Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

- ஆபீஸ் பாய்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

Published:Updated:
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

சாம்பிராணி போடு... சாருக்கு சமைச்சுப் போடு!

தகவல்களைத் தரும் அந்த அலுவலகம், காலையில் நுழைந்தவுடன் எதிரில் இருப்பவர்கள் தெரியாத அளவுக்குப் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறதாம். அங்கிருக்கும் உயரதிகாரியின் அதீத பக்தி சென்டிமென்ட்டுக்காக, அவர் உள்ளே நுழையும்போதே ஒரு பணியாளர் சாம்பிராணி கரண்டியைத் தூக்கிக்கொண்டு அவர் முன்பு செல்ல வேண்டுமாம். அலுவலகத்திலேயே கேன்டீன் இருந்தாலும், அங்கு தயாராகும் உணவு அதிகாரிக்கு ஆகாதாம். அதனால், காலை 11 மணிக்கு பலகாரத்துடன் இஞ்சி டீ, மதியம் ஃபுல் மீல்ஸ், மாலை மீண்டும் பலகாரத்துடன் இஞ்சி டீ என்று அதிகாரிக்குப் பிடித்த உணவைத் தாங்களே கேன்டீனில் சுடச்சுட சமைத்தெடுத்து விருந்தளிப்பதற்கு அலுவலகப் பணியாளர்களிடையே பலத்த போட்டி நிலவுகிறதாம்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஜூட் விடும் ஆபீஸர்... சூடான அதிகாரி!

வெயில் மாவட்டத்தில், மக்களுக்கு நியூஸ் கொடுத்துவரும் ஆபீஸரைக் கட்டம் கட்டியிருக்கிறார் மாவட்ட ‘தல’ அதிகாரி. காரணம்... அரசு நிகழ்ச்சிகளில், கத்தை கத்தையாக கல்லாகட்டிக்கொண்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் ஜுட் விடுகிறாராம் நியூஸ் ஆபீஸர். இதே அதிகாரி கடந்தகாலத்தில், மலை மாவட்டத்தில் பணிபுரிந்தபோது, தன்னை முன்னாள் சட்ட அமைச்சரின் உறவினர் எனச் சொல்லிக் கொண்டு ஆடாத ஆட்டம் ஆடினாராம். இதில் கடுப்பான அந்த ஊர் அமைச்சர், மேலிடத்தில் சொல்லி வெயில் மாவட்டத்துக்குத் தூக்கியடித்தாராம். ஆனால், இங்கேயும் கல்லாகட்டுவதில் மட்டுமே ஆபீஸர் குறியாக இருப்பதை அறிந்த மாவட்ட ‘தல’ அதிகாரி, ‘தன் கண் முன்னால் வரவே கூடாது’ என எச்சரித்து, அனைத்துப் பொறுப்புகளையும் உதவி அலுவலரிடமே ஒப்படைத்துவிட்டாராம்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

தன்னைத் தானே வளப்படுத்திக்கொள்ளும் அதிகாரி!

வடக்கு மாவட்டத்திலுள்ள பின்தங்கியோரை நலப்படுத்துகிற அதிகாரி, விரைவில் பணி ஓய்வு பெறவிருக்கிறார். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள நினைக்கும் அவர், துறை சார்ந்த புகார்களை விசாரிக்க, தானே விசாரணை அதிகாரியாகக் களமிறங்கி கல்லாகட்டுகிறாராம். மாவட்டம் முழுவதுமுள்ள விடுதிகளில் குற்றம் குறை இருப்பதாக, தனக்கு வேண்டியவர்களைவைத்தே புகார்களைக் கிளப்பிவிட்டு, விசாரணை என்ற பெயரில் வசூல்வேட்டை ஆடிவருகிறாராம். இந்த வேட்டை போதாதென்று, விவசாயிகள் கிணறு வெட்டுவதற்கான அரசு மானியம் வழங்குகிற அனுமதியிலும் லம்ப்பாகத் தட்டுகிறாராம். ‘பின்தங்கியவர்களை நலப்படுத்தவேண்டியவர், இப்படி தன்னைத் தானே வளப்படுத்திக்கொள்கிறாரே’ என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

செட்டப் செய்த அதிகாரி... மோப்பம் பிடித்த ஆட்சியர்!

கடலோரப் பட்டின நகராட்சியில், அவதாரக் கடவுள் பெயர்கொண்ட அதிகாரி, நகராட்சியின் உச்ச அதிகாரியைத் தாண்டிய அதிகாரம் படைத்தவராக வலம்வருகிறாராம். அண்மையில், பழைய சந்தைக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டத் திட்டம் தீட்டப்பட்டது. பர்மா தேக்குகளால் ஆன அந்தப் பழைய கட்டடத்தை இடிக்கும் பணியை, 20 லட்சம் ரூபாய் வரை கொடுத்து ஏலம் எடுக்கப் பலர் தயாராக இருந்தனர். ஆனால் ‘அவதார’ பெயர்கொண்ட அதிகாரியோ, பிரபலமாகாத பத்திரிகை ஒன்றில் பெயருக்கு ஏல விளம்பரம் கொடுத்து, வெறும் நான்கரை லட்ச ரூபாய்க்கு கவுன்சிலர் ஒருவர் ஏலம் எடுத்ததுபோல் செட்டப் செய்துவிட்டாராம். இதன் பின்னணியில், மிகப்பெரிய தொகை அவதார அதிகாரிக்குக் காணிக்கையாக வழங்கப்பட்டிருக்கிறதாம். இந்த விஷயத்தை மோப்பம் பிடித்துவிட்ட ஆட்சியர், அவதார அதிகாரியைக் கூப்பிட்டுக் கடுமையாக டோஸ் விட்டிருக்கிறார். ஆனாலும் என்ன... ஏதேதோ சொல்லி சமாளித்துவிட்ட அவதாரம், தனது ஆட்டத்தைத் தங்கு தடையில்லாமல் தொடர்கிறாராம்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘6 மணி அதிகாரி வருகிறார்... பராக்!’

மாங்கனி மாவட்டத்தில், பிரபல நடிகையின் பெயரைக்கொண்டவர் சுத்தம் பேணும் அதிகாரியாக இருக்கிறார். இவரை ‘6 மணி அதிகாரி’ என்ற செல்லப்பெயரில்தான் அழைக்கிறார்கள். காரணம், வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டுமே அலுவலகத்துக்கு வருவது, அதுவும் மாலை 6 மணிக்கு மேல் மட்டுமே வருவதால் இந்தப் பெயராம். அரசுப் பணிக்காக வழங்கப்பட்டிருக்கும் வாகனத்தை, தன் மகனைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லவும், சகோதரியை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லவும் பயன்படுத்திவருகிறாராம். இது போதாதென்று, அதிகாரியின் மருத்துவக் கணவரும் தன்னுடைய வெளியூர்ப் பயணங்களுக்கு இந்த காரையே பயன்படுத்துகிறாராம். ஓட்டுநரும் அரசுப் பணியாளரேதான். வாகனத்தில் தொடங்கி வீட்டு வேலைகளுக்கும், கணவரது கிளினிக் வேலைகளுக்கும் அரசு அலுவலர்களையே பயன்படுத்திவருகிறாராம் அம்மணி!