Published:Updated:

நீலகிரி: `பேரன்ட்ஸ்கூட நல்லாத்தான் இருக்கேன்..!’ - தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்

உறவினர்களுடன் மணப்பெண்
உறவினர்களுடன் மணப்பெண்

மணக்கோலத்தில் மாப்பிள்ளை, மணப்பெண்ணிடம் `என்னைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதமா?’ என இரு முறை கேட்க, அந்தப் பெண் மௌனமாகவே இருந்தார். கடைசியாக மூன்றாவது முறை கேட்டபோது, `எனக்குச் சம்மதம் இல்லை’ எனக் கூறித் தடுத்தார்.

நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், கோத்தகிரி அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்து, எளிமையாகத் திருமணம் நடத்த அவர்களின் பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து மண மேடையில், மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் அமர்ந்துவிட்டனர். மணமக்களை வாழ்த்த உறவினர்களும் கூடி அமர்ந்தனர். படுகர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், படுகர் இன மக்களின் வழக்கப்படி திருமணம் நடைபெறத் தொடங்கியது.

மணப்பெண்
மணப்பெண்

அதன்படி, தாலி கட்டுவதற்கு முன் மணப்பெண்ணிடம், மணமகன் மூன்று முறை `என்னைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதமா?’ எனக் கேட்க வேண்டும். மணப்பெண் `சம்மதம்’ எனச் சொன்னால் மட்டுமே தாலிகட்ட முடியும்.

இதே போன்று இந்தத் திருமணத்திலும் மணக்கோலத்தில் மாப்பிள்ளை, மணப்பெண்ணிடம், `என்னைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதமா?’ என இரு முறை கேட்க, அந்தப் பெண் மௌமாகவே இருந்தார். கடைசியாக மூன்றாவது முறை கேட்டபோது, `எனக்குச் சம்மதம் இல்லை’ எனக் கூறி, தடுத்தார். கூடியிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைய, மண மேடையிலிருந்து எழுந்து அடுத்த அதிர்ச்சி கொடுத்தார் அந்த மணப்பெண். ஆத்திரமடைந்த பெற்றோர், மணப்பெண்ணைத் தாக்க முயன்றனர். எதற்கும் அசராத அந்தப் பெண் விரும்பிய நபரையே கரம்பிடிப்பேன் என அங்கிருந்து சென்றார்.

``அந்தப் பெண், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஓர் ஆணைக் காதலித்துவந்திருக்கிறார். அதை ஏற்காத பெண்ணின் பெற்றோர், சொந்தச் சமூகத்திலேயே திருமணம் செய்துவைக்க கட்டாயமாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதனால் கடைசி நேரத்தில் அந்தப் பெண் திருமணத்தைத் தடுத்திருக்கிறார். அந்தப் பெண்ணை, அவரின் பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல் நடு வழியில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர்" என்ற தகவல்கள் வெளியாகின்.

உறவினர்களுடன் மணப்பெண்
உறவினர்களுடன் மணப்பெண்

இதைத் தொடர்ந்து, மணப்பெண்ணின் தந்தையைத் தொலைபேசியில் தொடர்புகொண்டோம், ``ஒரு சின்னப் புள்ளிய ஊதி எதுக்கு இவ்வளோ பெருசு பண்றாங்கனு தெரியலை. என் பொண்ணுக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலை. அதை நிறுத்துறத்துக்கு அப்படிப் பேசிட்டாளே தவிர,‌ மத்தபடி எந்தப் பிரச்னையும் இல்லை. நடு ரோட்டுல எறக்கி விட்டுட்டுப் போயிட்டோம்னு சொல்றதெல்லாம் பொய். எங்க பொண்ணு எங்க வீட்ல பத்திரமா இருக்கா. அவகிட்ட போன் குடுக்குறேன். பேசுங்க..." என்றார்.

போனை வாங்கிப் பேசிய அந்தப் பெண், ``எனக்கு இந்த மேரேஜ் பிடிக்கலை. அதனால இப்படிச் சொன்னேன். இதைப் பெருசுபடுத்த வேண்டாம். எங்க பேரன்ட்ஸ்கூட நல்லாத்தான் இருக்கேன்" என‌ முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு