Published:Updated:

மேக வெடிப்பு... பெருவெள்ளம்! - பரிதவித்த நீலகிரி கிராமங்கள்... கைகொடுத்த விகடன்!

பரிதவித்த நீலகிரி கிராமங்கள்

காடுகளில் வாழும் மக்களுக்கான பொருள்களை கொண்டுசேர்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

மேக வெடிப்பு... பெருவெள்ளம்! - பரிதவித்த நீலகிரி கிராமங்கள்... கைகொடுத்த விகடன்!

காடுகளில் வாழும் மக்களுக்கான பொருள்களை கொண்டுசேர்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

Published:Updated:
பரிதவித்த நீலகிரி கிராமங்கள்

தரைப்பகுதியில் வெள்ளம் வந்தாலே திண்டாடிப் போய்விடுவோம். மலைப்பகுதியில் வெள்ளம் வந்தால் என்ன ஆகும்! நீலகிரிக்கு, மூச்சுமுட்டித்தான்போய்விட்டது.

ஆண்டின் தொடக்கத்தில் `மழையே இல்லை’ என்று மனிதர்களும் காட்டுவிலங்குகளும்கூட தண்ணீருக்காகத் தவியாய்த் தவித்த நீலகிரியில், கொஞ்சம் தாமதமாகத்தான் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை. ஆகஸ்ட் மாதம் தொடங்கிய மழை, சில நாள்களாக மொத்தமாகக் கொட்டித்தீர்த்தது. அணைகள் எல்லாம் திடீரென நிரம்பி, நீலகிரி மலைப்பகுதியே வெள்ளக் காடானது. ‘`இது மழையே அல்ல... மேகவெடிப்பு’’ என்றனர் விஞ்ஞானிகள். கொட்டித்தீர்த்த மழையால் ஏழு பேர் உயிரிழந்தனர். 5,000 குடும்பங்கள், முகாம்களுக்கு இடம்பெயர்ந்தன. குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதி மக்களின் வாழ்வே தலைகீழானது.

பரிதவித்த நீலகிரி கிராமங்கள்...
பரிதவித்த நீலகிரி கிராமங்கள்...

மனிதாபிமானம்கொண்டோர் உடனே செயலாற்றினர். அண்டை மாவட்டங்களில் இருந்து நீலகிரியை முற்றுகையிட்டன, உதவும் கரங்கள். தற்காலிக நிவாரண உதவிகளால் மக்கள் தப்பிப்பிழைத்தனர். ஆனால், மழையின் தாக்கம் அத்துடன் முடிந்துவிடவில்லை. மழைவிட்ட பிறகு வீடு திரும்பிய மக்களுக்கு, பேரதிர்ச்சிகள் காத்திருந்தன. வீட்டுக் கூரைகள் இல்லாமல், வீடே இல்லாமல், பொருள்கள் எல்லாம் வீணாகித் தவித்து நின்றனர். குறிப்பாக, ஓலைக்குடிசைகளில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்களின் வாழ்வே கேள்விக்குறியானது. தற்காலிக நிவாரணங்களைத் தாண்டிய உதவிகளுக்காகக் காத்திருந்த மக்களுக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்ட முடிவெடுத்தது, ஆனந்த விகடனின் அறத்திட்டப் பணிகளுக்காக இயங்கிவரும் வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுனாமி, தானே புயல், சென்னை பெருவெள்ளம், கஜா புயல் போன்ற பேரிடர் காலங்களின்போது எப்படி மக்களுக்கான தேவைகளைக் கேட்டறிந்து செய்தோமோ, அதேபோல் நீலகிரியிலும் பழங்குடி மக்களுக்கானத் தேவைகளைக் கேட்டறிந்து உதவ திட்டமிட்டோம். கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பழங்குடியின கிராமங்களுக்குச் சென்று, ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாக அவர்களுடைய தேவைகள் என்ன என்பதை உள்ளூர்வாசிகள் உதவியுடன் கேட்டறிந்தோம். அதை எப்படி அனைவருக்கும் சாத்தியப்படுத்துவது என்பதையும் திட்டமிட்டோம்.

பரிதவித்த நீலகிரி கிராமங்கள்...
பரிதவித்த நீலகிரி கிராமங்கள்...

கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏழு பழங்குடியின கிராமங்களைத் தேர்வுசெய்தோம். இதுமட்டுமல்லாது, பந்தலூர், எருமாடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர்வனப் பகுதிகளில் வாழும் எந்த உதவியும் சென்று சேர்ந்திராத கிராமங்களுக்கும் சென்று தேவைகளைக் கேட்டறிந்தோம். விரிவான ஆய்வுக்குப் பிறகு, மிக மிக அவசியத் தேவையாக அடுத்துவரும் மழையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பல ஆண்டுகள் தாங்கக்கூடிய தார்பாலின், கூரைகளுக்குத் தேவைப்பட்டது. பெரும்பாலான வீடுகளில் மின்வசதி இல்லை என்பதால், சோலார் விளக்குகள் தேவைப்பட்டன. இத்துடன் சேர்த்து மண்ணெண்ணெய் அடுப்பு, கம்பளிகள் என 2.50 லட்சம் மதிப்பிலான பொருள்களை 18 பழங்குடியின கிராமங்களைச் சேர்ந்த 193 குடும்பங்களுக்கு வழங்கினோம்.

காடுகளில் வாழும் மக்களுக்கான பொருள்களை கொண்டுசேர்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஒற்றையடிப்பாதைகள் மட்டுமே உள்ள சில இடங்கள்... அதுவும் இல்லாத பல கிராமங்களுக்கு பொருள்களை தலைச் சுமையாகத் தூக்கிச் செல்ல வேண்டி யிருந்தது. குறிப்பிட்ட கிராமங்களுக்கு சில கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டி யிருந்தது. பொருள்களோடு கிராமங்களை அடைந்தபோது, அந்த மக்கள் நம் அக்கறையைக் கண்டு நெகிழ்ந்து, அன்பால் அரவணைத்துக்கொண்டனர்.

குரலற்றவர்களின் குரலாக ஒலிப்பது மட்டுமன்றி, உதவி எட்டாதவர்களுக்கும் உதவிகளைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் தன் பணி என்பதை எப்போதும் உணர்ந்தே இருக்கிறான் விகடன்!