Published:Updated:

தமிழகத்துக்குள் ஊடுருவிய ஓஜி குப்பம் கேங்!

ஓஜி குப்பம் கேங்
பிரீமியம் ஸ்டோரி
ஓஜி குப்பம் கேங்

நல்ல நேரம் பார்த்து திருட்டு... நாப்கின்களில் பதுக்கப்படும் நகைகள்...

தமிழகத்துக்குள் ஊடுருவிய ஓஜி குப்பம் கேங்!

நல்ல நேரம் பார்த்து திருட்டு... நாப்கின்களில் பதுக்கப்படும் நகைகள்...

Published:Updated:
ஓஜி குப்பம் கேங்
பிரீமியம் ஸ்டோரி
ஓஜி குப்பம் கேங்

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழகம் பக்கம் தலைகாட்டாமல், ஆந்திராவிலேயே பதுங்கியிருந்த ‘ஓஜி குப்பம் கேங்’ மீண்டும் கைவரிசை காட்டுவதற்காக நுழைந்திருக்கிறது. அந்த கேங்கின் ஒருவர் மட்டும் போலீஸில் பிடிபட்ட நிலையில், இவர்கள் கும்பலாகத்தான் நுழைவார்கள் என்பதால், மொத்த கேங்கையும் பிடிக்கத் தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில், தனியாக இருக்கும் வீடுகளைக் குறிவைத்து வட இந்திய லாரி கேங் கொள்ளையடிக்கும். முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தை தழுவிய த்ரில்லர் சேஸிங் படம் அது. அதே போன்று, நமக்கு அருகிலுள்ள ஆந்திர மாநிலத்திலும் ஒரு குறிப்பிட்ட சமூகமே தலைமுறை தலைமுறையாகத் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டுவருவதாகக் காவல்துறைப் பதிவேடுகள் கூறுகின்றன. அந்தச் சமூகம்தான் தென் இந்தியாவிலேயே ‘நம்பர் ஒன்’ கொள்ளைக் கும்பல் என்ற பெயரையும் பெற்றிருக்கிறது.

தமிழகத்துக்குள் ஊடுருவிய ஓஜி குப்பம் கேங்!

ஏப்ரல் 18-ம் தேதி இரவு ராணிப்பேட்டை பேருந்து நிலையத்தில் செல்வன் என்பவர் தனது டூ-வீலரை நிறுத்திவிட்டு அருகிலுள்ள கடைக்குச் சென்றிருக்கிறார். அப்போது டூ-வீலரின் சீட்டுக்கு அடியிலிருந்து 70 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் ஒருவர் திருட முயன்றார். இதை அங்கிருந்த சிலர் பார்த்துச் சத்தம் போடவே... அக்கம் பக்கத்தினர் அந்த நபரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் ஓஜி குப்பம் கேங்கைச் சேர்ந்த சீனிவாசன் என்று தெரிந்து ஒட்டுமொத்த காவல்துறையும் அலர்ட் செய்யப்பட்டிருக்கிறது. காரணம், ஓஜி குப்பத்திலிருந்து யாரும் தனியாக வர மாட்டார்கள். இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும், இந்த நிமிடத்தில்கூட அந்தக் கும்பல் எங்கேயாவது கைவரிசை காட்டுவதற்காக நோட்டம் விட்டுக்கொண்டிருக்கலாம் என்கிறது போலீஸ்.

சித்தூர் மாவட்டம், நகரிக்கு அருகிலுள்ள ‘ஓரந்தாங்கல் கொல்லக் குப்பம்’ என்ற பகுதியின் ஆங்கிலச் சுருக்கம்தான் ஓஜி குப்பம். இந்தப் பகுதியில் இனக்குழுவாக வாழும் மக்கள், அவ்வப்போது வெளியேறி ஆந்திராவின் பல்வேறு நகரங்களுக்கும், தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களுக்கும் குழுக்களாகச் செல்கிறார்கள். நடை, உடை, பாவனையில் சந்தேகம் வராமலிருக்க நேர்த்தியான ஆடைகளை அணிகிறார்கள். திருடுவதற்கு முன்பு நாள், கிழமை, நல்ல நேரம் பார்ப்பது, ஊர் திரும்பும் காலத்தைக் கணிப்பது அவர்களது குல வழக்கம். இதற்காக அவர்களின் முன்னோர்கள் உருவாக்கிய பஞ்சாங்கக் கணக்கை உபயோகிக்கிறார்கள்.

ஒருவரின் கவனத்தை திசைதிருப்பும் தந்திரமே ஓஜி குப்பம் கேங்கின் மிகப்பெரிய பலம் என்கிறார்கள் போலீஸார். பணப்புழக்கம் அதிகமிருக்கும் வங்கிகள், பத்திரப்பதிவு அலுவலகங்கள்தான் இவர்களின் டார்கெட். வங்கியிலிருந்தோ ஏ.டி.எம்-மிலிருந்தோ ஒருவர் பணத்தை எடுத்துவருகிறார் என்றால், அவரைத் தங்கள் வீட்டுப் பெண்கள் மூலம் பின்தொடர்ந்து கண்காணிப்பார்கள். அந்த நபர் தனது பைக் அல்லது காருக்கு வந்து சேர்வதற்குள் வாகனத்தின் டயரை ஆண்கள் பஞ்சராக்குவார்கள்.

தமிழகத்துக்குள் ஊடுருவிய ஓஜி குப்பம் கேங்!

அதுவும் கைகொடுக்கவில்லையென்றால், 100 ரூபாய் நோட்டுகளைச் சாலையில் வீசுவது, உடல்மீது அரிப்புப் பொடியைத் தூவுவது எனக் குறிவைத்த நபரின் கவனத்தை எப்படியாவது திசைதிருப்புவார்கள். அந்த நபர் நொடிப்பொழுது தடுமாறினாலும், அவரிடமிருந்து பணத்தை லாகவமாகக் கொள்ளையடித்துவிடுவார்கள். பெண்களிடம் நகை திருடினால், தங்கள் கேங்கிலுள்ள பெண்களிடம் கொடுத்து நாப்கின்களில் ஒளித்துவைத்துக்கொள்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவில் இந்த கேங் சிக்கியபோது, அவர்கள் தங்கியிருந்த வீட்டை போலீஸார் சோதனையிட்டனர். அப்போது, நாப்கின் குவியல்களில் கொத்துக் கொத்தாக நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். ஓஜி குப்பம் கும்பலிடம் எப்போதுமே டயரைப் பஞ்சராக்குவதற்கான கூர்மையான கத்தி, கார் கண்ணாடியைத் திறப்பதற்காகச் சன்னமான ஸ்டீல் ஸ்கேல், அலுமினிய நூலிழை இருக்கும். இவர்கள் அவ்வளவு எளிதாகச் சிக்க மாட்டார்கள். சிசிடிவி கேமராவில் முகம் பதிவாகியிருந்தாலும், அவர்களது கிராமத்துக்குச் செல்வதற்குள் அவர்களைப் பிடித்துவிட வேண்டும். ஓஜி குப்பம் சென்றுவிட்டால், கைதுசெய்வது சிரமம்.

இது பற்றி நம்மிடம் பேசிய சீனியர் போலீஸ் அதிகாரி ஒருவர், ‘‘அவர்களைத் தேடி ஓஜி குப்பத்துக்குச் சென்றால், ஊரே கூடி போலீஸை நுழையவிடாமல் தடுக்கும். ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்தைக் கூட்டுவார்கள். அவர்களிடம் சிசிடிவி கேமரா காட்சிகளைக் காண்பித்தால், திருடிய பொருள்களில் சிலவற்றைப் பஞ்சாயத்தாரே மீட்டுத் தருவார்கள்.

தமிழகத்துக்குள் ஊடுருவிய ஓஜி குப்பம் கேங்!

சில நேரங்களில் பொருள்கள் திரும்ப வரவே வராது. குற்றவாளிகளையும் ஒப்படைக்க மாட்டார்கள். உள்ளூர் போலீஸும் ஒத்துழைப்பு அளிக்காது. தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓஜி குப்பம் கேங் நடமாட்டம் தென்படவில்லை. இந்த நிலையில்தான் ராணிப்பேட்டையில் ஒருவர் சிக்கியிருக்கிறார். அதனால், அனைத்துக் காவல் நிலையங்களையும் உஷார்ப்படுத்தியிருக்கிறோம். அதேசமயம், இந்த கேங் கொடூரமானது கிடையாது. யாரையும் தாக்க மாட்டார்கள். கைநிறைய பணம், நகை சேர்ந்தவுடன் தங்கள் கிராமத்துக்குக் கிளம்பிவிடுவார்கள். வாரத்தில் சராசரியாக மூன்று திருட்டு வழக்குகள் பதிவாகும் ஏரியாவில், திடீரென பத்து வழக்குகள் பதிவானால் இவர்களின் கைவரிசையாக இருக்குமோ என்ற சந்தேகம் போலீஸாருக்கு இயல்பாகவே எழும்’’ என்றார்.

யாரும் பிறக்கும்போதே திருடராகப் பிறப்பதில்லை. இப்படியான சமூகங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு அளித்து, முன்னேறிய சமூகமாக மாற்றினாலே குற்றங்கள் குறைவதுடன், அந்தச் சமூகத்தின் மீதான கறையும் அழியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism