Published:Updated:

பொலபொலவென உதிரும் கட்டடங்கள்! - தரமற்ற எம் சாண்ட் காரணமா?

எம் சாண்ட்
பிரீமியம் ஸ்டோரி
எம் சாண்ட்

அரசுப் புறம்போக்கு நிலத்திலுள்ள மலைகளில் பாறைகளை உடைக்க அரசு டெண்டரில் கலந்துகொண்டு லைசென்ஸ் பெற வேண்டும்.

பொலபொலவென உதிரும் கட்டடங்கள்! - தரமற்ற எம் சாண்ட் காரணமா?

அரசுப் புறம்போக்கு நிலத்திலுள்ள மலைகளில் பாறைகளை உடைக்க அரசு டெண்டரில் கலந்துகொண்டு லைசென்ஸ் பெற வேண்டும்.

Published:Updated:
எம் சாண்ட்
பிரீமியம் ஸ்டோரி
எம் சாண்ட்

தமிழகத்தில் 358 எம் சாண்ட் கிரஷர்களுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில், சட்டவிரோதமாக மொத்தம் சுமார் 4,000 எம் சாண்ட் கிரஷர்கள் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், தரமற்ற எம் சாண்டைத் தயாரித்து விற்பனை செய்வதாகப் புகார் எழுந்துள்ளது. `இப்படி, தரமற்ற எம் சாண்டைப் பயன்படுத்தி கட்டப்படும் கட்டுமானங்கள்தான் விரைவில் வலுவிழந்து விழுந்துவிடுகின்றன’ என்று குற்றம்சாட்டுகிறார்கள் கட்டுமானம் தொடர்பான வல்லுநர்கள். இந்தப் புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து சட்டமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரில், ‘எம் சாண்ட் தரம் குறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்?

ஆற்று மணலுக்கான மாற்று மணலே எம் சாண்ட். அதாவது, பாறைகளை உடைத்து செயற்கையாகத் தயாரிக்கப்படும் மணல் (Manufactured Sand). ஆற்றில் மணல் அள்ளப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகளைத் தடுக்கவே, எம் சாண்ட் பயன்பாடு பல்வேறு நாடுகளிலும் ஊக்குவிக்கப்படுகிறது. தமிழகத்தில் பல காலமாக ஆற்று மணலைக் கொண்டே கட்டடங்கள் கட்டப்பட்ட நிலையில், முதன்முறையாக கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டுமானத்தின்போதுதான் எம் சாண்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு தமிழகத்தில் சென்னை மெட்ரோ உட்பட கணிசமான கட்டுமானங்கள் இதன் மூலம் கட்டப்படுகின்றன. இந்தநிலையில்தான் தரமற்ற எம் சாண்ட் தயாரிக்கும் சட்டவிரோத கிரஷர்கள் தொடர்பான புகார் எழுந்துள்ளது.

எம் சாண்ட் அனுமதி கொடுப்பது யார்?

எம் சாண்ட் தயாரிப்பில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றி நம்மிடம் விவரித்தார்கள் பொதுப்பணித்துறையின் மூத்த அதிகாரிகள் சிலர்... “எம் சாண்ட் தயாரிக்கும் கிரஷர் அமைக்கக் கீழ்க்காணும் விதிமுறைகள் கட்டாயம். அரசுப் புறம்போக்கு நிலத்திலுள்ள மலைகளில் பாறைகளை உடைக்க அரசு டெண்டரில் கலந்துகொண்டு லைசென்ஸ் பெற வேண்டும். தனியார் நிலம் என்றால், அவர்களிடம் ‘பவர் ஆஃப் அட்டர்னி’ பெற வேண்டும். தவிர மாவட்ட ஆட்சியரகம், கனிமவளத்துறை, மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகிய துறைகளில் அனுமதி பெற வேண்டும். பிறகு வி.எஸ்.ஐ (Vertical Shaft Impactor) எந்திரத்தில் அரைக்கப்படும் எம் சாண்டை தூசு, துகள்கள் இல்லாதபடி தூய்மைப்படுத்த வேண்டும். இதை பொதுப்பணித்துறையின் தரக்கட்டுப்பாடுக் குழு ஆய்வு செய்து, மத்திய அரசின் ஆய்வகத்துக்கு அனுப்பும். அங்கிருந்து ‘தரமானதுதான்’ என்று ரிசல்ட் வந்த பிறகே சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு எம் சாண்டை விற்பனை செய்யும் அங்கீகாரத்தை, பொதுப்பணித்துறை வழங்கும். இந்த அங்கீகாரம் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

பொலபொலவென உதிரும் கட்டடங்கள்! - தரமற்ற எம் சாண்ட் காரணமா?

தமிழகத்தில் 4,000 கிரஷர்கள்?

மேற்குத் தொடர்ச்சி மலைகள் அல்லாமல், தமிழகம் முழுவதும் சுமார் 2,500 சிறு சிறு மலைகள், குன்றுகள் உள்ளன. அவற்றில் 60 சதவிகித மலைகள் அரசு புறம்போக்கு நிலத்திலும், 40 சதவிகிதம் தனியார் பட்டா நிலங்களிலும் உள்ளன. கடந்த 30.06.2021 அன்று பொதுப்பணித்துறை அறிவிப்பின்படி, தமிழகத்தில் 358 இடங்களில் மட்டுமே அரசால் அனுமதிக்கப்பட்ட கிரஷர்கள் இயங்கிவருகின்றன. ஆனால், இவை தவிர மேலும் 3,600-க்கும் மேற்பட்ட கிரஷர்கள் சட்டவிரோதமாக இயங்குவதாகத் தெரிகிறது. அரசின் எந்த விதிமுறையையும் இவை பின்பற்றுவதில்லை. சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வி.எஸ்.ஐ எந்திரத்தை வாங்காமல், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஹெச்.எஸ்.ஐ (Horizontal Shaft Impactor) எந்திரத்தில் எம் சாண்ட் தயாரிக்கிறார்கள். சில கிரஷர்களோ, ஜல்லி தயாரிக்க அனுமதி பெற்றுவிட்டு, எம் சாண்ட் தயாரிக்கின்றன. சிலர் தூசு, துகள்களுடன் கூடிய எம் சாண்டை விற்பனை செய்கிறார்கள். இன்னும் சிலரோ தூசு, துகள்களையே எம் சாண்ட் என்று விற்கிறார்கள்.

ஆற்று மணல் வியாபாரத்தைப் பொறுத்தவரை சட்ட விதிமீறல்களுக்கு தண்டனை உண்டு. ஆனால், எம் சாண்ட் தொழிலில் விதிமீறல்களுக்கு சட்ட நடவடிக்கைகள் வரையறுக்கப்படவில்லை. விதிமீறல்களுக்கு யார் நடவடிக்கை எடுப்பது? கனிமவளத்துறையா, காவல்துறையா, மாசு கட்டுப்பாடு வாரியமா என்பதில் அதிகாரிகளிடையே குழப்பங்கள் நிலவுகின்றன.

இதற்கான விதிமுறைகளையும் தண்டனைகளையும் வரையறுக்க கடந்த 2020, நவம்பர் 21-ம் தேதி மணல் லாரி உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனத்தினர், மாசு கட்டுப்பாடு வாரியம், கனிமவளத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், ‘சட்டவிரோத கிரஷர்களுக்கு சீல் வைக்கப்பட்டு, அதன் உரிமையாளர்கள் கைதுசெய்யப்பட வேண்டும். தவறு உறுதி செய்யப்பட்டால், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்பட வேண்டும்’ என்பது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளைப் பரிந்துரைத்து ‘தமிழ்நாடு எம் சாண்ட் விதிமுறைகள்’ என்றொரு பாலிசி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்தே, கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ‘தரமற்ற எம் சாண்ட் குறித்து ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிவித்தார். விரைவில் இதற்கான அரசாணை வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்கள் விரிவாக.

யுவராஜ்
யுவராஜ்

“தரமற்ற எம் சாண்டைப் பயன்படுத்தியதால்தான் அரசுக் கட்டுமானங்கள் சில இடங்களில் இடிந்து விழுந்தன” என்று குற்றம்சாட்டுகிறார் தமிழ்நாடு எம் சாண்ட் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் யுவராஜ்... “அரசியல்வாதிகளும் அவர்களின் பினாமிகளும்தான் பெரும்பாலான அனுமதி இல்லாத எம் சாண்ட் கிரஷர்களை நடத்திவருகிறார்கள். இவர்களில் முன்னாள் அமைச்சர்கள் சிலரும் அடக்கம். கடந்த சில ஆண்டுகளில் ஒப்பந்ததாரர்கள் சிலர் தரமற்ற எம் சாண்டைப் பயன்படுத்தி அரசுக் கட்டுமானங்களைக் கட்டியதால்தான் பல்வேறு இடங்களில் கட்டடங்கள் பொலபொலவென இடிந்து விழுந்தன. புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு கட்டுமானத்திலும் தரமற்ற எம் சாண்ட் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் உள்ளது.

தவிர, தமிழகத்துக்குள் மட்டுமின்றி, பிற மாநிலங்களுக்கும் விதிமுறைகளை மீறி எம் சாண்டைக் கடத்துகிறார்கள். அதாவது, ஒரு பில்லை வைத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான லாரிகளில் எம் சாண்டை அனுப்புகிறார்கள். இதனால், அரசுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. எம் சாண்ட் தனியார்துறை என்பதால், அனுமதியில்லாத கிரஷர்கள் மீது நடவடிக்கை எடுக்க விதிமுறைகளை அமல்படுத்தாமல், லாரி ஓட்டுநர்களை மட்டும் கைதுசெய்கிறார்கள். அரசு உடனடியாக அனுமதியில்லாத கிரஷர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

“குவாரிகளுக்கு எதிராகச் சதி!”

“இவையெல்லாம் ஆற்று மணலை அள்ளுவதற்காக எம் சாண்ட் தொழிலை ஒழிக்க நடக்கும் சதி” என்கிறார் தமிழ்நாடு குவாரிகள் மற்றும் கிரஷர்கள் சங்கத் தலைவர் கோவை சின்னசாமி. “கிரஷர் அமைக்க கனிமவளத்துறை, மாவட்ட ஆட்சியர், மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியவற்றின் அனுமதி கிடைத்தாலும், பலருக்கும் பொதுப்பணித்துறையின் அனுமதி கிடைப்பதில்லை. அவர்களில் சிலர்தான் இந்த தாமதத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அனுமதி இல்லாமலேயே கிரஷர்களை இயக்கத் தொடங்கிவிடுகிறார்கள். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்தான் அனுமதியில்லாத கிரஷர்கள் அதிக அளவில் செயல்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் ஒட்டுமொத்த கிரஷர்களும் அனுமதியின்றி செயல்படுவதுபோலவும், தரமில்லாத எம் சாண்டைத் தயாரிப்பதுபோலவும் சிலர் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். ஆற்று மணலில் கிடைத்த கமிஷன்போல எம் சாண்ட் வியாபாரத்தில் கிடைக்காது. அதனாலேயே, இப்படியெல்லாம் அவதூறுகளைச் சுமத்தி, எம் சாண்ட் குவாரிகளை மூடவைத்து, முழுக்க முழுக்க ஆற்று மணலைக் கொண்டுவர முயல்கிறார்கள். இதன் பின்னால் மிகப்பெரிய சதிவலை இருக்கிறது. சட்டசபைக் கூட்டத்தொடர் முடிந்ததும், முதல்வரை நேரில் சந்தித்து எங்களது குறைகளை எடுத்துக் கூறுவோம்” என்றார்.

*****

எம் சாண்ட்... என்ன லாபம்?

தற்போது தமிழகத்தில் ஆற்று மணல் குவாரிகள் மூன்று மட்டுமே (மொத்தம் 72) செயல்பாட்டில் இருக்கின்றன. தற்போது ஆற்று மணல் ஒரு யூனிட் 32,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதுவே எம் சாண்ட் ஒரு யூனிட் 22,000 முதல் 28,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆற்று மணலுடன் 50 மூட்டை சிமென்ட் கலக்கிறார்கள் என்றால், எம் சாண்ட் மணலுடன் 25 மூட்டை சிமென்ட் கலந்தாலே போதுமானது. ஆற்று மணலுடன் ஒப்பிட எம் சாண்ட் விலையும் குறைவு; சிமென்ட் பயன்பாடும் பாதிக்குப் பாதி குறைவு. இதனாலேயே எம் சாண்டுக்கு டிமாண்ட் அதிகரித்திருக்கிறது.

எது தரமற்ற எம் சாண்ட்?

``தரமற்ற எம் சாண்டை எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது?’’ என்று கட்டுமான வல்லுநர்களிடம் பேசினோம். “தரமான எம் சாண்ட், ஆற்று மணலுக்கு நிகரான கடினமான துகள்களாக இருக்கும். அதனுடன் சிமென்ட்டைக் கலக்கும்போது, இரண்டு பொருள்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து கட்டடத்துக்கு நல்ல உறுதித்தன்மையைக் கொடுக்கும். அதுவே, தரமற்ற எம் சாண்டை சிமென்ட்டுடன் கலந்தால், கெட்டியான கலவையாக இல்லாமல் சேறு போன்று வழவழவென்று தோற்றமளிக்கும். அதைக்கொண்டு கட்டுமானம் செய்தால், கட்டடத்தின் ஆயுட்காலம் குறைவுதான்” என்றார்கள்.