Published:Updated:

‘இசையால் வசமாகும் தெய்வம்’... இசைப்பேரொளி நித்யஸ்ரீ மகாதேவன்

கடவுள் நாத வடிவானவர். சாம கானத்தின் தலைவன் ஈசன். அவரின் திருமைந்தர் முருகன்.

பிரீமியம் ஸ்டோரி
`முருகா' என்று அழைத்தாலே குழைந்து ஓடிவரும் குழந்தை தெய்வம் முருகன். நாமாவளிப் பிரியரான முருகன், நாம் வேண்டியதை மட்டுமல்ல, நமக்குத் தேவயான இன்னும்பல வரங்களையும் கேட்காமலேயே அருளும் வள்ளல்.

அவரை இசையால் பாடி அழைத்து வணங்கினால் எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும்; சகல தடைகளும் பயங்களும் நீங்கும். தேவசேனாபதியான அவரைத் துதித்துத் திருப்புகழைப் பாடினால் போதும்; எல்லா வினை களும் நீங்கிவிடும் என்பது கண்கூடான உண்மை.

கடவுள் நாத வடிவானவர். சாம கானத்தின் தலைவன் ஈசன். அவரின் திருமைந்தர் முருகன். ஆக, அவரை இசையால் வழிபட்டு வசமாக்கிய அருளாளர்கள் அநேகம். சிவபக்தரான நக்கீரரையும் தன்பாற் ஈர்த்து தன்னை யும் பாடவைத்தவராயிற்றே முருகப் பெருமான்.

‘இசையால் வசமாகும் தெய்வம்’... இசைப்பேரொளி நித்யஸ்ரீ மகாதேவன்

அருணகிரிநாதரின் திருப்புகழை எடுத்துக்கொள்ளுங்கள்... சந்தக்கவி களாலான அந்த அருள்ஞானப் பொக்கிஷத்தை `தமிழ் வேதம்' என்றே சிறப்பிக்கலாம். ஆக. இசையோடு திருப்புகழ் பாடி வழிபடுவது விசேஷம்.

கர்நாடக சங்கீதத்தின் சிறப்பே பக்தி ரசம்தான். கடவுளை எண்ணி கசிந்து பாடப்படும் பாடல்களால் பாடுபவரும் கேட்பவரும் பரமானந்த நிலையை எட்டி கடவுளின் அருளைப் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

ஆம்! பக்தி மார்க்கத்தில் இசை வழிபாடு முக்கியமானது. இசையில் தேறிய பெரும் கலைஞர்கள் மட்டுமே பாட வேண்டும் என்றில்லை... எல்லோருமே தங்களுக்குத் தெரிந்த அளவில் பாடி வணங்கலாம். ஆனால் பாட்டோ, ஸ்லோகமோ பிழையில்லா மல் பாடுவது அவசியம்.

அதனால் நல்ல முறையில் உச்சரித்து பதம் பிரித்து பாட தெரிந்துகொண்டு பூஜையில் பாடவேண்டும். மொத்தத்தில் பக்தியும் அர்ப்பணிப்பும்தான் வழிபாட்டில் பிரதானம்.

என் குரல் வளத்துக்குக் காரணம் என் முன்னோர்கள் செய்த தவப் பயன், கடவுளரின் பரிபூரண ஆசி, என்னுடைய பயிற்சி என எல்லாமுமே காரணமாக அமைந்தன. முக்கியமாக என் ரசிகர்கள் அளிக்கும் ஆதரவும் உற்சாகமும் என்னை இன்னும் பொறுப்போடும் கவனத்தோடும் பாடவைக்கின்றன என்பேன்.

‘இசையால் வசமாகும் தெய்வம்’... இசைப்பேரொளி நித்யஸ்ரீ மகாதேவன்

பெரிய இசை ஜாம்பவான்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்தேன். அதனாலேயே பேசத் தொடங்கும்போதே பாடவும் தொடங்கிவிட்டேன். தந்தை வழிப் பாட்டி கானசரஸ்வதி டி.கே.பட்டம்மாள். தாய் வழிப் பாட்டனார் மிருதங்க மேதை கலியுக நந்தி என்று போற்றப்படும் பாலக்காடு மணி ஐயர். என் பாட்டியின் சகோதரர் சங்கீத கலாநிதி டி.கே.ஜெயராமன். என் அம்மா பாடகி ஸ்ரீமதி லலிதா சிவகுமார். என் அப்பா மிருதங்க வித்வான் சிவகுமார்.

இப்படி என் குடும்பம் முழுக்கவே இசை மாமேதைகள் நிறைந்து என்னை வழி நடத்தியதால், இயல்பாகவே இசை எனக்கு வழக்கமானது. அதேபோல், பாரம்பர்ய குடும்பத்தில் வளர்ந்ததால் பக்தியும் எனக்கு இயல்பானதாக மாறிவிட்டது.

வழிபாட்டில், தனிப்பட்ட விருப்பமான கடவுள் என்று குறிப்பிட்ட தெய்வம் என்றில்லை... ஒவ்வொரு செயலுக் கும் ஒவ்வொரு வேண்டுதலுக்கும் என எல்லா தெய்வங்களையும் வணங்குவேன். ஆனாலும் அடிக்கடி உச்சரிப்பது முருகப் பெருமானின் திருநாமத்தையே.

‘இசையால் வசமாகும் தெய்வம்’... இசைப்பேரொளி நித்யஸ்ரீ மகாதேவன்

நான் மிக விருப்பத் துடன் தெய்வங்களுக் குச் சமர்ப்பிக்கும் நைவேத்தியம் பால் பாயசம். பால் மணம் பொங்கப் பொங்க பால் பாயசம் செய்து படைப்பேன்.

எல்லா கடவுளருக்கும் உகந்த இந்த நைவேத்தியம், செய்வதற்கும் எளிமையானது. சின்ன விசேஷம் என்றாலும் இதைச் செய்து படைப்பது என் வழக்கம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்கெங்கோ இருக்கும் கோயில்களுக்கு எல்லாம் சென்று தரிசிக்கும் பக்தர்களைக் கண்டு சிறுவயதில் வியந்து போவேன். நான் பிரபலமான பாடகி ஆனதும் இந்தியாவெங்கும் பல ஆலயங்களுக்கு, பாடுவதற்காகவே போனதுண்டு. பெரும்பாலும் பலரும் பயணிக்க முடியாத பல அபூர்வ தலங்களுக்குக் கூட நான் போய் பாடியது உண்டு.

அடிக்கடி போகும் ஆலயங்கள் என்றால்... மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், ஆழ்வார் பேட்டை ஆஞ்சநேயர் கோயில், வீட்டின் பக்கத்திலேயே இருக்கும் விநாயகர் கோயில்!

‘இசையால் வசமாகும் தெய்வம்’... இசைப்பேரொளி நித்யஸ்ரீ மகாதேவன்

இப்படி கோயில் தரிசனம், வழிபாடு என்று நான் ஈடுபட்டாலும் பாடும் தருணத்தில், மெய்யுருக இசையால் இறைவனை ஆராதிக் கும் வேளையில், மனத்தில் இறையின் ஆளுமை நிறையும் பாருங்கள்... சிலிர்ப்போடும் பரவசத்தோடும் மானசீகமாக அந்த இறை தரிசனத்தைப் பலமுறை கண்டிருக்கிறேன்.

பண்டிகைகளும் இறையோடு நம்மை மிக நெருங்கச் செய்யும்.

நவராத்திரி பூஜை எனக்குப் பிடித்தமான பண்டிகை. கலாதேவியின் கடாட்சம் அருளும் அந்தப் பண்டிகை, கலைஞரான எனக்கு விசேஷம் என்றே சொல்வேன். அம்பிகையும், சரஸ்வதியும், லட்சுமியும் இணைந்து அருளும் அந்த நாள்களை தினமும் நெகிழ்ச்சியோடு இசையும் கொண்டாட்டமுமாக அனுபவிப்போம்.

`கடமையைச் செய், பலனை எதிர்பாராதே' என்ற கீதையின் சாரம் எனக்கு பிடித்த வாசகம்.

அன்றாட நித்ய கடமைகளை அர்ப்பணிப்போடு ஆண்டவனை எண்ணி செய்வோம்; அதற்கான நிச்சய பலனை அவரே அளிப்பார் என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உண்டு. `இது கிடைக்கும், அது கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டே வேலை செய்வது கூடாது' என்பதைச் சொல்லும் நீதி வாசகம் அது.

என் தாத்தா, பாட்டி காலத்தில் விசேஷ பண்டிகை நாள்களில் செய்த அனுஷ் டானங்கள், வழக்கங்களை எல்லாம் இப்போதும் அதே முறையில் அதே அளவில் பின்பற்ற இயலவில்லை. என்றாலும், அர்ப்பணிப்புடன் கூடிய பக்தி-வழிபாடு குறித்த அவர்களின் வழிகாட்டல்களைக் கடைப்பிடித்து வருவதில் திருப்தியே.

தூய்மையான பக்தி வெறும் சடங்குகளால் மட்டும் நிறைவடைவதில்லை. மகான்கள் எத்தனையோ பேர் கசிந்துருகிக் கண்ணீர் வடித்துப் பாடிய பாடல்களைப் பண்டிகை நாள்களில் கொஞ்ச நேரம் பாடினாலே, நான் அந்த பண்டிகையைக் கொண்டாடிய மனநிறைவை அடைந்துவிடுவேன். கூடுமான வரை அடுத்தவருக்கு உதவும் நிறைவில், ஆண்டவனைக் கொண்டாடிய நிம்மதியை பெற்றுவிடுவேன்.

எத்தனையோ பெரியவர்கள் வழிகாட்டிய வழியில், என்னால் முடிந்த அளவு கடவுளை ஆராதிக்க முயல்கிறேன். நம் ஸநாதன தர்மம் எதையும் கண்டிப்புடன் திணிப்பதில்லை. ஆனால் ஒவ்வொரு பண்டிகைக்கும் அதன் செயல்களுக்கும் பின்புலத்தில் நிச்சயம் ஒரு அர்த்தமிருக்கும். எனவே பண்டிகையைக் கொண்டாடுவது, நியமப்படி வழிபாடு செய்வது எல்லாவற்றையும் என் மனம் நிறைவு கொள்ளும் அளவுக்கு தர்மப்படி கடைப்பிடிக்கிறேன்.

இசையும் பக்தியுமே என்னை வழிநடத்தும் ஆற்றல்மிக்க சக்திகள். பூமாலைகளோடு இறை வனுக்காக பாமாலை யையும் சேர்த்துச் சமர்ப்பித்தால்- அவரைப் பாடினால் மனம் நிறைந்து போகும்.

ஆம்! பாடத் தொடங்கி விட்டால், நான் எல்லா வற்றையுமே மறந்து விடுவேன். உண்மையில் அந்த இறையனுபவத்தில் நான் கலந்து லேசாகி... என் கவலைகள், சந்தேகங்கள், பயங்கள் என அனைத்தையும் மறந்து ஆனந்த நிலைக்குச் சென்றுவிடுவேன். அந்த வகையில் என்னை ஒரு பாடகியாக வாழவைக்கும் தெய்வங்களுக்கு என் நன்றி.

எல்லோரும் உறுதியாகக் கடவுளை நம்பி அவன் நாமங்களைப் பாடி, இனி வரவிருக்கும் ஓவ்வொரு நாளையும் பண்டிகை நாள்களா கவே கருதிக கொண்டாடுவோம். வாழ்க்கை என்பது, எல்லோரிடமும் உறவு பாராட்டி, எப்போதும் ஆனந்தமயமாகக் கொண்டாடி மகிழத்தான் அமைந்துள்ளது. அதை நினைத்து எந்நாளும் எல்லோரும் மகிழ்ந்திருப்போம்.

‘இசையால் வசமாகும் தெய்வம்’... இசைப்பேரொளி நித்யஸ்ரீ மகாதேவன்

மஞ்சள் சரடு பிரார்த்தனை!

மதுரை வடக்கு மாசி வீதியும் மேல மாசி வீதியும் இணையும் இடத்தில் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீஆலால சுந்தர விநாயகர். ஆல மரத்தின் கீழே அமர்ந்திருக்கும் இவரை சுந்தர பாண்டிய மன்னன் வழிபட்டதால், இவர் ஆலால சுந்தர விநாயகர் என்றாராம். திருமணமாகாத பெண்கள் இவரை வணங்கி இங்கே வந்து மஞ்சள் சரடில் விரலி மஞ்சளைக் கோத்து விநாயகருக்குச் சாற்றுகிறார்கள். இதனால் விரைவில் திருமணம் கூடும் என்கிறார்கள்.

- ஆதிகவி, மதுரை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு