Published:Updated:

புதுக்கோட்டை: மழைக்கு ஒழுகும் கட்டடத்தில் குடித்தனம்! - மூதாட்டிக்கு உதவிய காவலர்கள்

மூதாட்டியை நெகிழவைத்த காவலர்கள்
மூதாட்டியை நெகிழவைத்த காவலர்கள்

இப்போ மழைக்காலம் வேற... அந்தப் பழுதடைந்த கட்டடத்தில் சின்ன மழை பேய்ஞ்சாலே ஒரு நிமிஷம்கூட உள்ளே இருக்க முடியாது.

புதுக்கோட்டை மாவட்டம், வலவம்பட்டியைச் சேர்ந்தவர் முனியம்மாள் (65). அங்கன்வாடிப் பணியாளராக வேலைபார்த்திருக்கிறார். திருமணமாகாத இவர், தனது தாயுடன் வசித்துவந்த நிலையில், தாய் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். ஊரில் வீடு, சொத்து எல்லாம் இருந்தும் அங்கு இருக்கப் பிடிக்காத முனியம்மாள், ஆதனக்கோட்டை சிவன் கோயில் அருகேயுள்ள மேற்கூரை பழுதடைந்த கட்டடத்தில் தங்கி வந்திருக்கிறார்.வெயிலிலும், கடுமையான மழையிலும் அந்த பழுதடைந்த கட்டடத்துக்குள்ளே வாழ்க்கையை ஓட்டிவருகிறார்.

புதுக்கோட்டை: மழைக்கு ஒழுகும் கட்டடத்தில் குடித்தனம்! - மூதாட்டிக்கு உதவிய காவலர்கள்

இந்த நிலையில், உறவினர்கள் பலமுறை அழைத்தும் தன் சொந்த வீட்டுக்குப் போக மறுத்திருக்கிறார். இது பற்றித் தகவலறிந்த ஆதனக்கோட்டை உதவி ஆய்வாளர், காவலர்கள் சென்று முனியம்மாளிடம் பேச, `ஊருக்குப் போக விருப்பமில்லை. எனது முடிவு இங்கேதான்’ என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார். இதையடுத்து, காவலர்கள் புதுக்கோட்டை உட்கோட்ட டி.எஸ்.பி கே.கே.செந்தில்குமாரிடம் கூற, உடனே டி.எஸ்.பி-யும் காவலர்களும் இணைந்து அந்தப் பழுதடைந்த கட்டடத்திலிருந்த பழுதான சிமென்ட் சீட்களைப் புதுப்பித்து, தார்ப்பாய்கள், போர்வை, உடைகள் வாங்கிக் கொடுத்து முனியம்மாளை நெகிழவைத்திருக்கிறார்கள்.

இது பற்றி டி.எஸ்.பி செந்தில்குமாரிடம் கேட்டோம். ``மூதாட்டி ஒருவர் ஒழுகும் கட்டடத்தில் மழையிலும் வெயிலும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தவுடன், அவரை விசாரிச்சு அவரோட வீட்டுக்கே அனுப்பிவெச்சுடலாம்னுதான் காவலர்களை அனுப்பிவெச்சோம். ஆனா, அவங்க, `வீட்டுக்குப் போக விருப்பமில்லை. கடைசி காலம் எனக்கு இங்கேதான்’னு கறாராகச் சொல்லிட்டாங்க. ரொம்பப் பிடிவாதமாகவும் இருந்தாங்க. அதனாலதான், அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சோம்.

சீர்ப்படுத்தப்பட மூதாட்டியின் வீடு
சீர்ப்படுத்தப்பட மூதாட்டியின் வீடு

இப்போ மழைக்காலம் வேற... அந்தக் பழுதடைந்த கட்டடத்துல சின்ன மழை பேய்ஞ்சாலே ஒரு நிமிஷம்கூட உள்ளே இருக்க முடியாது. இப்போதைக்குத் தற்காலிகமாக அந்த இடத்தில் தங்கிக்கிற வகையில, நான், ஆதனக்கோட்டை உதவி ஆய்வாளர், காவலர்கள் சேர்ந்து ஒரு சிறிய தொகையை ஒதுக்கி பழுதடைஞ்ச சீட்களை மாத்தி, போர்வை உள்ளிட்ட அத்யாவசியப் பொருள்களை அவங்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கோம். சிலர் சாப்பாடு கொடுக்கிறதாகச் சொல்றாங்க. ஆனாலும், நாங்களே அவங்களுக்கு தினமும் சாப்பாடு கொடுக்கலாம்னு இருக்கோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு