Published:Updated:

பசுஞ்சோலையை மொட்டையடித்த டிம்பர் மாஃபியா!

நீலகிரி
பிரீமியம் ஸ்டோரி
நீலகிரி

நீலகிரியில் பல ஆயிரம் காட்டு மரங்கள் கபளீகரம்

பசுஞ்சோலையை மொட்டையடித்த டிம்பர் மாஃபியா!

நீலகிரியில் பல ஆயிரம் காட்டு மரங்கள் கபளீகரம்

Published:Updated:
நீலகிரி
பிரீமியம் ஸ்டோரி
நீலகிரி

கொரோனா கொடுமையில் ஊர் உலகமே அடங்கியிருக்கும் நிலையில் நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே சத்தமேயில்லாமல் பல ஆயிரக் கணக்கான காட்டு மரங்களை வெட்டிக் கடத்தியிருக்கிறது ஒரு கும்பல்.

இயற்கை தன் காயங்களை ஆற்றிக்கொள்ளக் கிடைத்த இடைவெளியாக இந்த ஊரடங்கு பார்க்கப்பட்டாலும், மறுபுறம் வனவிலங்கு வேட்டை, வன ஆக்கிரமிப்பு போன்ற வனக் குற்றங்களும் அதிகரித்துள்ளன. இதில் இயற்கை ஆர்வலர்களையும் சூழல் போராளிகளையும் கொதிப்பேற்றும் வகையில், நீலகிரி மாவட்டத்தின் கீழ்கோத்தகிரி பகுதியில் மிகப்பெரும் காடழிப்புச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோத்தகிரியிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது கீழ்கோத்தகிரி சோலூர்மட்டம் வனப்பகுதி. மக்கள் அடர்த்தி குறைந்த இந்தப் பகுதியில் தோட்டத் தொழிலாளர்களும் பழங்குடிகளும் வாழ்கின்றனர். வழக்கமான நாள்களிலேயே இந்தப் பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை அதிகம் காண முடியாது. தற்போது ஊரடங்கு என்பதால், மக்கள் நடமாட்டம் மிகவும் சொற்பமாகவே இருக்கிறது. குறு, சிறு விவசாயிகளின் கைவிடப்பட்ட தேயிலை, காபித் தோட்டங்கள், அவற்றிலிருக்கும் சோலை மரங்கள், அருகிலேயே காப்புக்காடு, ஏராளமான காட்டுயிர்கள் எனப் பெரிதாக சிதைக்கப்படாத பகுதியாக இது இருக்கிறது.

 ராம்குமார் - தர்மராஜ்
ராம்குமார் - தர்மராஜ்

இங்குள்ள விலை மதிக்க முடியாத காட்டு மரங்கள் டிம்பர் மாஃபியாக்களின் கண்களைப் பல ஆண்டுகளாக உறுத்திவந்திருக்கின்றன. நேரம் பார்த்துக் காத்திருந்த இந்தக் கும்பல், கொரோனா ஊரடங்கைச் சாதகமாக்கி காட்டுமரங்களைக் காலி செய்திருக்கிறது.

நான்கு லாரிகள், 40 கூலியாட்கள், மரம் அறுவை இயந்திரம், டார்ச்லைட்‌ என‌ நள்ளிரவில் களமிறங்கி கண்ணில் தென்படும் மரங்களை யெல்லாம் விடிய விடிய வெட்டிச் சாய்த்து, கொண்டு சென்றிருக்கிறது. முதலில் இரவில் தொடங்கிய இந்த மரக்கடத்தல், பிறகு பகலிலேயே நடந்திருக்கிறது. பட்டா நிலம், காப்புக்காடு என எந்தப் பாகுபாடும் இல்லாமல் இவர்கள் வெட்டிச் சாய்த்ததில் இந்தப் பசுஞ்சோலையே தற்போது பொட்டல்காடாகக் காட்சியளிக்கிறது.

இந்தப் பகுதியில் பல காலமாக வாழும் பழங்குடி முதியவர் ஒருவரைச் சந்தித்துப் பேசினோம். ஆரம்பத்தில் பேசத் தயங்கியவர், பின்னர் இந்த மரக்கொள்ளைக் கும்பலின் அத்துமீறலைப் பகிர்ந்துகொண்டார்... ‘‘பகல்ல ஒரு ஜீப்ல வந்து நோட்டம் விட்டுட்டுப் போவாங்க... நைட் 10 மணிக்கு மேல கத்தி, வாள், மெஷின், வெளிச்சமான விளக்கு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வருவாங்க. நாவல், கிளிஞ்சி, பலா, வாகை இந்த மாதிரி காட்டு மரங்களைத் தேடித் தேடி வெட்டுவாங்க. விடியக்காலையில லோடு ஏத்திக்கிட்டு போயிடுவாங்க. நாங்க கொஞ்சம் குடும்பம்தான் இங்கே இருக்கோம். `வெளியே வந்தா நம்மளைக் கொன்னுடுவாங்க’னு எதையும் கேக்காம அமைதியா இருக்கோம். காட்டதிகாரிங்களும் இதைப் பெருசா கண்டுக்கலை’’ என நடுக்கத்துடன் பேசினார்.

இதுகுறித்து கோத்தகிரி ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் ராம்குமாரிடம் (தி.மு.க) பேசியபோது, ‘‘இந்தப் பகுதியில் மரக்கடத்தல் சம்பவம் அதிகரித்துள்ளது. ஊரடங்கு சமயத்தில் `அத்தியாவசியச் சேவை’ என வாகனங்களில் போலியாக ஸ்டிக்கா்களை ஒட்டிக்கொண்டு டன்கணக்கான மரங்களை வெட்டிக் கடத்தி வருகின்றனர். செக்காடு, கடசோலை, ஈரப்பனை, செடிக்கல் ஆகிய பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டாயிரத்துக்கும் அதிகமான காட்டு மரங்களை வெட்டியிருக்கிறார்கள். தேயிலைத் தோட்டங்களிலுள்ள சில்வர்ஓக் மரங்களின் கிளைகளை வெட்டுவதாகக் கூறி, காட்டு மரங்களின் கிளைகளை முதலில் வெட்டி தேயிலைத் தொழிற்சாலைகளுக்கும், பிறகு மரத்தை அடியோடு வெட்டி மர மில்லுக்கும் அனுப்புகின்றனர். தொடர்ந்து புகார் அளித்து வருகிறோம். உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம்’’ என்றார்.

பசுஞ்சோலையை மொட்டையடித்த டிம்பர் மாஃபியா!

ஆசிரியரும் காட்டுயிர் ஆர்வலருமான தர்மராஜ், ‘‘நீலகிரியில் சொந்த நிலத்தில் இருந்தாலும் மரங்களை வெட்ட அனுமதி பெற வேண்டும். பலா உள்ளிட்ட மரங்களை வெட்டுவதால் யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் நடமாடுவது அதிகரிக்கும்’’ என வேதனை தெரிவித்தார்.

இந்த மரக்கடத்தலில் வனத்துறை அலுவலர்கள் சிலருக்குத் தொடர்பு இருப்பதாகப் புகார்கள் வாசிக்கப்படுகின்றன. இதற்கேற்பதான் அந்தப் பகுதியிலிருக்கும் வனத்துறையினரின் நடவடிக்கை களும் இருக்கின்றன. அவர்களிடம் இது குறித்துக் கேட்டால், ‘‘இப்படியொரு சம்பவம் நடப்பதே எங்களுக்குத் தெரியாது. நேரில் சென்று, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறோம்’’ என‌ கடமைக்குப் பதில் அளிக்கின்றனர்.

நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசுவாமி யிடம் பேசினோம். ‘‘கீழ்கோத்தகிரி பகுதிகளிலுள்ள தனியார் பட்டா நிலத்தில் நாவல் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. தனியார் பட்டா நிலமாக இருந்தாலும் தமிழ்நாடு வனச்சட்டத்தின்படி காட்டு மரங்களை வெட்ட அனுமதியில்லை. சட்டத்தை மீறி மரம் வெட்டிய நபர்கள்மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டிருக்கிறோம். கீழ்கோத்தகிரி வனப்பகுதியில் இதுபோன்ற சில சம்பவங்கள் நடைபெறுவது உண்மைதான். இந்தப் பகுதியில் வன ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம். தொடர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றார்.

இந்த விவகாரம் குறித்து முறையாக விசாரணை நடத்தி, மரங்களை வெட்டுவதற்கு உடந்தையாக இருந்த வனத்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.