Published:Updated:

விலாசம் இல்லை;நினைவுகளை சுமந்து நிற்கிறோம்! -ஒடிசா மக்களுக்காக 50 ஆண்டுகள் சேவை செய்த கன்னியாஸ்திரி

ராம் பிரசாத்

ஒடிசா மக்களுக்கு 48 வருடங்களுக்கும் மேலாக தன்னலமற்ற சேவையை வழங்கியவரை இப்படித் திட்டமிட்டு வெளியேற்றியது அவமானகரமானது.

 Enedina Costilla
Enedina Costilla

உலக சுகாதார நிறுவனம் 2017-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் தெற்காசிய நாடுகளில் இந்தியாவில்தான் மலேரியா பாதிப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்திருந்தது. மருத்துவத் துறையில் பல்வேறு வளர்ச்சிகள் அடைந்த நிலையில் மலேரியாவில் ஏற்படும் உயிரிழப்புகளை நம்மால் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. ஒடிசாவில் மிகவும் பின்தங்கிய கிராமமான அலிகண்டாவில் டி.பி மற்றும் மலேரியா நோய்களுக்கு கடந்த 50 ஆண்டுகளாக இலவச சிகிச்சை அளித்து வந்துள்ளார் ஸ்பெயினைச் சேர்ந்த Enedina Costilla. இந்நிலையில் அவரது விசா காலத்தை நீட்டிக்க மத்திய அரசு மறுத்ததால் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு அலிகண்டா கிராமத்திலிருந்து விடைபெற்றார்.

 Enedina Costilla
Enedina Costilla
The times of India

ஸ்பெயினில் மருத்துவப் படிப்பை முடித்த Costilla 1966-ம் ஆண்டு இந்தியா வந்திறங்கினார். இந்தியாவில் 5 வருடம் சமூகசேவையாற்ற வந்தார். 1971-ம் ஆண்டில் அலிகண்டா கிராமத்துக்குச் சென்றார். நகரத்துடன் முற்றிலுமாக தொடர்பை இழந்த கிராமம் அது. Costilla அங்கு சென்றது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஸ்பெயினிலிருந்து ஒடிசாவின் பெர்காம்பூருக்குத்தான் 1966-ல் வந்தார். ஒடிசா வந்ததும் அந்த மக்களின் மொழியை நன்கு கற்றறிந்தார். அலிகண்டா சென்றபோது மொழிப் பிரச்னை ஒரு தடையாக இருக்கவில்லை. உள்ளூர் மக்களுடன் நன்கு உரையாடப் பழகிவிட்டார். இந்த கிராமத்தில் டிபி மற்றும் மலேரியா நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க தொடங்கினார். ஒடிசாவில் 50 வருடங்களாக அவர் சேவையாற்றி வந்துள்ளார்.

அலிகண்டா கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் எட்வர்ட் TIMES OF INDIA ஊடகத்திடம் பேசியுள்ளார். ``அவங்க இந்த கிராமத்துக்கு வந்த போது நாங்க எல்லோரும் ‘அம்மா’னுதான் கூப்பிட்டோம். நல்லா நினைவிருக்கு கொஞ்ச நாளுக்கு அப்புறம் தான் சிஸ்டர்னு கூப்பிடத் தொடங்கினோம். செவிலியர்கள் அணிவது போன்ற நீண்ட வெள்ளை நிற உடைதான் உடுத்தியிருப்பார். கொஞ்ச நாள்களிலே எங்க எல்லோருக்கும் அவர் சகஜமாகிவிட்டார். இந்தப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு என்ன நோய்-ன்னு தெரியாம கடுமையான வலிகளால் அவதிப்பட்டு இருந்தார். அவர்தான் அந்த அம்மாவுக்கு முதல் நோயாளி. ஒரு புத்தகத்த எடுத்து படிச்சுட்டு அவருக்கு வைத்தியம் பார்த்தாங்க கொஞ்ச நாள்ல அவருக்கு வியாதி சரியாகிடுச்சு. பின்னர் இந்த மக்கள் அவங்கள நம்பத் தொடங்கினார்கள்.

 Enedina Costilla
Enedina Costilla
The times of India

அவங்களுக்கு இப்போ 80 வயசு இருக்கும். அல்சர் நோயைக் கூட குணப்படுத்தினார். ஒடிசா மக்களுக்கு 48 வருடங்களுக்கும் மேலாக தன்னலமற்ற சேவையை வழங்கியவரை இப்படித் திட்டமிட்டு வெளியேற்றியது அவமானகரமானது” என்றார். இந்த மக்களின் நோய்களை மட்டும் அவர் குணப்படுத்தவில்லை. ஒரு சமூகத்திற்கே கல்வியை வழங்கியுள்ளார். பெண் குழந்தைகளுக்காக இரண்டு பள்ளிகளை நடத்தி வருகிறார். ஏழ்மை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர முடியாத பெண் குழந்தைகளை தேடிச் சென்று அவர்களை தனது பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்து வந்துள்ளார். ஏழ்மையில் வாடும் குழந்தைகளுக்காக விடுதியும் நடத்தி வருகிறார்.

இந்திய அரசிடம் விசாவைப் புதுப்பிக்கப் பதிவு செய்துள்ளார். அவரது கோரிக்கையை இந்திய அரசு நிராகரித்துவிட்டது. 10 நாள்களில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என ஆகஸ்ட் 11-ம் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் தங்கியிருந்த கிராமத்திலிருந்து ஆகஸ்ட் 18-ம் தேதி புறப்பட்டார். 3000-க்கும் அதிகமான மக்கள் அவரை கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர். ஆகஸ்ட் 20-ம் தேதி டெல்லியிலிருந்து விமானம் மூலம் இந்தியாவிலிருந்து பறந்தார். அவரது விலாசமும் இல்லை, போன் நம்பரும் இல்லை அவரது நினைவுகளை மட்டும் சுமந்துகொண்டு அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்