Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

Published:Updated:
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

பால்வண்டிக் கண்ணா... பாண்லே பாவம்யா!

புதுச்சேரி அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாண்லேவின் சில முக்கிய அதிகாரிகள், அரசியல்வாதிகளுடன் சிண்டிகேட் அமைத்திருப்பதால் அங்கு ஊழல் கொடிகட்டிப் பறக்கிறதாம். இங்கு உற்பத்தி செய்யப்படும் பால் பாக்கெட்டுகள் காலை, மாலை இரு வேளைகளிலும் தனியார் விற்பனை முகவர்களுக்கு பாண்லே நிர்வாகம் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. அதற்காக புதுச்சேரி முழுவதும் இருக்கும் விற்பனை மையங்களுக்கு செல்ல 30 வேன்கள் இயங்குகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் அங்கு பணிபுரியும் அதிகாரிகளின் பினாமிகளுடையவைதானாம். ஒரு வேனுக்கு நாளொன்று ரூ.3,000 வீதம் 30 வேன்களுக்கும் ரூ. 90,000 கொடுக்கப்படுகிறது. உண்மையில் பால் சப்ளை செய்வதற்கு 20 வேன்கள் இருந்தாலே போதுமானதாம். மீதமுள்ள 10 வேன்களை இரண்டு முக்கிய அதிகாரிகள், பினாமிகளின் பெயரில் ஓட்டி கோடிகளில் சம்பாதிக்கின்றனர். அவர்களில் ஓர் அதிகாரி ஓய்வுபெற்றே ஒரு வருடம் ஆகிறதாம்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

பெண் ஊழியரின் தற்கொலையும்... அதிகாரியின் தெனாவட்டும்!

நெற்களஞ்சியத்தின் தலைமையகத்தில் பணிபுரியும் ஒரு நேர்முக உதவியாளரின் பாலியல் அட்ராசிட்டி எல்லை மீறிப்போகிறது என்கிறார்கள். தாசில்தார் தொடங்கி கடைநிலை ஊழியர் வரையிலான டிரான்ஸ்ஃபர் விஷயத்தை கவனிப்பவர் என்ற பவரில், பெண்களிடம் அடிக்கடி எல்லை மீறுகிறாராம். மகன் இறந்துவிட்ட நிலையில் மனஉளைச்சலில் தவித்துவந்த பெண் ரெக்கார்டு கிளர்க் ஒருவருக்கு, சமீபத்தில் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். “மகன் இறந்து ரெண்டு மாசம்கூட ஆகலை... இப்படி நடந்துக்குறீங்களே... உங்களுக்கு மனசாட்சி இல்லையா?” என்று முகம் சிவந்த அந்தப் பெண்ணை கோயில் நகரத்துக்கு டிரான்ஸ்ஃபர் செய்துவிட்டார். மனமுடைந்த அந்தப் பெண் ஊழியர் தற்கொலை செய்துகொண்டார். பெண்ணின் குடும்பத்தினர் கலெக்டரிடமே புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. `ஆளுங்கட்சிக்கு நெருக்கமாக இருக்கும் என்னை யாரும், எதுவும் செய்ய முடியாது’ என்று தெனாவட்டாகப் பேசித்திரிகிறார் அந்தப் பெண் பித்தர்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

`நடவடிக்கை எடுத்தா சேகர் செத்துருவான்!’

கடலோர மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையின் உயரதிகாரி, முதல் முறையாக உச்ச பதவிக்கு வந்திருப்பதால் தலைகால் புரியாமல் ஆடுகிறாராம். ஊழியர்களை இஷ்டத்துக்கு இடம் மாற்றி மகிழ்கிறார். அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் இருக்கவேண்டிய சிகிச்சைப் பிரிவில் புதியவர்களைப் போடுவது, மருந்து கொள்முதல் தொடங்கி எல்லாவற்றிலும் தான் நினைத்ததை மட்டுமே செய்வது என்று கெட்ட ஆட்டம் போடும் அவர்மீது செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் வரை புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. காரணம், மத்திய மாவட்டத்தில் மருத்துவ அதிகாரியாக இருந்தபோது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்றதும், விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றவராம் இவர். நமக்கெதுக்கு வம்பு என்று மருத்துவத்துறை அதிகாரிகள் பயப்படுவதே அண்ணாத்தையின் ஆட்டத்துக்குக் காரணம்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

இவ்விடம் செல்போன்... ரகசிய கேமராக்களுக்கு அனுமதி இல்லை!

ஆயிரம் புகார்கண்ட அபூர்வ அட்ராசிட்டி ஆபீஸர் இவர். ஆனாலும் யாரும், எதுவும் செய்ய முடியவில்லை. தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையில் பணியாற்றும் இவர், கொரோனா காலகட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்களைத் தனிமைப்படுத்து வதற்கான தனியார் தங்கும் விடுதிகளை ஏற்பாடு செய்யும் பொறுப்பை ஏற்றிருந்தார். தன்னுடைய மாமனார் நடத்தும் விடுதிக்கு, 1 கோடி ரூபாய் பில் கிடைக்க ஏற்பாடு செய்தவர், மற்ற விடுதிக்காரர்களை யெல்லாம் படுத்தியெடுக்கிறாராம். 15% கமிஷன் தராத காரணத்தால், இப்போதும்கூட பல ஹோட்டல்களுக்கு பில் பாக்கி வைத்திருக்கிறார். கொரோனா காலத்தில் தரமற்ற உணவு வழங்கியதாக மருத்துவர்கள் போராடியும்கூட இவர்மீது நடவடிக்கை இல்லை. இப்போதும் ரெய்டு என்ற பெயரில் வசூல் வேட்டையாடிக்கொண்டிருக்கிறார். ‘பெரிய’வருக்கு வேண்டப்பட்டவர்தான். ஆட்சி மாறிய பிறகும் ஏன் இவர் மேல் நடவடிக்கை இல்லையென மண்டையைப் பிய்த்துக்கொள்கிறார்கள் மருத்துவர்களும் ஹோட்டல்காரர்களும். செய்வது தப்பான காரியம் என்றாலும், படு உஷார் இவர். தன்னைச் சந்திக்க வருவோரை வெளியே நிறுத்தி, செல்போன்கள், ரகசிய கேமரா இருக்கிறதா என்று அலுவலக உதவியாளர் மூலம் பரிசோதனை நடத்துவது இவரது உஷார்தனத்துக்கு ஓர் உதாரணம்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

முக்கியமான ‘பேப்பர்’ இல்லியே... ‘விருது’ அதிகாரியின் வில்லங்கம்!

‘விருது’ பெற்ற நகராட்சியின் வருவாய்ப் பிரிவில் பணியாற்றிவரும் அதிகாரி ஒருவர், பொதுமக்களின் சேவைகளுக்கு ஆயிரக்கணக்கில் லஞ்சம் பெறுவதாகப் புகார்கள் பறக்கின்றன. புதிய பேருந்து நிலையத்தில் மூன்று கடைகளுக்கு அனுமதி வழங்கும் ஃபைலில் முக்கியமான ‘பேப்பர்’ இல்லை என்று சொல்லிக் கிடப்பில் போட்டுவிட்டாராம் அவர். சமீபத்தில், சொத்து வரி ரசீது வாங்கச் சென்ற ஒருவரிடம் ஏகப்பட்ட குறைகளைச் சுட்டிக்காட்டி பெரும் தொகையைக் கறக்க முயன்றிருக்கிறார் அதிகாரி. “பத்திரப்பதிவு வேலையெல்லாம் நகராட்சியில் நீங்க பார்க்குறீங்களா?” என்று கவுன்சிலர் ஒருவர் நகராட்சிக் கூட்டத்தில் எகிறியடித்தும்கூட நடவடிக்கை இல்லையாம். வருவாய் அதிகாரியின் பாக்கெட்டுக்கு வரும் வருவாய்ப் பணத்தில் பாதி, நகராட்சியின் பெரிய அதிகாரிக்கும் போவதுதான் காரணமாம்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

கோயில் சொத்து... அனுபவிப்பவனுக்கு ஆசி!

திருவாரூர் மாவட்டத்தின் பிரபல கோயில் அதிகாரி, கோயிலுக்குச் சொந்தமான இடங்களைக் கைமாற்றிவிட்டு, ஆதாயம் பார்ப்பதில் ‘செயல்’வீரர் என்கிறார்கள். சமீபத்தில் அனுபவ பாத்தியம் அடிப்படையில் பயன்படுத்திவந்த கோயில் நிலத்தைச் சிலர் முறைகேடாகக் கைமாற்றிவிட்டதாக மேற்படி அதிகாரிக்குப் புகார் வந்திருக்கிறது. நடவடிக்கை எடுக்கவேண்டிய அவரோ, ‘எல்லாம் நான் பார்த்துக்குறேன்’ என்று சொல்லி, அங்கு கட்டடம் கட்டவும் வாய்மொழியாக ஒப்புதல் கொடுத்துவிட்டாராம். இந்த விவகாரத்தில் கணிசமான ஆதாயம் அதிகாரிக்குக் கைமாறியிருக்கிறது என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism