Published:Updated:

கண்ட இடங்களில் கைது.. போராட விடாமல் தடுத்த போலீஸ் - செவிலியர்களுக்கு நியாயம் கிடைக்குமா?

செவிலியர்கள் போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
செவிலியர்கள் போராட்டம்

அலுவலகம் நடக்கும் இடத்தில் போராட்டம் நடத்தினால், பிறரின் வேலை பாதிக்கும் என்பதால் கைது செய்யப்பட்டனர். துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

கண்ட இடங்களில் கைது.. போராட விடாமல் தடுத்த போலீஸ் - செவிலியர்களுக்கு நியாயம் கிடைக்குமா?

அலுவலகம் நடக்கும் இடத்தில் போராட்டம் நடத்தினால், பிறரின் வேலை பாதிக்கும் என்பதால் கைது செய்யப்பட்டனர். துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

Published:Updated:
செவிலியர்கள் போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
செவிலியர்கள் போராட்டம்

“விகடன் வாசகர் பேசுறேன்... சென்னைக்குப் போராட வந்த செவிலியர்களை பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்னு அங்கங்க மறிச்சு கைதுபண்ணி கல்யாண மண்டபங்கள்ல வெச்சுருக்காங்க போலீஸ். தயவுசெஞ்சு என்னன்னு பாருங்க” என்று ஒரு அலைபேசி அழைப்பு. உடனே களத்தில் இறங்கினோம்!

தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் கீழ் கிராம சுகாதார செவிலியர்கள், தாய்மை செவிலியர்கள், சமுதாய நல செவிலியர்கள் என 5,000-க்கும் அதிகமானோர் பணிபுரிந்து வருகின்றனர். பதவி உயர்வு உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டையிலுள்ள டி.எம்.எஸ் வளாகத்தில், செப்.16-ம் தேதி அவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவிருந்தனர். அவர்களைப் போராட விடாமல், தேடித் தேடி கைதுசெய்திருக்கிறது காவல்துறை.

கண்ட இடங்களில் கைது.. போராட விடாமல் தடுத்த போலீஸ் - செவிலியர்களுக்கு நியாயம் கிடைக்குமா?

தேனாம்பேட்டைப் பகுதியிலுள்ள ஒரு தனியார் மண்டபத் தில், தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் தலைவர் இந்திராவை சந்தித்துப் பேசினோம். “டி.எம்.எஸ் வளாகத்தில் 16-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள, முறைப்படி அனுமதி வாங்கியிருந் தோம். போராட்டத்துக்காக மாநிலம் முழுவதுமிருந்தும் செவிலியர்கள் சென்னைக்கு வந்தனர். எங்கள் யூனிஃபார் முடன் சென்னைக்கு வந்த செவிலியர்களை, எக்மோர், சென்ட்ரல் ரயில் நிலையங்களிலும், கோயம்பேடு பஸ் நிலையத்திலும் வைத்துக் கைதுசெய்து திருமண மண்டபங்களில் அடைத்துவைத்தது போலீஸ். இது போன்ற நிலை எங்களுக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை. தடுப்பூசி செலுத்துதல், தாய் சேய் நலம் என்று 30 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தும் எங்களுக்கு எந்தப் பதவி உயர்வும் கிடைக்கவில்லை. ஆனால், எங்களுடன் பணியில் சேர்ந்த ஆண் பணியாளர்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இது சமூக அநீதி இல்லையா... பாழடைந்த அரசுக் குடியிருப்புகளுக்கும் அதிகமாக வாடகை செலுத்துகிறோம். எங்களின் பதவி உயர்வுக்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு பயனற்றுக் கிடக்கிறது. எங்களின் கோரிக்கைகளை நிறை வேற்றும் செயல் அதிகாரியான பொது சுகாதார இயக்குநர் செல்வ விநாயகம், சென்னையில் இருந்தும் பேச்சு வார்த்தையில் பங்கேற்கவில்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென்றால் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்துவோம்” என்றார்.

இந்திரா
இந்திரா

செவிலியர்களைப் போராட விடாமல் தடுத்தது குறித்து, துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது, “போராட்டம் நடத்த வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட இடங்கள் இருக்கின்றன. அலுவலகம் நடக்கும் இடத்தில் போராட்டம் நடத்தினால், பிறரின் வேலை பாதிக்கும் என்பதால் கைது செய்யப்பட்டனர். துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. செவிலியர்களின் கோரிக்கைகளில் நியாயம் இருந்தால் நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்றார்.

“அனுமதி பெற்றுத்தானே போராட வந்தனர்?” என்று நாம் கேட்டதற்கு “அனுமதி வாங்கியிருந்தும் கைது செய்யப் பட்டிருந்தால், அது குறித்து விசாரிக்கிறேன்” என்றவர் உடனே போனைத் துண்டித்தார்.

இதே டி.எம்.எஸ் வளாகத்தில், அ.தி.மு.க ஆட்சியின்போது நடந்த பல்வேறு போராட்டங்களுக்கு இப்போதைய முதல்வர் ஸ்டாலினே நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருக்கிறார். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அடக்குமுறையைப் பயன்படுத்து வது நியாயமே இல்லை!