அலசல்
சமூகம்
Published:Updated:

ஒரு மாத வாடகை கொடுக்கலாமா, வாங்கலாமா?

வீடுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
வீடுகள்

நாங்க 20, 30 வருஷமா கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்சுத்தான் வீட்டைக் கட்டி வாடகைக்கு விட்டிருக்கோம். வாடகை வருமானத்தை வெச்சுதான் எங்க பொழப்பு ஓடுது.

‘மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான வீட்டு வாடகையை இரண்டு மாதங்கள் கழித்து பெற்றுக்கொள்ள வேண்டும் என வீட்டு உரிமையாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன்’ - கடந்த மார்ச் 31-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்த வேண்டுகோள் இது. அதேநாளில், ‘தமிழகத்தில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களிடம் உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது. கட்டாயப்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அரசு அதிரடியாக அறிவித்தது.

ஆனால், அன்பிறகு வேண்டுகோள், அரச கட்டளை இரண்டுமே எடுபட்டதாகத் தெரியவில்லை. தமிழ்நாடு முழுவதும் வாடகை தராதவர்களை காலிசெய்யச் சொல்லி கெடுபிடிகள் அதிகரித்திருப்பதாக புகார்கள் குவிகின்றன. சென்னை வேளச்சேரியில் வாடகை வீட்டில் வசிக்கும் ஒரு பெண், ‘`தயவுசெஞ்சு பேரை போட்டுடாதீங்க!’’ என்று கண்ணீர் மல்க சொன்ன விஷயம் இது...

“எங்க வீட்டுக்காரருக்கு போன மாசத்துக்கான சம்பளம் வரலை. தினக்கூலியா போற எனக்கு பாதி சம்பளம்தான் வந்துச்சு. மாசம் பிறந்ததும் வீட்டு ஓனரம்மா வாடகை கேட்டாங்க. ‘ரெண்டு மாசத்துக்கு வாடகை வாங்கக் கூடாதுன்னு முதல்வர் அறிவிப்பு வெளியிட்டிருக்காரே’னு சொன்னோம். ‘வாடகை வாங்கலைன்னா நாங்க சாப்பாட்டுக்கு எங்க போவோம்? இஷ்டம் இருந்தா இருங்க, இல்லைன்னா காலி பண்ணிட்டுக் கிளம்புங்க’னு சொல்றாங்க. தெரிஞ்சவங்க எல்லோர்கிட்டயும் கடன் கேட்டுப்பார்த்துட்டோம். யாரும் கொடுக்கல’’ என்றார்.

பால் பர்னபாஸ் - ஜெயப்பிரகாஷ் நாராயணன்
பால் பர்னபாஸ் - ஜெயப்பிரகாஷ் நாராயணன்

இது உதாரணம்தான். தமிழ்நாடு முழுவதுமே வாடகை வீடுகளில் வசிக்கும் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களில் பெரும்பாலானோரின் நிலைமை இதுதான்.

அதேசமயம், “வங்கியில் கடன் வாங்கியும் ஆயுள்காலச் சேமிப்பைச் செலவழித்தும் வீடுகள் கட்டி, ஒரு வீட்டில் குடியிருந்து இன்னொரு வீட்டை வாடகைக்கு விடுவோருக்கு இ.எம்.ஐ உள்ளிட்ட நெருக்கடிகள் இருக்கின்றன. அவர்கள் எப்படி வாடகையை விட்டுக்கொடுப்பது?” என்ற எதிர்க்கேள்வியும் எழுப்பப்படுகிறது.

“அரசாங்கம் இஷ்டத்துக்கு அறிவிப்பை வெளியிடும்.

நாங்க 20, 30 வருஷமா கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்சுத்தான் வீட்டைக் கட்டி வாடகைக்கு விட்டிருக்கோம். வாடகை வருமானத்தை வெச்சுதான் எங்க பொழப்பு ஓடுது.

வாடகைப் பணம் வசூலிக்காம இருக்கணும்னா சொத்துவரியில் அரசாங்கம் சலுகை கொடுக்கட்டும். சும்மா, வாடகை வாங்கக் கூடாதுன்னு சொன்னா எப்படி?’’ என்கிறார் சென்னை சூளைமேடு கலைமகள் நகரைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர் ஒருவர்.

“ `வீட்டை காலிபண்ணச் சொல்றாங்க. ஏதாவது உதவி பண்ணுங்க’ன்னு தினமும் பத்து போன் காலாவது வருது. அரசு உடனடியா இந்த விஷயத்துல நடவடிக்கை எடுக்கணும்’’ என்கிறார் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்புப் பேரமைப்பின் தலைவர் பால் பர்னபாஸ்.

“ஒரு மாத வாடகையை வசூலிக்கக் கூடாதுன்னு அரசு வெறும் அறிவிப்பாதான் சொல்லியிருக்கு. அரசாணையா வெளியிடலை. வீடுகளுக்கு மட்டுமல்ல, ‘வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கும் வாடகை கேட்கக் கூடாது’ன்னு அரசு உத்தரவு பிறப்பிக்கணும். ஊரடங்கு காலத்துல செயல்படுகிற மளிகைக்கடை, மெடிக்கல் ஷாப் தவிர மற்ற கடைகள் அனைத்துக்கும் வாடகை விலக்கு அளிக்க வேண்டும். கூடவே, ஒரு மாத மின்கட்டணமும் அரசு வசூலிக்கக் கூடாது’’ என்கிறார் பால் பர்னபாஸ்.

வீடுகள்
வீடுகள்

“வாடகை வீடுகளில் குடியிருக்கும் அடித்தட்டு மக்களால் இப்போது வாடகை கொடுக்க முடியாது. அதேநேரம், இங்கு வீட்டு உரிமையாளர் கள் பலரும் வாடகை வருமானத்தை நம்பித்தான் இருக்கிறார்கள். அரசு அதையும் கணக்கில் எடுத்திருக்க வேண்டும். அதேசமயம், அரசு நிறுவனங்களே அரசின் உத்தரவுகளை மதிக்கவில்லை... பிறகு எப்படி சாதாரண மக்கள் கடைப்பிடிப்பார்கள்?

‘மார்ச், ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களுக்குச் சேர்த்து, இப்போதே ரேஷன் பொருள்கள் வாங்கிக்கொள்ளலாம்’ என அரசு அறிவித்தது. ஆனால், ரேஷன் கடைகளில் ஒரு மாதத்துக்கான பொருள்கள்தான் தருகிறார்கள். ‘வங்கிகளுக்கு இ.எம்.ஐ உட்பட எந்தக் கட்டணமும் மூன்று மாதங்கள் செலுத்தத் தேவையில்லை’ என்றது அரசு. ஆனால், வங்கிகள் அதை பின்பற்றவில்லை. வாடகை அறிவிப்பு மட்டுமல்ல... அரசின் பெரும்பாலான அறிவிப்புகள் இப்படித்தான் இருக்கின்றன’’ என்கிறார் வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஜெயப்பிரகாஷ் நாராயணன்.

அறிவிப்பு வெளியிட்டுவிட்டு நழுவுவது மட்டும் அரசாங்கத்தின் வேலையல்ல... இருதரப்புக்கும் சுமுகமான தீர்வை அளிப்பதுதான் அரசாங்கத்தின் கட்டாய கடமை.