அரசியல்
அலசல்
Published:Updated:

மதுவால் புனிதமானதா செல்லாத ரூபாய் நோட்டு? - 6 ஆண்டாக மௌனம் காட்டும் மத்திய அரசு!

மதுவால் புனிதமானதா செல்லாத ரூபாய் நோட்டு?
பிரீமியம் ஸ்டோரி
News
மதுவால் புனிதமானதா செல்லாத ரூபாய் நோட்டு?

சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடாது என்பதால், செல்லாத ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட்டன’ என்று பதிலளித்திருக்கிறது டாஸ்மாக் நிர்வாகம்.

2016-ம் ஆண்டு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமலில் இருந்த காலகட்டத்தில், செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் டாஸ்மாக் மூலம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பது ஆர்.டி.ஐ மூலம் அம்பலமாகியிருக்கிறது. சம்பவம் நடந்து ஆறு ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில், இதுவரை துறைரீதியிலான நடவடிக்கைகூட எடுக்கப்படவில்லை என்பதுதான் ‘ஹாட்’ செய்தி.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, ‘500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என நவம்பர் 8, 2016-ல் அறிவித்தார் பிரதமர் மோடி. அன்றிரவே இந்த உத்தரவு அமலுக்குக் கொண்டு வரப்பட்டதோடு, கையிருப்பிலுள்ள இந்த ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவித்தது. நாடே அமளி துமளியானது. ‘ஒரு நாளைக்கு 2,000 ரூபாய்க்கு மட்டுமே பணம் எடுக்க முடியும்’ என்று அறிவிக்கப்பட்டதால், ஏ.டி.எம் மையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. 4,000 ரூபாய்க்கு மேலான தொகையில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ‘முறையான கணக்கு இல்லாத பட்சத்தில், 200 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும்’ என மத்திய அரசு அறிவித்திருந்ததால், சிறு சேமிப்பாகச் சேர்த்து வைத்திருந்தவர்கள்கூட பாதிக்கப்பட்டனர். அந்தக் காலகட்டத்தில் தான், கோடிக்கணக்கிலான பழைய ரூபாய் நோட்டுகள் டாஸ்மாக் மூலமாக வரவு வைக்கப்பட்டிருக்கும் தகவல் தற்போது ஆர்.டி.ஐ மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

மதுவால் புனிதமானதா செல்லாத ரூபாய் நோட்டு? - 6 ஆண்டாக மௌனம் காட்டும் மத்திய அரசு!

ஆர்.டி.ஐ மூலமாக இதை அம்பலமாக்கியிருக்கும் சமூக ஆர்வலர் காசி மாயனிடம் பேசினோம். “பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டவுடன், அவற்றை வணிக நிறுவனங்கள் வாங்கக் கூடாது எனவும் மத்திய அரசிடமிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. நவம்பர் 9, 2016-ல் டாஸ்மாக் மேலாண் இயக்குநர், ‘மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள்’ ஆகியோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை இன்றிலிருந்து வாங்காதீர்கள். உங்கள் கைவசம் வைத்திருக்கும் பணத்தை நவம்பர் 10-ம் தேதி வங்கியில் செலுத்திவிடுங்கள்’ என்று கூறியிருந்தார். நவம்பர் 10-ம் தேதிக்கு மேல், பழைய செல்லாத ரூபாய் நோட்டுகளை வாங்கக் கூடாது என்பதுதான் அந்தச் சுற்றறிக்கையின் சாராம்சம். ஆனால், நவம்பர் 9-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை செல்லாத ரூபாய் நோட்டுகள் டாஸ்மாக் மூலமாக வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளன.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில், வரவு வைக்கப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுகளின் விவரங்களை ஆர்.டி.ஐ மூலமாகத் தகவல் கேட்டிருந்தேன். அதற்கு, 25 மாவட்ட மேலாளர்கள் மட்டுமே பதிலளித்திருக்கிறார்கள். அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 22.64 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்லாத நோட்டுகள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கின்றன. கன்னியாகுமரி, திண்டுக்கல், கடலூர் மாவட்டங் களில் தலா 4 கோடி ரூபாய்க்குச் செல்லாத நோட்டுகள் வாங்கப்பட்டிருக்கின்றன. குறைந்த பட்சமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 லட்சம் ரூபாய்க்குச் செல்லாத நோட்டுகளை வாங்கிக்கொண்டு, மது விற்பனை நடைபெற்றிருக் கிறது. இந்த 25 மாவட்டங்களையும் சேர்த்து, டிசம்பர் 31-ம் தேதி வரை, 63.87 கோடி ரூபாய் மதிப்புடைய செல்லாத ரூபாய் நோட்டுகள் வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளன. சென்னை, மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் தகவல் தர மறுத்துவிட்டனர். இந்த மாவட்டங்களில் மது விற்பனை அதிகம் நடை பெறும். தோராயமாக அந்த விற்பனைக் கணக்கையும் எடுத்துக் கொண்டால், டாஸ்மாக் மூலம் வங்கியில் வரவு வைக்கப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 100 கோடி ரூபாயைத் தாண்டும்.

மதுவால் புனிதமானதா செல்லாத ரூபாய் நோட்டு? - 6 ஆண்டாக மௌனம் காட்டும் மத்திய அரசு!

இந்த விவகாரம் தொடர்பாக, 2020-ம் ஆண்டு வருமான வரித்துறை டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு, ‘சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடாது என்பதால், செல்லாத ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட்டன’ என்று பதிலளித்திருக்கிறது டாஸ்மாக் நிர்வாகம். இந்த பதிலை வருமான வரித்துறை ஏற்கவில்லை. லோக்கல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் தங்களிடமிருந்த கறுப்புப் பணத்தை டாஸ்மாக் கடைகளில் கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக 100 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளை மாற்றியிருக்கலாம். இதற்கு ஒரு குறிப்பிட்ட கமிஷன் சில டாஸ்மாக் பணியாட்களுக்கும் சென்றிருக்கலாம். இதை யெல்லாம் விசாரித்து, துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கவேண்டிய டாஸ்மாக் நிர்வாகம், ஆறு ஆண்டுகளாக அமைதி காக்கிறது” என்றார்.

நம்மிடம் பேசிய டாஸ்மாக் மேலாளர்கள் சிலர், “பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டவுடன், டாஸ்மாக் கடைகளின் மது விற்பனையும் அடுத்த ஒரு வாரத்துக்கு ஏகமாக உயர்ந்தது. செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துவிட்டு, ஆயிரக்கணக்கில் மது பாட்டில்களை வாங்கிச் சென்றவர்கள் ஏராளம். அந்த மது பாட்டில்களை பின்னாளில் பிளாக்கில் விற்று வருமானமும் ஈட்டிக்கொண்டனர்” என்கிறார்கள்.

காசி மாயன்
காசி மாயன்

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கமறிய டாஸ்மாக் நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டோம். “செல்லாத ரூபாய் நோட்டுகள் வரவு வைக்கப்பட்டது தொடர்பான ஒரு வழக்கு நிலுவை யில் இருப்பதால், அது குறித்துப் பேச முடியாது” என்றதோடு முடித்துக்கொண்டனர்.

பண மதிப்பிழப்பு காலகட்டத்தில், செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றியதாகத் தொழிலதிபர் சேகர் ரெட்டி மீது சி.பி.ஐ-யின் வழக்கு பாய்ந்தது. பின்னாளில், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டது தனிக்கதை. அவர் மீதெல்லாம் நடவடிக்கையைப் பாய்ச்சிய மத்திய அரசு, ஆறு ஆண்டுகளாக டாஸ்மாக் விவகாரத்தில் மெளனம் காப்பது ஏன் என்பதுதான் சந்தேகத்தை எழுப்பும் கேள்வி. இப்போதாவது நடவடிக்கை எடுக்கிறார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.