Published:Updated:

கைலாசாவில் காசுமழை

நித்யானந்தா
பிரீமியம் ஸ்டோரி
நித்யானந்தா

கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்

கைலாசாவில் காசுமழை

கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்

Published:Updated:
நித்யானந்தா
பிரீமியம் ஸ்டோரி
நித்யானந்தா
நித்யானந்தா, தான் சொன்னபடியே விநாயக சதுர்த்தியன்று, தனது கைலாசா நாட்டிலிருந்து அவரது ரிசர்வ் வங்கி வெளியிட்ட பொற்காசுகளைத் திரையில் காட்டி மகிழ்ந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`கால்காசு’, `அரைக்காசு’ என்று பல வடிவங்களில் தங்கத்தில் வெளியிட்டிருப்பதாக அறிவித்தார். ஊர்ப்பாசத்தில் நல்லவேளையாக அணா, அரையணா, காலணா, தம்பிடி என்று அவர் பெயர்வைக்கவில்லை.

2 கிராம், 5 கிராம், மற்றும் 11.6 கிராம் தங்கத்தில் அந்தக் காசுகள் செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார். `மின்னுவதெல்லாம் பொன்னல்ல...’ என்று நமது மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் பட்டிருந்தாலும், அட்சய திருதியை அன்று நகைக்கடைகளில் அச்சாரம் கொடுத்து வரிசையில் நிற்பவர்கள் நம் மக்கள். நித்யானந்தா வீடியோவில் காட்டியதைப் பார்த்து வாயைப் பிளந்தார்கள். தங்கத்தில் காசு உருவாக்குவதற்கும், அதில் லச்சினைகளைப் பொறிப்பதற்கும் ஓர் ஆலை தேவை.

கைது செய்யும் வாரன்ட்டைக் கையில் வைத்து அலைந்துகொண்டிருக்கும் ராமநகரம் (மைசூரு) காவல்துறையினருக்கு இன்றுவரை நித்யானந்தா எங்கிருக்கிறார் என்று தெரியாது. கர்நாடக அரசு கண்டித்த பிறகும், அவர்களால் இன்றுவரை அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், நமது ஊகங்களுக்குப் பஞ்சமில்லை. தென் அமெரிக்காவில் ஈக்விடார் நாட்டை ஒட்டியுள்ள கடலிலிருக்கும் ஒரு சிறிய தீவை விலைக்கு வாங்கி, அதைத்தான் `கைலாசா’ என்று அவர் அறிவித்ததாகக் கூறுகின்றனர்.

நித்யானந்தா
நித்யானந்தா

இவற்றையெல்லாம் காணொளியில் கண்ட நம் மக்கள், அந்த நாட்டுக்குச் செல்வதற்கு விசா கிடைக்குமா என்று வலைதளத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மதுரை ஓட்டல் அதிபர் ஒருவர், அந்த நாட்டில் தனது கிளை நிறுவனத்தை வைப்பதற்கு அனுமதி கேட்டு வலைதளத்தில் செய்தி வெளியிட்டார். அதைக் கண்ட கைலாசா அதிபர், தனது நாட்டில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் மதுரை மக்களுக்கு முதலிடம் அளிக்கப்படும் என்று பதிலளித்து, செய்திகளின் சுவையை அதிகப்படுத்தியுள்ளார்.

இவையெல்லாம் ஒரு பக்கமிருக்க, `இந்தியக் குடியுரிமை பெற்ற ஒருவர், வெளிநாட்டுக்குச் சென்று (அது சொந்தத் தீவாக இருப்பினும்), அவரால் காசு மற்றும் நோட்டுகளை வெளியிட்டு சுற்றுக்குவிட முடியுமா?’ என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

இந்தியாவில் நுழைந்தவுடன் கிழக்கிந்திய கம்பெனி தனது வியாபாரத்துக்கு இங்கிலாந்து நாட்டுப் பணத்தையே பயன்படுத்தியது. பின்னர் அரசியல் அதிகாரத்தை மெள்ள மெள்ளக் கைப்பற்றி வரும் வேளையில், 1822-ல் `இந்தியா காகித கரன்சி சட்ட’த்தை உருவாக்கினர். அதன் மூலம் கரன்சி நோட்டுகளைக் காகிதத்தில் அடித்து, இந்தியாவில் வெளியிட்டுக்கொள்ள முடிந்தது.

1852-ல் பிரிட்டிஷ் இந்தியா தனது காலனி நாட்டின் முழு அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்றியது. விக்டோரியா மகாராணி தன்னை இந்நாட்டின் அரசியாக முடிசூட்டிக்கொண்டார். பிறகு, இந்த நாட்டின் பெயரிலேயே காசுகளையும் கரன்சிகளையும் வெளியிடத் தொடங்கினார்கள். சென்னையில் ‘தங்கசாலை’ என்று இன்று அழைக்கப்படும் பகுதியில்தான் அரசின் நோட்டுகள் அச்சடிக்கும் ஆலை இருந்தது. இதுபோல் மும்பையிலும் கல்கத்தாவிலும் தங்கச் சாலைகள் (மின்ட்) ஏற்படுத்தப்பட்டன. இவற்றை வெளியிடுவதற்காக இன்றைய ரிசர்வ் வங்கியின் முன்னோடியான இம்பீரியல் பேங்க் ஏற்படுத்தப் பட்டது.

தனிநபர்கள் இந்த நாணயங்களையும் நோட்டு களையும் தாங்களே உருவாக்கி கள்ளப்பணத்தை உலவவிட்டால் என்னவாகும்? அது மாட்சிமை தாங்கிய மகாராணியின் சொந்த தேசத்தில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே, கள்ளநோட்டு தயாரிப்பவர்களை, விநியோகிப்பவர் களைத் தண்டிக்க வேண்டும். ஆகவே, இந்தியாவில் 1860-ல் புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தில், `அத்தியாயம் 12’ என்ற தலைப்பில், (31 பிரிவுகள் கொண்ட) தண்டிக்கும் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. இதில், நோட்டு களையும் காசுகளையும் அச்சடித்து புழக்கத்தில் விடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுப்பதற்குச் சட்டம் வழிவகுத்தது. இது தவிர பிரிவுகள் 466-லிருந்து 469 வரை, 471-லிருந்து 474 வரையுள்ள பிரிவுகளும் இதையொட்டிய குற்றங்களைத் தடுப்பதற்கு உருவாக்கப்பட்டன.

கைலாசாவில் காசுமழை

இந்தியாவின் காசுகளையும் ரூபாய் நோட்டு களையும் தாங்களாகவே வெளியிடுபவர்கள், விநியோகிப்பவர்கள், அதைக் கைவசம் வைத்திருப்பவர்கள்... இவர்களை மட்டும்தான் தண்டிக்க முடியும். அதேசமயத்தில், வெளிநாட்டுப் பணங்களை இந்தியாவில் தயார்செய்து புழக்கத்தில்விட முயல்பவர்களை இப்பிரிவுகளில் தண்டிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஆங்கிலேய அரசுக்கு அச்சம் ஏற்பட்டது. ஏனென்றால், இங்கிலாந்து நாட்டு நோட்டுகளை இந்தியாவில் அச்சடித்து, அதை பிரிட்டனில் புழக்கத்தில் விட்டால் அதுவும் ஆபத்து... உடனே விழித்துக்கொண்டு 1899-ல் சட்டத் திருத்தத்தை செய்தார்கள். இச்சட்டத்தின் கீழ், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் குற்றமிழைத்தாலும் இந்திய நீதிமன்றங்கள் அக்குற்றத்தை விசாரித்து தண்டனை அளிக்க முடியும்.

அமெரிக்க டாலர் நோட்டுகளை மத்தாய் வர்கீஸ் தலைமையில் தயார்செய்த கள்ளப்பணக் கும்பலை கேரள போலீஸார் கைது செய்து வழக்கு தொடுத்தனர். விசாரணை நீதிமன்றமும், கேரள உயர் நீதிமன்றமும் ‘அவர்கள் இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கவில்லை. எனவே, இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் தண்டிக்க முடியாது’ என்று விடுதலை செய்தனர். அது மட்டுமன்றி தங்களது தீர்ப்பில், ‘உலகத்திலேயே கள்ளநோட்டை அச்சடித்து வெளியிடும் நபர்களுக்கு இந்தியாதான் சொர்க்கம்’ என்றும், ‘உரிய சட்டப் பிரிவுகள் இல்லாதது’ குறித்து வருத்தத்தையும் தெரிவித்தனர்.

கேரள அரசு தொடுத்த மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றத்தைக் கடுமையாக விமர்சித்ததுடன், ‘இந்தியாவின் சட்டப் பிரிவுகள் 489A முதல் 489E வரை உள்ள பிரிவுகளை உயர் நீதிமன்றம் பார்க்கத் தவறிவிட்டது’ என்றும், ‘அப்பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நோட்டுகள் என்பதை `இந்திய நோட்டுகள்’ என்று தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது’ என்றும் தங்கள் தீர்ப்பின் (1986) மூலம் ஒரு குட்டுவைத்தனர்.

1860-ம் வருட இந்திய தண்டனைச் சட்டத்தில், கள்ளநோட்டு மற்றும் ஃபோர்ஜரி நோட்டுகளை அடிப்பவர்களுக்கான தண்டனை பற்றி கிட்டத்தட்ட 45 பிரிவுகள் இயற்றப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்கும்போது, காலனி அரசு கள்ளநோட்டுப் பிரச்னையில் எவ்வளவு பயம் கொண்டிருந்தது என்பது தெரிகிறது. கள்ளநோட்டுப் புழக்கத்தால் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முடியும் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்துகொண்டதும், புதுப்புதுச் சட்டங்களும் இயற்றப்பட்டன.

1960-களில் தமிழ்நாட்டில், முதன்முதலில் கள்ளநோட்டுப் பணப்புழக்கம் இருப்பது பற்றி கேள்விப்பட்டபோது மக்கள் அச்சப்பட்டார்கள். அரசு அப்போது புதிதாக அறிமுகப்படுத்தியிருந்த 2 ரூபாய் நோட்டை ஆயிரக்கணக்கில் வெளியிட்ட ‘கோவை கிருஷ்ணன்’ கைது செய்யப்பட்டார்.

1973-ம் வருட வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி, எவரும் ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமல் வெளிநாட்டுப் பணத்தை அனுமதியில்லாமல் இங்கு கொண்டுவர முடியாது. இருப்பினும், கார்கில் யுத்தத்தின்போது (1999) பாகிஸ்தானில் தயார்செய்யப்பட்ட இந்திய கரன்சி நோட்டுகள் புழக்கத்தில்விடப்பட்டன. அவை தீவிரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த செய்தியையொட்டி, நாட்டில் பல சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

தேசியப் புலனாய்வு முகமையின் (NIA) கீழ், தீவிரவாத நிதி மற்றும் போலி நோட்டுகள் தடுக்கும் பிரிவு உருவாக்கப்பட்டது. சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக ஏற்கெனவே நிலுவையிலிருந்த 1967-ம் வருடத்திய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்கும் சட்டம், 2013-ல் திருத்தப்பட்டு புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டன. அச்சட்டத்தின் 15-வது பிரிவில், பொருளாதாரப் பாதுகாப்பு பற்றியும், கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது குற்றமாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. சாதாரண கிரிமினல் குற்றமாக இருந்த கள்ளநோட்டு அடித்தல், இப்போது தேசவிரோதக் குற்றமாக மாற்றப்பட்டதுடன், கடுமையான தண்டனைகள் விதிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இச்சூழ்நிலையில்தான் கைலாசாவில் இருப்பவர், தனது சொந்த ரிசர்வ் வங்கி மூலம் காசுகளைத் (அது தங்கமாக இருப்பினும்) தயாரித்து, புழக்கத்தில்விடப்போவதாக அறிவித்திருக்கிறார். இது கடும் குற்றமாகும் என்பதை நம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தேசவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்துஅறிவுஜீவிகளை ஓர் ஆண்டுக்குமேல் சிறையில்வைத்திருக்கும் மத்திய அரசு, கைலாசா அதிபர்மீது நடவடிக்கை எடுக்க முன் வருமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism