Published:Updated:

“அவ்ளோ பணம் வெச்சிருக்காங்க... ஒரு சேஃப்டி இல்ல சார்!” - ஆபீஸ் கொள்ளையனின் அலப்பறை!

75 லட்சம் கொள்ளை... 50 லட்சத்தில் வீடு... 90,000-க்கு ஃபேஷியல்

பிரீமியம் ஸ்டோரி

கண்ணாடி வைத்த கதவுகள், முழுக்க முழுக்க ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட கார்ப்பரேட் ஆபீஸ்களில் மட்டுமே கைவைக்கும் ‘ஆபீஸ் கொள்ளையன்’ பாண்டுரங்கன் சென்னையில் பிடிபட்டிருக்கிறான். 72 லட்சத்தை அலேக்காக ஆட்டையைப்போட்டுவிட்டு, 90,000 ரூபாய்க்கு ஃபேஷியல் செய்துகொண்டு, நட்சத்திர ஹோட்டலில் அறையெடுத்து அலப்பறை செய்துகொண்டிருந்த 57 வயது கொள்ளையனை அமுக்கிப்பிடித்து கைதுசெய்திருக்கிறார்கள் சேத்துப்பட்டு போலீஸார். எப்படிச் சிக்கினான் பாண்டுரங்கன்?

இரண்டு கறுப்பு பிளாஸ்டிக் பைகள்... சினிமா பாணியில் கைது!

சென்னை சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையிலுள்ள ஒரு வணிகவளாகத்தின் 4-வது மாடியில், பிரபல கார்ப்பரேட் அலுவலகம் ஒன்று உள்ளது. அங்கு கடந்த அக்டோபர் 10-ம் தேதி கண்ணாடிக் கதவுகள் உடைக்கப்பட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 72 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து அந்நிறுவனத்தின் பொதுமேலாளர் குமரவேல், 11-ம் தேதி சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகாரளிக்க... கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் ரமேஷ் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் கொள்ளையனைத் தேடிவந்தார்கள். ஹாரிங்டன் சாலையிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்த போலீஸாருக்கு, இரண்டு கறுப்பு நிற பிளாஸ்டிக் பைகளோடு ஒருவன் சாலையில் நடந்து செல்லும் காட்சி கிடைத்தது. அந்த நபர், எழும்பூர் ரயில் நிலையத்தை நோக்கிச் செல்வதும் தெரியவந்தது.


“அவ்ளோ பணம் வெச்சிருக்காங்க... ஒரு சேஃப்டி இல்ல சார்!” - ஆபீஸ் கொள்ளையனின் அலப்பறை!

எழும்பூர் ரயில் நிலையத்திலுள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வுசெய்தபோது, அவன் அங்கு வரவில்லை என்பது உறுதியானது. தொடர்ந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்த போது அந்த நபர், ஆட்டோவில் திருவல்லிக்கேணி நோக்கிச் செல்வது தெரிந்தது. திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரில் இறங்கியவன் தெருவுக்குள் நுழைந்து சென்றதை போலீஸார் கண்டுபிடித்தனர். அதன் பிறகு அவன் இருப்பிடத்தை அறிய, திருவல்லிக்கேணி பகுதியிலுள்ள மேன்ஷன்களில் போலீஸார் சோதனை நடத்தினர்.

செப்டம்பர் 18-ம் தேதி முதல் ஒரு மேன்ஷனில் அவன் தங்கியிருந்தது தெரியவந்தது. போலீஸார் சென்றிருந்தபோது, அவன் அறையை காலி செய்திருந்தான். அவனது ஆதார் கார்டு, செல்போன் நம்பரைச் சேகரித்த போலீஸார், செல்போன் சிக்னலை ஆய்வுசெய்தனர். அது சென்ட்ரல் ரயில் நிலையம், நந்தனம், தி.நகர் ஆகிய பகுதிகளைக் காட்டியது. தி.நகர் பகுதியில் செல்போன் நம்பர் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதையும் போலீஸார் கண்டறிந்தனர். ஆதார் கார்டில் ‘பாண்டுரங்கன், நடுத்தெரு, பிள்ளையார் நத்தம், திருநெல்வேலி மாவட்டம்’ என்று குறிப்பிட்டிருந்தது. அவன் குற்றப் பின்னணியை ஆராய்ந்தபோது, அவன் கார்ப்பரேட் ஆபீஸ்களை மட்டும் குறிவைத்துக் கொள்ளையடிக்கும் ‘ஆபீஸ் கொள்ளையன்’ என்று தெரிந்தது.

அவனது புகைப்படத்தை வைத்து விசாரணையைத் தொடர்ந்த போலீஸாருக்கு, தி.நகரில் நட்சத்திர ஹோட்டலில் சூட் அறையில் அவன் தங்கியிருப்பது தெரியவந்தது. நாளொன்றுக்கு 500 ரூபாய் வாடகையில் மேன்ஷனில் தங்கியிருந்தவன், கொள்ளையடித்ததும் 5,000 ரூபாய் வாடகையில் தங்கியிருந்திருக்கிறான். மூன்றாவது மாடியில் அவன் தங்கியிருந்ததால், இரவு நேரத்தில் சென்று, மின் இணைப்புகளையெல்லாம் துண்டித்துவிட்டு, சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் அவனைக் கைதுசெய்திருக்கிறது போலீஸ். 60 லட்சத்து 72 ஆயிரத்து 733 ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். கொள்ளையடித்த சில தினங்களிலேயே ஆறு லட்சம் ரூபாய்க்கு மேல் பாண்டுரங்கன் செலவழித்திருக்கிறான்.

பாண்டுரங்கன்
பாண்டுரங்கன்

“அவ்ளோ பணம் வெச்சிருக்காங்க... ஒரு சேஃப்டி இல்ல சார்!” - ஆபீஸ் கொள்ளையனின் அலப்பறை!

“பணத்தைத் தவிர வேறெதையும் தொடவே கூடாது!”

பாண்டுரங்கனின் ஃபிளாஷ்பேக்கை நம்மிடம் விவரித்தார் உதவி கமிஷனர் ரமேஷ்... ‘‘பத்தாம் வகுப்பில் ஃபெயிலான பாண்டுரங்கன், ராணுவத்தில் சேர்வதற்காக போலியாக ஒரு மதிப்பெண் சான்றிதழைத் தயாரித்துக்கொண்டு, 1989-ம் ஆண்டு சென்னைக்கு வந்திருக்கிறான். சான்றிதழ் ஆய்வின்போது சிக்கிக்கொண்டவனை எழும்பூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். சிறையில், குமார் என்ற கொள்ளையனின் நட்பு பாண்டுரங்கனுக்குக் கிடைத்திருக்கிறது. குமார்தான் பாண்டுரங்கனுக்குத் திருடுவதில் குரு. ‘வீடுகளில் திருடக் கூடாது. பணத்தைத் தவிர வேறெதையும் தொடவே கூடாது. ஆபீஸ்களிலும் செக்யூரிட்டி இல்லாத ஆபீஸ்களைக் குறி வை. திருடுவதற்கு ஒரு வாரம் முன்பிருந்து அந்த ஆபீஸைக் கண்காணி. திருடிய பிறகு போலீஸாரைக் குழப்ப உடையை மாற்றிக்கொள். வேறு வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டு இருக்குமிடம் போ’ என்று குமார் கொடுத்த டிப்ஸ்களை பாண்டுரங்கன் அப்படியே பின்பற்றியிருக்கிறான்.

பாண்டுரங்கன் மீது தமிழகம் முழுவதும் 21 வழக்குகள் உள்ளன. அவற்றில், 14 வழக்குகளில் தண்டனை கிடைத்திருக்கிறது. கடந்த 2013-ல் கோவைச் சிறையிலிருந்து வெளியில் வந்த பாண்டுரங்கன், சொந்த ஊருக்குச் சென்று விவசாயம் செய்திருக்கிறான். அதில், 5 லட்சம் ரூபாய் வரை கடன் ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் திருட முடிவெடுத்திருக்கிறான். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, செப்டம்பர் 18-ம் தேதி சென்னை வந்திருக்கிறான். திருவல்லிக் கேணியிலுள்ள மேன்ஷனில் தங்கியிருந்தபடியே, ஒவ்வொரு வணிக வளாகமாகச் சென்று ஒரு வாரமாக நோட்டமிட்டிருக்கிறான். அப்போதுதான் அந்த வணிக வளாகத்திலுள்ள நான்காவது மாடியில் செயல்பட்ட கார்ப்பரேட் அலுவலகத்தைக் குறிவைத்திருக்கிறான். நள்ளிரவு வரை கண்காணித்ததில், இரவில் செக்யூரிட்டி இல்லை என்பதைத் தெரிந்துகொண்டான்.

அக்டோபர் 10-ம் தேதி இரவு 8 மணிக்கெல்லாம் அந்த வளாகத்துக்குச் சென்றிருக்கிறான். தன் முகம் சிசிடிவி-யில் பதிவாகாமலிருக்க, பெரிய மாஸ்க்கும் மங்கி குல்லாவும் அணிந்துகொண்டு ஐந்தாவது மாடியில் பதுங்கியிருக்கிறான். 10 மணிக்கு மேல், குறிவைத்த அலுவலகத்துக்குள் நுழைந்து எந்தச் சிரமமுமின்றி ஸ்க்ரூ டிரைவராலேயே கதவைத் திறந்திருக்கிறான். ‘சின்ன கடப்பாரையெல்லாம் வெச்சிருந்தேன் சார். அதெல்லாம் தேவையேபடலை. அவ்ளோ பணம் வெச்சிருக்காங்க. ஒரு சேஃப்டி இல்ல சார்’ என்று எங்கள் விசாரணையில் அவனே சொன்னான்.


“அவ்ளோ பணம் வெச்சிருக்காங்க... ஒரு சேஃப்டி இல்ல சார்!” - ஆபீஸ் கொள்ளையனின் அலப்பறை!

கட்டுக்கட்டாகப் பணம்... 500 சிசிடிவி-களில் ஆய்வு!

உள்ளே ஒவ்வொரு கேபினாகச் சென்று பார்த்த பாண்டுரங்கனுக்கு லாக்கர் ஒன்று தென்பட்டிருக்கிறது. அங்குமிங்கும் தேடியதில், புத்தகம் ஒன்றின் நடுவில் சாவிக்கொத்து தென்பட்டிருக்கிறது. அந்தச் சாவி மூலம் லாக்கரைத் திறந்தபோது, அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்திருக்கின்றன. லாக்கரின் அருகே இருந்த பீரோவைத் திறந்து பார்த்தபோது, அதிலும் கட்டுக்கட்டாகப் பணம் இருந்திருக்கிறது. பணத்தை எடுத்துச் செல்ல பை எதுவும் கொண்டு செல்லாததால், குப்பைகளை அள்ளப் பயன்படுத்தும் கறுப்பு நிற பிளாஸ்டிக் பைகளில் பணத்தை அள்ளிப்போட்டிருக்கிறான். வேறு சில லாக்கர்களில் இருந்த லட்சக்கணக்கான பணம் அவன் கண்களில் சிக்கவில்லை. பணத்தை எடுத்துக்கொண்டு வெளியில் வந்த பாண்டுரங்கன், போலீஸிடம் சிக்கிக்கொள்ளாமலிருக்க குமார் சொன்ன யோசனைப்படி, சட்டையைக் கழற்றிவிட்டு புதிய சட்டை ஒன்றை அணிந்துகொண்டு கிளம்பியிருக்கிறான்.

கொள்ளையடித்த பணத்தில் பிரபல அழகுநிலையத்துக்குச் சென்று தன்னுடைய முகத்தை 90,000 ரூபாய்க்கு ஃபேஷியல் செய்திருக்கிறான் பாண்டுரங்கன். இணையதளம் மூலம் கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள டபுள் பெட்ரூம் வீடு ஒன்றை 50 லட்ச ரூபாய்க்கு விலைபேசியிருக்கிறான். கைதுசெய்து அவனை விசாரித்துக்கொண்டிருந்தபோது ‘வீடு ரெஜிஸ்ட்ரேஷனுக்கு வரலையா சார்?’ என்று அவனுக்கு அழைப்பு வந்தபோதுதான், அந்த விஷயம் எங்களுக்குத் தெரிந்தது. இதில்லாமல், தனக்குத் தெரிந்தவர்களுக்கு 50,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை ஏடிஎம் மூலம் அனுப்பிவைத்திருக்கிறான். மீதி பணத்தோடுதான் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தது. ‘ஐம்பதாயிரம் இல்லை... ஒரு லட்சம் இருக்கும்னு நெனைச்சுட்டுப் போனேன் சார். இவ்ளோ இருக்கும்னு நெனைக்கலை. இந்தப் பணத்தைவெச்சு செட்டில் ஆகிடலாம்னு நெனைச்சேனே...’ என்றான். ‘ஆபீஸிலிருந்த ஐபோன், லேப்டாப்பையெல்லாம் ஏன் எடுக்கலை?’ என்று நாங்கள் கேட்டபோதுதான், தன் குருவான கொள்ளையன் குமார் கொடுத்த டிப்ஸ்களை எங்களிடம் தெரிவித்தான். இரண்டு நாள்கள் தூங்காமல் 500 சிசிடிவி-களுக்கு மேல் இரவு பகலாக ஆய்வுசெய்துதான் இவனைப் பிடித்தோம்!’’ என்று விளக்கமாகச் சொன்னார் உதவி கமிஷனர் ரமேஷ்.

இப்போது புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறான் பாண்டுரங்கன். எவ்வளவு ரூபாய்க்கு ஃபேஷியல் செய்துகொண்டாலும் திருட்டுக் களை போகுமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு