முதுமை குறித்த உங்கள் அனுபவங்கள், வாழ்க்கை முறைகள், வித்தியாசமான நபர்கள், உணர்வுகள், உதவிகள், கடமைகள், கருவிகள் என்று எதுவாக இருந்தாலும் பகிரலாம் என்று சென்ற (7.6.2022) இதழில் கேட்டிருந்தோம். ஏராளமான அனுபவங்கள், அறிவுரைகள்... அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில...
முதுமையைக் கொண்டாடும் தாத்தா!
எனக்குத் தெரிந்த ஒரு முதியவர், பணி ஓய்வு பெற்றவுடன் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வரும் செயல் இது. தினமும் பத்திரிகை கடைக்குச் சென்றுவிடுவார். அன்றைய செய்தித்தாளுடன் அன்று வெளிவந்திருக்கும் பத்திரிகைகளையும் வாங்குவார். அனைத்தையும் படித்துவிட்டு பத்திரிகைகளில் வெளியாகும் பரிசுப் போட்டி களின் விடைகளைக் கண்டு பிடிப்பார்.
ஒவ்வொரு போட்டிக்கும் அவருடைய பேரன், பேத்திகளின் பெயர்கள், அவர்கள் வசிக்கும் ஊரின் விலாசம் எழுதுவார். போட்டி மூலம் வரும் பரிசுப் பணத்தை அந்தந்த பேரன், பேத்திகளை... ‘தாத்தா அன்பளிப்பு’ என்று சொல்லி அவர்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளச் சொல்வார்.
மிக்ஸி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோகப் பொருள்களின் அறிவிப்பு வரும் போட்டிகளில் மகள், மருமகள் பெயர்களில் எழுதி அவர்கள் ஊரின் விலாசமும் எழுதி போஸ்ட் செய்துவிடுவார். அவர்கள் வெற்றி பெற்றால், ‘உங்கள் திருமண நாளுக்கு எனது அன்பு பரிசு’ என்பார். இவற்றுக்கெல்லாம் அவர் கூறும் காரணம் இதுதான்... ‘உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளராது என்பதற்கு நானே உதாரணம்’ என்பார்.
தற்போது ஆன்லைன் விஷயங்களைக் கற்றுக்கொண்டு மெயில் அனுப்புவது வரை அப்டேட் ஆகிவிட்டார். `முதுமை சுமை அல்ல... சுகம்' என்பதற்கு உதாரணமாக அவரை பார்க்கிறேன்.
- எஸ்.ராஜகுமாரி, சென்னை-125
*****
எதிர்பார்ப்புகள் இல்லாவிட்டால் ஏமாற்றமும் இருக்காது!
முதுமை... எதிர்பார்ப்புகளற்ற முதியவர்களுக்கு வரப்பிரசாதம்... பிள்ளைகளிடம் எதிர்பார்த்து ஏமாறுபவர்களுக்கு சாபம்.
அளவுக்கதிகமான உரிமையை மகள் / மகன் / மருமகள் / மருமகன் / பேரன் / பேத்தியிடம் எடுத்துக்கொள்ள வேண்டாம். ‘எங்க காலத்தில்...’ என்று எடுத்ததற்கெல்லாம் முழங்க வேண்டாம். நம்முடைய இன்னிங்ஸ் ஓவர். இளைய தலைமுறைக்கு வழிவிட்டு சற்றே விலகி இருப்பது நமது சுயமரியாதைக்கு நலம்.
ஆங்காரமாய் பேசுவதும் நடந்துகொள்வதும் உத்தமம் இல்லை. நமக்கென ஒதுக்கப்பட்ட அறையில் குழந்தைகள் வரும்போது ஒரு பழம், சாக்லேட், பிஸ்கட் எனக் கொடுத்தால் அவர்கள் குதூகலிப்பர்.
காபி, டீயில் சர்க்கரை மற்றும் சமையலில் உப்பு, காரம் தூக்கலாக, குறைவாக உள்ளது எனக் குத்திக்காட்ட வேண்டாம். நமக்கென ஒரு நண்பர் வட்டத்தை அமைத்து நிம்மதி தேடலாம். பிறந்தநாள், திருமணநாள் ஆகிய வற்றுக்காக ஒரு சிறு தொகையை அன்பளிப்பாகக் கொடுத்து வாழ்த்தலாம்.
- லஷ்மி ஸ்ரீநிவாசன்,சென்னை-24