Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

Published:Updated:
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

வேட்டைக் கும்பலைத் தப்பவிட்ட அதிகாரி... யானை இறப்பு விசாரணைக்குழுவில் நியமனம்...

யானை வேட்டைக் கும்பலுடன் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்படும் அதிகாரியையே யானைகள் மரணம் தொடர்பான விசாரணைக்குழுவில் நியமித்திருக்கும் கொடுமை தமிழக வனத்துறையில் நடந்திருக்கிறது. இது பற்றிப் பேசும் வன ஆர்வலர்கள், ‘‘அந்த அதிகாரி பதவியிலிருந்த காலகட்டத்தில்தான் மாயார், சீகூர், சிறுமுகை, கல்லார் உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிகம் கொல்லப்பட்டன. கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த யானை வேட்டைக் கும்பலின் கைவரிசை என்று தெரிந்தும், பல யானைகளின் மரணத்தில் ‘இயற்கை மரணம்’ என்று மாற்றி எழுதவைத்தார். ஒருமுறை 300 கிலோ தந்தம் வைத்திருந்த வேட்டைக் கும்பல்மீது வழக்கு பதிவு செய்யாமல் தப்பிக்கவைத்திருக்கிறார். மேலும், ‘யானை வேட்டைக் கும்பல்மீது நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று மத்திய அரசின் வனவிலங்குகள் குற்றத் தடுப்புப்பிரிவு இவர்மீதும் மற்றொரு பெண் வனத்துறை அதிகாரிமீதும் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. இவ்வளவு சர்ச்சைகள் நிறைந்த அதிகாரியைத்தான் இப்போது யானைகள் இறப்பு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் உறுப்பினராக நியமித்திருக்கிறார்கள். இது நியாயமா?” என்று பொங்குகிறார்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

இரட்டை அர்த்த வசனம்... மொட்டைக் கடுதாசி! - துணைப் பேராசிரியரின் டார்ச்சர்...

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஒருவரிடம் உதவியாளராக இருந்த, துணைப் பேராசிரியர்மீது புகார்கள் குவிகின்றன. தற்போது அரசு கலைக் கல்லூரியில் துறைத் தலைவராக இருக்கும் அந்தத் துணைப் பேராசிரியர், சக பெண் பேராசிரியர்களிடம் இரட்டை அர்த்த வசனங்கள் பேசி வழிகிறாராம். இதைக் கண்டிக்கும் பெண் பேராசிரியர்கள்மீது, சில மாணவர்களிடம் சொல்லி மொட்டைக் கடிதம் எழுதவைத்து தொல்லை கொடுத்துவருகிறார். அதற்காக அந்த மாணவர்களுக்கு சிகரெட், மது என்று தாராளமாகச் செலவு செய்வதுடன், ‘என்மீது நடவடிக்கை எடுக்க நினைத்தால், மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பார்கள்’ என்றும் உதார்விடுகிறார். இதையடுத்து, ‘மாணவர்களின் எதிர்காலத்தை நாசப்படுத்திவரும் துணைப் பேராசிரியர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் அனுப்பும் புகார்களை, தனது அரசியல் செல்வாக்கால் ஒன்றும் இல்லாமல் செய்துவருகிறார் அந்தத் துணைப் பேராசிரியர்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

பத்தாண்டுகளுக்கு மேல் பதவி... ராமநாதபுரம் நகராட்சி அட்ராசிட்டி!

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில், முக்கியப் பொறுப்பிலுள்ள பெண் அதிகாரியின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது என்று புலம்புகிறார்கள் நகராட்சி ஊழியர்கள். இது பற்றிப் பேசியவர்கள், ‘‘பத்தாண்டுகளுக்கு மேலாக அங்கு பணியில் இருக்கும் அந்த அதிகாரி, கடந்த ஆறு ஆண்டுகளாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால், அவர் வைத்ததுதான் சட்டம் என்று ஆட்டம் போட்டுவந்தார். தற்போது மக்கள் பிரதிநிதிகள் மீண்டும் வந்துவிட்டதால், தன்னுடைய ஆளுமை, அதிகாரங்கள் பறிபோய்விட்டதாக எண்ணி, அந்தக் கோபத்தை ஊழியர்கள்மீது காட்டுகிறார். பல நாள்கள் இரவு 11 மணி வரை எங்களை வீட்டுக்குச் செல்லவிடாமல் டார்ச்சர் செய்கிறார்’’ என்று கொந்தளிக்கிறார்கள். அதிகாரியின் அட்ராட்சிட்டி காரணமாக இவரை ‘சண்டியர்’ என்றே நகராட்சி வட்டாரத்தில் அடைமொழியிட்டு திட்டித் தீர்க்கிறார்கள்.

கல்லூரியைக் கைப்பற்றத் துடிக்கும் ‘அன்பு’ சகோதரர்... துணைபோகும் உயர்கல்வித்துறை அதிகாரி!

மேற்கு மண்டலத்தின் உயர்கல்வித்துறை அதிகாரி ஒருவர், கரை வேட்டி கட்டாத அ.தி.மு.க நிர்வாகிபோலவே வலம்வருகிறார். அங்குள்ள ஒரு மாவட்டத்தில் அரசு உதவிபெறும் கல்லூரியைச் சட்டத்துக்குப் புறம்பாக வளைத்து, அ.தி.மு.க வி.ஐ.பி ஒருவரின் சகோதரருக்குத் தாரை வார்த்துக் கொடுக்க அவர் உதவுவதாகப் புகார் எழுந்துள்ளது. இது பற்றிப் பேசியவர்கள், ‘‘ஓர் அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில்தான் அந்தக் கல்லூரி இயங்குகிறது. முன்னாள் மாணவர் என்ற பெயரில் அங்கு போட்டியாக அறக்கட்டளையை உருவாக்கியுள்ள அ.தி.மு.க வி.ஐ.பி-யின் சகோதரர், அதன் மூலம் கல்லூரி நிர்வாகத்தைக் கைப்பற்ற முயல்கிறார். அதற்கு இந்த அதிகாரியும் உடந்தை’’ என்கிறார்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

பட்டாசுத்துறை... ஊழலில் இணைந்த கைகள்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகள் ஊழலில் இணைந்த கைகளாக மிரட்டிவருகிறார்கள். குறிப்பாக, பெரிய பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு ஆதரவாகவும், சிறிய பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு எதிராகவும் பாரபட்சம் காட்டுவதாகத் தொடர் புகார்கள் வரிசைகட்டுகின்றன. சிறிய பட்டாசு ஆலை தயாரிப்பு நிறுவனங்களில் திடீர் ரெய்டுக்குப் போகும் இந்த அதிகாரிகள், பட்டாசு தயாரிப்புக்குப் பயன்படுத்தத் தடைவிதித்திருக்கும் பொருள்கள் இருப்பதாகக் கூறி மிரட்டி, 50 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாகப் பெற்று விடுகிறார்கள். ‘‘சிறிய ஆலைகள், பெரிய ஆலைகள் என ஆங்காங்கே சிலர் தடைசெய்யப்பட்ட வெடிபொருள்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்த அதிகாரிகளோ பெரிய ஆலைகளை விட்டுவிட்டு, சிறிய ஆலைகளை மட்டும் குறிவைத்து ரெய்டு நடத்துகிறார்கள். அதுவும், தடைசெய்யப்பட்ட பொருள்கள் இல்லாவிட்டாலும்கூட ஏதேனும் குறைகளைச் சொல்லி மிரட்டி பணம் பறித்துவிடுகிறார்கள். தவிர உரிமம் புதுப்பித்தல், புதிய உரிமம் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ‘ரேட்’ ஃபிக்ஸ் செய்து லஞ்சம் பெறுகிறார்கள்’’ என்ற புலம்பல் சத்தம் சிவகாசியில் இருந்து பலமாக ஒலிக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism