Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

Published:Updated:
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

மாத மாமூல் ரூ.5 லட்சம்... கல்லாகட்டும் டாஸ்மாக் அதிகாரி!

கொங்கு மண்டல மூன்றெழுத்து மாவட்டத்தில், டாஸ்மாக் உயரதிகாரியாகப் பணியாற்றிவரும் காமெடி நடிகரின் பெயரைக்கொண்ட அதிகாரி, மாவட்டத்திலுள்ள 96 கடைகளையும் இரண்டு வகையாகப் பிரித்து, வசூல் வேட்டை நடத்திவருகிறார். அதாவது, மாதம் 35 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக மது விற்பனையாகும் டாஸ்மாக் கடைகள் மாதம் ஆறாயிரம் ரூபாயும், 35 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக மது விற்பனையாகும் கடைகள் மாதம் மூவாயிரம் ரூபாய் மாமூலும் இவருக்குத் தந்துவிட வேண்டும். இப்படி மாத மாமூலாக மட்டுமே ஐந்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக கல்லாகட்டுபவர், மாமூல் தர மறுக்கும் கடைகளின் ஊழியர்கள் மீது மதுபானங்களைக் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதாகச் சொல்லி நடவடிக்கை எடுக்கிறார். இதையடுத்து, “தலைவர் இருக்குற ஊர்லயே இந்த ஆட்டம் போடுறாரு!” என்று புலம்புகிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இலங்கையில் பிடிபட்ட படகுக்கும் மானிய டீசல்!

காரைக்கால் மாவட்ட மீன் வளத்துறையில் பணிபுரியும் ‘கவிதை’ பிரமுகர், மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை டீசலுக்கு அனுமதி தருவதில் சுறாமீன் வேகத்தில் கல்லாகட்டுகிறார். மானிய விலை டீசல் வழங்கும்போது, படகின் பதிவு எண்ணைப் பதிவு செய்யவேண்டியது அவசியம். ஆனால் இவரோ, பழுதான மற்றும் உரிமம் காலாவதியான படகுகளின் பதிவு எண்களையும் குறிப்பிட்டு, டீசல் கணக்கு எழுதி மானியத்தைச் சுருட்டிவிடுகிறார். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கையில் பிடிபட்டுக் கிடக்கும் தமிழக மீனவர்கள் படகுகளின் பதிவெண்களையும் பதிவிட்டு, இவர் கொள்ளையடித்திருப்பதெல்லாம் ஊழலின் உச்சம் என்று கொந்தளிக்கிறார்கள் மீனவர்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

அன்றாட வசூலில் அதகளம்... தணிக்கை ஆய்வாளர்கள் அட்ராசிட்டி!

நெற்களஞ்சியத்தின் தலைமையகத்தில் உள்ளாட்சி நிதி தணிக்கைப் பிரிவில் பணியாற்றும் ஆய்வாளர் இருவரும் அன்றாட வசூலில் அதகளம் செய்வதாகப் புகார்கள் வரிசைகட்டுகின்றன. பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் பணிகளுக்காக ஆய்வுக்குச் செல்லும் இரட்டையர்கள், பி.டி.ஓ மற்றும் செயல் அலுவலர்களிடம், ‘எந்தப் பணியாக இருந்தாலும் கூடுதலாக நிதி ஒதுக்கி எங்களுக்கு கமிஷன் கொடுத்துவிட வேண்டும்’ என்று கறார் காட்டிவருகிறார்கள். மேலும், இதுவரை நடைபெற்ற பணிகளுக்கு கமிஷன் கொடுக்கவில்லையென்றாலும், ‘வேலை சரியாக நடைபெறவில்லை என்று நோட் போட்டு அனுப்பிவிடுவோம்’ என்று வெளிப்படையாகவே மிரட்டி கமிஷனைக் கறந்துவிடுகின்றனர். இவர்களின் அடாவடி வசூலைத் தாங்க முடியாத பி.டி.ஓ-க்கள் சிலர் உயரதிகாரிகளுக்குப் புகார் அனுப்பியும், இதுவரை நடவடிக்கை இல்லை!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஊழியருடன் மோதல்... வரிப்பணத்தைத் திருப்பிக்கொடுத்த அவலம்!

கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு பேரூராட்சியில் பிளான் அப்ரூவல் விஷயங்களில் கரன்சி புகுந்து விளையாடுகிறது. சமீபத்தில் இந்த வசூல் வேட்டையைத் தட்டிக்கேட்ட பில் கலெக்டரை மிரட்டிய மேலதிகாரி ஒருவர், அந்த பில் கலெக்டர் வசூலித்த தொழில் வரியை கணினியில் பதிவு செய்யவிடாமல் தடுத்திருக்கிறார். இதில் கடுப்பான பில் கலெக்டர், அவர் வசூல் செய்த சுமார் 20 ஆயிரம் ரூபாயை மக்களிடமே திரும்ப ஒப்படைத்து ரசீதுகளையும் கேன்சல் செய்துவிட்டார். இதையடுத்து, தன் மேல் அதிகாரியுடனான ஏற்பட்ட மோதலால், அரசாங்கத்துக்காக வசூலிக்கப்பட்ட வரிப் பணத்தையே திருப்பிக் கொடுத்திருக்கும் அவலம் வேறெங்கும் நடந்திருக்காது என்று புலம்புகிறார்கள் திற்பரப்பு பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

வாரிச்சுருட்டும் ‘அய்யா’!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடுநிலைப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராக இருக்கும் ‘அய்யா’ பிரமுகர் பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகளிடம் தனக்கு செல்வாக்கு இருப்பதாகக் கூறி, பெண் ஆசிரியர்களை அடிமைபோல நடத்துகிறார். தவிர, பள்ளியை மேம்படுத்துகிறேன் என்று சொல்லி அந்த ஏரியாவின் வணிக நிறுவனத்தினர் மற்றும் முக்கியப் பிரமுகர்களிடமும் பணம் வசூலித்து அதையும் வாரிச்சுருட்டிக்கொண்டாராம். அந்தப் பகுதியில் மற்ற பள்ளித் தலைமையாசிரியர்கள் பலரும் வட்டார வள மையத்துக்குச் சென்று பள்ளிப் பராமரிப்பு கணக்குகளைச் சமர்ப்பித்துவரும் நிலையில், இவரைத் தேடிவரும் கணக்காளர்கள் பெயரளவுக்குத் தணிக்கை செய்வதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள் சக ஆசிரியர்கள். ஏற்கெனவே இவர் பணியாற்றிய பள்ளிகளிலும் இவர்மீது வசூல் புகார்கள் இருந்த நிலையில், இவர்மீது நடவடிக்கை எடுப்பதில் என்ன தயக்கம் என்பதும் சக ஆசிரியர்களின் ஆதங்கக் குரலாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism