Published:Updated:

மூன்று நாள் அழைப்பு... முழுக்க முழுக்க இலவசம்... களைகட்டுமா கைலாசா?

படம்: nithyananda.org

பிரீமியம் ஸ்டோரி
‘‘மூன்று நாள்கள் கைலாசாவுக்கு வாருங்கள்... அனைத்தும் இலவசம்!’’ என்று அதிரடியாக அழைப்பு விடுத்து, ஒட்டுமொத்த சாமியார்கள் உலகத்துக்கே ‘ஜெர்க்’ ஏற்படுத்தியிருக்கிறார் நித்யானந்தா. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் நித்யானந்தாவின் இந்த அறிவிப்பு, இந்திய அரசுக்கு அதிர்ச்சியையும், அவரின் பக்தர்களுக்கு பரவசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எங்கே நித்தியானந்தா? கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக இந்தக் கேள்விக்கு பதிலில்லை. இந்திய உளவுத்துறைக்கே அவர் இருப்பிடம் தெரியாது என்கிறார்கள். 2018-ம் ஆண்டு குஜராத் மாநிலம், அகமதாபாத்திலுள்ள தனது ஆசிரமத்திலிருந்து நித்யானந்தா தலைமறைவானார். ஒரு வருடம் கழித்து, ‘கைலாசா’ என்கிற பெயரில் தனி நாட்டைக் கட்டமைக்கப் போவதாக அறிவித்தவர், அந்த நாடு எங்கிருக்கிறது என்ற விவரங்களைச் சொல்லவில்லை. சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று கைலாசா இணையதள பக்கத்தில் அந்த நாட்டுக்கான நாணயம், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்து அதிரவைத்தார்.

இந்தநிலையில்தான் சில நாள்களுக்கு முன்பு, தன் நாட்டுக்கு வரலாம் என்று பக்தர்களுக்கு வீடியோவில் அழைப்பு விடுத்திருக்கிறார் நித்தி. ‘‘கைலாசா விசாவுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு நீங்கள் வந்ததும், அங்கிருந்து கைலாசாவுக்குச் சொந்தமான தனி விமானத்தில் அழைத்துவரப்படுவீர்கள். ஒரு நாளுக்கு 20 பேருக்கு மட்டுமே அனுமதி. மூன்று நாள்களுக்கு மேல் கைலாசாவுக்கு விசா அனுமதியில்லை. மீண்டும் தனி விமானத்தில் ஆஸ்திரேலியாவில் இறக்கிவிடுவோம். விமானக் கட்டணம் உட்பட அனைத்தும் முற்றிலும் இலவசம்’’ என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

பசிபிக்கில் பரவசம்!

கடந்த ஓராண்டாக நித்தியின் கைலாசா நாடு குறித்துப் பல்வேறு தகவல்கள் பரவிவந்தன. அவர் கரிபீயன் கடல் தீவுகளில் இருப்பதாக முதலில் தகவல் வந்தது. இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தரப்போ, ‘நித்தி, நேபாளம் அருகிலிருந்து வீடியோ வழியாக முகத்தைக் காட்டுகிறார்’ என்றார்கள். ஆனால், தற்போதைய நித்தியின் அறிவிப்பின் மூலம் அவர் ஆஸ்திரேலியாவுக்கு அருகிலிருப்பது உறுதியாகியுள்ளது. இது குறித்து நித்தி தரப்புடன் தொடர்பில் இருப்பவர்களிடம் பேசினோம்.

‘‘தென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள வனாட்டு என்ற குட்டித் தீவில்தான் நித்தி இருப்பதாக நம்புகிறோம். இந்தத் தீவுக்குச் சொந்தமாக அதே பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குட்டித் தீவுகள் இருக்கின்றன. அதில் ஒன்றைத்தான் நித்யானந்தா விலைக்கு வாங்கியிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த மோக்‌ஷன பிரியன், நரேந்திர கைலாஷ் ஆகிய இருவர்தான் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். கடந்த ஆறு மாத காலமாக வனாட்டு அரசிடம் தொடர்பிலிருந்த அந்த இருவரும், ‘நித்திக்கு அடைக்கலம் கொடுத்தால், உங்கள் நாட்டுக்கு ஏராளமான பலன்கள் கிடைக்கும். வனாட்டுவில் சுற்றுலாத்துறையை வளர்ச்சியடையவைப்போம்’ என்று உறுதியளித்துள்ளனர். இதன் பிறகே தீவை விலைக்கு வாங்கியுள்ளனர். வசதி படைத்தவர்கள் யாரும் இது போன்ற தீவை வாங்கலாம். ஆனால், அதை நாடாக அறிவிக்க முடியாது’’ என்றார்கள்.

மூன்று நாள் அழைப்பு... முழுக்க முழுக்க இலவசம்... களைகட்டுமா கைலாசா?

வனாட்டு வங்கிக் கணக்கு!

நித்தியிடம் ஏற்கெனவே பணத்தைப் பறிகொடுத்தவர்கள் நம்மிடம், ‘‘நான்கு மாதங்களுக்கு முன்பாகவே வனாட்டு வங்கிகளில் நித்தியின் பெயரிலும், அவரது அறக்கட்டளை பெயரிலும் வங்கிக் கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன. வங்கிக் கணக்கு விவரங்களை உலகம் முழுவதுமுள்ள தன் பக்தர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பிய நித்தி தரப்பினர், ‘இந்து ராஜ்யம் அமைய உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்’ என்று கூறியுள்ளனர். நித்தியின் மீது கண்மூடித்தனமாக நம்பிக்கைவைத்துள்ள பக்தர்கள் பலரும், இப்போதும் பணத்தை அனுப்பிவருகிறார்கள். இதுபோக தன்னிடமிருந்த கிலோ கணக்கிலான தங்க நகைகள், தங்கக் கட்டிகளை விற்று, அதையும் அறக்கட்டளை வழியாக வெளிநாடுகளுக்கு நித்தி எடுத்துச் சென்றுவிட்டார். இப்போது, நித்தி கைலாசாவுக்கு வரச்சொல்லி பக்தர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதன் பின்னணியிலும் பணமே பிரதானம். அங்கு வருபவர்களிடம் கண்டிப்பாகப் பண வசூல் நடக்கும்’’ என்கிறார்கள்.

டிப்ளோமேட்டிக் பாஸ்போர்ட்!

வனாட்டு அரசிடம் நித்தி தரப்பு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளதாம். “நித்யானந்தா என்பவர் தனிப்பட்ட சந்நியாசி கிடையாது. அவர் ஒட்டு மொத்த இந்துக்களின் பிரதிநிதி. இந்து சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்து, அதன் அதிபராக இருக்கப்போகிறார். வனாட்டு தீவுப்பகுதியில் அவர் ஆஸ்ரமம் அமைத்தால், பல நாடுகளிலிருந்தும் அவரின் பக்தர்கள் வனாட்டுக்கு வருவார்கள். அது வனாட்டுவின் பொருளாதாரத்துக்கும் நல்லது. எனவே, அவருக்குத் தூதர்கள் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகளுக்கு வழங்கப்படும் டிப்ளோமேட்டிக் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்’’ என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த பாஸ்போர்ட்டை நித்யானந்தா பெற்றுவிட்டால், எந்த நாட்டுக்கு அவர் பயணம் செய்தாலும், சர்வதேசக் காவல்துறையால் அவரை உடனடியாகக் கைதுசெய்ய முடியாது. இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக இருப்பதால், இந்த யுக்தியை அவர் கையிலெடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

மூன்று நாள் அழைப்பு... முழுக்க முழுக்க இலவசம்... களைகட்டுமா கைலாசா?

டிசம்பர் டீசர்!

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் உலகத்தின் பல நாடுகளிலும் விடுமுறைக் காலமாக இருக்கும் என்பதால், டிசம்பரில் திட்டமிட்டே கைலாசாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் நித்தி என்கிறார்கள் அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். ‘‘சுற்றுலாவுக்குக் கிளம்பும் நோக்கத்திலிருப்பவர்களைத் தன் பக்கம் இழுக்கும் நித்தியின் யுக்தி இது. ஆஸ்திரேலியா வரை சொந்தமாகச் செல்லும் ஒருவரால், அதற்குப் பக்கத்திலுள்ள தீவுக்குச் செலவு செய்து போக முடியாதா? ஒரு நாளைக்கு 20 நபர்கள் மட்டுமே என்று நித்தி சொல்லியிருக்கிறார். அந்தவகையில், ஆஸ்திரேலியாவுக்குப் பலரும் குவிந்தாலும், வசதி படைத்த 20 பேர்களை மட்டுமே அவர் தேர்வுசெய்வார். இதற்காக, மூன்று சிறிய ரக விமானங்களை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்திருக்கிறார் நித்தி.

கைலாசாவுக்குச் செல்ல விசாவெல்லாம் தேவையில்லை. ஐ.நா சபை அதை ஒரு நாடாகவே அங்கீகரிக்காதபோது, அதற்கு நித்தி எப்படி விசா கொடுக்க முடியும். அவர் வாங்கியுள்ள ஒரு தீவுக்குச் சுற்றுலா செல்லலாம். அவ்வளவுதான்... நித்தியுடன் 60 முதல் 70 பேர் வரை மட்டுமே இருக்கிறார்கள்’’ என்றார்கள். அந்தத் தீவுக்குள் செல்வதற்கான நுழைவுச்சீட்டையே விசா என்று நித்தி சொல்கிறார். யாருக்கெல்லாம் அனுமதி என்கிற விவரங்கள் குறித்து நித்தி தரப்பிலிருந்து இதுவரை விளக்கப்படவில்லை. இப்போது அவரது இணையதளம் வழியாகப் பதிவு மட்டுமே செய்துகொள்ள முடியும்.

“ஒருவேளை நித்தியின் அழைப்பை ஏற்று அங்கு செல்லும் பக்தர்களுக்கு, சுமார் ஒரு மணி நேரம் வரை நித்தி பிரசங்கம் நடத்துவார்; அந்தப் பிரசங்கத்திலும் நித்யானந்தா நேரடியாக வர மாட்டார்... ‘ஆகுமென்டடு ரியாலிட்டி’ அல்லது ‘ஹோலோகிராம்’ என்று சொல்லப்படும் முப்பரிமாண பிம்ப தொழில்நுட்பம் வழியாக மட்டுமே பக்தர்களிடம் உரையாடுவார்” என்று அதிர்ச்சி கொடுக்கிறார்கள் நித்திக்கு நெருக்கமானவர்கள்.

இன்னொரு பக்கம் நித்தியின் இருப்பிடத்தை அறிய முட்டிமோதுகிறது இந்திய அரசுத் தரப்பு. ஆஸ்திரேலியாவிலுள்ள இந்திய உளவுத்துறையினர் வனாட்டுவை முற்றுகையிட்டிருக்கிறார்கள் என்கிறது மத்திய உளவுத்துறை தரப்பு. அவர்களுக்கும் சேர்த்து நித்தி பிரசங்கம் செய்வாரா அல்லது நித்தியை ‘தூக்கி வந்து’ காவல்துறை பிரசங்கம் செய்யுமா என்பதுதான் மக்களிடம் எழுந்திருக்கும் கேள்வி!

***

சவால்விடும் டெக்னாலஜி!

இந்திய அரசுக்கே சவால்விடும் வகையில் நித்யானந்தாவின் தொழில்நுட்ப வலைப்பின்னல்கள் இருக்கின்றன. `கைலாசா’ இணையதளம் எங்கிருந்து இயக்கப்படுகிறது, அவருடைய வீடியோ எந்த நாட்டிலிருந்து ஒளிபரப்பப்படுகிறது என்பதை இதுவரை தீர்மானமாகக் கண்டறிய முடியவில்லை. அவரது வீடியோ ஒளிபரப்பாகும் ஐ.பி அட்ரஸ் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டைக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரது இணையம், மின்னஞ்சல் அனைத்துமே மிகவும் சிக்கலான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளனவாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு