Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

- ஆபீஸ் பாய்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

ஊராட்சித் தலைவர்களிடம் கப்பம்! - ஆட்டிப்படைக்கும் யூனியன் அதிகாரி!

குமரி மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியம் ஒன்றின் ‘புளூ’ கலர் அதிகாரி, தனது கட்டுப்பாட்டிலுள்ள ஊராட்சித் தலைவர்களை ஆட்டிப்படைக்கிறார். ஒவ்வொரு ஊராட்சித் தலைவரும் மாதம் 5,000 ரூபாய் கப்பம் கட்ட வேண்டும் என்று அவர் போடும் கண்டிஷனைப் பார்த்து ஊராட்சித் தலைவர்கள் விழிபிதுங்கிவிடுகிறார்கள். கொடுக்கவில்லையென்றால், ஊராட்சி தொடர்பாகச் செல்லும் எந்த ஃபைலும் மூவ் ஆகாது. ‘‘ஆபீஸ்ல டெம்ப்ரவரியா டிரைவர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் போட்டிருக்கோம். அவங்களுக்குச் சம்பளம் கொடுக்கணும். எங்களுக்கும் ஆயிரம் செலவு இருக்குமில்லியா?’’ என்று பணம் வசூலிப்பதை நியாயப்படுத்தவும் செய்கிறாராம். இது குறித்து ஊராட்சித் தலைவர் ஒருவர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. ‘‘மக்கள் பிரதிநிதிகளையே கப்பம் கட்டவைக்கும் கவர்மென்ட் அதிகாரிக்கு யாராவது கடிவாளம் போட மாட்டார்களா சிதம்பரேஸ்வரா...’’ என்று புலம்புகிறார்கள் அவரால் பாதிக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்கள்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

கழற்றிவீசப்பட்ட சிசிடிவி! - காரணம் சொன்ன அதிகாரி...

பனியன் மாவட்டத்தில், அமராவதி பாயும் ஊரில் பணியாற்றும் தமிழ்க்கடவுள் பெயர்கொண்ட உயரதிகாரி, சில மாதங்களுக்கு முன்புதான் இங்கே பதவியேற்றார். முதல் வேலையாகத் தனது அறையிலிருந்த சிசிடிவி கேமராவைக் கழற்றி வீசச் சொன்னவர், ‘‘டீலிங், டிரான்சாக்‌ஷன், கலெக்‌ஷன்னு நாளைக்கு ஏதாச்சும் கேமராவுல பதிவாகிடுச்சின்னா சிக்கலாகிடுமே...’’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் அதற்கு வெளிப்படையாகக் காரணமும் சொன்னாராம். சுற்றுவட்டாரத்தில் கிராவல் மண் திருட்டு, கல் குவாரி என்று சட்டவிரோதமான செயல்கள் நடப்பது தெரியவந்தால், உடனே சம்பந்தப்பட்ட இடத்துக்கு ஸ்பாட் விசிட் அடிப்பவர், அதன் பிறகு எந்த நடவடிக்கையுமே எடுப்பதில்லையாம். ‘விசிட் எதற்கு’ என்று புரிந்துகொள்பவர்கள், அவரை முறைப்படி கவனித்துவிடுவதால்தான் அந்த அமைதியாம். ‘‘எது செஞ்சாலும் என்னை கவனிச்சுட்டுதான் செய்யணும்’’ என்பதே இவரது பாணி என்கிறார்கள் வருவாய்த்துறை வட்டாரத்தில்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

‘‘விசுவாசத்துக்கு அளவே இல்லையா?!’’ - மிரளும் ஆளுங்கட்சியினர்...

அரசு அதிகாரிகள் ஆளுங்கட்சியினருக்கு விசுவாசமாக இருப்பது சகஜமாகிவிட்டது. அப்படி மேற்குப் பக்கம் மாநகராட்சி ஒன்றில் மக்களுடன் தொடர்பிலுள்ள அதிகாரி ஒருவர், தனது விசுவாசத்தை வெளிப்படையாகவே காட்டுவதைப் பார்த்து ஆளுங்கட்சியினரே சற்று மிரண்டுதான் போகிறார்கள். முன்பு மொழிக்கான மாநாடு நடந்தபோது அந்த ஊரில் பணியாற்றியவரை, அதே சென்டிமென்ட்டில் தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் அழைத்து வந்து பணியமர்த்தியிருக்கிறார்கள். அவரது விசுவாசத்துக்கு ஓர் உதாரணம்... அந்த மாநாட்டின்போது கருணாநிதி முதல் துர்கா வரை குடும்ப உறுப்பினர்களுடன், அவர் எடுத்துக்கொண்ட படங்களைத்தான் தனது அதிகாரபூர்வ வாட்ஸ்அப் எண்ணில் டி.பி-யாக வைத்துள்ளார். இதனால், அலுவல் நிமித்தமாகச் செய்தி அனுப்புபவர்கள், ஏதோ தி.மு.க பிரமுகருக்கு மாற்றி அனுப்பிவிட்டோமோ என்று ஜெர்க் ஆகிறார்கள்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

கமிஷன்... கலெக்‌ஷன்... கரப்ஷன்! - இரண்டே மாதங்களில் கரைந்துபோன சாலை!

டெல்டாவில் சமீபத்தில் பிரிந்த மாவட்டத்தின் ஊரக வளர்ச்சித்துறையில், முருகக்கடவுள் பெயர்கொண்ட பொறியாளர் ஒருவர் பணிபுரிகிறார். எந்த டெண்டராக இருந்தாலும், ‘இது கலெக்டருக்கு... இது திட்ட இயக்குநருக்கு... இது எனக்கு...’ என்று சொல்லி தனித்தனியாக கமிஷன் தொகையைக் கறந்துவிடுகிறாராம். சமீபத்தில், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சுமார் 20 கோடி ரூபாய்க்கான டெண்டர்கள் விடப்பட்டன. அவற்றில், தலா 2.5 கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட இரண்டு சாலைகள், இரண்டே மாதங்களில் குண்டும் குழியுமாகி ஒருகட்டத்தில் கரைந்தேபோயின. இது அப்பகுதி மக்களிடம் கொந்தளிப்பைக் கிளப்பவே, அவர்களைச் சமாதானப்படுத்த, சாலைகள் மீண்டும் போடப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர்களோ, “முன்னைவிட ரெண்டு மடங்கு கமிஷன் அதிகமா கேட்குறாங்க... தரமான சாலைகளை எப்படிப் போடுறதாம்?”என்று புலம்புகிறார்கள்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

‘‘கோர்ட் சொன்னா என்ன?’’ - கல்லாகட்டும் அதிகாரி

கரூர் மாவட்டத்தில் மகளிருக்கான உரிமைகளை கவனிக்கும் துறையில் முக்கியப் பொறுப்பிலிருக்கும் ஆதி கடவுள் பெயரைக்கொண்ட அதிகாரி, தன் கவனத்துக்கு வரும் குடும்பப் பிரச்னைகளை வைத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் ‘டீல்’ பேசவே தனி டீம் வைத்திருக்கிறாராம். அதில், மாதா மாதம் சிலபல லட்சங்கள் ‘இதர’ வருமானமாகக் கொட்டுகிறது. சமீபத்தில், ஒரு பிரச்னையில் மகிளா கோர்ட் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தாமல், குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் வேண்டியதை வாங்கிக்கொண்டு, பாதிக்கப்பட்ட தரப்புக்கு அநீதியை இழைத்துவிட்டாராம். ‘‘கோர்ட் உத்தரவே இவர்கிட்ட செல்லுபடியாகலை. நாமெல்லாம் எம்மாத்திரம்?’’ என்று புலம்பும் பாதிக்கப்பட்டவர்கள், அந்தப் பெண் அதிகாரி குறித்து உயரதிகாரிகளுக்குப் புகார்களை அனுப்பிவிட்டு, ‘நல்லது நடக்கும்’ என்று காத்திருக்கிறார்கள்.