Published:Updated:

``நான் சொன்னதை கேட்டு பலமா சிரிச்சார்!''- டி.என்.சேஷன் உடனான நினைவலையைப் பகிரும் குடந்தைவாசி

``இவர் புகழ்ச்சியை விரும்ப மாட்டார்னு நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கேன். அதனால, இவர் செஞ்ச தேர்தல் சீர்திருத்தம் பத்தி நான் எதுவுமே பேசலை.''

டி.என்.சேஷன்
டி.என்.சேஷன்

தேர்தல் காலங்களில் வேட்பாளர்களைப் பற்றியும் அரசியல் தலைவர்கள் பற்றியும்தான் சாமானிய மக்கள் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருப்பது வழக்கமாக இருந்தது. டி.என்.சேஷன், தலைமை தேர்தல் ஆணையராக வந்த பிறகுதான், இப்படி ஒரு பதவி இருப்பதே, பெரும்பாலான மக்களுக்கு தெரியவந்தது. அதிரடியான நடவடிக்கைகளாலும் கறாரான கட்டுப்பாடுகளாலும் அப்போது மூலை முடுக்கெங்கும், இவரை பற்றி மக்கள் பேசிக்கொண்டார்கள்.

அவரோட அணுகுமுறையில கொஞ்சம் கூட அதிகார தோரணையே இல்லை. எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு.
சத்தியநாராயணன்

இவரது மறைவுச் செய்தி பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. டி.என்.சேஷன் என்ற பெயரைச் சொன்னாலே, இவரது கடுமையான நடவடிக்கைதான் நமக்கு நினைவுக்கு வரும். இவர் மிகவும் எளிமையானவர், அன்பானவர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். தனக்கு டி.என்.சேஷனுடன் ஏற்பட்ட நெகிழ்ச்சியான அனுபவத்தை உருக்கமாக நினைவுகூர்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த வணிகர் சங்க நிர்வாகி சத்தியநாராயணன்.

``தேர்தல் சமயங்கள்ல, மக்களுக்கு தேவையில்லாத தொந்தரவுகளைக் கொடுத்துக்கிட்டு இருந்த அரசியல்வாதிகளை அடக்கி ஒடுக்கி, பெட்டிப் பாம்பாட்டம் அடங்க வச்சார் டி.என். சேஷன். இதனாலேயே அவர் மேல எனக்கு பெரிய மரியாதை ஏற்பட்டுச்சி. அவரை நேர்ல சந்திக்கணுங்கற ஆர்வம் எனக்கு அதிகமாச்சி. ஆனாலும் இதெல்லாம் நடக்குற காரியமானு அப்ப எனக்கு மலைப்பாவும் இருந்துச்சி. காரணம் அவர் அப்ப பரபரப்பா இருந்த நேரம். ஆனாலும் கூட எதுக்கும் ஒரு தடவை முயற்சி செஞ்சிப் பார்க்கலாமேங்கற எண்ணத்துல, சென்னையில உள்ள அவர் வீட்டுக்கு நான் போனேன். பலத்த பாதுகாப்பு வளையம். அங்கயிருந்த பாதுகாப்பு அதிகாரிகிட்ட, நான் வந்ததுக்கான காரணத்தைச் சொன்னேன். அவரும் தயக்கத்தோட, உள்ள போனார். அடுத்த கொஞ்ச நேரத்துல, டி.என்.சேஷனோட சகோதரர் என்னை வந்து அழைச்சிக்கிட்டு போனார். அங்க எனக்கு பல இன்ப அதிர்ச்சி.

சத்தியநாராயணன்
சத்தியநாராயணன்

தனக்குப் பக்கத்துல உள்ள இருக்கையில என்னை டி.என்.சேஷன் உட்காரச் சொன்னார். எப்படி பேச்சை தொடங்குறதுனு யோசிச்ச நேரத்துல காபி வந்துச்சு. சாப்பிட்டு நல்லா இருக்கு. தேங்க்ஸ்னு சொன்னேன். கும்பகோணம் காபிதான் ஃபேமஸ். அதுமாதிரி இருக்கானு கேட்டார். ஆமாம் சார்னு சொன்னேன். இவர் புகழ்ச்சியை விரும்ப மாட்டார்னு நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கேன். அதனால, இவர் செஞ்ச தேர்தல் சீர்திருத்தம் பத்தி நான் எதுவுமே பேசலை. ’நீங்க தனியாவா வந்திருக்கீங்க. உங்ககூட யாரும் வரலையானு கேட்டார். இப்பெல்லாம் அரசியல்வாதிகளே, ஓட்டு கேட்ககூட தனியாதான் சார் போறாங்கனு நான் சொன்னதைக் கேட்டு, டி.என்.சேஷன் பலமா சிரிச்சார். அவரோட அணுகுமுறையில கொஞ்சம் கூட அதிகார தோரணையே இல்லை. எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. நான் கிளம்புறேன்னு சொன்னதும் தன்னோட இருக்கையில இருந்து எழுந்துரிச்சி, வாசல் வரைக்கும் வந்து வழி அனுப்பி வச்சார். இவர் ஒரு மாமனிதர்'' என உருக்கமாக தெரிவித்தார் சத்தியநாராயணன்.