அரசியல்
அலசல்
Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘நீங்க கல்லை நடுங்க... நான் பார்த்துக்குறேன்!’

மூன்றெழுத்து மாவட்டத்தில் காவிரிக் கரையோர தாலுகாவில் பணியாற்றுகிறார் கீர்த்தி இழந்த அதிகாரி. ஆதிதிராவிடர் பள்ளிக்கென ஒதுக்கப்பட்ட நிலத்தை, தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து, கம்பிவேலி அமைத்து, ரியல் எஸ்டேட் செய்ய முயல்கிறாராம். அதற்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததே மேற்படி கீர்த்தியற்ற அதிகாரிதான் என்கிறார்கள். ‘நீங்க கல்லை நடுங்க... நான் பார்த்துக்குறேன்’ என்று தெம்பூட்டியதற்காக, ‘வளமாக’ கவனிக்கப்பட்டிருக்கிறாராம் அந்த அதிகாரி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘இனிமே எல்லாம் இப்படித்தான்...’ - பட்டியல் போட்ட அதிகாரி...

மேற்கேயுள்ள அந்த மாநகராட்சியில் அதிகாரி பதவியேற்று சில மாதங்கள்தான் ஆகின்றன. இளம் அதிகாரி, அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்த்தார்கள் எல்லோரும். ஆனால், அவரோ ‘இனிப்பே’ குறியாக இருக்கிறாராம். மேலிடத்தில் பயங்கர செல்வாக்குடன் இருப்பதால், உள்ளூரில் அவர் யாரையும் கண்டுகொள்வதில்லையாம். ஒவ்வொரு பணிக்கும் புதிய டாரிஃப் பட்டியலை நிர்ணயித்து, ‘இனிமே எல்லாம் இப்படித்தான்’ என்று ஓப்பனாகவே சொல்லிவிட்டாராம். மேலிடச் செல்வாக்கு பலமாக இருப்பதால், இதை யாரிடம் சொல்லி அழுவது எனத் தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

உண்டியல் ஏந்திய அதிகாரி... வழக்கு போட்டது போலீஸ்!

‘அவார்டு’ மாவட்டத்தில் நாய்களுக்குப் பெயர்போன தாலுகாவிலுள்ள சிற்றூரில், அம்மன் கோயில் கோபுரப் புனரமைப்புப் பணி நடக்கிறது. அதற்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை நிர்வாகக்குழுவினர் வெட்டியிருக்கிறார்கள். அப்போது அலுவல் வேலையாக அந்த ஊருக்கு வந்த பெண் அதிகாரி, தன்னுடன் வந்தவரை அனுப்பி கோயிலில் என்னவென்று பாருங்கள் என்று கூறியிருக்கிறார். செருப்பைக்கூடக் கழற்றாமல் உள்ளே நுழைந்த அவர், பணிகளைத் தனது செல்போனில் படம்பிடித்திருக்கிறார். ‘விழா நல்லபடியாக நடக்க வேண்டுமெனில், சில ஸ்வீட்டுகளை எங்களுக்குக் காணிக்கையாகத் தர வேண்டும்’ என்று தலையைச் சொறிந்தாராம் அவர். கொதிப்படைந்த ஊர் மக்கள், அதிகாரிக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள். கடைசியாக வந்த காவல்துறை, அந்த அதிகாரி மீதும், உடன் வந்த நபரின் மீதும் வழக்கு பதிவுசெய்திருக்கிறது!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

மரத்துக்கும் காவல்... மரம் வெட்டிகளுக்கும் தோழன்!

மாங்கனி மாவட்டத்தில் காடுகளை கவனிக்கும் அதிகாரியே, மரம் வெட்டும் கும்பலுக்கும் தோழனாக இருக்கிறாராம். தன்னுடைய கட்டுப்பாட்டிலிருக்கும் காடுகளிலிருந்து மரங்களை வெட்டிச் செல்வதற்குத் தனியார் நிறுவனங்களுக்குத் தாராளம் காட்டுகிறார் இவர். வெட்டப்பட்ட மரங்களை ஏற்றிச்செல்ல லாரி ஒன்றுக்கு அரை லட்டு வரை வாங்குவதாகவும் சொல்கிறார்கள். தனக்குக் கீழ் பணிபுரியும் அலுவலர்கள் யாரேனும் கைநீட்டுவது தெரியவந்தால் அவர்களைக் கடுமையாக தண்டித்துவிடுவாராம் அதிகாரி. என்ன தண்டனை என்கிறீர்களா... ‘மாதா மாதம் எனக்கு இத்தனை லட்டுகள் தர வேண்டும்’ என்று டார்கெட் ஃபிக்ஸ் பண்ணியே டார்ச்சர் செய்துவிடுவாராம். அமைச்சருக்கு நெருக்கமானவர் என்று சொல்லிக்கொள்வதால் அவரைப் பற்றிப் புகார் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் துறை அலுவலர்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஜனாதிபதி பெயரில் மோசடி... பில் போட்ட ‘வாகன’ அதிகாரி!

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜில் மாவட்டத்துக்கு வந்திருந்தார். அப்போது கான்வாய்க்குத் தேவை என்று உள்ளூரைச் சேர்ந்த டிராவல்ஸ் ஓனர்கள் பலரிடமிருந்து 40 ஒயிட் இன்னோவா கார்களைக் கட்டாயப்படுத்தி வாடகைக்கு வாங்கிக் கொடுத்தாராம் வாகன அதிகாரி. ஐந்து நாள் பயன்பாட்டுக்கு, ஒரு காருக்கு 30 ஆயிரம் ரூபாய் வாடகை தருவதாகச் சொல்லி வாங்கியவர், ஓராண்டாகியும் இன்னும் கார் ஓனர்களுக்குப் பணம் தரவில்லையாம். ஏற்கெனவே பில் போட்டு, பணத்தை ஏப்பம்விட்ட சேதியறிந்து, அந்த அதிகாரியிடம் போய் வாடகையைக் கேட்டால், ‘பர்மிட்டை கேன்சல் செய்துவிடுவேன்’ என்று மிரட்டுகிறாராம்!