அலசல்
Published:Updated:

மரணத் தொழிற்சாலையாக மாறும் என்.எல்.சி!

என்.எல்.சி
பிரீமியம் ஸ்டோரி
News
என்.எல்.சி

மீண்டும் வெடித்த பாய்லர்... சிதறிய தொழிலாளர்கள் உடல்கள்…

‘பட்ட காலிலே படும்’ என்பார்கள். தெரியாமல் பட்டால்கூட பரவாயில்லை. ஆனால், விபத்து நடக்க வாய்ப்பிருக்கிறது என்பது தெரிந்தும், நெய்வேலி நிலக்கரி நிறுவன நிர்வாகத்தின் அலட்சியத்தால் இரண்டு மாதங்களுக்குள்ளாக மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது. கடந்த மே மாதம் நடந்த விபத்தில் ஐந்து பேர் பலியானர்கள் என்றால், இம்முறை ஆறு பேர் உடல் சிதறிக் கொடூரமாக பலியாகியிருக்கிறார்கள். ``ஆயுட்காலம் முடிந்த கொதிகலன்கள், பராமரிப்பின்மை, தொடரும் நிர்வாகக் குளறுபடிகள்... இவையே விபத்துக்குக் காரணம்’’ என்று கொந்தளிக்கிறார்கள் தொழிலாளர்கள்!

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் அனல் மின்நிலையம்–I மற்றும் விரிவாக்கம், அனல் மின்நிலையம்–II மற்றும் விரிவாக்கம், என்.என்.டி.பி (Neyveli New Thernal Power Project) உள்ளிட்ட ஐந்து அனல் மின்நிலையங்கள் செயல்படுகின்றன. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இங்கு நிரந்தரம் மற்றும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பத்தாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

என்.எல்.சி
என்.எல்.சி

இரண்டாவது அனல் மின்நிலையத்தில் மட்டும் நாளொன்றுக்கு 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஏழு யூனிட்டுகள் கொண்ட இந்தப் பிரிவில் சுமார் 3,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மே மாதம், 7-ம் தேதி இதன் 6-வது யூனிட்டிலுள்ள கொதிகலனின் பாய்லருக்குள் நிலக்கரியை அனுப்பும்போது பாய்லர் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் எட்டு தொழிலாளர்கள் படுகாயமடைந்து, அவர்களில் ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அது குறித்து கடந்த 20.05.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில் “என்.எல்.சி-யின் அலட்சியம்தான் காரணம்!” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

இப்போது மீண்டும் ஜூலை 1-ம் தேதி அதே இரண்டாவது அனல் மின்நிலையத்தில், 5-வது யூனிட்டில் ஒரு பைப் லைன் வெடித்துச் சிதறி ஆறு பேர் உயிரிழந்திருக்கின்றனர். அன்றைய தினம் காலை 9:45 மணிக்கு பாய்லரை இயக்கியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பத்மநாபன், அருண்குமார், வெங்கடேச பெருமாள், சிலம்பரசன், ராமநாதன், நாகராஜ் ஆகிய ஆறு பேர் உடல் சிதைந்து, உயிரிழந்திருக்கின்றனர். 23 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கி றார்கள். 2-வது அனல் மின்நிலைய முதன்மை பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

மரணத் தொழிற்சாலையாக மாறும் என்.எல்.சி!

என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கூட்டுறவு சங்கத் தலைவர் அன்பழகன், “இந்த 2-வது அனல் மின்நிலையம் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளாகிவிட்டன. இது நாளொன்றுக்கு 1,470 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் சூப்பர் தெர்மல் என்பதால் ஆண்டுகள் செல்லச் செல்ல கொள்கலனின் உற்பத்தித்திறனும் செயல்பாடுகளும் குறையும். அதற்கேற்ப உற்பத்தியையும் படிப்படியாகக் குறைக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் அதன் அதிகபட்ச திறனையும் தாண்டி 220 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்கின்றனர்.

‘திறமைக்கேற்ற ஊதியம்’ என்ற ஒரு திட்டத்தை மத்திய அரசு இங்கு செயல்படுத்துகிறது. அதனால், அதிக உற்பத்தி செய்து, அதிக ஊதியத்தைப் பெற்றுவிடத் துடிக்கும் அதிகாரிகள், பராமரிப்புப் பணிகளில் கவனம் செலுத்தாமல் உற்பத்தியைப் பெருக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவுகள்தான் இந்த விபத்துகள்.

வேல்முருகன் - அன்பழகன்
வேல்முருகன் - அன்பழகன்

கடந்த காலங்களில் ஆண்டுக்கு ஒருமுறை 45 நாள்கள் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப் படும். இதில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட ஒன்பது பிரிவினர் ஈடுபடுவார்கள். தற்போது அதை 10 நாள்களாகக் குறைத்து விட்டார்கள். இப்போது கொள்கலனில் ஒரு பைப் லைன் வெடித்ததால் மட்டுமே ஐந்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள்; 23 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள். ஒருவேளை முழு கொள்கலனும் வெடித்திருந்தால் இரண்டாவது அனல் மின்நிலையத்தின் ஏழு யூனிட்களுமே இருந்திருக்காது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருப் பார்கள். எனவே, பெல் நிறுவனத்தினரை வரவழைத்து, பராமரிப்புப் பணிகளை முழுமையாகச் செய்த பிறகே மீண்டும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்” என்றார்.

சி.ஐ.டி.யூ சங்கத்தின் தலைவர் வேல்முருகன், ‘‘ஏற்கெனவே நடந்த தொடர் விபத்துகளிலிருந்து நிர்வாகம் பாடம் கற்கத் தவறிவிட்டது. 30 ஆண்டு களைக் கடந்துவிட்ட கொதிகலன்களில் உற்பத்திக்கு முன்பு பாதுகாப்பு உபகரணங்கள் சரியாகச் செயல்படு கின்றனவா என்பதைத்தான் முதலில் ஆய்வு செய்ய வேண்டும். அதிகாரிகள் கவனத் துடன் செயல்பட்டிருந்தால் இப்படி ஆகியிருக்காது. ஊக்கத்தொகை, பதவி உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக உற்பத்தி, பராமரிப்புப் பணிகளை குறுகியகாலத்தில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் நினைக் கின்றனர். விபத்துகளுக்கான காரணமும் அதுதான்’’ என்றார்.

மரணத் தொழிற்சாலையாக மாறும் என்.எல்.சி!

‘‘25 வருடங்கள் முடிந்துவிட்ட ஒரு கொதிகலனை மேற்கொண்டு இயக்குவதற்கு ஆயுள் நீட்டிப்புச் சான்று (LLP - Life Extention Programe) வாங்க வேண்டும். ஆனால், இந்த அனல்மின் நிலையத்தில் செயல்படும் கொதிகலன்களுக்கு அந்தச் சான்றை வாங்காமலேயே இயக்கிவருகின்றனர். அதுவும் விபத்துகளுக்குக் காரணம்’’ என்ற குற்றச்சாட்டும் தொழிலாளர்கள் மத்தியில் இருக்கிறது.

என்.எல்.சி நிர்வாகத்தின் மக்கள் தொடர்பு தலைமைப் பொதுமேலாளர் குருசாமிநாதனிடம் பேசினோம். ‘‘ஆயுள் நீட்டிப்புச் சான்று என்பது மொத்தமாக எடுத்துவிட்டு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும்போது பெறுவதாகும். ஆனால், எங்களின் வருடாந்தர பராமரிப்பிலேயே பைப்லைன், உதிரி பாகங்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னை களையும் சரிசெய்துவிடுகிறோம். பராமரிப்புப் பணிகள் முறையாக நடக்க வில்லை என்பதை நாள்களைக் கணக்கிட்டு மட்டும் சொல்லிவிட முடியாது. ஷிஃப்ட் முறையில் துரிதமாகப் பணிகளை மேற்கொண்டால், 15 நாள்களில்கூட பணிகள் முடிந்துவிடும். ஒரு யூனிட்டில் பராமரிப்புப் பணிகள் முடிந்து, `உற்பத்திக்குத் தகுதியானது’ என்று பாய்லர் இணை இயக்குநர் கூறினால்தான் செயல்படுத்துவோம். அனைத்துப் பணிகளையும் விதிமுறைகளுக்கு உட்பட்டே செயல்படுத்துகிறோம்’’ என்றார்.

மரணத் தொழிற்சாலையாக மாறும் என்.எல்.சி!

‘உற்பத்தியும் பாதுகாப்பும் நமது இரு கண்கள்’ என்று என்.எல்.சி வளாகம் முழுக்க எழுதி வைத்திருக்கிறது நிர்வாகம். ஆனால், உற்பத்தியில் மட்டுமே வெறிகொண்டு கவனம் செலுத்துவதால்தான் அப்பாவித் தொழிலாளர்கள் பலியாகின்றனர்.

என்னென்ன தவறுகள்... எங்கெங்கு தவறுகள்!

* 1986-ல் கட்டப்பட்ட இந்தக் கொதிகலன்களின் ஆயுள்காலம் 25 ஆண்டுகள்தான். ஆனால், 34 ஆண்டுகள் முடிவடைந்த பின்னரும் அதே அளவு மின் உற்பத்தியுடன் இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். ‘யூனிட்டில் இருப்பவர்களுக்கு கொதிகலன்களைக் கையாள்வது குறித்தும், அவற்றை இயக்குவது குறித்தும் முறையான பயிற்சிகள் இல்லை’ என்கிறார்கள் தொழிலாளர்கள்.

* பாய்லர், டர்பைன், ஜெனரேட்டர் ஆகிய மூன்று பிரிவுகளிலும் தலா இரண்டு பொறியாளர்கள் இருந்தனர். `பணிச்சுமை காரணமாக, ஒருவர் கவனக்குறைவாக இருந்தாலும் மற்றொருவர் கொதிகலனை கவனித்துக்கொள்வார்’ என்ற தொலைநோக்குப் பார்வையில் செய்யப்பட்ட ஏற்பாடு இது. ஆனால், சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒருவர் போதும் என்று ஆட்குறைப்பு செய்துவிட்டார்கள்.

* கொள்கலன்கள் குறித்துப் போதிய அனுபவ அறிவு இல்லாத வட மாநிலப் பொறியாளர்கள்தான் பெரும்பாலும் என்.எல்.சி முழுவதும் கொள்கலன்களை இயக்குவதாக குற்றச்சாட்டு உள்ளது. தவறுகளை அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் கூறினாலும், மொழிப் பிரச்னையால் அது அவர்களுக்குப் புரிவதில்லை. வடமாநிலத் தொழிலாளர்கள் கூறுவது நம் தொழிலாளர்களுக்குப் புரிவதில்லை. இதுவும் விபத்துகளுக்கு முக்கியக் காரணம்.

* நிலக்கரிச் சுரங்கம் போன்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொறியியல் படிப்பு முடித்தவர்களையும், அதில் அனுபவம் உள்ளவர்களையும்தான் தலைவராக நியமிக்க வேண்டும். அப்போதுதான் எங்கு, எதனால், எப்படி தவறு நிகழ்கிறது என்று கண்டுபிடித்து, சரிசெய்ய முடியும். அப்படித்தான் கடந்த காலங்களில் என்.எல்.சி-க்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டார்கள். கடந்த சில ஆண்டுகளாகத்தான் இதை மாற்றிவிட்டார்கள். தற்போது இருக்கும் தலைவர் ராஜேஷ்குமார், நிதி மேலாண்மை முடித்தவர். ஏற்கெனவே தலைவராக இருந்த ஆச்சார்யா, மனிதவளம் முடித்தவர். இதுவும் பிரச்னைகளுக்கு காரணம்.

* 1948-ம் ஆண்டு தொழிற்சாலை சட்டப்படி தொழிற்சாலையின் இயக்குநர் அல்லது முதலாளிதான் `Occupier’ என்ற பொறுப்பில் இருக்க வேண்டும். அப்போதுதான் கவனத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்படுவார். ஏனென்றால், தொழிற்சாலையில் ஏதாவது விபத்துகளோ உயிரிழப்புகளோ ஏற்பட்டால் அவர்தான் நீதிமன்றத்தில் வழக்குகளைச் சந்திக்க வேண்டும்; சிறைக்கும் செல்ல வேண்டும். ஆனால், அந்தப் பொறுப்பை தட்டிக்கழித்து, சட்டத்தை மீறி என்.எல்.சி-யில் இணை இயக்குநரை Occupier பதவிக்கு நியமித்திருக்கிறார்கள். சுரங்கம் பிரிவிலும் இதே நிலைதான் கடைப்பிடிக்கப்படுகிறது.