Published:Updated:

டெல்லி: ஊரடங்கால் கண்ணீர்... கைகொடுத்த நெட்டிசன்கள்! - டிரெண்டிங்கில் `பாபா தாபா’ தம்பதி

பாபா தாபா
பாபா தாபா

`நான் மட்டுமில்லை, என்னைப்போல ஊரடங்கால் வருமானத்தை இழந்த பலர் இருக்கிறார்கள்' என்ற வரிகளையும் முன்வைக்கிறார் காந்த பிரசாத்.

டெல்லியின் தென்பகுதியில் வயதான தம்பதியரால் நடத்தப்படும் ஒரு சிறிய உணவகம், கொரோனா காலத்தில் பெரும் நெருக்கடியைச் சந்தித்தது. ஆனாலும் தொடர்ந்து அவர்கள் நடத்திய வாழ்வாதாரப் போராட்டம், இன்று பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிறுவனங்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களுக்கு உதவிசெய்ய வைத்திருக்கிறது.

நெட்டிசன் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து, `இந்த வீடியோ என் இதயத்தை உண்மையாகவே உடைத்துவிட்டது. டெல்லிவாழ் மக்கள் தயவுசெய்து இந்த பாபாவின் உணவகத்தில் சென்று உணவருந்துங்கள்’ என்று கூறியிருந்தார்.

நேற்று முன்தினம்இரவில் இவர் செய்த இந்த ஒற்றை ட்வீட் மூலம், நேற்றூ காலையில் வீடியோவிலுள்ள வயதான தம்பதியரின் உணவகத்துக்கு ஏராளமான உதவிகள் கிடைத்துவருகின்றன.

வீடியோவில், ஆரஞ்சு நிற டி-ஷர்ட்டுடன், முகக்கவசம் அணிந்த காந்தா பிரசாத் (வயது 80) என்ற முதியவரும், அவருடைய மனைவியும் தங்கள் வீட்டுமுறை உணவகத்திலிருந்து, தங்களுடைய உணவகம் பற்றியும், கொரோனாவால் தாங்கள் நடத்தும் போராட்டம் குறித்தும் பேசுகின்றனர்.

காந்தா பிரசாத்தும் அவருடைய மனைவியும் காலை 6:30 மணிக்கு சமைக்கத் தொடங்குவதாகவும், அன்றைக்குக் காலை 9:30 மணிக்கு பருப்பு வகைகள், கறிகள், ரொட்டிகள் மற்றும் அரிசி சாதம் ஆகிய உணவுடன் தங்கள் உணவகம் செயல்படத் தொடங்குவதாகவும் கூறுகின்றனர். இந்த உணவுகளை ஒரு தட்டுக்கு ரூபாய் 30 முதல் 50 வரை விற்பனை செய்வதாகவும் கூறுகின்றனர்.

பிறகு வீடியோ எடுப்பவர், `இன்று இவ்வளவு நேரம் வரை எவ்வளவு சம்பாதித்தீர்கள்?’ என்று கேட்கும்போது, முதியவர் உடைந்து அழும் குரலுடன், நடுங்கும் கைகளில் நான்கைந்து 10 ரூபாய்த் தாள்களை எடுத்துக் காட்டுகிறார். நான்கு மணி நேரத்தில் இவர்கள் சம்பாதித்தது வெறும் 50 ரூபாய் மட்டுமே.

பாபா தாபா
பாபா தாபா

மேலும் முதியவர் காந்தா பிரசாத் கூறுகையில், ``கொரோனா பெருந்தொற்றுக்கு முன், அடுத்த நாளுக்கான வருமானம் மட்டுமாவது கிடைத்துவந்தது, ஆனால் கொரானாவுக்குப் பிறகு இந்தச் சிறிய உணவகம் பெரும் துன்பத்துக்கு உள்ளானது. நாங்கள் வாழ்க்கையில் பெரும் போராட்டம் நடத்திவருகிறோம்” என்றார். இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகன்கலும் ஒரு மகளும் இருக்கும் நிலையில், அவர்களிடமிருந்து இந்த முதிய தம்பதியர் எந்த உதவியும் பெறுவதில்லை.

இரவில் பகிரப்பட்ட இந்த வீடியோ சில மணி நேரங்களில் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகியிருக்கிறது. சமூக வலைதளம் மூலம் இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், முதிய தம்பதியரின் கண்ணீரைத் துடைத்துவருகிறார்கள்.

காலை முதல் பாபாவின் உணவகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழிகிறது. பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகள் முதல் சாமானிய மக்கள் வரை இந்த முதிய தம்பதியரின் உணவகத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்தும், பொருளும், நிதி உதவிகளும் அளித்தும் வருகின்றனர். மேலும், பலர் மதிய உணவுக்குப் புதிய ஆர்டர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த முதிய தம்பதிக்காக ட்வீட் செய்தவர்களில் நடிகர் சோனம் கபூர், கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின், ஐபிஎல் அணி டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் உணவு விநியோகப் பயன்பாடு ஸொமேட்டோ ஆகியவர்கள் முக்கியமானவர்கள்.

இந்தநிலையில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட கெளரவ் வாசன், ``நேற்றிரவு (நேற்று முன்தினம்) நான் அவர்களின் உணவகத்துக்குச் சென்றிருந்தேன். அவர்களின் நிலையையும், போராட்டத்தையும் கண்டு நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். அதனால்தான் வீடியோ பதிவிட்டேன். தற்போது இவர்களைப் பார்க்கும்போது டெல்லியிலுள்ள வேறு எந்த உணவகத்தையும்விட, பாபாவின் உணவகத்துக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்று நான் நம்புகிறேன். பணத்தைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், இந்த வாரம் பாபாவுக்குக் கூடுதலாக ஒரு பணியாளர் தேவைப்படுவார்” என்று தெரிவித்திருந்தார்.

உணவகம்
உணவகம்

மேலும் உதவிகள் கிடைத்த பிறகு மற்றொரு வீடியோவில் காந்தா பிரசாத், `நாங்கள் தற்போது மிக நம்பிக்கையாக உணர்கிறோம். தற்போது எங்கள் உணவகத்துக்கு நிறைய மக்கள் வருகின்றனர். நாங்கள் பொதுமக்களுக்கு மிகவும் நன்றிக் கடன்பட்டிருக்கோம்” என்றார். அவர் மனைவி பாதாமி தேவி கூறுகையில், `ஊரடங்கு காரணமாக நாங்கள் மிகக் கடினமான நிலைமையில் இருந்தோம், தற்போது மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறோம். எங்களுக்கு உதவிபுரிந்த மக்கள் அனைவருக்கும் எங்களுடைய ஆசீர்வாதங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார். தொடர்ந்து காந்தா பிரசாத், `இதுபோல நான் மட்டுமில்லை, என்னைப்போல, ஊரடங்கால் வருமானத்தை இழந்த பலர் இருக்கிறார்கள்' என்ற வரிகளையும் முன்வைக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு