Published:Updated:

ஜோகோவிச்சை ஏன் திரும்ப போகச் சொன்னது ஆஸ்திரேலியா?

Djokovic
News
Djokovic ( Mark Dadswell )

Today Edition Highlights: ஜல்லிக்கட்டுக்கு கட்டுப்பாடுகள் | புதிய பாஸ்போர்ட்டில் என்ன ஸ்பெஷல்? | ஒத்திவைக்கப்பட்ட கல்லூரி தேர்வுகள் | கோல்டன் குளோப் விருது விழா ஏன் நடக்கவில்லை? | Reading Time: ⏱ 6 Mins

Note: The Subject Line நியூஸ்லெட்டரின் இன்றைய Edition இது. இதேபோல தினசரி நிகழ்வுகளை எளிமையாக, விரிவாகப் புரிந்துகொள்ள கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு அன்றைய முக்கியமான அப்டேட்கள் உங்கள் இன்பாக்ஸிற்கே வந்துசேரும்!

ஹாய், ஹலோ… வணக்கம் 👋

இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஜோகோவிச்சை ஏன் திரும்ப போகச் சொன்னது ஆஸ்திரேலியா?

10-வது முறையாக ஆஸ்திரேலிய ஓப்பன் சாம்பியன்ஷிப் வெல்வது, ஃபெடரர், நடால் இருவரையும் முந்தி 21-வது கிராண்ட்ஸ்லாம் வெல்வது; இந்த இரண்டு நோக்கங்களோடு, ஆஸ்திரேலியாவுக்கு வந்திறங்கிய உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை, கடந்த 5 நாள்களாக வாட்டியெடுத்திருக்கிறது ஆஸ்திரேலியா. நேற்று, ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் ஜோகோவிச்சுக்கு தீர்ப்பு சாதகமாக வரவும்தான், நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர் அவரின் ரசிகர்கள்.

என்ன பஞ்சாயத்து இது?

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடர் வரும் 17-ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இதில் கலந்துகொள்வதற்காக, கடந்த வியாழக்கிழமையன்று ஆஸ்திரேலியா வந்தார் ஜோகோவிச்.

 • இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து வீரர்களுக்கும், ஆஸ்திரேலியாவின் முக்கியமான விதிமுறைகளில் ஒன்று, கோவிட்டுக்கு எதிரான தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டிருப்பது; இல்லையெனில், தடுப்பூசி எடுக்காததற்கு உரிய மருத்துவ காரணங்களை, மருத்துவர்களின் அறிக்கையுடன் தாக்கல் செய்து, இதிலிருந்து விலக்கு பெறவேண்டும். கோவிட்டால் ஏற்படும் தீவிர பாதிப்புகள் அல்லது வேறு தீவிர நோய் பாதிப்புகளுக்கு மட்டுமே இந்த விதிவிலக்கு வழங்கப்படும்.

 • இதில், ஜோகோவிச் இரண்டாவது வகை. தடுப்பூசி செலுத்துவதற்கு பெற்ற விதிவிலக்குடன், ஜனவரி 6-ம் தேதி ஆஸ்திரேலியா வந்திறங்கினார். அங்கிருந்துதான் சிக்கல் தொடங்கியது.

 • தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் அனுமதியில்லை எனக்கூறி சுமார் 10 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர் ஆஸ்திரேலிய அதிகாரிகள். பின்னர், அதிகாலையில் அவரின் விசாவையும் ரத்து செய்துவிட்டனர். இதையடுத்து ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிப்போகும் நிலை வரவே, உடனே இதுகுறித்து அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அவர். அவர்தான், விதிவிலக்கு பெற்றவராயிற்றே? பிறகென்ன பிரச்னை? இருக்கிறது.

Djokovic
Djokovic
AP Photo / Hamish Blair

ஏன் விசாவை ரத்து செய்தது ஆஸ்திரேலியா?

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை இரண்டு நிர்வாக அடுக்குகள் இந்தப் பிரச்னையில் வருகின்றன. ஒன்று, விக்டோரியா மாகாண அரசு. இன்னொன்று, அந்நாட்டு மத்திய அரசு. இதில், ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடர் நடப்பது மெல்போர்னில், அதாவது விக்டோரியா மாகாணத்தில் என்பதால், இதற்கான விதிவிலக்குகளை அந்த மாகாணமே தீர்மானிக்கும் என முதலில் சொல்லியிருந்தது ஆஸ்திரேலியா.

 • அந்த மாகாண விதிமுறையின்படி, தடுப்பூசிகளிலிருந்து விதிவிலக்கு பெறவேண்டுமானால் இரண்டு மருத்துவ நிபுணர்கள் குழுவின் அனுமதி பெறவேண்டும். ஏன் விதிவிலக்கு என்பதற்கு மருத்துவ ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதைத்தான் ஜோகோவிச்சிடம் சொல்லியிருக்கிறது ஆஸ்திரேலிய டென்னிஸ் அமைப்பு. மேலும், மத்திய அரசின் விதிமுறைகளுக்கு மாறாக, கடந்த 6 மாதங்களுக்குள் கொரோனாவால் பாதித்தவர்களும் பங்கேற்கலாம் எனவும் தவறாகச் சொல்லியிருக்கிறது அந்த அமைப்பு.

 • இதன்படிதான், ஏற்கெனவே டிசம்பரில் கொரோனா பாதித்திருந்ததால், அந்த காரணத்தோடும், கூடவே அதற்கான சான்றுகளாக இரண்டு மருத்துவ குழுவினரின் அறிக்கையோடு மட்டும் ஆஸ்திரேலியா வந்தார் ஜோகோவிச். ஆனால், இங்குதான் திடீரென தலையை நுழைத்தது அந்நாட்டு மத்திய அரசு.

ஏன் இந்த திடீர் தலையீடு?

காரணம், அரசியல் அழுத்தங்கள். ``இந்த ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க வருபவர்களின் 26 வீரர்கள் மட்டுமே விதிவிலக்கு கேட்டிருக்கின்றனர். அவர்களில் வெகுசிலருக்கு மட்டுமே, மருத்துவ நிபுணர்களின் அறிவுரையின்படி அனுமதியளிக்கப்பட்டுள்ளது” என கடந்த புதன் கிழமை, அதாவது ஜோகோவிச் ஆஸ்திரேலியா வருவதற்கு முன்பு பேட்டியளித்திருந்தார் ஆஸ்திரேலிய டென்னிஸ் அமைப்பின் முதன்மை நிர்வாகி கிரெய்க் டிலே.

 • மேலும், ஜனவரி 4-ம் தேதி ஆஸ்திரேலியா கிளம்பும் முன்பு ஜோகோவிச்சும் இந்த விதிவிலக்கு குறித்து ட்வீட் செய்திருந்தார். இந்த இரண்டையும் தொடர்ந்து, ``ஆஸ்திரேலியாவில் பிரபலங்களுக்கு மட்டும் தனிச்சலுகையா?” எனக் கேள்விகள் எழுந்தன. கூடவே, ஜோகோவிச்சுக்கு எதன் அடிப்படையில் விதிவிலக்கு வழங்கப்பட்டது என்ற விவரமும் வெளியிடப்படவில்லை. அரசின் இந்த செயலும் விமர்சனங்களைச் சந்தித்தது.

 • இதையடுத்துதான், அதுவரைக்கும் `இது விக்டோரியா மாகாண பிரச்னை’ எனக் கூறிவந்த மத்திய அரசு உள்ளே தலையிடத் தொடங்கியது.

 • ``மாகாண அரசு வெறுமனே ஜோகோவிச்சிற்கு கோவிட் பாதிப்பு இருந்ததால் மட்டுமே தடுப்பூசியிலிருந்து விலக்கு கொடுத்துவிட்டது. ஆனால், ஆஸ்திரேலிய விதிமுறைகளின்படி தீவிர கோவிட் பாதிப்பு அல்லது வேறு தீவிர நோய் பாதிப்பு இருந்தால்தான் விதிவிலக்கு. ஆனால், ஜோகோவிச் இரண்டு வாரங்களில் குணமாகிவிட்டாரே? பிறகு எதற்கு விதிவிலக்கு?” என்றது.

 • ``விதிமுறைகள் என்பது அனைவருக்கும் ஒன்றுதான். அவர் தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரங்களை காட்டவில்லையெனில், ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்படும்” என அதிரடியாக அறிவித்தார் அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன். விக்டோரியா மாகாண அரசு விதிவிலக்கு கொடுத்தாலும், ஆஸ்திரேலியாவில் ஒருவர் தடுப்பூசியின்றி நுழைவதை மத்திய அரசு அனுமதிக்காது எனக்கூறி இந்த நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்துதான் ஏர்போர்ட்டில் ஜோகோவிச் தடுத்து நிறுத்தப்பட்டு, விசா ரத்து செய்யப்பட்டு, அங்குள்ள ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒரு தடுப்பூசிக்கு இவ்வளவு பிரச்னையா?

ஆம், ஆஸ்திரேலியாவில் இது பெரிய பிரச்னைதான். கிட்டத்தட்ட சீனா போல, லாக்டௌன், கட்டுப்பாடுகள், தடுப்பூசி விதிமுறைகள் என எல்லா கொரோனா விதிமுறைகளையும் மிகத்தீவிரமாக பின்பற்றச்சொல்லும் நாடு ஆஸ்திரேலியா.

 • இவ்வளவு கட்டுப்பாடுகளோடு மக்கள் வாழ்ந்து வரும் இடத்தில், இப்படி வெளிநாட்டவர்களுக்கு மட்டும் அனுமதியளித்தால் அது அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்துமல்லவா? அதற்காகத்தான் இவ்வளவு அதிரடி காட்டுகிறது ஆஸ்திரேலிய அரசு.

 • மேலும், இந்த ஆண்டு அந்நாட்டில் தேர்தலும் வருகிறது. அண்மைக் காலமாக உயர்ந்து வரும் கொரோனா எண்ணிக்கை, தீவிர கட்டுப்பாடுகள் ஆகியவை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஜோகோவிச் விவகாரத்தில் தீவிரம் காட்டுவதன் மூலம், ``இங்கு எல்லாருக்கும் ஒரே நீதிதான்!” எனக் காட்டி ஸ்கோர் செய்ய நினைக்கிறார் ஸ்காட் மோரிசன். இவையெல்லாம் சேர்ந்துதான் பிரச்னையைப் பெரிதாக்கிவிட்டன. மக்களின் அதிருப்திக்கு இது மட்டும்தான் காரணமா?

ஜோகோவிச்சும் ஒரு காரணம்தான்!

கடந்த சில மாதங்களாக தடுப்பூசிகளுக்கு எதிராகப் பேசி வந்தவர் ஜோகோவிச். அவர் இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொண்டாரா என்பதே, இந்த வழக்கு நடக்கும் வரை கேள்விக்குறியாக இருந்தது. மேலும், கடந்த டிசம்பர் 16-ம் தேதி கோவிட்டால் பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார் அவர். ஆனால், அதே சமயத்தில் மாஸ்க் கூட அணியாமல் அவர் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புகைப்படங்களும் வெளியாயின. இப்படி, தீவிர கட்டுப்பாட்டில் இருக்கும் ஆஸ்திரேலிய மக்களின், நேரெதிர் பிம்பமாக ஜோகோவிச் இருந்ததும், அவர் மீது அதிருப்தி எழக் காரணமாகிவிட்டது. அப்படியெனில் அவர்மீதுதான் தவறா?

 • ``ஆஸ்திரேலியா அனுமதியளிக்காமல் அவர் அங்கு வரவில்லை. அந்நாட்டு டென்னிஸ் அமைப்பும் அனுமதித்துதான் வந்திருக்கிறார். அப்படி வந்தவரை திடீரென விசாவை ரத்து செய்துவிட்டு திருப்பியனுப்புவது நியாயமா?” என அவருக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்தன. மேலும், இப்படி விசா ரத்து செய்யப்பட்டால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியாவில் நுழைய முடியாது. இது கூடுதல் சிக்கல்.

 • ஆரம்பத்திலிருந்தே ஜோகோவிச் பொய் சொல்லவில்லை. உரிய ஆதாரங்களைத் தந்திருக்கிறார். மாறாக, ஆஸ்திரேலிய அரசுகளுக்கு இடையேயான விதிமுறை குழப்பங்கள்தான், பிரச்னைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படியிருக்க அனைத்து பழிகளும் ஜோகோவிச் மீது மட்டும் விழுவது சரியா என்றும் கேள்விகள் எழுகிறது.

இந்த இரண்டு தர்க்கங்களைத்தான், நீதிமன்றத்திலும் வைத்து வாதாடினர் ஜோகோவிச்சின் வழக்கறிஞர்கள். இறுதியாக, நீதிமன்றமும் அவரின் விசா செல்லும் எனத் தீர்ப்பளித்து, அவரை ஹோட்டலிலிருந்து விடுவிக்கச் சொல்லிவிட்டது. இனி ஆஸ்திரேலியாவில் அவர் சுதந்திரமாக இருக்கலாம்.

 • ஆனால், பிரச்னை இதோடு முடியவில்லை. நீதிமன்றம், விசா செல்லும் எனச் சொல்லியிருந்தாலும்கூட, ஆஸ்திரேலிய அரசால் மீண்டும், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை ரத்து செய்யமுடியும். எனவே, அரசு என்ன செய்யப்போகிறது எனத் தெரியவில்லை. இன்னொருபுறம், ஜோகோவிச் டென்னிஸ் தொடருக்கு தயாராகி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜோகோவிச்சை ஏன் திரும்ப போகச் சொன்னது ஆஸ்திரேலியா?

1. ஆங் சான் சூ கி-க்கு மேலும் 4 ஆண்டு சிறை

 • கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், மியான்மரின் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்தே, ஆங் சான் சூ கி-யை வீட்டுச்சிறையில் வைத்திருந்தது அந்நாட்டு ராணுவம். மேலும் அவரை அரசியல் ரீதியாக முடக்குவதற்காக 10-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடர்ந்தது. கடந்த மாதம் அப்படியொரு வழக்கில், நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி, பின்னர் அதை 2 ஆண்டுகளாகக் குறைத்தது ராணுவம்.

 • இந்நிலையில், நேற்றும் ஒரு வழக்கில் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இதில், சட்டவிரோதமாக வாக்கி டாக்கிகள் வைத்திருந்தது மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் சூ கி-க்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியிருக்கிறது அந்நாட்டு நீதிமன்றம்.

 • ராணுவம் அந்நாட்டில் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியதும், இதுவரை 10,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், சூ கி-யும் ஒருவர். மியான்மரின் இந்த நடவடிக்கைகளுக்கு உலகம் முழுக்க இருக்கும் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

2. டெல்டாக்ரான் இருக்கா, இல்லையா? 🔬

 • இரு தினங்களுக்கு முன்பு பல்வேறு ஊடகங்களில், ஓமிக்ரான் மற்றும் டெல்டாவின் குணங்களோடு, `டெல்டாக்ரான்’ என்ற புதிய வேரியன்ட் ஒன்று உருவாகியிருப்பதாக நீங்கள் படித்திருக்கலாம். ஆனால், அப்படியொன்று உண்மையில் இருக்கிறதா, இல்லையா என்பதே விஞ்ஞானிகள் மத்தியில் பெரிய குழப்பமாகியிருக்கிறது.

 • முதன்முதலில் இப்படி டெல்டாக்ரான் என ஒன்று இருப்பதாகச் சொன்னது சைப்ரஸ் நாட்டு விஞ்ஞானிகள்தான். ஓமிக்ரான் மற்றும் டெல்டாவின் இரண்டு வேரியன்ட்களின் குணங்களோடு, நோயாளிகளிடையே ஒரு புதிய வேரியன்ட்டைக் கண்டுபிடித்திருப்பதாகக் கூறினர் அவர்கள். ஆனால், இப்படியோரு வேரியன்ட் உருவாகியிருக்க வாய்ப்பு இல்லை எனவும், இது ஆய்வகங்களில் ஏற்படும் பிழைகளால் கிடைத்திருக்கும் முடிவு எனவும் தெரிவித்திருக்கின்றனர் இன்னொரு தரப்பினர்.

இப்போது டெல்டாக்ரான் எனச் சொல்லப்படும் மாதிரிகள், உலகம் முழுவதும் வேரியன்ட்களை கண்காணிக்கும் GISAID மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் உண்மை என்ன என்பது தெரியவரும்.

3. கோல்டன் குளோப் நிகழ்ச்சி ஏன் நடக்கவில்லை? 🎭

ஓவ்வோர் ஆண்டும் பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களின் அணிவகுப்புடன் பிரமாண்டமாக நடக்கும் கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சி, இந்த ஆண்டு விருந்தினர்கள் யாருமின்றி, அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. வெற்றியாளர்களின் பட்டியல், வெறுமனே கோல்டன் குளோப் இணையதளத்தில் மட்டுமே வெளியானது. ஏன் இந்த அமைதி?

காரணங்கள், மூன்று.

 • முதலாவது, Hollywood Foreign Press Association (HFPA) அமைப்பின் மீதான சர்ச்சைகள். இந்த அமைப்புதான் ஒவ்வோர் ஆண்டும் கோல்டன் குளோப் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறது. இந்த அமைப்பில் உலகின் பல நாட்டு பத்திரிகையாளர்களும் இடம்பெற்றிருப்பர். இதன் உறுப்பினர்கள் ஹாலிவுட் ஸ்டூடியோக்களிடம் லஞ்சம் பெறுவது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் கடந்த ஆண்டு பெரிய சர்ச்சையைக் கிளப்பின.

 • இரண்டாவது, இந்த HFPA-ல் கடந்த ஆண்டு வரை இடம்பெற்றிருந்த 87 உறுப்பினர்களில் ஒருவர்கூட கறுப்பினத்தவர் இல்லை. இது HFPA மீது இன்னும் கோபத்தைக் கிளப்பியது. இதைத்தொடர்ந்து, நெட்ப்ளிக்ஸ், அமேசான், வார்னர் மீடியா உள்ளிட்ட பிரபல ஸ்டூடியோக்கள் கோல்டன் குளோப்பில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தன. பிரபல நட்சத்திரங்கள் பலரும் கோல்டன் குளோப்பை புறக்கணித்தனர்.

 • மூன்றாவது, கோல்டன் குளோப்பை வழக்கமாக ஒளிபரப்பு செய்யும் NBC நிறுவனமும், இந்த ஆண்டு சர்ச்சைகள் காரணமாக நிகழ்ச்சியிலிருந்து விலகியது.

இந்தக் காரணங்களால்தான், ஹாலிவுட்டில் பெரிய வரவேற்பின்றி அமைதியாக நடந்து(?) முடிந்திருக்கிறது கோல்டன் குளோப் விழா. மேற்கண்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களாகவே நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது HFPA. 21 புதிய உறுப்பினர்களை அமைப்பில் சேர்த்துக்கொண்டுள்ளது. இதில் 6 பேர் கறுப்பினத்தவர்கள். இந்த மாற்றங்களைத் தொடர்ந்து, ஹாலிவுட் மீண்டும் HFPA-வுக்கு ஒத்துழைப்பு அளிக்குமா என்பது வரும்காலங்களில்தான் தெரியும்.

4. இன்று தொடங்கும் 3-வது டெஸ்ட் 🏏

 • தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று கேப்டவுனில் தொடங்குகிறது. இரு அணிகளும் 1 - 1 என சமநிலை வகிக்கும் நிலையில், இந்தப் போட்டியில் வென்று தொடரை வெல்ல இரு அணிகளும் தீவிரம் காட்டும்.

 • கடந்த போட்டியில் காயம் காரணமாக, விளையாடாமல் இருந்த விராட் கோலி, இன்றைய போட்டியில் விளையாடுகிறார். சிராஜ் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இந்தப் போட்டி, மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

ஜோகோவிச்சை ஏன் திரும்ப போகச் சொன்னது ஆஸ்திரேலியா?

- அதிகபட்சமாக, சென்னையில்: 6,190 (6,186) 🔺

- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 11 (12) ⬇️

 • இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு: 1,79,723 (1,59,632) 🔺

  - இதுவரை பதிவான ஓமிக்ரான் பாதிப்பு: 4,033 (3,623) 🔺

 • தமிழகத்தில் தற்போது இருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்திருக்கிறது தமிழக அரசு. இத்துடன் கூடுதலாக சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதன்படி,

  - 14/01/2022 முதல் 18/01/2022 வரை வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

  - 16/01/2022 அன்று (காணும் பொங்கல்) முழு ஊரடங்கு.

  - பொங்கல் பண்டிக்கைக்காக வெளியூர் செல்லும் பேருந்துகளில் 75% பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி.

 • தற்போதைய மூன்றாவது அலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களில் 5 முதல் 10% பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டிய நிலை ஏற்படுவதாகவும், இது இரண்டாம் அலையில், 20 முதல் 23% ஆக இருந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. அதேசமயம், இந்த சூழல் விரைவில் மாறலாம் எனவும், இன்னும் டெல்டா வேரியன்ட்டின் தாக்கமும் இந்தியாவில் இருப்பதாவும் எச்சரித்துள்ளது.

 • இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு ☔️ 👇

ஜோகோவிச்சை ஏன் திரும்ப போகச் சொன்னது ஆஸ்திரேலியா?
 • கொரோனா காரணமாக, தமிழகத்தில் இந்த மாதம் நடக்கவிருந்த அனைத்து பல்கலைக்கழகத் தேர்வுகளும் கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த சமயத்தில் ஏதேனும் கல்லூரிகள் வகுப்புகள் நடத்தினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

 • கடந்த டிசம்பர் மாதம் ஶ்ரீபெரும்புதூரில் பணிபுரிந்துவந்த 159 ஊழியர்கள் ஃபுட் பாய்சனிங் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவே, அனைத்து ஊழியர்களும் போராட்டத்தில் குதித்தனர். அதைத் தொடர்ந்து ஆலை மூடப்பட்டு, ஊழியர்கள் தற்காலிகமாக ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில், இந்த வாரம் முதல் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக பணிகளைத் தொடங்க திட்டமிட்டிருக்கிறது ஃபாக்ஸ்கான்.

 • பொங்கல் பண்டிகையையொட்டி, வரும் வெள்ளிக்கிழமை முதல் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட போட்டிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறவிருக்கின்றன. கொரோனா காரணமாக, இந்த நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது தமிழக அரசு. இதன்படி, அதிகபட்சம் 150 பேர் அல்லது இருக்கைகளில் 50%, இந்த இரண்டில் எது குறைவோ, அந்தளவு பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுபவர். மேலும், இவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழும், இரு நாள்களுக்கு முந்தைய RT-PCR முடிவுகளும் வைத்திருக்கவேண்டும். இதேபோல வீரர்களும் ஜல்லிக்கட்டில் 300 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

 • பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு இடையூறுகள் குறித்து, மோடிக்கு ஆதரவாக அண்மையில் ட்வீட் செய்திருந்தார் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால். இதுகுறித்து விமர்சனம் செய்த, நடிகர் சித்தார்த்தின் ட்வீட்டானது கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதியிருக்கிறது தேசிய மகளிர் ஆணையம்.

 • பிரதமரின் இந்த பாதுகாப்பு இடையூறு குறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு, நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் எனவும், அதுவரை மத்திய அரசு மற்றும் பஞ்சாப் மாநில அரசு இரண்டும் தங்கள் கமிட்டிகளின் விசாரணையை நிறுத்திவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 • கடந்த டிசம்பர் மாதம், ஹரித்துவார் மற்றும் டெல்லியில் நடைபெற்ற இருவேறு நிகழ்வுகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக, தீவிர இந்துத்துவ வாதிகளால் வெறுப்பு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்நிகழ்வுகள் குறித்து, இதுவரைக்கும் உத்தரகாண்ட் மாநில அரசு FIR மட்டும்தான் பதிவு செய்திருக்கிறது. இந்நிலையில், இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட வேண்டும் என நேற்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

 • 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) கொண்டுவரப்பட்டாலும், 2 ஆண்டுகளாக அதற்கான விதிமுறைகளை வகுக்காமல் இருக்கிறது மத்திய அரசு. சட்டத்திற்கான விதிமுறைகளை வகுக்காமல், அதை அமல்படுத்த முடியாது. இந்நிலையில், அந்த விதிகளை வகுப்பதற்காக ஏற்கெனவே 4 முறை, நாடாளுமன்றத்திடம் கால அவகாசம் கேட்ட உள்துறை அமைச்சகம், நேற்றோடு அந்த அவகாசங்கள் முடிந்ததையடுத்து, தற்போது 5-வது முறையாக மீண்டும் அவகாசத்தை நீட்டிக்கச் சொல்லி கேட்டிருக்கிறது.

ஜோகோவிச்சை ஏன் திரும்ப போகச் சொன்னது ஆஸ்திரேலியா?

- பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள்

கொரோனா பரவல் காரணமாக, இந்த ஆண்டு பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா என சந்தேகங்கள் இருந்தது. இந்நிலையில், 11/01/2022 (இன்று) முதல் 13/01/2022 வரைக்கும் மொத்தம் 4,000 சிறப்புப் பேருந்துகளை சென்னையிலிருந்தும், 6,468 சிறப்புப் பேருந்துகளை பிற ஊர்களிலிருந்தும் இயக்குகிறது தமிழ்நாடு போக்குவரத்து கழகம். இத்துடன் வழக்கமான பேருந்துகளும் சேர்ந்து மொத்தம் 16,768 பேருந்துகள் இந்த பொங்கல் காலத்தில் இயக்கப்படுகின்றன.

- புதிய பாஸ்போர்ட்டில் என்ன ஸ்பெஷல்?

பாஸ்போர்ட் வழங்கும் சேவைகளை நவீனமாக்கும் வகையில் 2008-ம் ஆண்டு முதன்முதலாக டி.சி.எஸ் நிறுவனத்துடன் இணைந்து மத்திய அரசு Passport Seva Programme-ஐத் தொடங்கியது. இப்போது நாம் பெறும் பாஸ்போர்ட் சேவைகள் அனைத்தும் இந்த நிறுவனம் (அரசுடன் சேர்ந்து) வழங்கி வருவதுதான்.

தற்போது இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகளுக்காக, சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தையும் வென்றுள்ளது டி.சி.எஸ். இந்தமுறை பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பாஸ்போர்ட் சேவைகளில் பயன்படுத்தப்போவதாகச் சொல்லும் இந்நிறுவனம், அதன் ஒரு பகுதியாக இ-பாஸ்போர்ட்டுகளையும் வழங்கவிருக்கிறது.

இதற்கும், சாதாரண பாஸ்போர்ட்டிற்கும் இருக்கும் வித்தியாசம், இந்த இ-பாஸ்போர்ட்டில் நம்முடைய விவரங்கள் அடங்கிய Chip ஒன்று இருக்கும். இதனால், பாஸ்போர்ட்டின் பாதுகாப்பு அதிகரிக்கும் என்கிறது அரசு.

On This Day - Jan 11, 2022

- டைப் 1 வகை நீரிழிவு நோயாளியான லியனார்டு தாம்ப்சன் என்ற 14 வயது சிறுவனுக்கு, உலகில் முதன்முதலாக இன்சுலின் செலுத்தப்பட்ட தினம், 1922.

- `கொடி காத்த குமரன்’ என போற்றப்படும் திருப்பூர் குமரன் மறைந்த தினம், 1932

- தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரஷ்யா சென்ற, அன்றைய இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மறைந்த தினம், 1966

- இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பிறந்தநாள், 1973

Note: The Subject Line நியூஸ்லெட்டரின் இன்றைய Edition இது. இதேபோல தினசரி நிகழ்வுகளை எளிமையாக, விரிவாகப் புரிந்துகொள்ள கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு அன்றைய முக்கியமான அப்டேட்கள் உங்கள் இன்பாக்ஸிற்கே வந்துசேரும்!