Published:Updated:

கடைக்கோடி கிராமம்: கொஞ்சம் தவறினாலும் மரணம் நிச்சயம்! - ஆற்றைக் கடக்கப் போராடும் மக்கள்!

தொப்பையாற்றுப் படுகை
பிரீமியம் ஸ்டோரி
தொப்பையாற்றுப் படுகை

விவசாய பூமி இது. ரெண்டு பக்கமும் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் இருக்கோம். முக்கால்வாசி ஜனங்க விவசாயம் செய்யுறாங்க. வேப்பமரத்தூர் கிராமத்துலதான் ஹைஸ்கூல் இருக்குது

கடைக்கோடி கிராமம்: கொஞ்சம் தவறினாலும் மரணம் நிச்சயம்! - ஆற்றைக் கடக்கப் போராடும் மக்கள்!

விவசாய பூமி இது. ரெண்டு பக்கமும் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் இருக்கோம். முக்கால்வாசி ஜனங்க விவசாயம் செய்யுறாங்க. வேப்பமரத்தூர் கிராமத்துலதான் ஹைஸ்கூல் இருக்குது

Published:Updated:
தொப்பையாற்றுப் படுகை
பிரீமியம் ஸ்டோரி
தொப்பையாற்றுப் படுகை

73-வது குடியரசு தினவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடி முடித்திருக்கிறோம். ஆனால், எல்லாக் குடிகளின் வாழ்வும் கொண்டாடும்விதமாகத்தான் இருக்கிறதா என்பது பெரும் கேள்வி. ‘வெற்றிநடை போடும் இந்தியா’வில் ஆற்றைக் கடக்க சரியான பாதை இல்லாமல் அவதிப்படும் ஒரு கிராமத்தைப் பற்றிய கட்டுரைதான் இது!

தருமபுரி - சேலம் மாவட்டங்களை இணைக்கக்கூடிய கடைக்கோடி கிராமங்கள் வேப்பமரத்தூர், வே.கொங்கரப்பட்டி. தொப்புள்கொடி உறவான, இந்த இரண்டு கிராமங்களையும் தொப்பையாற்றுப் படுகை பிரித்துவைத்திருக்கிறது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கருங்கல்லூர் ஊராட்சிக்குள், வேப்பமரத்தூர் கிராமம் வருகிறது. அதேபோல், சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேப்பிலை ஊராட்சிக்குள் வே.கொங்கரப்பட்டி கிராமம் இருக்கிறது. எல்லைப் பிரச்னையால், இரண்டு மாவட்ட நிர்வாகங்களும் மேற்கண்ட கிராமங்களைக் கண்டுகொள்வதில்லை. இதனால், சொல்லி மாளாத பல துயரங்களைச் சந்தித்துவருகிறார்கள் இந்தக் கிராம மக்கள்.

தங்களது அன்றாடத் தேவைகளுக்காக, இரு கிராம மக்களும் படகு மூலம்தான் தொப்பையாற்றைக் கடக்கிறார்கள். வெள்ளப்பெருக்கு காலத்தில், ஆற்றின் குறுக்கே போடப்பட்டிருக்கும் உயர்மட்டக் குடிநீர் பைப்லைன் சுவர்மீது ஏறி ஆபத்தான முறையில் செல்கிறார்கள். உயர்மட்டச் சுவர்மீது ஏறுவதற்கு, ஏணி போன்ற ஒரு சாரத்தை அதில் சாய்த்துவைத்துள்ளனர். பைப்லைன் சுவரின் இரண்டுப் பக்கவாட்டிலும் கைப்பிடித் தடுப்புகள் ஏதுமில்லை. ஒவ்வோர் அடியையும் கவனமாக எடுத்துவைக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை காலங்காலமாக இந்தப் பாதையில்தான் சிரமப்படுகிறார்கள். ஆனாலும், இவர்களின் நிலை வெளிச்சத்துக்கு வராமலேயே கிடக்கிறது.

கடைக்கோடி கிராமம்: கொஞ்சம் தவறினாலும் மரணம் நிச்சயம்! - ஆற்றைக் கடக்கப் போராடும் மக்கள்!

நாம் அந்த கிராமத்துக்குச் சென்றோம். விரக்தியும் ஆதங்கமுமாக மக்கள் நம்மிடம் மனம் திறந்து பேசினார்கள்... ‘‘விவசாய பூமி இது. ரெண்டு பக்கமும் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் இருக்கோம். முக்கால்வாசி ஜனங்க விவசாயம் செய்யுறாங்க. வேப்பமரத்தூர் கிராமத்துலதான் ஹைஸ்கூல் இருக்குது. வே.கொங்கரப்பட்டி... அப்புறம் அதைச் சுத்தியிருக்கிற ஏழெட்டு ஊர்ப் புள்ளைங்களும் ஆத்துக்கு நடுவுல இருக்கிற பைப்லைன் சுவர்மேல ஏறிப்போய்தான் அங்க படிக்கிறாங்க. இங்க சாமந்திப்பூ சாகுபடி அதிகம். நைட்டு பகல்னு பார்க்காம, டெம்போ வண்டில பூக்களைப் பறிச்சுப் போட்டுக்கிட்டு 20, 30 கிலோமீட்டர் ஊரைச் சுத்திக்கிட்டு தருமபுரி டவுன் இல்லைன்னா சேலம் டவுனுக்கு ஓடுறோம். கிடைக்கிற நூறு, இருநூறு ரூபாயும் வண்டி வாடகைக்கே சரியாப் போயிடுது. ஒரு ஆஸ்பத்திரிகூட பக்கத்துல இல்லை.

வயசானவங்க ஆத்தைக் கடந்து போக படகு வெச்சுருக்கோம். உப்பாளம்மன் கோயிலருகே இருக்குற தொப்பையாறு அணை நிரம்பிடுச்சுன்னா, ஆத்துல மூணு ஆள் உயரத்துக்குத் தண்ணி நிற்கும். இப்போ, தண்ணி அதிகமா போறதால, படகை ஓரமா நிக்கவெச்சுருக்கோம். இப்ப வயசானவங்களும் சாரத்தைப் பிடிச்சு ஏறி... பைப்லைனை ஒட்டிக்கிட்டே நடந்துபோய் மறுகரையைச் சேருறாங்க. கொஞ்சம் தவறினாலும் மரணம் நிச்சயம். நிறைய தடவை விபரீதச் சம்பவங்கள் நடந்திருக்குது. பல உயிர்களை இழந்திருக்கிறோம். குறிப்பா, பிரசவ நேரத்துல எங்களால எதுவுமே செய்ய முடியாது. 20 கிலோமீட்டர் ஊரைச் சுத்திக்கிட்டு ஹாஸ்பிட்டல் போற அளவுக்கு கிராமத்துல யாரும் ஆட்டோ, கார்னு வெச்சுருக்குற வசதியான ஆளில்லை. நடுராத்திரியில பிரசவவலி வந்தாலும், பனிக்குடம் உடையுறதுக்குள்ள பைப்லைன் சுவர் மேல ஏறி உயிரைக் கையில புடிச்சுக்கிட்டு ஓடுறோம்.

கடைக்கோடி கிராமம்: கொஞ்சம் தவறினாலும் மரணம் நிச்சயம்! - ஆற்றைக் கடக்கப் போராடும் மக்கள்!

வே.கொங்கரப்பட்டியிலருந்து ஆத்தைக் கடந்து நாலு கிலோமீட்டர் தூரத்துக்குப் போனா, முத்தம்பட்டிங்கிற ஊர்ல ஆரம்பச் சுகாதார நிலையம் இருக்குது. ஆத்தைக் கடந்து போக முடியலைன்னா, பத்து ஊரைச் சுத்திக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போகணும். போன ஆட்சியில மினி கிளினிக் கொண்டுவந்தாங்க. இப்ப அதுவும் செயல்பாட்டுல இல்லை. இந்த பைப்லைன் உயரத்துல, ஒரு மேம்பாலம் கட்டித்தரச் சொல்லி 25 வருஷத்துக்கும் மேல ஆட்சியாளர்கள்கிட்ட மனு கொடுக்கிறோம். தருமபுரி கலெக்டர் ஆபீஸுக்குப் போனா, `சேலம் கலெக்டர் ஆபீஸுக்குப் போங்க’ன்னு சொல்றாங்க. அங்கே போனா `தருமபுரிக்கே போங்க’ன்னு துரத்துறாங்க.

சரி, ஓட்டுப்போட்டு சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் அனுப்பியிருக்கிற உரிமையில தருமபுரி எம்.பி., பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ ரெண்டு பேர்கிட்டேயும் மனு கொடுத்தோம். அவங்களும், ‘இது, நமக்கான எல்லை மட்டுமில்லை. சேலம் நாடாளுமன்றத் தொகுதி, ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்ளேயும் வருது. அவங்ககிட்டேயும் மனு கொடுங்க. சேர்ந்து பேசி முடிவு பண்றோம்’னு சொன்னாங்க. நாங்களும் சேலம் எம்.பி., ஓமலூர் எம்.எல்.ஏ-கிட்டயும் மனு கொடுத்துப் பார்த்துட்டோம். யாரும் எங்க ஊரை எட்டிக்கூட பார்க்கலை.

சமீபத்துலகூட அமைச்சர் கே.என்.நேருகிட்ட மனு கொடுத்தோம். வழக்கம்போல கண்டுக்கவே இல்லை. தேர்தல் நேரத்துல மட்டும் வர்ற கட்சிக்காரங்களை தேர்தல் முடிஞ்ச பின்னாடி பார்க்கவே முடியறதில்லை. எல்லைப் பிரச்னையைக் காரணம் காட்டி, கலெக்டர்லருந்து எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் வரைக்கும் மாத்தி மாத்தி கைகாட்டிக்கிட்டே இருக்காங்க. முதலமைச்சர்தான் எங்களைக் காப்பாத்தணும். உயிர்பயம் இல்லாம நடந்துபோக எங்களுக்கு ஒரு பாலம் வேணும் அவ்வளவுதான். ஸ்கூல், ஆஸ்பத்திரி, பஸ் வசதிகூட வேணாம்’’ என்றார்கள் குமுறலாய்.

கடைக்கோடி கிராமம்: கொஞ்சம் தவறினாலும் மரணம் நிச்சயம்! - ஆற்றைக் கடக்கப் போராடும் மக்கள்!

இது தொடர்பாக, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ கோவிந்தசாமியிடம் கேள்வி எழுப்பினோம். ‘‘அந்த ஊரின் பிரச்னைகளைச் சட்டமன்றத்தில் பேசி அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறேன். இல்லையென்றால், என்னுடைய நிதியை ஒதுக்கி மேம்பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார்.

தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமாரிடம் கேட்டபோது, ‘‘உடனடியாக அந்த மக்களின் பிரச்னைகளைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கிறேன். இதுவரை என்னுடைய கவனத்துக்கு வரவில்லை’’ என்றார்.

வார்த்தை செயலாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்... அல்லது மீண்டும் கேட்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism