Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

Published:Updated:
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘‘லஞ்சத்துல ஆயிரம் ரூபா டிஸ்கவுன்ட்!’’

தூத்துக்குடி மாவட்டத்தின் ஆன்மிக நகர் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் துணையானவர், அலுவலகத்துக்கு எந்த ஃபைல் வந்தாலும், தனக்கு நெருக்கமான புரோக்கர் ஒருவருக்குத் தகவல் சொல்லிவிடுவாராம். அந்த புரோக்கர் மனுதாரரைத் தொடர்புகொண்டு டீல் பேசி, அதற்கான பணத்தை ஆன்மிக ஸ்தலத்தின் அருகேவைத்தே வசூலிப்பாராம். வசூல் முடிந்தவுடன் ஃபைல்கள் அடுத்த நாளே ஓகே-யாகிவிடுமாம். கொடுக்கவேண்டியதைக் கொடுக்கவில்லையென்றால், ஃபைல் பெண்டிங்கில் வைக்கப்படுமாம். ஃபைல் பெண்டிங் குறித்துக் கேள்வி கேட்டாலோ, துணையானவர் மீது புகார் கூறினாலோ, அந்த ஃபைலில் ஏதாவது தவற்றைக் கண்டுபிடித்து, மாதக்கணக்கில் கிடப்பில் போடுவாராம். சமீபத்தில் உளவுத்துறையில் பணிபுரியும் போலீஸ்காரர் ஒருவர் பட்டா மாற்றத்துக்குச் சென்றபோது, வழக்கம்போல் புரோக்கர் மூலம் டீல் பேசப்பட்டிருக்கிறது. உளவுத்துறை போலீஸ்காரர் நேரடியாகத் துணையானவரை அணுக, ‘‘மத்தவங்ககிட்ட ஐயாயிரம் ரூபா வாங்குவேன். நீங்க நாலாயிரம் ரூபா கொடுங்க போதும்’’ என்று டிஸ்கவுன்ட் கொடுத்திருக்கிறார். ‘லஞ்சம் கொடுக்காம பட்டா வாங்கிக் காட்டுறேன்’ என்று உளவுத்துறை போலீஸ்காரர் சவால்விட... ‘நீ எப்படி வாங்குறேன்னு பார்க்குறேன்’ என்று துணையானவர் பதில் சவால்விட... யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்று தாலுகா அலுவலக ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘‘எல்லாம் மேல இருக்கிறவர்கிட்ட சொல்லிட்டுதான் பண்றோம்!’’

கோவை மாவட்ட வனத்துறையில், பழைய வில்லன் பெயரைக்கொண்ட அதிகாரி ஒருவர் பணியாற்றுகிறார். மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக, உயரதிகாரிகளுக்கே அவர் சவால்விடுகிறாராம். செக்போஸ்ட் வசூல், அபராதம் என்று அனைத்திலும் தன்னிச்சையாக முடிவெடுத்து செமையாக கல்லாகட்டிவருகிறாராம். துறை வி.ஐ.பி-யும், அந்த அதிகாரியும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பல விஷயங்களில் வி.ஐ.பி-யுடன் நேரடியாகப் பேசி காரியம் சாதித்துவிடுகிறாராம். சக அதிகாரிகள் யாராவது இவரிடம் கேள்வி கேட்டால், ‘‘எல்லாம் மேல இருக்கிறவர்கிட்ட சொல்லிட்டுதான் பண்றோம். அவருக்கு போன் போட்டுத் தரட்டா..?’’ என்று ‘லேடன்கிட்ட பேசுறியா... பின் லேடன்...’ என்ற ரேஞ்சுக்குப் பதில் சொல்கிறாராம். இதனால், சக அதிகாரிகள், ‘நமக்கேன் வம்பு’ என்று ஒதுங்கிக்கொள்கிறார்களாம்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

தேயிலைத்தூள் கலப்படம் கன ஜோர்... கண்டுகொள்ளாத நீலகிரி அதிகாரிகள்!

தேயிலை உற்பத்தியை முக்கியத் தொழிலாகக்கொண்டிருக்கும் நீலகிரியில், தரமான தேயிலை கிடைக்கும் அதேநேரத்தில், தேயிலைத்தூள் கலப்படமும் கொடிகட்டிப் பறக்கிறது என்ற பதற்றக் குரல்கள் கேட்கின்றன. ‘‘உயிருக்கே உலைவைக்கும் அளவுக்கு ஹேர் டை முதல் ரசாயனக் கலவை வரை டீத்தூளில் கலந்து, சுற்றுலாப்பயணிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் சிலர் விற்பனை செய்துவருகிறார்கள். டீத்தூளைத் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, முகவரி என எதுவுமே இல்லாமல் வெள்ளை பாலித்தீன் கவரில் அடைத்துப் புழக்கத்தில் விடுகிறார்கள். குன்னூரைச் சேர்ந்த ஒருவர்தான் இந்தக் கலப்படத் தேயிலை பிசினஸில் பிரதானமாக ஈடுபட்டுவருகிறார். அதிகாரிகளோ நடவடிக்கை என்ற பெயரில், எப்போதாவது கண்துடைப்புக்கு, தேயிலை பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்து கணக்கு காட்டுகிறார்கள். மற்றபடி, கலப்படத்தைத் தடுக்கவேண்டிய முக்கியப் பொறுப்பிலிருக்கும் அதிகாரி, எதைப் பற்றியும் கவலைப்படாமல் வசூலில் மட்டுமே குறியாக இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் மே மாதம் நீலகிரியில் கோடைவிழா நடக்கவிருக்கிறது. சுற்றுலாப்பயணிகளைக் குறிவைத்து, கலப்பட டீத்தூளை டன் கணக்கில் இறக்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்று நுகர்வோர் பாதுகாப்பில் அக்கறை கொண்டோர் கொந்தளிக்கிறார்கள்!

‘‘அடுத்து வர்றவங்க இதைவிட மோசமா இருக்கப்போறாங்க..!’’

திருச்சிக்கு அருகிலுள்ள ஒரு மாவட்டத்தில், ‘ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநராக இருப்பவர் நடத்தும் வசூல் வேட்டையைத் தாங்க முடியவில்லை’ என்கிறார்கள் கான்ட்ராக்டர்கள். ‘‘டெண்டர் எடுக்கத்தான் கமிஷன் கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இவருக்கோ கான்ட்ராக்டர்களின் செக் ‘பாஸ்’ ஆவதற்கே ஒன்றரை பர்சன்டேஜ் கொடுக்க வேண்டும். வாங்கும் கமிஷனை கலெக்டர் முதல் செயற்பொறியாளர் வரையிலும் கனகச்சிதமாகப் பிரித்துக் கொடுத்துவிடுவதால், புகார்கள் வந்தாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை’’ என்ற புலம்பல் சத்தம் பலமாகக் கேட்கிறது. ‘அந்தத் திட்ட இயக்குநரை இங்கிருந்து மாற்ற வேண்டும்’ என்று தி.மு.க பின்புலம் கொண்ட கான்ட்ராக்டர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, தலைமையிடம் நெருக்கமாக இருக்கும் மக்கள் பிரதிநிதி ஒருவரிடம் புகார் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவரோ, “இவருக்கு பதிலா அடுத்து வர்றவங்க இதைவிட மோசமா இருக்கப்போறாங்க. பேசாம அவங்களை அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போங்கப்பா...’’ என்று சொல்லித் திருப்பியனுப்ப, செய்வதறியாமல் திகைத்துக்கொண்டிருக்கிறார்கள் கான்ட்ராக்டர்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘‘எதுல, எவ்வளவு கமிஷன் கிடைக்கும்னு எனக்குத் தெரியும்!’’

மயிலாடுதுறை மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஒன்றில், தமிழ்க்கடவுள் பெயரைக்கொண்ட பொறியாளர் ஒருவர் பணிபுரிகிறார். இவர் தனது கட்டுப்பாட்டிலுள்ள ஊராட்சிமன்றத் தலைவர்களைப் பாடாய்ப்படுத்துகிறாராம். ஊராட்சிகளில் நடக்கும் ஒவ்வொரு வேலைக்கும் இவ்வளவு கமிஷன் வேண்டும் என்று கேட்டு, கறாராக வசூல் செய்துவிடுகிறாராம். ‘‘இவரின் மனைவி, முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவி. அவர் பதவியில் இருந்தபோது, பினாமி பெயரில் ஏராளமான கான்ட்ராக்ட் வேலைகளைச் செய்து அந்தப் பொறியாளர் பணம் சம்பாதித்திருக்கிறார். ஊராட்சிமன்றத் தலைவர்கள் பணம் கொடுக்க மறுத்து ஏதாவது காரணம் சொன்னால், ‘ஒவ்வொரு வேலையிலயும் எவ்வளவு கமிஷன் கிடைக்கும்னு எனக்கு நல்லாத் தெரியும். எனக்கு அனுபவம் இருக்கு... என்னை ஏமாத்த பார்க்காதீங்க’ என்று கெடுபிடி காட்டுகிறார். கமிஷனாகக் கிடைத்த பணத்தில் சொகுசு பங்களா ஒன்றையும் கட்டியிருக்கிறார்’’ என்று புகார் வாசிக்கிறார்கள் அலுவலக ஊழியர்கள்!