Published:Updated:

`இரண்டுமுறை மெடிக்கல் சீட் கிடைத்தும்...’ - நீலகிரி இருளர் பழங்குடி இன முதல் மருத்துவ மாணவி ஸ்ரீமதி

உறவினர்களுடன் ஸ்ரீமதி

``இரண்டு முறை தனியார் கல்லூரியில் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், பணவசதி இல்லாத காரணத்தால் சேர முடியவில்லை. வேறு எந்த படிப்பிலும் சேராமல் மூன்று ஆண்டுகளாகக் காத்திருந்தேன். யூடியூப் வீடியோக்கள் மற்றும் கோச்சிங் சென்டர் மூலமாக நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தேன்.''

`இரண்டுமுறை மெடிக்கல் சீட் கிடைத்தும்...’ - நீலகிரி இருளர் பழங்குடி இன முதல் மருத்துவ மாணவி ஸ்ரீமதி

``இரண்டு முறை தனியார் கல்லூரியில் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், பணவசதி இல்லாத காரணத்தால் சேர முடியவில்லை. வேறு எந்த படிப்பிலும் சேராமல் மூன்று ஆண்டுகளாகக் காத்திருந்தேன். யூடியூப் வீடியோக்கள் மற்றும் கோச்சிங் சென்டர் மூலமாக நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தேன்.''

Published:Updated:
உறவினர்களுடன் ஸ்ரீமதி

மலை மாவட்டமான நீலகிரியில் 6 வகையான பண்டைய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பணியர், இருளர், குறும்பர் உள்ளிட்ட இனக்குழுவினர் இன்றளவும் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். அரசின் அடிப்படை உரிமைகளைப் பெறுவதே இந்த மக்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது. பல சவால்களை எதிர்கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பழங்குடி மாணவ, மாணவிகள் சிலர் கல்வியில் கரைசேர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில்,கோத்தகிரி அருகில் உள்ள சோலூர்மட்டம் தும்பி பெட்டுப் பகுதியைச் சேர்ந்த இருளர் பழங்குடி ஸ்ரீமதி, நீலகிரி இருளர் பழங்குடி இனத்தில் முதல் மாணவராக மருத்துவம் பயில தேர்வாகியிருக்கிறார்.

ஸ்ரீமதி
ஸ்ரீமதி

இந்த சாதனை குறித்து தெரிவித்த ஸ்ரீமதி, ``அப்பா பாலன் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். அம்மா ராதா, அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். என்னை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும் என சோலூர் மட்டம் மற்றும் கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்க வைத்தார்கள். மருத்துவர் ஆக வேண்டும் என்ற‌ லட்சியத்தில் உறுதியுடன் படித்து வந்தேன்.

2019-ம் ஆண்டு 12-ம் வகுப்பை முடித்தேன். நீட் தேர்வை தொடர்ந்து எழுதினேன். இரண்டு முறை தனியார் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பண வசதி இல்லாத காரணத்தால் சேர முடியவில்லை. வேறு எந்த படிப்பிலும் சேராமல் மூன்று ஆண்டுகளாகக் காத்திருந்தேன்.

யூடியூப் வீடியோக்கள் மற்றும் கோச்சிங் சென்டர் மூலமாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தேன். நான்காவது முறையாகத் தற்போது நீட் தேர்வு எழுதி தேர்வு பெற்றேன். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. குழந்தைகள் நல மருத்துவராக வேண்டும் என்பதே விருப்பம். பழங்குடி மக்களின் மருத்துவ சேவைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே என் லட்சியம். நீலகிரியில் வாழ்ந்து வரும் இருளர் இனத்தில் முதல் முறையாக மருத்துவம் படிக்க நான் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியரின் வாழ்த்து மகிழ்ச்சியும் உத்வேகமும் கொடுத்துள்ளது" என்றார்.