Published:Updated:

கப்பலில் கைலாசா! - கூடுவிட்டு கூடு பாயும் யுக்தி - ‘அடடே’ ஆராய்ச்சியில் நித்தி

லியானா - படங்கள்: nithyananda.org

பிரீமியம் ஸ்டோரி

எங்கே நித்தி? நித்யானந்தாவின் பக்தர்களுக்கே விடைதெரியாத கேள்வி இது. இந்திய உளவுத்துறை கண்கொத்திப் பாம்பாக கண்காணித்து வந்தாலும், நித்தியை கைதுசெய்வது அத்தனை சுலபமான விஷயமாகத் தெரியவில்லை.

கரீபியன் கடலில் உள்ள ஈக்குவடார் தீவில் நித்யானந்தா அடைக்கலமாகியிருப்பதாக ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், ‘நித்யானந்தா எங்கள் நாட்டில் இல்லை’ என்று அந்த நாட்டு தூதரகம் அதிகாரபூர்வமாகவே அறிவித்துவிட்டது. அடுத்ததாக, டிரினிடாட் டொபாகோ என்கிற தீவில்தான் நித்யானந்தா இருக்கிறார் என்று கூறப்பட்டது.

‘நித்யானந்தா எங்கே இருக்கிறார்?’ என்று இப்படி ஆளாளுக்கு ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கும் வேளையில்தான், ‘கைலாசா என்கிற தீவு, கரீபியன் கடலில் எந்த நாட்டுக்கு அருகில் இருக்கிறது?’ என்ற கேள்வியும் வலுத்தது. அதற்குப் பதில் சொல்லாத நித்யானந்தா, ‘கைலாசா இந்துக்களுக்கான தேசமாகத் திகழும்’ என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லி வந்தார். இந்த நிலையில்தான் நித்தி இருக்கும் இடம் குறித்த, திடுக்கிடும் புதிய தகவல்கள் கிடைத்திருக் கின்றன.

கப்பலில் கைலாசா! - கூடுவிட்டு கூடு பாயும் யுக்தி - ‘அடடே’ ஆராய்ச்சியில் நித்தி

‘‘இந்தியாவின் பாஸ்போர்ட் நித்யானந்தாவுக்கு எப்போதோ காலாவதியாகிவிட்டது. ஆகையால், இப்போது அவரால் சட்டபூர்வமாக வெளிநாடு களுக்குச் செல்ல முடியாது. எப்படியாவது புதிய பாஸ்போர்ட் பெற்றுவிட வேண்டும் என்று தீவிர முயற்சியில் நித்தி இருந்தபோதுதான், ஈக்குவடார் நாட்டில் உள்ள சில மாஃபியா குழுக்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது’’ என்கின்றனர் நித்யானந்தா குறித்த தகவல்களைச் சேகரித்துவரும் உளவுத் துறையினர். ‘‘நித்யானந்தா குறித்து வேறு என்னென்ன தகவல்கள் கிடைத்திருக்கின்றன?’’ என்று அவர்களிடம் விசாரித்தோம்...

‘‘ஈக்குவடார் நாட்டில் உள்ள மாஃபியாக்களின் தொடர்புகள் நித்திக்குக் கிடைத்ததும், அவர்களிடம் நித்தி வைத்த முதல் கோரிக்கை, ‘கரீபியன் கடல் பகுதியிலுள்ள குட்டி நாட்டிலிருந்து பாஸ்போர்ட் ஒன்று வேண்டும்’ என்பதுதான். இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் பணம் கைமாறியிருக்கிறது. பணம் கைமாறியதும் பேசியபடியே பெலிஸ் என்ற குட்டித் தீவின் பாஸ்போர்ட்டை நித்யானந்தாவுக்கு ஏற்பாடுசெய்து கொடுத்திருக்கிறது அந்த மாஃபியா கும்பல். அந்த பாஸ்போர்ட்டை வைத்துதான் கரீபியன் தீவில் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் விசிட் அடித்துக் கொண்டிருக்கிறார் நித்தி. எந்த நாட்டுக்குச் சென்றாலும் நித்யானந்தாவைப் பற்றி விசாரிக்கப்படுவதால், ‘நாம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சிக்கிக்கொள்ளலாம்’ என்கிற அச்சம் நித்யானந்தாவுக்கு எழுந்திருக்கிறது.

‘எந்த இடம் பாதுகாப்பாக இருக்கும்?’ என்று தீவிர ஆலோசனை நடத்தியிருக்கிறார் நித்தி. இதனையடுத்து, சிறிய அளவிலான சொகுசுக் கப்பல் ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறார். அந்தக் கப்பல்தான் தற்காலிகமாக கைலாசாவாக மாறியிருக்கிறது. சகல வசதிகளுடன் கூடிய அந்தக் கப்பலில் இருந்துதான் ‘சத்சங்’ என்று சொல்லப்படும் ஆன்மிக உரையின் ஷூட் நடத்தப்படுகிறது. அந்தக் கப்பல் தற்போது கரீபியன் கடல் பகுதியின் சர்வதேச எல்லையில் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கிறது. சர்வதேச கடல் பகுதியில் பயணிக்கும் கப்பலை, வேறு நாட்டு கப்பல் படையினர் பிடிக்க முடியாது. எளிதில் புரியும்படி சொல்ல வேண்டுமானால், சிங்கம்–2 படத்தில் டேனி என்கிற கடத்தல் மன்னன் சர்வதேசக் கடல் பகுதியில் சுற்றித் திரிவார் அல்லவா? கிட்டத்தட்ட நித்தியும் அப்படித்தான் சர்வதேசக் கடல் பகுதியில் தற்போது சுற்றிக்கொண்டிருக்கிறார்.

இந்திய உளவுத்துறை சர்வதேச அளவில் சல்லடை போட்டுத் தேடிவருவதால், எந்த நாட்டிலும் நித்தியால் நிம்மதியாக இருக்க முடிய வில்லை. அவர் வாங்கியுள்ள கைலாசா தீவை தனி நாடாக அறிவிப்பதற்கான அனுமதி கிடைப்பதிலும் இழுபறி நீடிக்கிறது. இந்திய வெளியுறவுத் துறை சமீபத்தில் ஐ.நா-விடம் இதுகுறித்த நீண்ட அறிக்கை ஒன்றையும் அளித்துள்ளதால், நித்திக்கான நெருக்கடி இன்னும் அதிகமாகியுள்ளது. தனது யூ-டியூப் உரையினை பெரும்பாலும் தனது சொகுசுக் கப்பலில் வைத்துக்கொள்ளும் நித்தி, அதன் ஒளிபரப்பை மட்டும் ஏதாதொரு நாட்டினுடைய ஐ.பி அட்ரஸிலிருந்து செய்வதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பப் பிரிவில் நிபுணத்துவம் வாய்ந்த மூன்று பேர் நித்தி யுடன் இருக்கின்றனர். அவர்கள்மூலமே கைலாசா டி.வி ஒளிபரப்பு தங்குதடையின்றி நடக்கிறது” என்றார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நித்தியின் அம்மா பெயரில் சொத்துக்கள்.!

இதற்கிடையில்தான், ‘இந்தியாவில் உள்ள நித்யானந்தாவின் சொத்துகளின் நிலை என்ன?’ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இதுகுறித்தும் உளவுத் துறையினர் சில தகவல்களைத் திரட்டியுள் ளனர். அதுகுறித்து விவரம் அறிந்த அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ‘‘நித்யானந்தாவுக்கு பெருமதிப்புள்ள சொத்துகள் இருப்பது ஏற்கெனவே நாம் அறிந்ததுதான். அதைத்தவிர தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களும் கிலோகணக்கில் இருந்தன. அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பணமாக மாற்றிவந்தனர். நித்யானந்தா அறக்கட்டளை பெயரில் இருந்த சொத்துகள் அனைத்தும், கடந்த சில தினங்களுக்கு முன்பு நித்யானந்தாவின் அம்மா பெயருக்கு மாற்றப்பட்டுள்ளன. நித்யானந்தாவின் அம்மா லோகநாயகியும் தன்னை ஒரு துறவி என்று சொல்லிக்கொள்பவர். நித்யானந்தா சொத்துக்களின் முழுவிவரமும் ரஞ்சிதா, லோகநாயகி மற்றும் கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகள்களான மா நிராமாயா, மா அச்சலா ஆகியோருக்கு மட்டுமே தெரியும். நித்தி இருக்கும் கரீபியன் தீவுக்குச் சென்றுவிட்டு, கடந்த வாரம் இந்தியா வந்துள்ளார் ரஞ்சிதா. அவர் இந்தியா வந்த பிறகுதான் அறக்கட்டளை சொத்துகளை லோகநாயகி பெயரில் மாற்றும் வேலை விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இதுமட்டுமல்லாது, பிடதி ஆசிரமத்திலிருந்த 600 பவுன் நகைகளை மோக்‌ஷ பிரியானந்தா என்பவர் மூலம் வெளியே கொண்டுசென்றிருக்கின்றனர்’’ என்றனர்.

கப்பலில் கைலாசா! - கூடுவிட்டு கூடு பாயும் யுக்தி - ‘அடடே’ ஆராய்ச்சியில் நித்தி

குழந்தைகளைக் காட்டி கரன்சி வசூல்!

நித்யானந்தாவின் ஆசிரமத்திலும், அவரின் குருகுலப் பள்ளிகளிலும் ஏராளமான குழந்தைகள் படித்துவந்தனர். ‘‘அந்தக் குழந்தைகள் சாப்பிடுவது, பயிற்சி செய்வது, மிகவும் மெலிந்து இருப்பது போன்ற புகைப்படங்களை வெளிநாட்டுப் பக்தர்களுக்கு அனுப்பி, ஏராளமான நிதியைப் பெற்றிருக்கிறார்’’ என்று குஜராத் காவல்துறையில் புகார் கொடுத்த ஜனார்த்தன சர்மா தெரிவித்திருக்கிறார். ‘‘குழந்தைகள் பெயரைப் பயன்படுத்தியே வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு வந்தது உண்மை. அதுமட்டுமல்லாது, பக்தி பிரியானந்தா என்ற பெண் பக்தர், குஜராத் மாநில தொழில் அதிபர்கள் பலரிடம் இந்தக் குழந்தைகளுக்காக 200 கோடி ரூபாய் வரை பணம் வசூல் செய்திருக்கிறார். இதற்கான ஆவணங்களை நான் திரட்டிக் கொண்டிருக்கிறேன். புட்டபர்த்தி சாய் பாபா பெயரைப் பயன்படுத்தியும் நித்யானந்தா மோசடி செய்துள்ளார்’’ என்று புகார்களை அடுக்குகிறார் ஜனார்த்தன சர்மா.

கூடுவிட்டு கூடு பாயும் யுக்தி!

சரி... நித்யானந்தாவின் இலக்குதான் என்ன? அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் சொன்ன தகவல்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன. ‘‘குண்டலினியை எழுப்புவதில் நித்யானந்தா கைதேர்ந்தவர். அவருடைய வீடியோக்களில்கூட அதுகுறித்த பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதையும்தாண்டி ‘ஏழாம் அறிவு’ என்று யோகிகளால் அழைக்கப்படும் யோக சக்தியை, தன்வயப்படுத்த வேண்டும் என்பதே அவருடைய நீண்டநாள் இலக்கு. அந்தக் காலத்தில் சித்தர்கள் இந்த யோக நிலை மூலமே, ஒரு உடலைவிட்டு மற்றொரு உடலுக்குள் செல்லும் யுக்தியைப் பெற்றனர். அவர்கள் பல ஆண்டுகள் இளமையுடன் வாழ்ந்த ரகசியமும் அதுதான் என்று முழுமையாக நம்புகிறார் நித்யானந்தா.

தனது யூ டியூப் சேனலில் தினமும் இரண்டு மணி நேரமாவது நேரலையில் பேசிவிடும் நித்யானந்தா, வாரத்துக்கு நான்கு முறையாவது குண்டலினி சக்தி எழுப்புதல் குறித்து விளக்குகிறார். என்ன உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டும், மனதை அடக்குவது எப்படி, மூச்சுப் பயிற்சியின் ரகசியங்கள் குறித்தெல்லாம் அதில் பேசுகிறார். குண்டலினி சக்தியின் அடுத்தடுத்த படிநிலைகளைக் கடந்து கூடுவிட்டு கூடு பாயும் சித்த நிலையை அடைய வேண்டும் என்பதுதான் நித்யானந்தாவின் நோக்கம்.

இதன் ஒரு பகுதியாகத்தான், தன் பெயரை மந்திரமாக உச்சரிக்குமாறு தன் பக்தர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். ஒரு பெயரை ஒரு லட்சம் முறை தொடர்ந்து உச்சரிக்கும்போது, அந்தப் பெயர் மந்திரமாக மாறிவிடும் என்பதுதான் நித்யானந்தா நம்பும் ஆன்மிகக் கணக்கு. இதற்காக நித்யானந்தா தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, ஜோதிமயம் என்கிற நிலைக்குச் செல்ல அவர் தொடர்ந்து ஆராய்ச்சி களையும் மேற்கொண்டுவருகிறார். கன்னிப்பெண்களை அதற்காக அவர் பயன்படுத்துகிறாரோ என்ற சந்தேகமும் இருக்கிறது’’ என்கிறார்கள்.

நித்யானந்தா
நித்யானந்தா

நித்தி சொல்லும் ஜோதிநிலை என்பது என்ன? ஆன்மிகவாதிகள் சிலரிடம் அதுகுறித்துக் கேட்டோம். ‘‘உடல் தனியாகவும், உயிர் தனியாகவும் இருக்கும் நிலையைத்தான் யோகத்தில் ஜோதிநிலை என்று குறிப்பிடுவர். அதாவது, தூய்மையான துறவு வாழ்வு வாழ்ந்த வர்கள் உயிருடன் இருக்கும்போதே உடலில் இருந்து ஆன்மாவை வெளியேற்றி ஜோதிமயமாகி விடுவார்கள். நித்யானந்தாவுக்கு அதெல்லாம் சாத்தியமில்லை. ஏற்கெனவே ஆன்மிகத்தின் பெயரில் பல மோசடிகளை அரங்கேற்றிய நித்யானந்தா, இப்போது கைலாசா, ஜோதிநிலை என்று புதிய மோசடிகளைக் கையிலெடுக்க ஆரம்பித்துள்ளார்’’ என்கிறார்கள்.

இந்தச் சூழலில், தன் சொத்துகளை நித்யானந்தா அபகரித்துவிட்டதாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் புகார் அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘‘விரை விலேயே நித்யானந்தா எங்களிடம் சிக்குவார். இன்டர்போல் உதவியுடன் அவரைக் கைது செய்வோம்’’ என்று அடித்துச் சொல்கின்றனர் மத்திய உளவுத்துறை அதிகாரிகள்.

நித்தியின் செயல்கள் மாயாஜாலம் என்றால், அவருடைய கைலாசா... ஒரு மர்ம தேசம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு