Published:Updated:

5ஆம் வகுப்பு படிக்கும் அரசன்!

சக்திவேல்
பிரீமியம் ஸ்டோரி
சக்திவேல்

ஜூலை 16-ம் தேதியன்று, சக்திவேலுக்குத் தலைமை நாட்டார் பட்டம் சூட்டும் விழா, மல்லிமடு கிராமத்திலேயே கோலாகலமாக நடைபெற்றது.

5ஆம் வகுப்பு படிக்கும் அரசன்!

ஜூலை 16-ம் தேதியன்று, சக்திவேலுக்குத் தலைமை நாட்டார் பட்டம் சூட்டும் விழா, மல்லிமடு கிராமத்திலேயே கோலாகலமாக நடைபெற்றது.

Published:Updated:
சக்திவேல்
பிரீமியம் ஸ்டோரி
சக்திவேல்

“எங்கள் பசியாற்றக் காடு இருக்கு. பட்டணம் வேண்டாம். இந்த மலைதான் எங்க நாடு. எங்க கூட்டத்தை வழி நடத்தப் புது இளவரசனும் வந்துட்டாரு’’ என்று 9 வயதுச் சிறுவன் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள், ஜவ்வாதுமலை மக்கள்.

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை நெடிதுயர்ந்த மலைகளால் இணைக்கிறது ஜவ்வாது மலைத்தொடர். அடர்ந்த மரங்களால் சூழப்பட்ட இந்த மலைத்தொடரில், பார்வைக்கு அகப்படாத நூற்றுக்கணக்கான குக்கிராமங்கள் உள்ளன.

5ஆம் வகுப்பு படிக்கும் அரசன்!

ஜவ்வாது மலையின் உள்ளாட்சி நிர்வாகம், சுதந்திர இந்தியாவுக்கு முன்னரே ஏற்படுத்தப்பட்டவை. மன்னராட்சியைப் போன்ற தனி ராஜ்ஜியம், மக்களை வழிநடத்தத் தலைமை நாட்டார், அவருக்குக்கீழ் சிற்றரசர்களைப்போன்ற துணை நாட்டார்கள் என வழிவழியாக ‘செங்கோல்’ ஆட்சியையும் பின்பற்றிவருவது வியக்க வைக்கிறது. இவற்றில், பெரும் மலைகளின் இடுக்குகளிலுள்ள ‘மல்லிமடு’ என்ற குக்கிராம ராஜ்ஜியத்தின் கீழ்தான் 36 கிராமங்கள் வருகின்றன. இந்த மல்லிமடு கிராமம், திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் தாலுகாவுக்கு உட்பட்டது.

மல்லிமடு ராஜ்ஜியத்தின் தலைமை நாட்டாராக இருந்த சின்னாண்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் திடீரென இறந்துவிட்டார். இதனால், தலைவன் இல்லாத நாடாக மல்லிமடு ராஜ்ஜியமே களையிழந்து காணப்பட்டது. தலைமை நாட்டார் பதவி என்பது அரச பரம்பரையைப் போல் வாரிசுகளால் நிர்வகிக்கப்படும் முறைதான். தலைமை நாட்டார் பதவிக்குப் பத்து வயதுக்குள்ளாகப் பட்டம் சூட்டிவிட வேண்டும். சிறுவன் வளர்ந்து 18 வயதான பின்னரே தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஐதீகம். சின்னாண்டிக்கு வெள்ளிக்கண்ணன், முத்துசாமி, பெருமாள் என மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இவர்களில், யாருக்குமே சிறு வயதில் தலைமைப் பட்டம் சூட்டப்படவில்லை. மூவருக்கும் திருமணமாகிவிட்டது.

5ஆம் வகுப்பு படிக்கும் அரசன்!

சின்னாண்டியின் திடீர் மரணம் எதிர்பாராத ஒன்று என்பதால், குழப்பமான இந்தப் பிரச்னையின் தீர்வுக்கான ஐதீக முறைப்படி காளியம்மன் கோயிலில், ‘குறி’ வைத்துக் கேட்டனர். அப்போது, சின்னாண்டியின் இரண்டாவது மகன்வழிப் பேரனான 9 வயதுச் சிறுவன் சக்திவேலுக்குத் தலைமைப் பட்டம் சூட்டலாம் என்ற தித்திப்புச் செய்தி வந்ததும், 36 கிராம மக்களும் கொண்டாட்டத்தில் குதூகலமாகினர். ஜூலை 16-ம் தேதியன்று, சக்திவேலுக்குத் தலைமை நாட்டார் பட்டம் சூட்டும் விழா, மல்லிமடு கிராமத்திலேயே கோலாகலமாக நடைபெற்றது.

36 மலைக் கிராமங்களின் துணை நாட்டார்கள் முன்னிலையில் சக்திவேலுக்குத் தலைமை நாட்டார் பட்டம் சூட்டப்பட்டு செங்கோல் வழங்கப்பட்டு அரியணையில் அமரவைக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. துணை நாட்டார்களுக்கு அடுத்த பதவிகளிலுள்ள ஊரான்கள், மூப்பன்கள் மற்றும் கிராம மக்களும் தலைமை நாட்டாரை வணங்கிச் சென்றனர்.

5ஆம் வகுப்பு படிக்கும் அரசன்!

இனி, 36 மலைக் கிராமங்களில் நடைபெறக்கூடிய அனைத்து சுப, துக்க நிகழ்வுகளிலும் தலைமை நாட்டார் என்ற முறைப்படி சிறுவன் சக்திவேல் கலந்துகொள்ள வேண்டும். நிலத்தகராறு, சாதி மறுப்புத் திருமணம் என எந்தவிதமான பஞ்சாயத்துகளாக இருந்தாலும் சக்திவேலின் தீர்ப்பே இறுதியானது. பக்குவம் வரும்வரை சக்திவேல் எடுக்கக்கூடிய அனைத்து முடிவுகள் குறித்தும் அவரின் தந்தை, பெரியப்பா, சித்தப்பா ஆகியோர் துணை நாட்டார்களுடன் கலந்துபேசிய பின்னரே அறிவிக்கவேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. தலைமை நாட்டார் செருப்பு அணியக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளும் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில், சிறுவன் சக்திவேலும் இனி செருப்பு அணிய மாட்டார்.

இப்படிப் பட்டம் சூட்டும் விஷயம் தெரிந்து, மல்லிமடு கிராமத்துக்குச் செல்ல வேலூரிலிருந்து போட்டோகிராபருடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டோம். நம்மைப் பார்த்ததும் சூழ்ந்துகொண்ட மக்கள் பேசத்தொடங்கினார்கள்.

5ஆம் வகுப்பு படிக்கும் அரசன்!

‘‘எங்களுக்கு தலைமை நாட்டார், கிராமந்தோறுமான துணை நாட்டார்கள் ஆகியோர் பிரதமர், முதல்வர்களைப் போலதான். எங்க கிராமங்கள்ல கல்யாணம், காதுகுத்துன்னு எது நடந்தாலும் பன்னி, கிடா விருந்துதான் வைப்போம். எங்க புள்ளைங்களும் இப்போ மலையை விட்டு ஊர்நாட்டுக்குப் படிக்கப் போறாங்க. ஆனாலும், எங்க மலை வாசிங்கள்லதான் கல்யாணம் பண்ணணும். மீறி, படிக்கிற இடத்துலயும், மலைக்கீழுள்ள ஊர் நாட்டுலயும் எங்க பொண்ணோ, பையனோ விரும்பிக் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒதுக்கி வச்சிருவோம். வேடுவர் சாமியைத்தான் வணங்குறோம். ஊர்ல முக்கிய முடிவு எடுக்கிறப்போ, வேடுவர் சாமிகிட்ட உத்தரவு கேட்போம்.

இங்க பாவரன், பட்டரையான், சரக்கன், கட்டியன்னு பத்துக்கும் அதிகமான வகையறாக்கள் இருக்கு. இதுல ஒரே சாதி வகையறாக்குள்ள யாரும் கல்யாணம் பண்ண மாட்டோம். பங்காளி முறையா பழகுவோம். இப்போ, முடி சூட்டப்பட்ட சக்திவேலுதான் இந்த மலைகளுக்கெல்லாம் இளவரசன். யாரும், ‘அவன், இவன்’னு மரியாதையில்லாம பேசக்கூடாது. வயசு குறைவா இருந்தாலும், அவர்தான் எங்க மலை நாட்டு ராசா.

36 கிராமங்களிலயும் யாருக்குக் கல்யாணம் நடந்தாலும், தலைமை நாட்டார் சக்திவேலுகிட்ட முகூர்த்த நேரம் சொல்லி, அவர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கணும். சக்திவேலு போய்தான் தாலி எடுத்துக் கொடுத்து கல்யாணத்தை நடத்தி வைப்பாரு. செங்கோலைத் தேவையில்லாமல் எடுக்கக் கூடாது. அது தெய்வ குத்தமாகிடும்.

தலைமை நாட்டார் எங்க போனாலும் நாற்காலியில உட்காரக்கூடாது. தரையில பாய் போடச்சொல்லித்தான் உட்காரணும். அதுதான் எங்க வழக்கமும்கூட. ஊர்த் திருவிழாவுக்கு முக்கியஸ்தரா போற தலைமை நாட்டார்கிட்ட அந்த ஊர்ல இருக்கிற பெரியவங்க முதல் சின்னவங்க வரைக்கும் வயசு வித்தியாசம் பாக்காம கால்ல விழுந்து வணங்கணும். மலையில நடக்கிற எந்தவொரு பிரச்னைக்கும் கோர்ட்டுக்கோ, போலீஸ் ஸ்டேஷனுக்கோ போகக்கூடாது. பஞ்சாயத்துல தலைமை நாட்டார் என்ன தீர்ப்புச் சொல்றாரோ, அதுக்குக் கட்டுப்பட்டே ஆகணும்’’ என்று விலாவாரியாகத் தங்கள் விதிமுறைகளை விளக்குகின்றனர்.

நம்மைப் பார்த்ததும் புன்னகைத்துக் கொண்டே அருகில்வந்து அமர்ந்த சக்திவேலிடம், ‘‘தலைமை நாட்டார்னா என்னென்னு கொஞ்சம் சொல்லுங்களேன்’’ என்றோம். ‘‘என் தாத்தாவுக்கு அப்புறம் நான்தான் இங்க பெரிய ஆளு’’ என்றுகூறி மழலைமொழி மாறாமல் சிரித்தவர், எழுந்துசென்று தன்வயதுப் பிள்ளைகளுடன் கபடி விளையாடத் தொடங்கினார்.

மலையில் அரசுத் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. அதில் இந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பு செல்கிறார் சக்திவேல். கொரோனா காரணமாக, அங்கேயும் பள்ளி மூடப்பட்டிருந்தது. ‘‘ஆந்திர எல்லையிலிருந்து ஆசிரியர் ஒருத்தர் வாரத்துக்கு ரெண்டு நாளைக்கு வருவாரு. கொஞ்ச நேரம் இருப்பாரு... அப்புறம் போயிடுவாரு’’ என்றனர் அங்கிருந்த தாய்மார்கள்.

இனி அது ராஜ்ஜியத்தின் தலைமை நாட்டார் படிக்கும் பள்ளி.