அரசியல்
அலசல்
Published:Updated:

விழாக்கால ‘வேட்டை’யில் ஆம்னி பேருந்துகள்! - சட்டத் திருத்தம் கொண்டுவருமா தமிழக அரசு?

எஸ்.எஸ்.சிவசங்கரன்
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.எஸ்.சிவசங்கரன்

ஆம்னி பேருந்துகள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பயணிகளைக் குழுவாக அழைத்துச் செல்லும் ஒப்பந்த வாகன வகையைச் சேர்ந்தவை

தொடர் விடுமுறை நாள்கள் நெருங்குகின்றன. அதற்குள் விழாக்கால வசூல்வேட்டையில் இறங்கிவிட்டன ஆம்னி பேருந்துகள்!

குறிப்பாக, போதிய ரயில் வசதி இல்லாத தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில்தான் இந்தக் கட்டணக் கொள்ளை அதிகம் நடக்கிறது. சாதாரண நாள்களில் சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்ல சுமார் 600 முதல் 800 ரூபாயாக இருக்கும் ஆம்னி பேருந்துக் கட்டணம், வார இறுதி நாள்களில் 1,000 ரூபாயைத் தாண்டுகிறது. அதுவே, பண்டிகை, திருவிழா, தொடர் விடுமுறை நாள்களில் 2,000 ரூபாய்க்கு மேல் எகிறுகிறது. நெல்லை, கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு என்றால், 3,000 ரூபாய் வரை அதிகரிக்கிறது. ஒரு பேருந்துக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு, நடுவழியில் இறக்கி வேறொரு பேருந்துக்கு மாற்றுவது, ஏழு மணி நேரப் பயணம் என்று சொல்லி 10 மணி நேரம் கழித்துக் கொண்டுபோய்விடுவது, படுமோசமான மோட்டல்களில் உணவுக்காக நிறுத்துவது போன்ற கொடுமைகளும் நடப்பதாகப் புலம்புகிறார்கள் பயணிகள்.

விழாக்கால ‘வேட்டை’யில் ஆம்னி பேருந்துகள்! - சட்டத் திருத்தம் கொண்டுவருமா தமிழக அரசு?

கழுத்தை நெரிக்கும் டிக்கெட் விலையால், பயணிகள் திண்டாடுவதும், அரசுத் தரப்பில் கண்துடைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும், மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவதுபோல பழையநிலை திரும்புவதும் வாடிக்கையாகி விட்டது. ஆம்னி பேருந்துகளுக்கு ‘கட்டண நிர்ணயம்’ என்பதே சிக்கலான விஷயம் என்றும் பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழ, இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு என்று விசாரித்தோம்.

இது குறித்து போக்குவரத்துத்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``ஆம்னி பேருந்துகள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பயணிகளைக் குழுவாக அழைத்துச் செல்லும் ஒப்பந்த வாகன வகையைச் சேர்ந்தவை. அவற்றுக்கு, மதுரை டு சென்னை, சென்னை டு கோவை என்று குறிப்பிட்ட வழித்தடத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிக் கட்டணம் வசூல் செய்ய அனுமதி கிடையாது. இதற்கென உரிய சட்ட நடைமுறை இல்லாத காரணத்தால், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, கட்டணத்தை உயர்த்திக்கொள்கிறார்கள். அதேபோல, ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்தாலும், அவர்களுக்கு எதிராக முறைப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. ஓட்டுநர் சீருடை அணியவில்லை, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டினார் போன்ற காரணங்களைச் சொல்லித்தான் அபராதம் போடப்படுகிறது. ஆம்னி பேருந்துகளுக்குக் கட்டணம் நிர்ணயம் செய்யவும் மோட்டார் வாகனச் சட்டத்தில் இடமில்லை. இதற்கென உரிய சட்டத் திருத்தம் கொண்டுவந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்” என்றார் அவர்.

எஸ்.எஸ்.சிவசங்கரன்
எஸ்.எஸ்.சிவசங்கரன்

இந்த விவகாரம் குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.அன்பழகனிடம் பேசினோம். ``ஆம்னி பேருந்துகளுக்கு, நிர்ண யிக்கப்பட்ட கட்டணம் என்ற ஒன்றே கிடையாது. இந்த நிலைமையில், எது அதிக கட்டணம், எது குறைந்த கட்டணம் என்று எப்படித் தீர்மானிக்க முடியும்... ஆம்னி பேருந்துகளுக்கு நியாயமான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அரசுக்குப் பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறோம். ஒரு கிலோ தக்காளி திடீரென 100 ரூபாய் ஆவதும், திடீரென 10 ரூபாய்க்கும் கீழே போவதும் நாம் அறிந்ததே. விலை அதிகரிக்கும்போது விமர்சனம் செய்பவர்கள், நஷ்டத்தில் விற்கும் விவசாயியை நினைத்துப் பார்ப்பதே இல்லை. எங்கள் நிலைமையும் அதுதான். பொதுவாக ரயில், விமானம், டாக்ஸி போன்ற எல்லா வகையான பொதுப் போக்குவரத்துகளும் Dynamic Fare System Software மூலமாகவே செயல்படுகிறது. அதாவது தேவை குறைவாக இருக்கும்போது டிக்கெட் விலை குறைவாகவும், தேவை அதிகரிக்கும்போது அதிகமாகவும் மாற்றி அமைக்கப்படும் தானியங்கி மென்பொருள் அது. ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முழுவதும் 25,000 பயணிகள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய இரவு, பகலாகப் பாடுபடும் எங்களைக் கொள்ளையர்கள் என்று சொல்வது நியாயமா... ஒருசில பஸ்காரர்கள் பயணிகளை ஏமாற்றுவதைப் பொதுமைப்படுத்திப் பேசக் கூடாது” என்றார்.

ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூல் செய்தால், 1800-425-6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தங்களின் புகார்களைத் தெரிவிக்கலாம் என்று அரசு அறிவுறுத்துகிறது. இந்தப் புகார்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரனிடம் பேசினோம்.

அன்பழகன்
அன்பழகன்

``ஆம்னி பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயங்குபவை. தமிழ்நாட்டில் மொத்தம் 21,000 அரசுப் பேருந்துகள் உள்ளன. ஆம்னி பேருந்தைப் பொறுத்தவரை மொத்தமே 1,500 பேருந்துகள்தான் இயங்குகின்றன. இவற்றில், 957 பேருந்துகளைக் கட்டணம் தொடர்பாக ஆய்வுசெய்திருக்கிறோம். இந்தப் பேருந்துகளில் 4,500-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில் 97 பேர் கட்டண உயர்வு தொடர்பாகப் புகார் தெரிவித்திருக்கிறார் கள். அந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள அனைவருமே பேருந்து நிறுவனம் விதிக்கும் கட்டணத்துக்கு ஒப்புதலுடனேயே பயணம் செய்திருக்கிறார்கள். ஆம்னி பேருந்துகளில் ஒரு சிலர் செய்யும் தவறுகள்தான் பூதாகரமாகின்றன. இந்தக் கட்டண உயர்வு தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் கூட்டம் நடத்தப்படும். அந்தக் கூட்டத்தில், ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்” என்றார்.

உரிய சட்டத் திருத்தம் கொண்டுவந்து, ஆம்னி பேருந்துகளுக்கும் முறையான கட்டணம் நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். செய்யுமா அரசு?