Published:Updated:

கொரோனா யுத்தம்... உலகுக்கே வழிகாட்டும் ஒடிசா மாடல்!

ஒடிசா மாடல்
பிரீமியம் ஸ்டோரி
ஒடிசா மாடல்

2019 டிசம்பரிலேயே `கொரோனா வைரஸ், உலகை துவம்சம் செய்யப் போகிறது’ என்று சில மருத்துவர்கள் கணித்துவிட்டார்கள்.

கொரோனா யுத்தம்... உலகுக்கே வழிகாட்டும் ஒடிசா மாடல்!

2019 டிசம்பரிலேயே `கொரோனா வைரஸ், உலகை துவம்சம் செய்யப் போகிறது’ என்று சில மருத்துவர்கள் கணித்துவிட்டார்கள்.

Published:Updated:
ஒடிசா மாடல்
பிரீமியம் ஸ்டோரி
ஒடிசா மாடல்
பேரிடருடன் போராடிக்கொண்டிருக்கிறது தேசம். போராட்டங்கள், கோஷங்கள், விளையாட்டுகள், கொண்டாட்டங்கள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்து எல்லோரையும் வீட்டுக்குள் முடக்கிவிட்டது கொரோனா. உயிர் பயம் பிரதானமாகி, பிற பிரச்னைகள் பின்னுக்குப் போய்விட்டன.

2019 டிசம்பர் தொடக்கத்தில் சீனாவில் உணரப்பட்ட இதன் தாக்கம், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய வல்லரசுகளையே சின்னாபின்னாமாக்கிக் கதறவிட்டிருக்கிறது. படிப்படியாக உலகத்தின் பெரும்பான்மைப் பகுதிகளை ஆக்கிரமித்த கொரோனா, அமேசான் வனத்தின் கொகாமா பூர்வகுடிப் பெண்ணையும் விட்டுவைக்கவில்லை. இதற்கிடையில்தான் முதலில் கைதட்ட சொன்ன நம் பிரதமர், இப்போது விளக்கேற்றச் சொன்னார். விளக்குகளும் ஏற்றப்பட்டன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டறியப்படவில்லை. சில நோய் எதிர்ப்பு மாத்திரைகள், சத்துணவு தவிர வைரஸை நேரடியாக அழிப்பதற்கான மருந்துகள் இல்லை. ஒரே தீர்வு, பரவுதலைத் தடுப்பது. அதில் அலட்சியம் காட்டியதன் விளைவைத்தான் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் அனுபவிக்கின்றன.

நவீன் பட்நாயக்
நவீன் பட்நாயக்

இந்தியாவில் கேரளாவில் தொடங்கி மகாராஷ்டிராவை உலுக்கி தமிழகத்தைக் கவ்வியிருக்கிறது கொரோனா. தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி நிலவரப்படி 621 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது. பரவலின் வேகம் படிப்படியாகத் தீவிரமாகலாம். மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. கொஞ்சம்கூட குற்ற உணர்வில்லாமல் கடைகளில் குவிகிறார்கள்.

முன்னடி எடுத்துவைத்த ஒடிசா!

2019 டிசம்பரிலேயே `கொரோனா வைரஸ், உலகை துவம்சம் செய்யப் போகிறது’ என்று சில மருத்துவர்கள் கணித்துவிட்டார்கள். பிப்ரவரி இறுதியில் இந்தியாவுக்குள் அந்த வைரஸின் தாக்கம் உணரப்பட்டு விட்டது. பெரும்பாலும் எல்லா மாநிலங்களுமே பதற்றத்துடன் என்ன செய்வது எனக் குழம்பிக் கொண்டிருந்த நேரத்தில், எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் இந்தப் பேரிடரை எதிர்கொள்ள முன்னடி எடுத்து வைத்தது ஒரு மாநிலம். அது ஒடிசா.

ஒடிசா மாடல்
ஒடிசா மாடல்

ஏப்ரல் 6-ம் தேதி நிலவரப்படி, அங்கு 40 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். 2,210 பேர் பரிசோதிக்கப் பட்டுள்ளார்கள். ஒரு பேரிடரை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை, பிற மாநிலங்கள் ஒடிசாவைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும்.

புயல், பெருவெள்ளம் போன்ற பல இடர்களை வெற்றிகரமாகக் கடந்த மாநிலம் அது. கொரோனா என்ற மருத்துவப் பேரிடர் வரப்போகிறது என உணர்ந்ததும், அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் `மக்கள் நலன்’ என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்து நின்றார்கள். அதுவே அங்கு பாதிப்பின் வேகத்தைக் குறைத்திருக்கிறது.

மார்ச் 13_ம் தேதி... கொரோனா பரவலைத் தடுப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சரவையைக் கூட்டி பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். அதே நாளில் ஒடிசா சட்டமன்றத்தில் முதல்வர் நவீன் பட்நாயக்கும் பிற சட்டமன்ற உறுப்பினர்களும் கைகளை கிருமிநாசினியால் கழுவி, தங்கள் மாநில மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வைத் தொடங்கி வைத்துவிட்டார்கள். அன்றைய தினமே பேரிடர் சட்டமும் நடைமுறைக்கு வந்துவிட்டது.

தடுக்கப்பட்ட வதந்திகள்!

செயல்திட்டங்கள் அடுத்தடுத்து வகுக்கப்பட்டன. யாருக்காகவும் யாரும் காத்திருக்கவில்லை. அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்பட்டார்கள். கொரோனாவைவிட ஆபத்தானது மற்றும் வேகமாகப் பரவக்கூடியது வதந்தி. எங்கே செய்திகள் முடக்கப்படுகின்றனவோ அங்கே வதந்திகள் பிறக்கும். வதந்திகளைத் தடுத்து கொரோனா குறித்த தகவல்களை வெளிப்படையாக வழங்கவும் ஒருங்கிணைக்கவும் ஒடிசா திறன் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவரும் எழுத்தாளருமான ‘மைண்ட் ட்ரீ ’ சுப்ரதோ பாக்ஷி, அரசு தலைமைச் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். கொரோனா குறித்து எல்லா துறைகளிடமிருந்தும் தகவல்களைப் பெற்று தினமும் மாலை 4.30 மணிக்கு ஊடகங்களிடம் இவர் பேசுவார். இதன்மூலம் மக்கள் அன்றாடம் உறுதிசெய்யப்பட்ட தகவல்களை அறிந்துகொள்கிறார்கள்.

ஒடிசா மாடல்
ஒடிசா மாடல்

தனிமை தரும் ரொக்கப் பரிசு!

வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள்மூலமே கொரோனா உள்ளே நுழைகிறது. அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதுதான் பெரும் சவால். பல நாடுகளும் கோட்டைவிட்டது அங்குதான். அதற்கோர் அருமையான திட்டம் தீட்டியது ஒடிசா அரசு. ஒரு ஆப் மற்றும் இணையதளம் தொடங்கப்பட்டன. `வெளிநாடு களிலிருந்து ஒடிசாவுக்குள் நுழைபவர்கள், 24 மணி நேரத்துக்குள் இந்த ஆப் அல்லது இணையதளத்தில் தங்களைப் பற்றிய தகவல்களைப் பதிவுசெய்துகொண்டு, 14 நாள்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்குப் பரிசாக 15-வது நாள், 15,000 ரூபாய் அவர்களுக்கு ஊக்கத்தொகையாகத் தரப்படும்’ என அறிவிக்கப்பட்டது. அவர்களைக் கண்காணிக்கவும் கவுன்சலிங் தரவும் 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர்கள் உருவாக்கப்பட்டன.

ஒடிசா மாடல்
ஒடிசா மாடல்

அந்தத் திட்டத்தை அறிவித்ததுடன் கையாட்டிவிட்டுச் சென்றுவிடவில்லை முதல்வர் நவீன் பட்நாயக். ‘என் சகோதரி அமெரிக்காவி லிருந்து ஒடிசா திரும்பியிருக்கிறார்’ என ‘ஆப்’பில் பதிவுசெய்தார். பூரி சமஸ்தானத்தின் ராஜா, ‘நான் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்திருக்கிறேன்’ எனப் பதிவுசெய்தார். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, ‘இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் லண்டன் சென்று வந்தேன்’ எனப் பதிவுசெய்தார். முதல்வரும் அதிகாரிகளுமே பதற்றத்துடன் பதிவுசெய்கிறார்கள் என்றால், மக்கள் சும்மா இருப்பார்களா? 15,000 ரூபாய் ஊக்கத்தொகை வேறு. பிப்ரவரி முதல் வெளிநாடு சென்று வந்த ஐந்தாயிரம் பேர் தங்களைப் பதிவுசெய்து தனிமைப்படுத்திக்கொண்டார்கள்.

வெளிநாடு சென்று திரும்பிய அந்த ஐந்தாயிரம் பேரில் 70 சதவிகிதம் பேர் குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்கள், எட்டு நகரங்களைச் சேர்ந்தவர்கள். மார்ச் 21-ம் தேதி, பிரதமர் ஒரு நாள் ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்பாகவே அந்த ஐந்து மாவட்டங்களையும் எட்டு நகரங்களையும் முழுமையாக முடக்கியது ஒடிசா அரசு. பிறகு மக்களை பதற்றத்தில் ஆழ்த்தாமல், பேருந்து நிலையங்களில் மக்களை கும்பலாகத் தவிக்க விடாமல் படிப்படியாக மூன்று கட்டங்களாக ஊரடங்கை அமல்படுத்தியது.

நன்மைபயக்கும் நான்கு மாதங்கள்!

முன்னதாக 95 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, குடும்பத்தில் ஒரு நபருக்கு ஐந்து கிலோ வீதம், நான்கு மாதங்களுக்குத் தேவையான அரிசி வழங்கப்பட்டது. ஐம்பது லட்சம் பேருக்கு நான்கு மாதங்களுக்கான முதியோர் உதவித்தொகை வீடு தேடிச் சென்றது. எண்பதாயிரம் நடைபாதை வியாபாரிகளுக்கு தலா 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப் பட்டது. 22 லட்சம் கட்டடத் தொழிலாளர் களுக்கு தலா 1,500 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களை ஊக்குவிக்க, நான்கு மாதச் சம்பளம் முன்பணமாக வழங்கப்பட்டது. இவ்வளவு ஏன்? தெருக்களில் காகங்கள், நாய்கள், கால்நடைகள், குரங்குகள்கூட தவிக்கக் கூடாது என, அவற்றுக்கு 55 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உணவிட்டு வருகிறார்கள்.

ஒடிசா மாடல்
ஒடிசா மாடல்

மார்ச் 13-ல் முதல்வர் பேரிடர் சட்டத்தை அமல்படுத்தியபோது ஒடிசாவில் ஒரு கொரோனா நோயாளிகூட இல்லை. மார்ச் 16-ம் தேதிதான் முதல் நோயாளி அடையாளம் காணப்படுகிறார். ‘கொரோனா என்கிற கொள்ளை நோய் பரவலாம்; பரவாமலும் தடுக்கப்படலாம். ஆனால், சாத்தியமுள்ள எல்லா தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்துவிட வேண்டும்’ என்கிற தெளிந்த செயல்திட்டம் வகுக்கப்பட்டது. ‘இது பெரும்பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது’ என்ற எதிர்பார்ப்பிலும், ‘நோய் பரவலைத் தடுத்து பாதிப்புகளைக் குறைத்துவிட முடியும்’ என்ற நம்பிக்கையிலும்தான் ஓர் அரசு செயல்பட வேண்டும். அதை ஒடிசா அரசு சிறப்பாகச் செய்தது.

மடமடவென உருபெறும் மருத்துவமனைகள்!

ஏற்கெனவே இருக்கும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்காமல் தனி மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. முதற்கட்டமாக, புவனேஷ்வரில் ஆயிரம் படுக்கைகளைக்கொண்ட மருத்துவமனை தொடங்கப்பட்டது. மொத்தம் உள்ள 30 மாவட்டங்களிலும் இப்படியான மருத்துவமனைகள் தொடங்குவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. தனியார் மருத்துவமனை களுடன் இணைந்தும் மருத்துவமனைகளைத் திறக்கிறார்கள். ‘அரசு கொரோனா - தனியார் சிறப்பு மருத்துவமனை’ என பலகை வைக்கிறார்கள்.

ஒடிசா மாடல்
ஒடிசா மாடல்

ஒடிசாவில் சுமார் 7,500 கிராமப் பஞ்சாயத்துகள் இருக்கின்றன. எல்லா பஞ்சாயத்துகளிலும் 100 படுக்கைகள்கொண்ட கள மருத்துவ முகாம்கள் தயாராக இருக்கின்றன. பள்ளிகள், சமுதாயக் கூடங்கள், அரசு நிறுவனக் கட்டடங்கள், திருமண மண்டபங்களில் இந்த முகாம்களை அமைத்திருக் கிறார்கள். அவற்றை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் நிர்வகிக்கிறார்கள். ஊராட்சி நிதியிலிருந்து உணவு வழங்கப்படுகிறது. ஒடிசாவில் தங்கியிருக்கும் 25,000 பிற மாநில மக்களையும் கவனத்தில்கொண்டு அவர்களுக் காகவும் திட்டங்கள் தீட்டியிருக்கிறார்கள். அதேபோல வெளிமாநிலங்களில் இருக்கும் ஒடிசா மாநில மக்களின் குறைதீர்க்கவும் மாநிலவாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக் கிறார்கள்.

ஒடிசாவின் கொரோனா தடுப்பு மக்கள் மீட்புப் பணிகளில் முதல் வரிசையில் நிற்பது இரண்டு தமிழர்கள் என்பது நமக்குப் பெருமை. இருவரும் மதுரைக்காரர்கள். ஒருவர், முதல்வரின் வலதுகரமாக இயங்கும் தனிச்செயலர் வி.கார்த்திகேய பாண்டியன். மற்றொருவர், முதல்வரின் தலைமை ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன்.

ஒடிசா மாடல்
ஒடிசா மாடல்

புயல், பெருவெள்ளம் என, பல பேரிடர்களைப் பார்த்த மாநிலம் ஒடிசா. இதனாலேயே அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுக்கு மட்டுமல்ல... மக்களுக்கும் அந்த அனுபவமும் விழிப்புணர்வும் இருக்கின்றன. தவிர, ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் `மக்கள் சேவை’ என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்து நிற்பது 20 ஆண்டுகளில் ஒடிசாவுக்குக் கிடைத்த வரம்.

‘கற்றறிந்த ஞானி கடவுளையே நேராவான்’ என்றான் பாரதி. ஒரு மக்கள் நல அரசு, எந்தச்சூழலிலும் தம் மக்களை உணவுக்காகக் கையேந்தவிடக் கூடாது; வாழ்வாதாரத்துக்காக தெருவில் நிறுத்தக் கூடாது. குறிப்பாக, தன்மானம் காக்க வேண்டும். அதை வழிநடத்தும் முதல்வர் நவீன் பட்நாயக் உலகத்துக்கான முன்மாதிரி!

“குறையொன்றும் இல்லை!”

கொரோனா யுத்தம்... உலகுக்கே வழிகாட்டும் ஒடிசா மாடல்!

ஒடிசா அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அந்த மாநிலத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம்.

அசுதோஷ் மிஸ்ரா, பத்திரிகையாளர்

“பேரிடர் மேலாண்மையில் உலகத்துக்கே முன்னோடியாக இருக்கிறது ஒடிசா. தற்போது ஏற்பட்டுள்ள இந்த மருத்துவப் பேரிடரை, எல்லா முன்தயாரிப்புகளுடன் எதிர் கொள்கிறது ஒடிசா. இதை பேரிடராக அறிவித்தது, தனி மருத்துவமனைகள் அமைப்பது என, தாமதம் இல்லாமல் அரசு களத்தில் இறங்கியிருக்கிறது. அரசு செய்த விழிப்புணர்வுப் பிரசாரங்கள் நல்ல பலனைத் தந்திருக்கின்றன. மக்களும் பதற்றம் அடையாமல் சிறப்பாக ஒத்துழைக்கிறார்கள். அபார நம்பிக்கையுடன் அரசின் வழிகாட்டுதலின்படி நடக்கிறார்கள். அரசின் உதவிகள் நகரங்கள், கிராமங்கள், குடிசைப்பகுதிகள் வரை தடையில்லாமல் செல்கின்றன. எந்தக் குறையும் சொல்ல முடியாத அளவுக்குச் செயல்படுகிறது ஒடிசா அரசு.”

தீப்ஜீத் சாரங்கி, சமூகச் செயற்பாட்டாளர்

“கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஒடிசா அரசு மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. இதுவரை ஒருவர்கூட இந்த மாநிலத்தில் இறக்கவில்லை. தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருக்கிறது. சிறு கிராமங்களில்கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்களின் தேவைகளுக்கு ‘கம்யூனிட்டி கிச்சன்’ எனப்படும் சமூக உணவுக்கூடங்கள் உண்டாக்கியது முதல் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. மக்களிடமிருந்தும் நல்ல ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. ஒருசிலர் சட்டத்தை மீறினாலும், பலர் அரசின் கட்டுப்பாடுகளை சரியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஒடிசா அரசு, பரிசோதனை எண்ணிக்கையை சற்று அதிகரிக்க வேண்டும் என்பது என் கோரிக்கை!”

கொரோனா யுத்தம்... உலகுக்கே வழிகாட்டும் ஒடிசா மாடல்!

சானியா சிங், கைத்தறி, கைவினைத் துறை ஆலோசகர்

“ஒடிசா அரசு செய்த இரண்டு விஷயங்கள் மிகவும் சிறப்பானவை. ஒன்று, எல்லோருக்கும் முன்பாக தடுப்புப் பணிகளைத் தொடங்கியது. மத்திய அரசு ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே, வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அதிகம் இருக்கும் பல மாவட்டங்களை முடக்கியது. இரண்டு, எந்தத் தாமதமுமின்றி துணிச்சலான முடிவுகளை எடுத்தது. அரசு ஊழியர்கள், பொறுப்பாக நடந்துகொள்கிறார்கள். விலங்குகளுக்கு உணவளிப்பது முதல் எல்லாவற்றையும் எல்லா கோணங்களிலும் யோசித்துச் செய்கிறது அரசு. சிறு சிறு பிரச்னைகள் இல்லாமல் இல்லை... இப்படி ஒரு பேராபத்தைச் சந்திக்கும்போது அரசும்கூட ஒவ்வொன்றையும் பொறுமையாகத்தான் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதை எங்கள் ஒடிசா அரசு சிறப்பாகவே செய்கிறது!”

கொரோனா யுத்தம்... உலகுக்கே வழிகாட்டும் ஒடிசா மாடல்!

அரவிந்த், முதுநிலை மருத்துவ மாணவர்

“கொரோனா தொற்றுள்ள நோயாளிகளுக்கு ஒடிசா அரசு செய்துள்ள மருத்துவ வசதி மிகச் சிறப்பானது. மருத்துவ உபகரணங்கள், முகமூடிகள் தட்டுப்பாட்டைக் களைய பல முயற்சிகள் எடுக்கப்படு கின்றன. மருத்துவப் பணியாளர்கள், மருத்துவ மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி, கொரோனா தொற்றை எதிர்கொள்வது குறித்து அறிவுறுத்துகிறார்கள். மொத்தத்தில், ஒடிசா சிறப்பான முறையில் இந்த வைரஸ் தாக்குதலை எதிர்கொண்டிருக்கிறது.’’