Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

Published:Updated:
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘கல்யாண சமையல் சாதம்... காய்கறிகளும் பிரமாதம்!’

கிராமப்புறத்தை முன்னேற்றும் துறையிலுள்ள அந்த ஸ்பெஷல் அதிகாரி, வெளிப்படையாகவே விசில் கட்சித் தலைவரிடம் நெருக்கம் காட்டிவருவதால், துறைரீதியாக டம்மியாக்கப்பட்டார். ஆனாலும் அசராத அதிகாரி, கிராமத்தை முன்னேற்றுகிறாரோ இல்லையோ... தன் குடும்ப முன்னேற்றத்தில் மட்டும் குறியாக இருந்துவருகிறாராம். தன் இல்லத் திருமண விழாவுக்கு முக்கியஸ்தர்களை அழைப்பதற்காக, கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு அழைப்பிதழ் கொடுத்துவருகிறார். அதற்காக, அண்மையில் விவசாய மாவட்டத்துக்குச் சென்று அங்குள்ள சுற்றுலா மாளிகையில் முகாமிட்டிருக்கிறார். அப்போது சாப்பாடு உள்ளிட்ட அனைத்துக்கும் ஆடம்பரமாகச் செலவு செய்தவர், அதைத் துறை அலுவலர்கள் தலையில் கட்டிவிட்டாராம். ‘கல்யாண சாப்பாடு போடுவார்னு பார்த்தா, இப்படி அவரு சாப்பாட்டுக்கே நம்மளை பில் கொடுக்க வெச்சுட்டாரே...’ என ஊழியர்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

சாயம் வெளுத்துப்போன அதிகாரி!

நெடுஞ்சாலைத்துறையின் முக்கியப் பொறுப்பில் இருந்துவரும் மழலைப் பெயர்கொண்ட அந்த அதிகாரி, மலை மாவட்டத்திலேயே பல ஆண்டுகளாக நங்கூரமிட்டிருக்கிறார். வேலை செய்யாமலேயே பில் போட்டு அமுக்கும் வித்தையில் பழம் தின்று கொட்டை போட்டவராம். இந்த முறை மழை பாதிப்பு அதிகம் இருக்கும் என எச்சரிக்கை வந்தும்கூட சாலையோரங்களில் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்றாமல் அலட்சியம் காட்டியவர், சாலையோர மழைநீர்க் கால்வாய்களைச் சீரமைத்ததாக நிதியை மட்டும் தன் பக்கம் திருப்பிக்கொண்டாராம். அண்மையில் பெய்த பெருமழையில், மரங்கள் சாலைகளில் விழுந்து போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டதோடு பராமரிப்பில்லாத மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு மண்சரிவும் ஏற்பட்டது. இப்படி அதிகாரியின் சாயத்தை மழை வெளுக்கச் செய்துவிட்டதால், ‘செய்யாத வேலைக்குக் கோடிகளைச் சுருட்டிய அதிகாரியின் ஊழலை‌’ முதல்வருக்கு அனுப்ப உளவுத்துறை தயாராகிவருகிறதாம்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘அட்ஜஸ்ட்’ செய்யச் சொல்லும் அதிகாரி!

திருப்பத்தூர் மாவட்டத்தின் ‘பாடும்’ நகராட்சியிலுள்ள அதிகாரி, பாலியல் புகாரில் சிக்கியிருக்கிறார். இது குறித்து, டெங்கு தடுப்புப் பெண் பணியாளர் ஒருவர், ‘வீட்டுக்கு அழைத்து அட்ஜஸ்ட் செய்யச் சொல்கிறார்’ என்று காவல் நிலையம் தொடங்கி முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை புகாரளித்திருக்கிறார். அண்மையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அமர்ந்து தர்ணா செய்தார் அந்தப் பெண். இதையடுத்து, மாவட்டச் சமூகநலத்துறையும் இந்தப் பிரச்னை குறித்து விசாரணை நடத்திவருகிறது. நகராட்சி அதிகாரி ஏற்கெனவே பணிபுரிந்த ‘பட்டான’ நகராட்சியிலும் இதேபோல ஒரு பெண் விவகாரத்தில் சிக்கியதால்தான் பணி இடமாற்றம் செய்யப்பட்டார் என்கின்றனர்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

தினமும் என்னை ‘கவனி’!

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில், ஆனந்தமான ஒருவர் கடந்த சில வருடங்களாக சர்வேயராகப் பணிபுரிகிறார். அவரது வசூல் வேட்டை குறித்தும், அலட்சியம் குறித்தும் புகார் சொல்லிக் கொந்தளிக்கிறார்கள் அப்பகுதி மக்கள். வீட்டுமனை, நிலம் இவற்றில் ஏற்படும் எல்லைப் பிரச்னைகளால் அண்டை வீட்டாருடன் பகைமை ஏற்பட்டு வெட்டு, குத்து வரை போகிறது. இதற்கு முறைப்படியான தீர்வு காணத்தான் மக்கள் அரசுக்குச் செலுத்தவேண்டிய கட்டணத்தைச் செலுத்திவிட்டு, சர்வேயர் வந்து அளந்து கொடுப்பதற்காகக் காத்திருக்கின்றனர். ஆனால், சர்வேயரோ அவ்வளவு சீக்கிரத்தில் வர மாட்டாராம். இந்த அலுவலகத்தில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அளவைக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் காத்திருப்பில் உள்ளனவாம். ஆனால், சர்வேயரை நன்கு ‘கவனி’த்தால், உடனுக்குடன் அளந்து தரப்படுகிறதாம். ‘இதற்குத் தீர்வு காண்பது யார்?’ என்பதுதான் அப்பகுதி மக்களின் கேள்வியாக இருக்கிறது.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆட்டம்போடும் சார்பதிவாளர்... பரிதவிக்கும் சக அதிகாரிகள்!

‘பட்டாசு’ மாவட்டத்தில் பணிபுரியும் ‘தில்லான’ பெயர்கொண்ட சார்பதிவாளரின் ஆட்டம் தாங்கவில்லையாம். பதிவுக்காகக் கொண்டுவரப்படும் வில்லங்கச் சான்று, பட்டா போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பதில் கவனம் செலுத்தாமல், ‘முக்கியமான பேப்பர்’ இருக்கிறதா என்று மட்டும்தான் பார்க்கிறாராம். இப்படிப் பதிவுத்துறை நடைமுறையைப் பின்பற்றாமல், பத்திரப்பதிவு செய்து கொடுத்தே பல கோடிக்கு அதிபதியாகிவிட்டாராம். எப்போதும் மது போதையிலேயே இருக்கும் அவர், ‘துறை அமைச்சருக்கு ரொம்ப நெருக்கம்’ என்று சொல்லிச் சொல்லியே மேலதிகாரிகளின் நடவடிக்கைகளிலிருந்து தப்பிவிடுகிறாராம். ‘அப்படி என்ன நெருக்கமாயிருக்கும்?’ என்று தலையைப் பிய்த்துக்கொள்கிறார்கள் உயரதிகாரிகள்!