அரசியல்
அலசல்
Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘‘ஏலம்... ஏலாலங்கடியோ!’’

மத்திய மாவட்டத்தில் முறுக்குக்குப் பெயர்போன நகராட்சியில் கஜா புயலின்போது கீழே விழுந்த சுமார் 10 டன் மரங்களை சமீபத்தில் ஏலம்விட்டிருக்கிறார்கள். மார்க்கெட்டில் ஒரு கிலோ விறகு 7 ரூபாய் வரை விற்றுவரும் நிலையில், நகராட்சியிலோ ஒரு கிலோவுக்கு வெறும் 90 பைசா என்று விலை நிர்ணயித்திருக்கிறார்கள். இந்த வகையில், இப்படி 10 டன் விறகை வெறும் 9 ஆயிரத்துக்கே விற்பனை செய்திருப்பதாக நகராட்சியின் பெண் உயரதிகாரி கணக்கு காட்டியிருக்கிறார். இது தெரிந்து கொதித்தெழுந்த 11 கவுன்சிலர்கள், ‘‘எங்களுக்குத் தெரியாம எந்த அடிப்படையில ஏலம் விட்டீங்க... மார்க்கெட் விலை தெரியுமா உங்களுக்கு... இது சம்பந்தமாக கோர்ட்ல வழக்கு போடுவோம்!’ என மிரட்டிவிட்டார்களாம். ‘‘கீழேயிருக்கும் அதிகாரிகள் பேச்சை நம்பி செஞ்சுட்டேன். இனிமே இப்படிச் செய்ய மாட்டேன்’’ என மன்னிப்புக் கேட்காத குறையாக மன்றாடினாராம் பெண் அதிகாரி. “ஏலம்ங்கிற பேர்ல செய்யறதெல்லாம் செஞ்சுட்டு, இப்ப ஏலாலங்கடியோ பாடுனா எப்படி?” என்று கேட்கிறார்கள் கவுன்சிலர்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட அதிகாரி!

அ.தி.மு.க ஆட்சியில் மேற்கே அந்த முக்கிய மாவட்டத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தவர் அவர். அங்கு பவர்ஃபுல்லாக இருந்த மாஜியின் நிழலாக வலம்வந்தார். அந்த விசுவாசத்துக்குப் பலன் கிடைக்க, அவர் கோவையிலேயே செட்டில் ஆகிவிட்டார். ஆட்சி மாறியதும், தண்டனை மாவட்டத்துக்கு தூக்கி யடிக்கப்பட்டார் அந்த அதிகாரி. அப்போதும் தனக்கு வழங்கப்பட்ட அரசுக் குடியிருப்பு, சொந்த பங்களா என பழைய மாவட்டத்திலேயே சுற்றிக் கொண்டிருந்தார். விஷயம் மேலிடம் வரை போய், ‘ஆட்சி மாறி வருஷம் ஆச்சு... இன்னும் மாஜியோட விசுவாச அதிகாரிகளைக் கட்டுப்படுத்த முடியலையா?’ என்று சீறும் அளவுக்குப் போயிருக்கிறது. இதையடுத்து, “சாரே... இப்போ உங்க அண்ணன் மந்திரியும் இல்லை. அவங்க ஆட்சியும் இல்லை... வெளியே போறீங்களா?” எனக் கேட்டு அந்த அதிகாரியை அரசுக் குடியிருப்பிலிருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றியிருக்கிறார்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

வாடகை வீடு முதல் சொகுசு கார் வரை...

கடலோர மாவட்டம் ஒன்றில் பொதுப்பணித்துறையில் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவர், அவருக்குக் கீழ் பணியாற்றும் கண்காணிப்பாளரோடு இணைந்து, கமிஷன், கலெக்‌ஷன் என வாரிக்குவித்துவிட்டாராம். கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டு கொட்டுகிற கதையாக, தற்போது அருகிலுள்ள மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட அவருக்கு, கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டிருக்கிறதாம். இங்கும் பல நூறு கோடிகளில் கட்டுமானங்கள் நடைபெற்றுவருவதால், அவருக்கு வீடு வாடகைக்குப் பிடிப்பது முதல், பயணத்துக்கு சொகுசு கார் ஏற்பாடு செய்து தருவதுவரை அனைத்தையும் கான்ட்ராக்டர்களே செய்துதருகிறார்களாம். ‘எங்கு போனாலும் அவர் காட்டில் மட்டும் மழை பொழிகிறதே’ என்று விழி உயர்த்தி வியக்கிறார்கள் சக அலுவலர்கள்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘‘தலையைச் சீவிடுவேன் சீவி!’’

கொங்குப் பகுதியில் உள்ள மூன்றெழுத்து மாவட்டத்தில் இருக்கும் பள்ளமான நகராட்சியில் பணியாற்றிய குழலூதும் கடவுள் அதிகாரி, ‘‘நான் அருவாளை எடுத்தா, உன்னோட தலையை சீவிடுவேன் சீவி...’’ என்று ‘சீவலப்பேரி பாண்டி’ கணக்காக சக அலுவலர்களை மிரட்டிவந்தாராம். அதேபோல், பெண் ஊழியர்களுக்கு மத்தியில், ஆண் ஊழியர்களை கலீஜான வார்த்தைகளில் திட்டித் தீர்ப்பதையும் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். ‘‘இந்த அருவா ஆபீஸர் வாயைக் கட்டுவது யார்?’’ என்று சங்கடத்தில் நெளிந்த பெண் ஊழியர்கள், கமுக்கமாக மேலிடத்துக்குப் புகார் தட்டிவிட... இப்போது அதிகாரியை தலைநகருக்குத் தூக்கியடித்திருக்கிறார்கள். பதவி இறக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

மன்னரை கவனித்தால் மங்கலம் உண்டாகும்!

தலைநகரில் இயங்கிவரும் ‘தொழிலாளர் அரசு ஈட்டுறுதி’ (இ.எஸ்.ஐ) மருத்துவமனையில், செவிலியர், மருத்துவர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை தாறுமாறாக இருக்கிறதாம். இதனால் மாதம்தோறும் ஊதியம் என்ற பெயரில் சுமார் 1 கோடி ரூபாய் வரை வீணடிக்கப் படுகிறதாம். சமீபத்தில் இங்கு தணிக்கை செய்த தணிக்கைக்குழுவினர், ‘நோயாளிகளின் எண்ணிக்கையையே ஓவர்டேக் செய்யும் அளவுக்குப் பணியாளர்கள் இருப்பதால், அவர்களைப் பணி நிரவல், பணியிட மாற்றத்தின் மூலம் சீர்செய்ய வேண்டும்’ என அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள். தமிழ்நாடு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளின் ‘மன்னர்’ பெயர்கொண்ட பெரிய அதிகாரி, பெரிய குடும்பத்துக்கு நெருக்கமான உறவினராம். எனவே, “எங்களைப் பணியிட மாற்றம் செய்யாம பார்த்துக் கோங்க எசமான்...” என செவிலியர் முதல் மருத்துவர் வரை அனைவரும் மன்னரைக் ‘கவனித்து’ வருகிறார்களாம்.