Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸ் பாய்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸ் பாய்

Published:Updated:
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

விதிகளை மீறி மூன்றடுக்குக் கட்டடம் மேலிடத்தைச் சரிக்கட்டிய அதிகாரி!

நிலச்சரிவு அபாயமும், சூழலியல் முக்கியத்துவமும் கொண்ட நீலகிரி மாவட்டத்தில், கட்டுமானங்களை எழுப்ப ‘மாஸ்டர் பிளான்’ உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. பெரிய அளவிலான கட்டுமானங்களைக் கட்ட உள்ளாட்சித்துறை முதல் வனத்துறை வரை பல்வேறு அனுமதிகளைப் பெற வேண்டும். ஆனால், இவை எதையும் பொருட்படுத்தாத வருவாய்த்துறை அதிகாரி ஒருவர், தனது பதவியைப் பயன்படுத்தி, அரசுத்துறைகளைச் சரிக்கட்டி குந்தா ஏரியாவில் மூன்றடுக்குக் கட்டடத்தைக் கட்டியிருக்கிறார். விதிமீறலில் ஈடுபடுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய வருவாய்த்துறை அதிகாரி ஒருவரே, விதிகளைக் காலில் போட்டு மிதித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது பற்றிய புகார்கள் மாவட்ட நிர்வாகத்துக்குச் சென்ற நிலையில் நடவடிக்கை மட்டும் இல்லை. விசாரித்தால், “ஊட்டிக்கு வரும் வி.ஐ.பி-க்களை வரவேற்று உபசரிக்கும் பொறுப்பில் இருப்பதால், மேலிடத்தையும் சரிக்கட்டிவிட்டார்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

அறம் இல்லாத அறநிலையத்துறை அதிகாரி!

ராஜராஜனின் ஊரில் இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரியும் அதிகாரி ஒருவர்மீது பல்வேறு புகார்கள் குவிகின்றன. இவரது கட்டுப்பாட்டிலுள்ள மாவட்டங்களின் முக்கியக் கோயில்களில் நிர்வாக அலுவலராகப் பணிபுரிபவர்கள், மாதம் இரு முறை குறிப்பிட்ட தொகையை மாமூலாகக் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறாராம். அத்துடன், முக்கியக் கோயில்களுக்கு பரம்பரை அறங்காவலர்களை நியமனம் செய்வதிலும் பெரும் தொகையைக் கறந்துவிடுகிறார் என்கிறார்கள். சமீபத்தில் நீர்நிலையின் பெயர்கொண்ட ஊரின் பிள்ளையார் கோயிலுக்குப் பரம்பரை அறங்காவலரை நியமனம் செய்ய ஐந்து லட்சம் ரூபாய் கறந்துவிட்டாராம். இவர்மீது கோட்டை வரை புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று புலம்புகிறார்கள் துறை ஊழியர்கள்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

விதியை மீறி இலவச வீட்டுமனை... அரசு அதிகாரியின் அட்ராசிட்டி!

இலவச வீட்டுமனையை வாங்க வரும் சாமானியர்களை அதிகாரிகள் அலைக்கழிப்பது ஊரறிந்த விஷயம்... இந்த நிலையில், கரூர் மாநகரத்தை ஒட்டியுள்ள ஒரு கிராமத்தில், வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றிவரும் பிரபல சினிமா பாடகியின் பெயரைக்கொண்டவர், அவரின் தாய் பெயரில் தோகைவிரித்தாடும் கிராமத்தில் இரண்டரை சென்ட் அரசு நத்தம் புறம்போக்கு இடத்தை இலவச வீட்டுமனையாகப் பெற்றிருக்கிறார். அது மட்டுமின்றி, அந்த இடத்தை ஒரே வாரத்தில் தாயிடமிருந்து தனது பெயருக்கு தானக்கிரயமும் செய்துகொண்டார். அரசு ஊழியர்களுக்கோ, அவரின் குடும்பத்தினருக்கோ இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கூடாது என்பது உயர் நீதிமன்ற உத்தரவு. அதேபோல், இலவசமாகப் பெற்ற வீட்டுமனையை உடனடியாக விற்கவோ, தானக்கிரயம் செய்யவோ முடியாது... 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் விற்க முடியும். இதையடுத்து, விதிமுறைகளை மீறிய அந்த அதிகாரிமீது மட்டுமல்லாமல் அவருக்கு உதவியாக இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் கரூரில் எழுந்துள்ளன.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

புறம்போக்கு தரிசு நிலங்களுக்குக் குறி!

வட மாவட்டத்தின் பிரபல டோல்கேட் ஊரின் தாசில்தார், வசூல் வேட்டைக்காகவே தன் உறவினர் ஒருவரை ஆஃப் தி ரிக்கார்டாக வேலைக்கு அமர்த்தியிருக்கிறார். புறம்போக்கு தரிசு நிலங்களை வளைப்பதே இவர்களின் டார்கெட் என்கிறார்கள் இவரின் சக ஊழியர்கள். இப்படித்தான் சமீபத்தில் தன் சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட மக்கள் பிரதிநிதி ஒருவருக்கு ஒரு ஏக்கர் புறம்போக்கு தரிசு நிலத்தை, பட்டா போட்டுத் தருவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். இது குறித்து உயரதிகாரிகளுக்குத் தகவல் செல்லவே... அவரை அழைத்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார்கள். இதனால், இப்போதைக்கு அடக்கியே வாசிக்கிறாராம் தாசில்தார்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘‘கமிஷனுக்கு ஆசைப்பட்டு எங்க கழுத்தை நெரிக்கலாமா?’’

தஞ்சை மாவட்டத்தின் மங்கலமான ஊர் மின்வாரிய அதிகாரியின் பிடிவாதத்தால் விவசாயிகள் கொதிப்பில் இருக்கிறார்கள். இப்பகுதியைச் சேர்ந்த ஏழை விவசாயிகள், விவசாய மின் இணைப்புக்காக போர்வெல் அமைத்துப் பல ஆண்டுகளாகக் காத்திருந்த நிலையில் தற்போது இவர்களுக்குத் தமிழக அரசு மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த அதிகாரியோ, ‘புதிதாக நானூறு அடி ஆழத்தில் போர்வெல் அமைத்தால்தான் மின் இணைப்பு வழங்குவேன்’ என்று பிடிவாதமாக இருக்கிறார். இது குறித்துப் பேசும் விவசாயிகள், ‘‘போர்வேல் சீரமைக்கப்பட்டு நல்ல நிலையில் இருந்தாலே, மின் இணைப்பு கொடுக்கணும்கிறதுதான் நடைமுறை. மற்ற பகுதிகள்ல அப்படித்தான் கொடுத்திருக்காங்க. நாங்க அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலம் வெச்சுருக்குற ஏழை விவசாயிகள். திரும்பவும் லட்சக்கணக்கில் செலவு பண்ணி, புதுசா போர்வெல் போட வசதியில்லை. போர்வெல் போடுற கம்பெனிகள், பைப் கம்பெனிகள்கிட்ட கிடைக்குற கமிஷனுக்கு ஆசைப்பட்டு, எங்க கழுத்தை நெரிக்குறது நியாயமா?” என்று கொந்தளிக்கிறார்கள்.