Published:Updated:

தாமிரபரணி: வெள்ளநீர் கால்வாய் திட்டத்துக்கு சொட்டுத் தண்ணீர் தர மாட்டோம்; விவசாயிகள் ஆவேசம்!

ஆட்சியர் அலுவலக வாயிலில் விவசாயிகள்
News
ஆட்சியர் அலுவலக வாயிலில் விவசாயிகள்

தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டத்தின் சோதனை ஓட்டத்துக்கு ஆயிரம் கன அடி தண்ணீரை அணையில் இருந்து திறக்க இருப்பதை அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை.

தாமிரபரணி: வெள்ளநீர் கால்வாய் திட்டத்துக்கு சொட்டுத் தண்ணீர் தர மாட்டோம்; விவசாயிகள் ஆவேசம்!

தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டத்தின் சோதனை ஓட்டத்துக்கு ஆயிரம் கன அடி தண்ணீரை அணையில் இருந்து திறக்க இருப்பதை அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை.

Published:Updated:
ஆட்சியர் அலுவலக வாயிலில் விவசாயிகள்
News
ஆட்சியர் அலுவலக வாயிலில் விவசாயிகள்

நெல்லை மாவட்டத்தில் மழைக் காலத்தில் அணைகள் நிரம்பி வழிவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வழக்கம். மழைக் காலங்களில் அணைகள் நிரம்பிய பின்னர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் ஆற்றின் வழியாக சுமார் 13 டி.எம்.சி அளவுக்கு வீணாக கடலில் கலக்கிறது.

வெள்ளநீர் கால்வாய் திட்டம்
வெள்ளநீர் கால்வாய் திட்டம்

உபரி நீரை ராதாபுரம், திசையன்விளை, சாத்தான்குளம் உள்ளிட்ட வறட்சிப் பகுதிகளின் விவசாயிகள் பயனடையும் வகையில் அங்கு தண்ணீரை கொண்டு செல்லும் வகையில், கருமேனியாறு மற்றும் நம்பியாறு ஆகியவற்றுடன் தாமிரபரணியை இணைக்கும் திட்டம் 2009 -ல் 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டது. அந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் தற்போது 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன.

வெள்ளநீர் கால்வாய் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது நெல்லை மாவட்டத்தின் 32 கிராமங்களும் தூத்துக்குடி மாவட்டத்தின் 18 கிராமங்களும் பயனடையும். அத்துடன், சுமார் 50,000 ஏக்கர் பாசன நிலம் பயன்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முழுவீச்சில் நடப்பதால் வரும் மார்ச் மாதத்துக்குள் அனைத்துப் பணிகளும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் எதிர்ப்பு
விவசாயிகள் எதிர்ப்பு

வெள்ளநீர் கால்வாய் பணிகள் 95 சதவிகிதம் முடிவடைந்த நிலையில், நெல்லை-கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் பாலம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. அதை அண்மையில் பார்வையிட்ட சபாநாயகர் அப்பாவு, ”வெள்ளநீர் கால்வாய் பணிகளுக்காக 1300 கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறக்கப்பட்டு தற்காலிகமாக சோதனை ஓட்டம் நடத்தப்படும்” என் அறிவித்தார்.

வெள்ளநீர் கால்வாயில் சோதனை ஓட்டத்துக்காக அணையைத் திறந்தால் தங்களின் பிசான சாகுபடி விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் சங்கத்தினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் சபாநாயகருமான அப்பாவு தெரிவித்துள்ளபடி சோதனை ஓட்டத்துக்காக அணையைத் திறக்கக் கூடாது என கோஷங்களை எழுப்பினார்கள்.

மனு அளிக்க வந்த விவசாயிகள்
மனு அளிக்க வந்த விவசாயிகள்

பொதுவாக தங்களுக்கு கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டாலே கடைமடைப் பகுதியைச் சென்றடைய இரண்டு வாரங்களுக்கும் மேலாகிவிடும் சூழலில், வெள்ளநீர் கால்வாயில் சோதனை நடத்தினால் கடைசி பகுதிவரை செல்ல ஒரு மாதமாகிவிடும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அதனால் சோதனை ஓட்டத்துக்காக ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட கொடுக்க மாட்டோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

விவசாயிகள் தங்கள் கோரிக்கையை நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க உள்ளே செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் விவசாய சங்க பிரதிநிதிகளில் சிலர் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

விவசாய சங்க செயலாளர் கண்ணப்ப நாயனார்
விவசாய சங்க செயலாளர் கண்ணப்ப நாயனார்

பின்னர் பேசிய கன்னடியன் கால்வாய் பாசன விவசாய சங்க செயலாளர் கண்ணப்ப நயினார், ”பாபநாசம் அணைக்கட்டில் தற்போது 82 அடி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. இந்த நிலையில், 75 கிலோமீட்டர் தூரம் கொண்ட வெள்ளநீர் கால்வாயில் சோதனை ஓட்டம் நடத்தினால் அணையின் தண்ணீர் முழுமையாக வீணாகிவிடும். மழைக்காலத்தில் உபரி நீர் இருக்கும் போது சோதனை நடத்தினால் பாதிப்பில்லை. இப்போது சோதனை நடத்தினால் எங்களின் விவசாயம் பாதிக்கப்பட்டுவிடும். அதனால் தான் விவசாயிகள் இந்தத் திட்டத்தை எதிர்க்கிறோம்” என்று தெரிவித்தார்.