அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

வாகன அதிகாரியின் கீறல் டெக்னிக்!

கோட்டை மாவட்டத்தில் வாகன அதிகாரியாக இருப்பவர், காரில் சிறு கீறல் என்றாலும் சான்றிதழ் கொடுக்காமல் திருப்பி அனுப்பிவிடுவாராம். `அடடே, நல்லவராக இருக்கிறாரே...’ என்று ஆச்சர்யப்பட்டு விடாதீர்கள். ‘எஃப்.சி-க்கு இவ்வளவு கொடுக்கணுமா...’ என்று எதிர்க் கேள்வி கேட்கும் வாகன ஓட்டிகளின் வாகனங்களில், உதவியாளர்களை வைத்து காரில் கீறல் போடவைப்பதே அந்த நல்ல அதிகாரிதானாம். வாடகை வாகனங்களில், பெயின்ட்டில் தொடங்கி ஸ்டிக்கர் வரை எல்லாமும் சரியாக இருந்தாலும், ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி 6,000 ரூபாய் வரையிலும் கறக்காமல் விட மாட்டாராம். கனரக வாகனங்களுக்கு இந்தத் தொகை இன்னும் கூடுகிறது. ‘ஏற்கெனவே பல ஆயிரம் ரூபாயை எஃப்.சி-க்குச் செலவு செய்துவிட்டுப் போனால், மேலும் சான்றிதழுக்குப் பெரிய தொகை கொடுக்க வேண்டியிருக்கிறதே...’ என்று புலம்புகிறார்கள் அந்தப் பகுதி வாகன ஓட்டிகள்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘தூக்கி அடிச்சிடுவேன் பார்த்துக்க..!’

ஹனி மாவட்டத்தில், வட இந்திய சீர்திருத்தவாதியின் பெயர்கொண்டவர் மாவட்டப் பேரூராட்சியை இயக்கும் ஒரு பொறுப்பில் இருக்கிறார். புதிய பேருந்து நிலையம் கட்டியபோதே பெரும் தொகையைச் சுருட்டிவிட்டார் என இவர்மீது புகார் எழுந்தது. மாவட்டப் பெரியவரின் ஆதரவால் அதைச் சரிக்கட்டினார். அண்மையில் பேரூராட்சி நிர்வாகங்களின் அலட்சியத்தால், மூன்று குழந்தைகள் பலியான சம்பவத்தையும் தனது சாமர்த்தியத்தால் பெரிதாகிவிடாமல் தடுத்திருக்கிறாராம். ஒவ்வொரு பேரூராட்சியின் அதிகாரிகளும் இவருக்கு மாதம்தோறும் படியளக்க வேண்டுமாம். இல்லையென்றால், தனது மேலிடத்து செல்வாக்கைவைத்து, ‘தூக்கி அடிச்சிடுவேன் பார்த்துக்க...’ என விஜயகாந்த் பாணியில் மிரட்டுகிறாராம். ‘பொறியாளரான இவர் எப்போதும் பொறுப்பு அதிகாரியாகவே பணியாற்றிக்கொண்டிருக்கிறார். ஆனால், பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறாரே’ என்று சக அதிகாரிகள் தலையலடித்துக் கொள்கின்றனர்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘பால் வடியும் முகத்தானின் பாலியல் சீண்டல்!’

தமிழ் நடுநாட்டின் நகர அலுவலகத்தில், ஆணைகளை வழங்கும் அதிகாரம்கொண்ட அதிகாரி ஒருவர் பணியாற்றிவருகிறார். பார்ப்பதற்குப் பால் வடியும் குழந்தைபோல் முகத்தைக்கொண்டவர். ஆனால், பாலியல் சீண்டல்களில் பலே பேர்வழியாம். தன்னுடன் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களிடம் தொடர்ந்து சேட்டைகளில் ஈடுபட்டுவந்தவர், அண்மையில் புதிதாகப் பணிக்குச் சேர்ந்த பெண் ஊழியரிடமும் சில்மிஷ முயற்சியை ஆரம்பித்திருக்கிறார். அதிர்ந்துபோன அந்தப் பெண், தன் உறவினரை அழைத்துவந்து மிரட்ட... லோக்கல் உடன்பிறப்புப் புள்ளி வந்து பிரச்னையைச் சமரசம் செய்திருக்கிறார். இந்த விவகாரத்தால் அரண்டுபோன அதிகாரி, சில தினங்கள் பணிக்கு வராமலேயே இருந்தார். இப்போது மீண்டும் பணிக்கு வந்தவர், தனது சரச லீலைகளை மீண்டும் தொடர ஆரம்பித்துவிட்டாராம்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘கமிஷனைக் கொடு, கம்முனு இருப்பாங்க..!’

தமிழ்நாட்டில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட அந்த மாவட்ட நகராட்சியில் பணிபுரியும் தமிழ்க் கடவுள் பெயர்கொண்ட மூத்த அதிகாரி கறாரான கமிஷன் பேர்வழியாம். பேனா, பென்சில் விவகாரத்தில்கூட கமிஷனைக் கறந்துவிடும் அந்த அதிகாரி, இப்போது `தூய்மை இந்தியா திட்ட’ நிதியைத் தூர்வாரிவருகிறாராம். லேசான மழைக்கே சாலைகளில் ஆறாக ஓடும் சாக்கடை சரிசெய்யப்படாத நிலையில், தேவையில்லாத இடங்களிலெல்லாம் செயற்கைப் புல்வெளிகளை அமைத்து, லட்டுகளை அள்ளிக்கொண்டிருக்கிறாராம். தி.மு.க - அ.தி.மு.க இரண்டு தரப்புமே இவரது தகிடுதத்தங்களைக் கண்டுகொள்ளாததற்குக் காரணம், கமிஷனை மூன்று பங்காக அவர் பிரித்துவிடுவதுதானாம்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஓவர் டார்ச்சர் உடம்புக்கு ஆகாது!

மஞ்சள் மாவட்டத்தில் ஷாக் அடிக்கும் துறையிலுள்ள அந்த ‘அரசு’ அதிகாரிதான், துறைக்குள் நடைபெறும் பல பணிகளைக் கண்காணிப்பவர். தனக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்கள் மூலமாகப் பணிகள் செய்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த அதிகாரி. மற்றபடி வேறு யார் பணி செய்தாலும், அதில் ஏதாவது குற்றம், குறை கண்டுபிடித்துப் பணியைச் செய்யவிடாமல் தடுத்துவிடுவாராம். அண்மையில், சாலை போடும் பணியை வேறோர் ஒப்பந்ததாரர் எடுத்துவிட்டார். அவ்வளவுதான்... ‘சாலையின் உயரம் குறைவாக இருக்கிறது’ என்று குற்றம் கண்டுபிடித்தார் அதிகாரி. உடனே சாலையின் உயரத்தை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு, ‘என்ன இவ்வளவு உயரமாகவா சாலையைப் போடுவது...’ என்று எகிறியடித்திருக்கிறார் அந்த அதிகாரி. இந்த அட்ராசிட்டியைத் தாங்க முடியாத ஒப்பந்ததாரர், மேலிடத்திலுள்ள தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, டார்ச்சர் அதிகாரியைப் போட்டுக்கொடுத்துவிட்டாராம். ‘தனக்கு எதிராக எப்போது நடவடிக்கை பாயுமோ...’ என்று கிலிபிடித்துக் கிடக்கிறார் அதிகாரி!