Published:Updated:

உல்லாச கைலாசா! - கரீபியன் கடலில் நித்தியின் ‘கன்னி’த்தீவு

நித்தியானந்தா
பிரீமியம் ஸ்டோரி
நித்தியானந்தா

தொடர் பாலியல் குற்றச் சாட்டுகள், திருச்சி சங்கீதா என்கிற பக்தரின் மரணத்தில் சர்ச்சை, அமலாக்கப் பிரிவு வழக்கு...

உல்லாச கைலாசா! - கரீபியன் கடலில் நித்தியின் ‘கன்னி’த்தீவு

தொடர் பாலியல் குற்றச் சாட்டுகள், திருச்சி சங்கீதா என்கிற பக்தரின் மரணத்தில் சர்ச்சை, அமலாக்கப் பிரிவு வழக்கு...

Published:Updated:
நித்தியானந்தா
பிரீமியம் ஸ்டோரி
நித்தியானந்தா

அரசுக்கே ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறார் நித்தியானந்தா. இவரை கைதுசெய்ய நீதிமன்றமே உத்தரவிட்டும் அதைப் பற்றி கவலையின்றி ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு பொழுதுக்கு ஒரு கெட்டப்பும், நாளுக்கு ஒரு வீடியோவுமாக உல்லாச மோடில் இருக்கிறார்.

‘இன்டர்போல் உதவியுடன் நித்தியானந்தாவைக் கைதுசெய்யுங்கள்’ என்று குஜராத் மாநில காவல்துறைக்கு குஜராத் நீதிமன்றமே உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், நித்தியானந்தாவை இனி கைதுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடுமோ எனக் கவலைகொள்கிறது மத்திய அரசு. அதற்கான காரணத்தைக் கேட்டால், நம்மை மலைக்கவைக்கும் வகையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கின்றன. இதுகுறித்து அவரது ஆசிரமத்துடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவர்கள் நம்மிடம் பேசினார்கள்.

‘‘பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து 2018-ம் ஆண்டு இறுதியில் வெளியேறினார் நித்தியானந்தா. ஆரம்பத்தில் `அவர் இமயமலைக்குச் சென்றுள்ளார்’ என்று அவரின் பக்தர்கள் சொன்னார்கள். பிறகு ‘ஆன்மிகப் பயணமாக நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்’ என்றார்கள். இந்த நிலையில்தான் நித்தியானந்தாவின் செயலாளராக இருந்த ஜனார்த்தன சர்மா, ‘என் இரண்டு மகள்களை, நித்தியானந்தா கடத்திச் சென்றுவிட்டார். அவர்களை மீட்டுத் தர வேண்டும்’ என்று குஜராத் மாநில காவல்துறையில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்தே நித்தியானந்தா விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல்செய்துள்ள ஜனார்த்தன சர்மா, ‘நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் பயின்று வந்த என் இரண்டு மகள்களை நித்தியானந்தா தரப்பினரிடமிருந்து மீட்டு கொடுக்கவேண்டும். அவர்களை வெளிநாட்டுக்குக் கடத்திச் சென்றுவிட்டார்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் அங்கு உள்ள ஆசிரம நிர்வாகிகள் இருவர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் குஜராத் போலீஸார், ‘நித்தியானந்தா தற்போது இந்தியாவில் இல்லை; அவர் வெளிநாட்டில் வசித்துவருகிறார்’ என்று நீதிமன்றத்தில் உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்துதான் நீதிமன்றம், ‘இன்டர்போல் உதவியுடன் நித்தியானந்தாவைக் கைதுசெய்யுங்கள்’ என உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரா அமைப்பின்மூலம் ஒரு தகவல் வந்துள்ளது. அந்தத் தகவலைக் கேட்டு மத்திய அரசே அதிர்ச்சியடைந்துள்ளது” என்றவர்கள், ``இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் தரப்பில் பேசினால் மேலும் விவரங்கள் கிடைக்கும்” என்று சஸ்பென்ஸ் வைத்தனர். உள்துறை அமைச்சக அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சொந்தமாக ஒரு கன்னித்தீவு!

‘‘நித்தியானந்தாமீது தொடர் பாலியல் குற்றச் சாட்டுகள், திருச்சி சங்கீதா என்கிற பக்தரின் மரணத்தில் சர்ச்சை, அமலாக்கப் பிரிவு வழக்கு என அடுத்தடுத்த நெருக்கடிகள் கடந்த சில ஆண்டுகளாகவே இருந்துவந்தன. இந்தியாவில் தொடர்ந்து இருந்தால் தனக்கு சிக்கல் வந்துவிடும் என்பதை உணர்ந்துள்ளார் நித்தியானந்தா. அப்போது அவரின் வெளிநாட்டு பக்தர்கள் சிலர், ‘தீவு ஒன்றை வாங்கி அதில் குடியேறிவிடுங்கள்’ என்று ஐடியா கொடுத்திருக்கிறார்கள். இதற்கான வேலைகளை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துள்ளார் நித்தி. இதற்கென வெளிநாட்டு பக்தர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூல் நடந்துள்ளது. இந்தியாவில் உள்ள பக்தர்கள்மூலம் நகைகளாகவும் இடங்களாகவும் வசூல் செய்துள்ளனர்.

நித்தியானந்தா
நித்தியானந்தா

தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஈக்குவடார் நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவை வாங்க, அமெரிக்க பக்தர்கள்மூலம் வேலையை ஆரம்பித்துள்ளார் நித்தியானந்தா. ஒருவழியாக இரு ஆண்டுகளுக்கு முன்பே பல கோடி ரூபாய் மதிப்பில் தீவு வாங்கிவிட்டார்கள். அந்தத் தீவில் குடியேற, சத்தமில்லாமல் வியூகம் வகுக்கப்பட்டது. முதலில், பிடதியிலிருந்து ஆன்மிகப் பயணம் என்று கிளம்பி, உத்தரப்பிரதேசத்தில் சில நாள்கள் தங்கியுள்ளார் நித்தியானந்தா. அங்கு இருந்து தரைவழி மார்க்கமாக நேபாளம் சென்றுள்ளார். இந்து நாடான நோபாளத்தில் அரசு அதிகாரிகள் நித்தியானந்தாவை இந்து மதத் தலைவராகக் கருதி, ராஜமரியாதையுடன் அவரை காட்மாண்ட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். காட்மாண்ட் விமானநிலையத்திலிருந்து தனி விமானம்மூலம் ஈக்குவடார் அருகே உள்ள தன் தீவுக்குச் சென்றிருக்கிறார் நித்தியானந்தா. அவருடன் இரண்டு பெண் சீடர்களும், ஜனார்த்தன சர்மாவின் மூத்த மகளும் உடன் சென்றுள்ளனர். அதற்குப் பிறகு மேலும் சிலர் அந்தத் தீவுக்குச் சென்று ஐக்கியமாகியுள்ளனர். இந்தியாவிலிருந்து மொத்தம் 27 பேர் கிளம்பி, அந்தத் தீவில் தஞ்சமடைந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் பெண்கள்!

தீவை நாடாக அறிவிக்க முயற்சி!

தனித்தீவை சொந்தமாக வாங்கினாலும் அந்தத் தீவு மற்றொரு நாட்டின் கட்டுப்பாட்டில் தான் தற்போதுவரை இருக்கிறது. அந்தத் தீவை தனிநாடாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக் கிறார் நித்தியானந்தா. இந்தத் தகவல்தான் மத்திய அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நித்தியானந்தா தரப்பிலிருந்து ஈக்குவடார் நாட்டின் அரசு உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தங்களது தீவை தனிப்பிரதேசமாக அறிவிக்க அனுமதி வேண்டும் என்று நித்தியானந்தா தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. ஓர் இடத்தை தனிநாடாக அறிவிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதல் அவசியம். அதேபோல் புதிதாக ஒரு நாட்டை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க வேண்டுமென்றால், அதற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உலக நாடுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்கான வேலையை சில மாதங்களுக்கு முன்பே நித்தியானந்தா தரப்பு ஆரம்பித்துள்ளது.

உதவிக்கு வந்த அமெரிக்கச் சட்ட நிறுவனம்!

ஐக்கிய நாடுகள் சபையில் சட்டரீதியாக உதவிகளைச் செய்வதற்கு, அமெரிக்காவில் சில சட்ட நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. அப்படி ஒரு நிறுவனத்தை கடந்த ஆண்டே தொடர்புகொண்டு, இதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளது நித்தியானந்தா தரப்பு. அந்த நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளதாகத் தெரிகிறது. அதில், ‘இந்து மதம், உலகின் சில நாடுகளில் மட்டுமே உள்ளது. அந்த மதத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் நித்தியானந்தா. அவருடைய நாட்டில் அவருக்கு போதிய பாதுகாப்பு இல்லை. இந்தியாவில் ஆன்மிகத் தலைவருக்கு எதிரான நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. எனவே, அவரை புலம்பெயர் அகதியாகவே இப்போது கருதவேண்டியுள்ளது. அவரின் மதரீதியான பிரசாரத்துக்கு தலைமையிடம் தேவை என்பதால், புதிய நாட்டுக்கான அங்கீகாரத்துக்கு விண்ணப் பிக்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாம். இதைத் தொடர்ந்து சில சட்டநிபுணர் குழுவினரும் ஐ.நா சபையுடன் தொடர்புள்ள ஆட்கள் சிலரும் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு நேரடியாக வந்துள்ளனர். அவர்கள் நித்தியானந் தாவுக்கு இங்குள்ள நெருக்கடிகள்குறித்து ஆய்வுசெய்தனர்.

ஓஷோ பாணியில் மாஸ்டர் பிளான்!

இந்தியாவுக்கு இந்தக் குழு வந்தபோதுதான் உளவுத்துறை முதல்முறையாக உஷாராகியுள்ளது. அந்தக் குழுவினர் நித்தியானந்தாவின் ஆசிரமம் உட்பட பல இடங்களில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அப்போது நித்தியானந் தாவால் ஏற்கெனவே அமைக்கப்பட்ட ஒரு டீம், வீடியோ ஒன்றை அந்தக் குழுவுக்குப் போட்டுக் காட்டியது. அதில் காஞ்சி மடாதிபதிகள் கைது செய்யப்பட்டது, பிரபல சாமியார் ஆஷாராம் பாபு கைது... என வரிசையாக ஆசிரமங்களை நடத்தியவர்கள் கைதுசெய்யப்படும் காட்சிகள் இருந்துள்ளன. அதேபோல் நித்தியானந்தாவின் குஜராத் ஆசிரமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தைகள் நல ஆணையம் சோதனை மேற்கொண்டது. அந்தச் சோதனை முடிந்தவுடன் ஆசிரமத்தில் இருந்த குழந்தைகள் வெளியே வந்து மீடியாவில் பகீர் குற்றச்சாட்டுகளைக் கிளப்பினர்.

நித்தியானந்தா
நித்தியானந்தா

‘ஆணையத்திலிருந்து விசாரணைக்கு வந்தவர்கள், தங்களை அசைவ உணவு சாப்பிடச் சொன்னார்கள். மொபைல்போனில் தேவை யில்லாத விஷயங்களைக் காட்டி எங்களை மனமாற்றம் செய்ய முயன்றார்கள்’ என்று அந்தக் குழந்தைகள் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இந்த வீடியோ காட்சிகளும் அந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வீடியோ காட்சிகளை, அமெரிக்கச் சட்ட நிறுவனம்மூலம் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது நித்தியானந்தா டீம். `இவ்வளவு நெருக்கடிகளை நாங்கள் இந்த நாட்டில் சந்தித்துவருகிறோம். எங்கள் மதத்தை எங்களால் முழுமையாக இங்கு பின்பற்ற முடியவில்லை’ என்ற பிம்பத்தை ஏற்படுத்துவதே நித்தியானந்தா தரப்பின் நோக்கம்.

இந்த ஐடியாவை நித்திக்குக் கொடுத்தவர்கள், இந்தியாவின் புகழ்பெற்ற சாமியார்களில் ஒருவராக விளங்கிய ஓஷோவின் ஐடியாவைவும் உதாரணமாகச் சொல்லியுள்ளனர். அமெரிக்கா, ஓரிகன் மாகாணத்தில் ரஜ்னீஷ்புரம் என்கிற தனி நகரையே நிர்மாணித்து கொடிகட்டிப் பறந்த ஓஷோ, பிற்பாடு அமெரிக்க மக்களின் எதிர்ப்பால் சில சிக்கல்களை எதிர்கொண்டார். ஓஷோ எதையெல்லாம் கோட்டைவிட்டாரோ, அதையெல்லாம் சரியாகச் செய்ய வேண்டும் என்பது நித்தியின் மாஸ்டர் பிளான்” என்று சொல்லி முடித்தார்கள்.

இந்து மதத் தலைவர் நித்தி!

``தனிநாடு எதற்கு?’’ என்று நித்திக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டோம்.

“கிறிஸ்துவர்களுக்கு வாடிகன் சிட்டி, இஸ்லாமியர்களுக்கு மெக்கா இருப்பதுபோல், இந்துக்களுக்கென்று ஒரு தலைநகரமாக தனது தீவு இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார் நித்தியானந்தா. அந்தத் தீவுக்கு `கைலாசா’ என்று பெயர் சூட்டியுள்ளார். இப்போது நித்தி மற்றும் நித்தி தரப்பினரின் ஃபேஸ்புக் பக்கங்கள் அனைத்திலும் `கைலாசா’ என்ற பெயர் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். கைலாசாவை இந்து மதத்தின் தலைமையிடமாக அறிவித்து, கிறிஸ்துவர்களுக்கு போப் ஆண்டவர் போல் தன்னை இந்து மதத்தின் தலைவராக பிரகடனப்படுத்திக் கொள்ளும் மாஸ்டர் திட்டமே இப்போது நித்தியிடம் இருக்கிறது. இதற்காக நந்தி அருகில் நித்தியானந்தா அமர்ந்திருப்பதுபோல் தனிக்கொடி உருவாக்கப்பட்டிருக்கிறது” என்று அதிரவைக்கிறார்கள்.

இதையெல்லாம் விரிவாக மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது உளவுத்துறை. இனியும் நித்தியானந்தாவை வெளியே விட்டுவைத்தால், ஒரு நாட்டின் தலைவராக பிரகடனம் செய்து தங்களுக்கே சவாலாக வந்துவிடுவார் என்று நினைக்கிறது மத்திய அரசு. இந்து மதத் தலைவருக்குப் பாதுகாப்பு இல்லை என்று ஐ.நா-வில் பதிவுசெய்து ஒரு நாட்டை உருவாக்க நித்தியானந்தா முயற்சி செய்தால், அது பா.ஜ.க ஆட்சிமீது உலக அரங்கில் அவப்பெயரை ஏற்படுத்திவிடும் என கவலைகொள்கிறது மத்திய அரசு. எனவே, நித்தியானந்தாவைக் கைதுசெய்து இந்தியாவுக்குக் கொண்டுவரும் வேலையில் தீவிரம்காட்ட ஆரம்பித்துவிட்டது மத்திய அரசு.

நித்தியானந்தாமீது கிளம்பியிருக்கும் மேற்கண்ட சர்ச்சைகள் குறித்து விளக்கம் கேட்டு அவரது மின்னஞ்சல் முகவரியான webmaster@nithyananda.org-க்கு தகவல் அனுப்பியிருக்கிறோம். எங்கோ இருந்துகொண்டு, அடிக்கடி விரிவான வீடியோ காட்சிகளை வெளியிடும் நித்தியானந்தா, இதுகுறித்தும் விரிவான விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டால் அதையும் விகடன் வாசகர்களுக்குத் தெரியப்படுத்த தயாராக இருக்கிறோம்.

- லியானா

அட்டை மற்றும் படங்கள்: www.nithyananda.org

குழந்தைகளிடம் பாலியல் வக்கிரம்!

நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து வெளியேறிய பல்வேறு நபர்களிடம், குஜராத் மாநில காவல்துறையினரும், கர்நாடக மாநில காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் ஒரு தகவலை அனைவரும் சொல்லியுள்ளனர். “பருவமடையாத பெண் குழந்தை களுக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் நித்தியானந்தா. இரவு நேரங்களில் பெண் குழந்தைகளை தனது அறைக்கு வரவழைத்து, தீட்சை என்ற பெயரில் குழந்தைகளை வக்கிரமான பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாக்கியுள்ளார்” என்று கூறியிருக்கிறார்கள்.

இதற்கான ஆதாரங்களை தற்போது அதிகாரிகள் திரட்டிவருகிறார்கள். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சட்டமும் நித்தியானந்தாமீது பாயக்கூடும்.

டன் கணக்கில் தங்கம்!

நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் துலாபாரம் நிகழ்ச்சி ஆண்டுக்கு நான்கு முறை நடக்குமாம். அப்போது நித்தியானந்தாவின் எடைக்கு நிகரான தங்கத்தை பக்தர்கள் வழங்குவர். இதுவரை அப்படிப் பெறப்பட்ட நகைகளின் எடை மட்டுமே ஆறு டன் எனக் கூறப்படுகிறது. அவற்றில் பெரும்பகுதி இப்போது நித்தியானந்தாவின் தீவுப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட அளவு நகை பிடதியில் இருந்துள்ளது. நித்தியானந்தா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தவுடன் மா அச்சலா, ரஷி ஆத்மார்த்தா என்ற இரண்டு பேர்மூலம் பிடதியில் இருந்த தங்கத்தை தமிழத்துக்குக் கொண்டுவந்துள்ளனர். இப்போது இந்த விவரங்களையெல்லாம் தீவிரமாக விசாரித்துவருகிறது காவல்துறை.

இந்தியர்கள், தீவுகளை வாங்க முடியுமா?

இந்தியப் பிரஜையாக இருப்பவர் வெளிநாட்டில் ஒரு தீவை வாங்க முடியுமா என்பது குறித்து, வெளியுறவுத் துறை அதிகாரிகள் தரப்பில் பேசினோம்.

“இந்தியர்கள் வெளிநாட்டில் சொத்துகள் வாங்க, ஃபெமா (FEMA - ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் மேனேஜ்மென்ட் ஆக்ட்) சட்டப் பிரிவு 6(4) வழிவகை செய்துள்ளது. ஆனால், இதற்கான வரி பிடித்தம் இந்தியாவிலும் சம்பந்தப்பட்ட வெளிநாட்டிலும் மிக அதிகம் என்பதால், பெரிய அளவில் யாரும் ஆர்வம்காட்டு வதில்லை. தென்கிழக்கு அமெரிக்கக் கடற்கரையில் உள்ள கரீபியன் தீவுகள், கனடா, அமெரிக்கா, தாய்லாந்து, இந்தோனேஷியா, பிஜி ஆகிய பகுதிகளில் உள்ள தீவுகள் பல நூறு கோடி ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. பெரும் பணக்கார இந்தியர்கள் சிலரும் தீவுகளை வாங்கியுள்ளனர். இதற்கான பணியை கமிஷன் அடிப்படையில் முடித்துத் தர லண்டன், லாஸ் ஏஞ்சலஸ், நியூயார்க், மும்பை, சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் தரகர்களும் இருக்கிறார்கள். இந்தத் தீவுகள், சம்பந்தப்பட்ட நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட பிரதேசமாகத் தான் கருதப்படும்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism