ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்ட கன்னியாஸ்திரீகள் - அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்

உத்தரப்பிரதேசத்தில் மதமாற்றம் செய்ய முயன்றதாகக் கூறி கன்னியாஸ்திரீகள் ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சி ரயில் நிலையத்தில் மத மாற்றம் செய்ய முயன்றதாக கன்னியாஸ்திரீகள் ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியிலிருந்து ஒடிசாவின் ரூர்கேலாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த உட்கல் எக்ஸ்பிரஸ் ரயிலில், கன்னியாஸ்திரீகள் இருவரும், கன்னியாஸ்திரீகளாவதற்கான பயிற்சியில் இருக்கும் பெண்கள் இருவரும் பயணம் செய்தனர். இவர்கள் கேரளாவைச் சேர்ந்த சைரோ மலபார் தேவாலயத்தின் கீழ் இயங்கும் சேக்ரெட் ஹார்ட் கான்வென்ட்டைச் சேர்ந்தவர்கள். கன்னியாஸ்திரீகள் தங்கள் மதம் சார்ந்த உடையிலும், பயிற்சி பெறும் பெண்கள் சாதாரண உடையிலும் இருந்தனர்.
ரயில் உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் வந்தடைந்தபோது, அங்கு, பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட சிலர் ரயிலில் ஏறினர். கன்னியாஸ்திரீகளையும், உடன் வந்த இரண்டு பெண்களையும் பார்த்த அவர்கள், பிரச்னை செய்யத் தொடங்கினர். இரண்டு பெண்களையும் கன்னியாஸ்திரீகள் கட்டாய மதமாற்றம் செய்து அழைத்துச் செல்வதாகக் கூறி அவர்கள் மிரட்டத் தொடங்கினர். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.

அதில், தாங்கள் கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு பெண் அவர்களிடம் கறுகிறார். கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் என்பதற்கு ஆதாரத்தையும், அடையாள அட்டையையும் காண்பிக்க வற்புறுத்துகின்றனர். அந்தப் பெண், தனது ஆதார் அட்டையை எடுத்துக் காட்டுகிறார். ஆதாரில் மதம் குறித்த தகவல் இல்லாததால், ``நீ கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்று இது கூறவில்லை” என்கிறார் அந்த நபர்.
தாங்கள் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று அதில் ஒரு நபர் குறிப்பிடுகிறார். தொடர்ந்து நால்வரையும் அச்சுறுத்திய அந்த நபர்கள், உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி ரயில் நிலையத்தில் அவர்களைக் கட்டாயப்படுத்தி இறக்கிவிட்டுள்ளனர். ஜான்சி ரயில் நிலையத்தில் ரயில்வே காவலர்கள் சிலர் நால்வரிடமும் விசாரணை செய்யும் வீடியோ ஒன்றும் வெளியானது.
சுமார் ஐந்து மணி நேரம் நான்கு பேரிடமும் காவல்துறையினர் விசாரித்துள்ளனர். இறுதியில் அவர்கள் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அவர்களை விடுவித்தனர். அடுத்த ரயிலில் காவலர்கள் துணையுடன் அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். அச்சம் காரணமாக கன்னியாஸ்திரீகள் தங்கள் உடையை மாற்றிவிட்டு பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த சம்பவத்துக்கு, நாடு முழுவதிலுமிருந்து அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.
இது குறித்து அதிர்ச்சி அடைந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார் . அதில் ``இது போன்ற சம்பவங்கள் நாட்டின் உருவத்தைக் குலைக்கின்றன. நாட்டிலுள்ள மத சகிப்புத் தன்மையைக் கெடுக்கின்றன. இது போன்ற சம்பவங்களுக்கு மத்திய அரசின் கடுமையான தண்டனைகள் தேவைப்படுகின்றன. அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள தனிநபர்களின் உரிமைகள் மீதான சுதந்திரத்தைச் சீர்குலைக்கும், பலவீனப்படுத்தும் அனைத்துக் குழுக்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
கேரள கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் செய்தித் தொடர்பாளர், ஜேக்கப் தெரிவிக்கையில்,`` அரசியலமைப்புச் சட்டம் இந்திய நாட்டில் எங்கும் செல்லவும், எந்த உடையையும் அணியவும் மக்களுக்குச் சுதந்திரம் அளிக்கிறது. நடந்த இந்தச் சம்பவம் கிறிஸ்தவ சமுதாயத்தை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வு ” என்றார்.
கேரளாவில் பரப்புரை செய்துவரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, `இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்திருக்கிறார்.