Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸ் பாய், ஓவியங்கள்: சுதிர்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸ் பாய், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘‘நுங்கு தின்னது ஒருத்தர்... வேடிக்கை பார்த்தவனுக்கு தண்டனையா?’’

மத்திய மாவட்டத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மூன்று மாடிக் கட்டடத்தை, தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு ஏழு லட்ச ரூபாய்க்கு வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். ஆனால், அரசு விதிகளின்படி அந்தக் கட்டடத்துக்கு 15 லட்சம் ரூபாய் வாடகை நிர்ணயித்திருக்க வேண்டுமாம். கடந்த ஆட்சியில், ‘இனிப்பான’ மாஜியின் கண்ணசைவில், அப்போதைய மாநகராட்சி அதிகாரி டெண்டரை ஓ.கே செய்தாராம். இருவருக்குமே நல்ல கவனிப்பாம். இந்தக் குட்டு சமீபத்தில் உடைபட, அந்த அதிகாரிமீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போது மாவட்டத்தில் பணியாற்றிவரும் அதிகாரியோ, ‘‘நுங்கு தின்னது ஒருத்தர்... வேடிக்கை பார்த்தவனுக்கு தண்டனையா?’’ என்று அப்பாவியாகக் கேட்கிறாராம்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

உயரதிகாரி டம்மி பீஸாயிருந்தா... உதவியாளர் வைத்ததே சட்டம்!

கடலோர மாவட்ட கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் உயரதிகாரிக்கு அலுவல் பணிகளைப் பற்றி சரிவரத் தெரியவில்லையாம். நேர்முக உதவியாளரின் ஆலோசனையைப் பெறாமல், அவர் எந்த ஃபைலிலும் கையெழுத்து போடுவதில்லை என்கிறார்கள். உயரதிகாரிக்கே ‘அட்வைஸ்’ செய்கிற அளவுக்கு பவர் பெற்றுவிட்டதால், இங்கு உதவியாளர் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறதாம். முக்கியமான மனுக்களை ‘டீல்’ பேசி முடித்த பின்னரே, உயரதிகாரியின் மேஜைக்கு அனுப்புகிறாராம் உதவியாளர். ‘டீல் செட்டில்மென்ட்’டில் தாமதம் காட்டினால், மனுவைக் கிடப்பில் போட்டு, அலைச்சலில் விட்டுவிடுகிறாராம். ‘‘உயரதிகாரி, டம்மி பீஸாயிருப்பதால், அவரது பெயரைச் சொல்லிச் சொல்லியே உதவியாளர் வளமாகிவிட்டார்...’’ என்று புலம்புகிறார்கள் சக ஊழியர்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

மலைக்கோயில் வாசலில்... வசூல் களைகட்டுதே?

மேற்கே உள்ள முக்கிய மாவட்டத்திலிருக்கும் மலைக் கோயில் அது. அங்கு சில மாதங்களுக்கு முன்புதான் இந்து சமய அறநிலையத்துறை பெண் அதிகாரி ஒருவர் பதவியேற்றார். அதற்குள் உடன் பணியாற்றும் சக அலுவலர்களே அவருக்கு ‘வசூல் ராணி’ என்று பெயர் சூட்டிவிட்டனர். கோயிலைச் சுற்றியிருக்கும் கடைகளில் தொடங்கி, தனியார் அன்னதானம் வரையில் அனைத்து விஷயங்களிலும் வசூல்வேட்டை ஆடிவருகிறாராம் அம்மணி. `முன்பு இருந்த அதிகாரிகளாவது, எப்பவாச்சும்தான் கட்டிங் கேட்பார்கள்... அம்மணியோ அடிக்கடி தொல்லைப்படுத்துகிறாரே’ என்று புலம்புகிறார்கள் பக்தர்களும் கடைக்காரர்களும்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘போலீஸில் புகார் கொடுக்க மாட்டேன்...’ எழுதி வாங்கிய பெண் அதிகாரி!

குளுகுளு மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நர்ஸிங் படிக்கும் மாணவிக்கு ஆண் செவிலியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். பயந்துபோன மாணவி, மருத்துவக் கல்லூரியின் உயர் பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரியிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அந்தப் பெண் அதிகாரி விசாகா கமிட்டியைக் கூட்டி, ஆண் செவிலியரை சஸ்பெண்ட் செய்திருக்கிறார். இதையடுத்து எல்லோரும் பெண் அதிகாரியைப் பாராட்டித் தள்ளினார்கள். ‘போலீஸில் புகார் கொடுக்க மாட்டேன்’ என்று விசாகா கமிட்டி முன்னிலையிலேயே மாணவியிடம் கடிதம் எழுதி வாங்கியிருக்கும் அதிகாரியின் கமுக்கமான செயல் இப்போதுதான் மெல்லக் கசிய ஆரம்பித்திருக்கிறது. சம்பந்தப்பட்ட மாணவிக்கு 17 வயதுதான் என்றும் சொல்லப்படுகிறது. “போக்சோ கேஸை மூடி மறைத்த குற்றத்துக்கு ஒரு பெண் அதிகாரியே உடந்தையா?” என்று கொந்தளிக்கிறார்கள் நர்ஸிங் மற்றும் மருத்துவ மாணவிகள்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

“அரசு குடுக்குறதெல்லாம் வேஸ்ட்... நான் செஞ்சு தாரேன் பெஸ்ட்!’’

‘அவார்டு’ மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் உள்ள ‘சூரிய’ அலுவலர், கடமையை மறந்து காசே குறியாக இருக்கிறாராம். கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகள் இரண்டு பேர், தங்களுக்கு அரசு உதவியின்பேரில் இலவசமாக செயற்கைக் கால் கேட்டு அவரை அணுகியுள்ளனர். அவரோ, “அரசு குடுக்குறதெல்லாம் வேஸ்ட்... நான் செஞ்சு தாரேன் பெஸ்ட்... ” என ரைமிங்கில் அடித்துவிட்டிருக்கிறார். மாற்றுத்திறனாளிகளிடம் கணிசமான தொகையைக் கறந்துவிட்டு, இரண்டு பேருக்கும் ஒப்புக்குச் சப்பாக ஏதோவொரு செயற்கைக் காலை வாங்கிக் கொடுத்திருக்கிறார் அதிகாரி. உடலோடு கொஞ்சமும் பொருந்தாத அந்த செயற்கைக் கால்களால், ஒரு பிரயோஜனமும் இல்லாததால் மிகுந்த மனவேதனையுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறார்கள் மாற்றுத்திறனாளிகள்.