருந்த இந்த மலை ரயிலை, கொரோனா ஊரடங்கு இரண்டாவது ஆண்டாக முறையாக இயங்கவிடாமல் முடக்கியது.

நீலகிரி மலை ரயில்
நீலகிரி மலை ரயில்

ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் நீலகிரியில் தோட்டக்கலை, வனத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழுள்ள அனைத்துச் சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டன. இதனால் ஊட்டியை நோக்கி சுற்றுலாப்பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இருப்பினும் மலை ரயில் சேவை தொடங்கப்படாதது பயணிகளிடம் ஏமாற்றத்தை அளித்துவந்தது. இதற்கிடையே, `மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கப்படும்’ என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டு முன்பதிவையும் தொடங்கியது.

`இனி ஊட்டி மலை ரயில் பாதியில் நிற்காது!'- புதுப்பொலிவுடன் தயாரானது நீராவி இன்ஜின்!

நான்கு மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக நேற்று காலை 100 -க்கும் அதிகமான பயணிகளுடன் மலை ரயில் குன்னூர் வந்தடைந்தது. மலை ரயிலை ரயில்வே பணியாளர்கள் பாட்டுப் பாடி உற்சாகமாக வரவேற்றனர்.

நீலகிரி மலை ரயில்
நீலகிரி மலை ரயில்

இந்த உற்சாகம் குறித்து நம்மிடம் பேசிய `ஓடும் ரயிலின் பாடும் குயில்’ என அழைக்கப்படும் டி.டி.ஆர் வள்ளி , ``நீலகிரிக்கே அடையாளம் இந்த மலை ரயில்தான், நாலு மாசமா இது இல்லாம கலகலப்பே இல்லாம, ரொம்ப கஷ்டமா இருந்தது. முடங்கிக்கிடந்த ரயிலுக்கு நாலு மாசத்துக்கு அப்புறம் பச்சைக்கொடி காட்டியிருக்காங்க. பயணிகள் எல்லாருமே மாஸ்க் சரியாப் போட்டு, இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்திக்கிட்டு இருக்கோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு