Published:Updated:

`ஹெல்மெட் போடலனு புடிச்சாங்க; ரூ.23,000-க்கு ரசீது கொடுத்தாங்க’ - புதிய விதியால் அதிர்ந்த டெல்லிவாசி

ராம் பிரசாத்

சாலைவிதி மீறல்களுக்காக டெல்லியைச் சேர்ந்த வாலிபருக்கு போக்குவரத்து காவலர்கள் விதித்த அபராதம் டெல்லிவாசி ஒருவரை அதிர வைக்கிறது.

Representation Image
Representation Image

டெல்லியைச் சேர்ந்த தினேஷ் மதன் என்பவர் ஹெல்மெட் இல்லாமல் வாகன ஓட்டியது, உரிய ஆவணங்களை இன்றி வாகனத்தை இயக்கியதற்காக ரூ.23,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. `இங்க யாருக்கும் பயம் இல்லை சார்... பயம் இருந்தாதான் எல்லாம் ஒழுங்கா நடக்கும்... `பரத் எனும் நான்’ படத்தில் முதல்வராக இருக்கும் மகேஷ் பாபு சாலைவிதி மீறல்களுக்கு எதிராக அபராதத்தை உயர்த்தியதற்கு இவ்வாறு விளக்கம் கொடுப்பார்’. அதே ஸ்டைலில்தான் மத்திய அரசின் புதிய வாகன சட்டமும் இருக்கிறது.

Representation Image
Representation Image

சமீபத்தில் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய வாகனச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதில் அபராதங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. குறைந்தபட்ச அபராதம் ரூ.100-லிருந்து 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டிரைவிங் லைசென்ஸ் இல்லையா ரூ. 5,000 , ஓவர் ஸ்பீடா ரூ. 5,000 , ட்ரிங் அண்டு டிரைவ்வா ரூ.10,000, சீட் பெல்ட் போடலையா ரூ.1,000, வாகனத்துக்கான பர்மிட் இல்லையா ரூ.10,000, இன்ஷூரன்ஸ் இல்லையா ரூ.2,000, சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் உரிமையாளருக்கு ரூ. 25,000 அபராதம் மற்றும் 3 ஆண்டு சிறை தண்டனை என அபராத தொகை ஏற்றப்பட்டது.

டெல்லியைச் சேர்ந்த தினேஷ் மதனுக்கு டெல்லி போக்குவரத்துக் காவல்துறையினர் பல்வேறு சாலை விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி ஒரே நாளில் 23,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மதனை போக்குவரத்துக் காவலர்கள் நிறுத்தியுள்ளனர். ஹெல்மெட் அணியாமல் வண்டியை ஓட்டியது குறித்து விசாரித்த காவலர்கள் வாகனத்துக்கான ஆவணங்களைக் கேட்டுள்ளனர். தினேஷ் ஆவணங்கள் இல்லாமல் முழிக்க போக்குவரத்து காவலர்கள் அபராதத்தைத் தீட்டிவிட்டனர்.

Helmet
Helmet

போலீஸார் கொடுத்த ரசீதைப் பார்த்த தினேஷ் மதனுக்கு ஒரு நிமிடம் தலைசுற்றிவிட்டது. ரூ. 23,000 அபராதம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. லைசென்ஸ் இல்லாமல் வண்டியை ஓட்டுனதுக்கு ரூ.5,000, வாகனத்துக்கான ஆவணங்கள் இல்லாததற்கு ரூ. 5,000, இன்ஷுரன்ஸ் இல்லாததற்கு 2,000, காற்று மாசுபாட்டின் தரத்தை மீறியது ரூ.10,000, ஆமா, தம்பி நீங்க ஹெல்மெட் போடாமதான வண்டி ஓட்டிக்கிட்டு வந்தீங்க அதுக்கு ஒரு 1,000 ஆக மொத்தம் ரூ. 23,000 கட்டிடுங்க தம்பின்னு சொல்லி அனுப்பியிருக்காங்க.

சிறுவனின் கொலையைத் தடுத்து நிறுத்திய நாய்! - ஆத்திரத்தில் வாயை வெட்டிய கொடூரம்

இதுகுறித்து பேசிய மதன், ``நான் சாலை விதிகளை மீறவில்லை. அபராதத் தொகை ரொம்ப அதிகம். நான் ஹெல்மெட் அணியவில்லை என்ற காரணத்துக்காகத்தான் நிறுத்தப்பட்டேன். என்னை 10 நிமிடத்தில் உரிய ஆவணங்களைக் கொண்டு வந்து காட்டச் சொன்னார்கள். அது எப்படி முடியும். ஹெல்மெட் போடல, அதுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிப்பாங்கன்னு நினைச்சேன்’’ என அவர் நொந்துகொண்டார்.