Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸ் பாய், ஓவியங்கள் - சுதிர்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸ் பாய், ஓவியங்கள் - சுதிர்

Published:Updated:
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘கரன்சியைக் கொடு, சர்டிஃபிகேட்டை எடு!’

புதிதாகப் பிறந்த அருவி மாவட்டத்தில், பெருமாள் பெயர்கொண்ட தாலுகா அலுவலகத்தில் பணமின்றி அணுவும் அசையாதாம். வருமானம், வாரிசு மற்றும் சாதிச் சான்றிதழைப் பெற விரும்புவோர் ‘கரன்சி ஆவணங்களை இணைத்திருப்பது கட்டாயம்’ என்பதில் கறாராக இருக்கிறாராம் அதிகாரி. தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், தன் தாயின் இறப்புச் சான்றிதழுக்காக நடையாய் நடந்தும் சான்றிதழ் கிடைத்தபாடில்லை. முயற்சியில் சற்றும் மனம் தளராதவர், கடைசியாக அதிகாரியைப் போய் பார்த்திருக்கிறார். அவரோ ‘ஒரு ரோஸ் தாளைக் கொடுத்துவிட்டு, டெத் சர்டிஃபிகேட்டை எடுத்துட்டுப் போங்க’ என்று கூலாகச் சொல்லியிருக்கிறார். ஷாக்காகிப்போன ஆசிரியர், லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்துவிடவே, கையும் கரன்சியுமாக மாட்டிக்கொண்டார் அதிகாரி. அலுவலகத்தில், அதிகாரியோடு சேர்ந்து லஞ்சம் வாங்கிக்குவித்த பணியாளர்களும் இப்போது அச்சத்தில் கிடுகிடுத்துக் கிடக்கிறார்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

காரியக்கார, பாடும் அதிகாரி!

கடுமையான வேலைப்பளுவுக்கு மத்தியில் சற்றே பாடல், ஓய்வு, அரட்டை என்று இளைப்பாறுவது எல்லோருக்குமே இயல்பானதுதான். ஆனால், மேற்கு மண்டல வனத்துறையில் வரலாற்றுப் பெயரைக்கொண்ட அதிகாரி மிகவும் விசித்திரமானவர். டூட்டி நேரத்திலும்கூட பாடுவதையே முழு நேரப் பணியாகச் செய்துவருபவர். தனது பாடல்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டுப் புகழ் தேடுவதிலும் குறியாக இருக்கிறாராம். ‘பாஸ் கொஞ்சமாச்சும் வேலை செய்யலாமே’ என்று உடன் பணி செய்பவர்கள் யாரேனும் சொன்னால், ‘நான், எங்கே... எப்பிடி இருக்க வேண்டியவன்...’ என்று கவுண்டமணி ரேஞ்சில் ஃபீல் செய்பவர், அதற்கும் ஒரு பாடலைப் பாடிக் காட்டுகிறாராம். இதனாலேயே ‘ஆளைவிடுங்க சாமி’ என்று எல்லோரும் தெறித்து ஓடுகிறார்கள். விஷயம் இதோடு முடியவில்லை... சோதனைச் சாவடி பணி என்றால், மனிதர் இன்னும் குஷியாகி விடுகிறாராம். பாட்டுப் பாடிக்கொண்டே மிகவும் வெளிப்படையாக, கேஷுவலாக கட்டிங் வசூலித்துவிடுகிறாராம் இந்தக் காரியக்கார, பாடும் அதிகாரி!

அழுக்குத் துணிகளைத் துவைக்க அரசு ஊழியர்கள்!

காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், ராகத்தின் பெயரைக்கொண்ட பெண் அதிகாரி ஒருவர் வெள்ளுடை ஊழியர் பிரிவில் பணியில் இருக்கிறார். இவரது வீட்டில் சமையல் வேலையில் ஆரம்பித்து அழுக்குத் துணிகளைத் துவைப்பது வரை அத்தனை பணிகளுக்கும் அரசு ஊழியர்களையே பயன்படுத்துகிறாராம். இப்படி வீட்டு வேலைகளைச் செய்துவரும் ஊழியர்கள் பணிக்குத் தாமதமாக வரலாம் அல்லது வராமலும் இருக்கலாம். சம்பந்தப்பட்டவர்களுக்காக வருகைப் பதிவேட்டில் அதிகாரியே கையொப்பம் போட்டும் காப்பாற்றிவிடுகிறாராம். வேண்டப்பட்டவர்களுக்கு இப்படியெல்லாம் சலுகை தரும் இவர், வேண்டாதவர்களை வாட்டியெடுப்பதிலும் வல்லவராம். நலவழித்துறையைத் தன்வசம் வைத்திருக்கும் புதுவை முதல்வருக்கு, அம்மணியின் ஆட்டத்தையெல்லாம் புகாராகத் தட்டிவிட்டு, நடவடிக்கைக்காகக் காத்திருக்கின்றனர்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘எப்ப சார் விடியல் கிடைக்கும்?’ - கதறும் மருத்துவமனை ஊழியர்கள்

வறண்ட கடலோர மாவட்டத்தின், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முக்கியப் பொறுப்பிலுள்ள ஆளும் பெயர்கொண்ட மருத்துவர்மீது எக்கச்சக்கப் புகார்கள். கொரோனா காலகட்டத்தில் மருத்துவமனைக்குப் புதிதாகக் கொடுக்கப்பட்ட வென்டிலேட்டர் கருவி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களைத் தன்னுடைய சொந்த கிளினிக்குக்கு எடுத்துச் சென்றுவிட்டாராம். இதைக் கண்டுபிடித்த செவிலியர் மற்றும் ஊழியர்கள் மேலிடத்துக்குப் புகார் தட்ட, கடுப்பாகிப்போன மருத்துவர் தனது அதிகார பலத்தால் அவர்களை அடக்கி ஒடுக்கினாராம். ஆனாலும், அசராத ஊழியர்கள், மருத்துவர் செய்த தில்லு முல்லுகளை 40 பக்கப் புகாராக மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்துக்கு அனுப்பிவைக்க, விசாரணையில் வசமாகச் சிக்கினார் மருத்துவர். ஆனாலும் என்ன... தன்னுடைய பணபலம் மற்றும் அரசியல் செல்வாக்கால் விஷயத்தை அப்படியே மூடிமறைத்தவர், புகார் அளித்த செவிலியர், ஊழியர்களை விதம்விதமாக டார்ச்சர் செய்துவருகிறாராம். ‘இவரிடமிருந்து நமக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும்’ எனப் புலம்பிக் கிடக்கின்றனர் ஊழியர்கள்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘ப்ளான்’ பண்ணி வசூலிக்கும் அதிகாரி!

பெரம்பலூர் மாவட்டத்தில், பிரபலமான நகைக்கடையின் பெயர்கொண்ட அதிகாரி ஒருவர் ‘பிளான்’ பண்ணி வசூலிக்கிறாராம். மாவட்ட உயரதிகாரியின் பெயரைச் சொல்லி இவர் நடத்தும் வசூல்வேட்டையைப் பார்த்து, ஆளுங்கட்சியினரே வாய் பிளக்கிறார்கள். ‘ஒப்பந்தம் எடுக்க வேண்டும்’ என நினைப்பவர்கள் அந்த அதிகாரியைத் தொடர்புகொண்டால் போதும். அவரே நெளிவு, சுளிவுகளைச் சொல்லிக் கொடுப்பதோடு ‘ஒவ்வொரு அதிகாரிக்கும் எவ்வளவு கொடுக்க வேண்டும்’ என்பதுவரை கச்சிதமான திட்டத்துடன் தெளிவாகப் பட்டியல் போட்டுச் சொல்லிவிடுவாராம். மாவட்ட உயரதிகாரியும், ஸ்வீட் பாக்ஸ் கொடுக்கத் தயங்கும் கான்ட்ராக்டர்களின் காசோலைகளை ‘பாஸ்’ ஆக விடாமல், முட்டுக்கட்டைப் போடுவதால், விழி பிதுங்குகிறார்கள் ஒப்பந்ததாரர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism