Election bannerElection banner
Published:Updated:

திணறும் டெல்லி - ஆக்ஸிஜன் கொடுத்து மீட்க உதவிக்கரம் நீட்டிய ஒடிசா!

அரவிந்த் கெஜ்ரிவால் - நவீன் பட்நாயக்
அரவிந்த் கெஜ்ரிவால் - நவீன் பட்நாயக்

டெல்லியின் ஆக்ஸிஜன் தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்துவருகிறது. மத்திய அரசு, ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு ஏற்பாடு செய்தாலும், அவை டெல்லி சென்று சேர்வதில் காலதாமதம் ஆகிறது. ஒடிசா மாநிலம் டெல்லிக்கு ஆக்ஸிஜன் அளித்து உதவ முன்வந்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகியவற்றால் இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துவருகின்றனர்.

குறிப்பாக, தலைநகர் டெல்லி இரண்டாம் அலையின் கோரப்பிடியில் சிக்கித் திணறிக்கொண்டிருக்கிறது. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம் தொட்டுவரும் கொரோனா பதிப்பால் மாநில அரசு கதி கலங்கி நிற்கிறது. பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இடமில்லாமலும், அனுமதிக்கப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற போதிய அளவில் ஆக்ஸிஜன் இல்லாமலும் மக்கள் பரிதவித்துவருகின்றனர். நிலைமையைச் சமாளிக்க, டெல்லி சுகாதாரத்துறை பிற மாநிலங்களிடமிருந்து உயிர் காக்கும் ஆக்ஸிஜனைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை
ஆக்ஸிஜன் பற்றாக்குறை

தலைநகர் டெல்லியில் கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் ரெம்டிசிவிர் மருந்துக்குப் பற்றாக்குறை நிலவுவதாகவும், மத்திய அரசு உடனடியாக உதவ வேண்டும் எனவும் அந்த மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். நேற்றைய தினம் இது தொடர்பாக அவர், ``டெல்லியில் கடுமையான ஆக்ஸிஜன் நெருக்கடி தொடர்கிறது. இக்கட்டான சூழ்நிலை நிலவுவதால், மத்திய அரசு உதவ வேண்டும். சில மணி நேரத்துக்கு மட்டுமே ஆக்ஸிஜன் இருப்பு இருக்கிறது. டெல்லிக்கு அவசரமாக ஆக்ஸிஜனை வழங்குமாறு கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்' என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

டெல்லியின் ஆக்ஸிஜன் தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்துவருகிறது. மத்திய அரசு, ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு ஏற்பாடு செய்தாலும், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சென்று சேர்வதில் காலதாமதமாகிறது. இந்தநிலையில், ஒடிசா மாநில அரசு டெல்லிக்கு ஆக்ஸிஜன் அளித்து உதவ முன்வந்துள்ளது.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

இது தொடர்பாக, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருடன் இன்று கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், மாநிலங்களுக்கு உதவுவது குறித்தும் ஆலோசனை நடத்தினார். அப்போது ஒடிசா, கொரோனாவுக்கு எதிரான இந்த தேசத்தின் போராட்டத்தில் பிற மாநிலங்களுக்குத் தேவைப்படும் அளவுக்கு ஆக்ஸிஜன் அளித்து உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நவீன் பட்நாயக், ``இது ஒரு போர்ச் சூழல். தேசிய அளவில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையைச் சந்திக்க ஏதுவாக ஒடிசாவின் ஆலைகளில் ஆக்ஸிஜன் திரவ உற்பத்தியை அதிகரிக்கவிருக்கிறோம்" என்று பதிவிட்டிருந்தார். அதேபோல், டெல்லிக்கு ஆக்ஸிஜன் திரவம் நிரப்பப்பட்ட லாரிகள் விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்வதற்காகத் தனி அதிகாரிகளை முதல்வர் பட்நாயக் நியமித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அர்விந்த் கெஜ்ரிவால்
அர்விந்த் கெஜ்ரிவால்

இந்தநிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லிக்கு ஆக்ஸிஜன் திரவம் வழங்கி உதவ முன்வந்துள்ள ஒடிசா முதல்வருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில்,``ஒடிசா முதல்வர் அவர்கள் என்னிடம் தொலைபேசி வாயிலாகப் பேசினார். டெல்லிக்குத் தேவையான அளவு ஆக்ஸிஜன் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். தனி அதிகாரிகளை நியமித்து டெல்லிக்கு ஆக்ஸிஜன் வந்தடைவதை உறுதி செய்தமைக்கு ஒடிசா முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஹரியானா முதல்வர் மனோகர் லாலிடமும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்துப் பேசினார். அதில், ஹரியானா முதல்வரும், டெல்லிக்கு ஆக்ஸிஜன் திரவம் நிரப்பப்பட்ட லாரிகளை அனுப்பிவைப்பதாக உறுதயளித்துள்ளார். மத்திய அரசும், டெல்லிக்கு வழங்கப்பட வேண்டிய ஆக்ஸிஜன் அளவை உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அண்டை மாநிலங்களிலுள்ள விதிமுறைகள் காரணமாக டெல்லிக்கு ஆக்ஸிஜன் லாரிகள் வந்தடைய கால தாமதமாகின்றன. அதனால் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வான்வழிப் போக்குவரத்து மூலம் ஒடிசாவிலிருந்து ஆக்ஸிஜன் உருளைகளை டெல்லிக்குக் கொண்டுவருவது குறித்து ஆலோசித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு