Published:Updated:

போவோமா கைலாசா... ரெடியாகிடுச்சு விசா!

நித்யானந்தா
பிரீமியம் ஸ்டோரி
நித்யானந்தா

தனது கைலாசா வலைதளத் தொலைக்காட்சியில் கடந்த வாரம் உரையாற்றிக் கொண்டிருந்த நித்தி திடீரென, ‘`ஒரு சர்ப்ரைஸ்’’ என்று பேச்சுக்கு நடுவே தனது டிரேடு மார்க் சிரிப்பை உதிர்த்தார்.

போவோமா கைலாசா... ரெடியாகிடுச்சு விசா!

தனது கைலாசா வலைதளத் தொலைக்காட்சியில் கடந்த வாரம் உரையாற்றிக் கொண்டிருந்த நித்தி திடீரென, ‘`ஒரு சர்ப்ரைஸ்’’ என்று பேச்சுக்கு நடுவே தனது டிரேடு மார்க் சிரிப்பை உதிர்த்தார்.

Published:Updated:
நித்யானந்தா
பிரீமியம் ஸ்டோரி
நித்யானந்தா

நினைத்த நேரத்தில் டிரெண்டிங் ஆகிவிடும் ஸ்டார், நித்யானந்தா. புது நாடு, புது கரன்சி, அறிவியல் உபதேசம் என சரவெடி கொளுத்திய நித்யானந்தா, சமீபத்தில் இறக்கியிருப்பது விசா அதிரடி.

தனது கைலாசா வலைதளத் தொலைக்காட்சியில் கடந்த வாரம் உரையாற்றிக் கொண்டிருந்த நித்தி திடீரென, ‘`ஒரு சர்ப்ரைஸ்’’ என்று பேச்சுக்கு நடுவே தனது டிரேடு மார்க் சிரிப்பை உதிர்த்தார். ‘`கைலாசா நாட்டுக்கு விசா வழங்கும் நடைமுறை வருகிறது. வர விரும்புபவர்கள் கைலாசா மின்னஞ்சலில் விண்ணப்பிக் கலாம். எந்தவிதக் கட்டணமும் இன்றி மூன்று நாள் விசா வழங்கப்படும். மூன்று நாள்களுக்கு மேல் விசா கிடையாது. ஆஸ்திரேலியா வரை வந்துவிட்டால் போதும். அங்கிருந்து ‘கருடா’ எனப் பெயரிடப்பட்டுள்ள கைலாசாவின் சிறிய விமானங்கள் மூலமாக எந்தக் கட்டணமும் இல்லாமல் கைலாசாவுக்கு அழைத்து வரப்படுவார்கள். அவர்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பும்வரை உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் கைலாசா நிர்வாகத்தின் சார்பாகச் செய்து தரப்படும்” என்று அறிவித்தார். அடுத்த சில நிமிடங்களில் நித்தியின் இந்த விசா வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டானது.

போவோமா கைலாசா... ரெடியாகிடுச்சு விசா!

நித்தியின் கைலாசா நாடு குறித்துப் பல்வேறு தகவல்கள் கடந்த ஒரு வருடமாக உலவிவந்தன. அவர் தென்னமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாட்டில் பதுங்கியிருக்கிறார். அந்த நாட்டில் இருக்கும் 21 தீவுகளில் ஒன்றை வாங்கப்போகிறார் என்று தகவல்கள் பலவும் பந்தி விரித்தன. ஆனால், தற்போது வெளியிட்ட வீடியோவில், தனது கைலாசா நாடு எங்கிருக்கிறது என்பதை நித்தி சூசகமாகச் சொல்லிவிட்டார். எங்குள்ளது என்பதைத் தாண்டி ‘எனது கைலாசாவிற்கு நீங்கள் விருந்தினர்களாக வரலாம்’ என்று நித்தி சொன்னதுதான் இப்போது ஹைலைட்.

நித்யானந்தா இந்தியாவிலிருந்து வெளியேறி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. இந்த ஓராண்டாக கைலாசா எங்கே இருக்கிறது என்கிற விவரங்களை வெளியிட தொடர்ந்து மறுத்துவந்தார் நித்தி. ஒருகட்டத்தில், ‘கைலாசா என்கிற நாட்டையே நித்தி உருவாக்கவில்லை. அவர் நேபாளத்தின் அருகே இருந்துகொண்டே இப்படிச் சொல்கிறார்’ என்று மத்திய உளவுத்துறையே செய்திகளைக் கசியவிட்டது. இப்போது உளவுத்துறைக்கும் சேர்த்தே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நித்தி.

கைலாசா பற்றி நித்தி இதுவரை எதுவும் சொல்லாமல் இருந்ததற்குக் காரணமும் இல்லாமலில்லை. அவருக்குக் கைலாசாவை எப்படி உருவாக்குவது என்கிற குழப்பம் இருந்துள்ளது. கரீபியன் கடல் பகுதியில் குட்டித் தீவுகள் பல உள்ளன. பணவசதி படைத்தவர்கள் யார் வேண்டுமானாலும் அங்கு தனியாக ஒரு தீவு வாங்க முடியும். அப்படி ஒரு தீவை வாங்கி அதை ஒரு தனி நாடாக அறிவிக்கவே நித்தி திட்டமிட்டார். ஆனால், எந்த நாட்டிலிருந்து தீவு வாங்குகிறோமோ அந்த நாட்டின் ஒரு பகுதியாகவே அந்தத் தீவும் இருக்கும் என்பதே சட்டம். இதனால்தான், ‘நான் வாங்கும் தீவிற்குத் தனி நாடு அந்தஸ்து வேண்டும்’ என ஐ.நா சபைக்குத் தொடர்ந்து விண்ணப்பங்கள் அனுப்பிவந்தார் நித்தி. ஆனால், நித்தியின் ஆசைக்கு வளைந்துகொடுக்கவில்லை ஐ.நா சபை. அதன்பிறகே தனது திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்.

‘நமக்கு ஒத்துவரும் ஒரு குட்டி நாட்டைத் தேர்வு செய்து, அந்த நாட்டிற்குச் சொந்தமான தீவை விலைக்கு வாங்கலாம்’ என்று நித்தியுடன் உள்ளவர்கள் ஐடியா கொடுத்துள்ளனர். அதன்பிறகு பசிபிக் கடல் பக்கம் தனது பார்வையைத் திருப்பினார் நித்தி. அவர் கண்ணில் பட்டது ‘வனாடூ’ என்கிற தீவு நாடு. இந்த நாட்டின் மக்கள்தொகையே மூன்று லட்சத்திற்கும் குறைவு. இந்த நாட்டிற்குச் சொந்தமாக 83 தீவுகள் உள்ளன. இதில் ஒரு குட்டித் தீவையே இப்போது விலைக்கு வாங்கியுள்ளது நித்தி அண்ட் கோ.

இந்தத் தீவை தனி ஆட்சிப் பிரதேசமாக அறிவிக்கும் முயற்சியில் நித்தி இறங்கியுள்ளார். நித்தியின் ஜாலம் வனாடூ அரசாங்கத்திடம் எடுபடக்கூடும். அதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. அது சுற்றுலா வணிகம். ஆம்! இப்படிச் சொல்லித்தான் வனாடூவைத் தனது வழிக்குக் கொண்டுவந்துள்ளார் நித்தி. “எனக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் இருக்கிறார்கள். நான் உங்கள் தீவினை இந்து மதத்தின் தலைமையிடமாக அறிவித்தால், உங்கள் தீவு வாடிகன் போல பிரபலமடையும். ஏராளமான பக்தர்கள் இங்கு குவிய ஆரம்பித்துவிடுவார்கள்” என்று அரசாங்கத்திற்கே அல்வா கொடுத்திருக்கிறார். இவரின் பேச்சில் மயங்கிய வனாடூ அரசு, நித்தியை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது.

அதுமட்டுமல்ல, வனாடூ அரசை வசப்படுத்த மற்றொரு அதிரடியையும் கையாண்டார் நித்தி. அது கரன்சி. சில மாதங்களுக்கு முன்பாக வனாடூ நாட்டின் வங்கிகளில் நித்தியின் அறக்கட்டளை பெயரிலும் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டது. அந்த வங்கிக் கணக்குதான் இப்போது நித்தியின் அதிகாரபூர்வ கலெக்‌ஷன் சென்டராக மாறியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தனது பக்தர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி ‘இந்து ராஜ்ஜியம் அமைய உங்களால் முடிந்த உதவிகளை இந்த வங்கிக்கணக்கிற்கு அனுப்புங்கள்’ என்று நிதி ஆதாரத்திற்கும் அடித்தளம் அமைத்துள்ளார்.

போவோமா கைலாசா... ரெடியாகிடுச்சு விசா!

‘கைலாசா நாடு’ என்று நித்தி வார்த்தைக்கு வார்த்தை சொன்னாலும், ஒரு புது நாடு உருவாவதை உலக அமைப்புகள் அங்கீகரிக்கவேண்டும். அப்படி ஒரு வாய்ப்பு கைலாசாவுக்கு இப்போது இல்லை. மற்றொருபுறம் இந்திய அரசு நித்யானந்தாவை ‘தேடப்படும் குற்றவாளி’ என்று அறிவித்துள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் தனக்கு சிக்கல்கள் வரலாம் என்பதையும் நித்யானந்தா அறிந்திருக்கிறார். இதனால் வேறு ஒரு உத்தியைக் கையில் எடுத்திருக்கிறார்.

‘நித்யானந்தா என்பவர் தனிப்பட்ட சந்நியாசி கிடையாது. அவர் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதி. இந்து ராஜ்யம் கட்டமைத்து அதன் அதிபராக இருக்கப்போகிறார். அவருக்கு டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் வழங்கவேண்டும்’ என்று வனாடூ அரசிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். சர்வதேச அளவில் மதிக்கப்படும் டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் வாங்கிவிட்டால், எந்த நாட்டிற்கு அவர் பயணம் செய்தாலும் முன்னுரிமை கிடைக்கும். சர்வதேசக் காவல்துறையால் அவரை உடனடியாகக் கைது செய்யமுடியாது.

சரி, ‘நித்யானந்தா இந்தியாவிலிருந்து எப்படி தப்பிச் சென்றார்’ என்று அவருக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டால், “2018-ம் ஆண்டு தொடக்கத்தில் ஆசிரமத்தில் நித்தி இருந்தபோது, அனைவர் முன்னிலையிலும் தனது இந்திய பாஸ்போர்ட்டைத் தூக்கித் தீயில் வீசினார். ‘எனக்கு நாடுகளைக் கடந்துசெல்ல பாஸ்போர்ட்டே தேவையில்லை’ என்று சொல்லி பலமாகச் சிரித்தார். அவர் இப்படிச் சொன்னாலும், அவருக்கு வேறு நாட்டு அடையாளத்துடன் ஏற்கெனவே பாஸ்போர்ட் தயாராக இருந்தது. இந்தியாவிலிருந்து ரகசியமாக நேபாளம் சென்று, அங்கு இவருக்காக ஏற்கெனவே தயார்செய்யப்பட்டிருந்த ஒரு கரீபியன் நாட்டு பாஸ்போர்ட் மூலம் ஈக்வடார் நாட்டிற்குச் சென்றார்” என்கிறார்கள்.

இப்போது ஆஸ்திரேலியாவிலிருந்து ‘கருடா’ என்கிற விமானத்தில் நித்தி தன் பக்தர்களைக் கைலாசா அழைத்துச் செல்லப்போவதாகச் சொல்லியுள்ளார். இதுகுறித்தும் நித்திக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். ‘`நித்திக்கு சொந்தமாக விமானமெல்லாம் கிடையாது. தற்போது ஆஸ்திரேலியாவிற்குச் சொந்தமான ஒரு தனியார் விமான நிறுவனத்தில் மூன்று சிறு விமானங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளார். அவற்றை ‘கருடா’ என்கிற பெயரில் இயக்கப்போகிறார்” என்று சொல்லி அதிரவைக்கிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நித்தி நேரடியாக இப்போது பக்தர்களைச் சந்திக்கக் காரணம் இருக்கிறது. டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் விடுமுறைக் காலமாக இருக்கும். இந்த நாள்களில் சுற்றுலா செல்லும் பயணிகளைத் தன் பக்கம் கவரவே இந்த அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் வனாடூ அரசுக்கு தனது பவரைக் காட்டப் பார்க்கிறார்.

ஆனால், ‘கைலாசா போகும் யாரும் நித்தியைச் சந்திப்பது சந்தேகமே’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். கைலாசாவில் நித்தியின் பிரசங்கம் ஒரு மணி நேரம் நடக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு நித்தி நேரடியாக வரமாட்டாராம். நித்யானந்தாவின் இருப்பிடத்தை அறிய ஏற்கெனவே இந்திய அரசு முயற்சி எடுத்துவருகிறது. இதையே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி தன்னைக் கைது செய்யும் வாய்ப்புள்ளது என்பதால், ஹோலோகிராம் எனப்படும் முப்பரிமாண பிம்ப வழியாகத் திரையில் வந்தே பக்தர்களிடம் உரையாட இருக்கிறார் நித்யானந்தா. எனவே, அவர் வனாடூவிலிருந்து பேசுகிறாரா, அல்லது கப்பலில் மிதந்துகொண்டே பேசுகிறாரா என்பது யாருக்கும் தெரியாது.

வனாடூ நாட்டில் கைலாசா இருப்பது உறுதியாகிவிட்டது. ஆனால், நித்யானந்தா கைலாசாவில் இருக்கிறாரா என்பது இன்றைக்கும் பரம ரகசியம்.