லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

கடைசிவரை என் இட்லி ஒரு ரூபாய்தான்! - கோவை கமலாத்தாள் பாட்டி

கமலாத்தாள் பாட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
கமலாத்தாள் பாட்டி

86 வயதிலும் யார் துணையும் இல்லாமல் சுயமாக உழைத்து வாழ்ந்து வருகிறார் கமலா பாட்டி.

கோவை மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே கமலாத்தாள் செல்லமாக `ஒரு ரூபாய் இட்லி பாட்டி'. அவர் நடத்திவரும் சின்ன உணவகத்தில் இன்றுவரை இட்லியின் விலை ஒரு ரூபாய். அதன் காரண மாக, ஒரு வருடத்துக்கு முன் தேசம் முழுக்க வைரல் செய்தியானவருக்கு, நாட்டின் மூலை களிலிருந்தெல்லாம் வந்து சேர்ந்தன பாராட்டும் உதவியும். இன்றும் அதே ஒரு ரூபாய் இட்லி விற்றுக்கொண்டிருக்கும் கமலா பாட்டியைச் சந்தித்தோம்.

86 வயதிலும் யார் துணையும் இல்லாமல் சுயமாக உழைத்து வாழ்ந்து வருகிறார் கமலா பாட்டி. கோவை, வடிவேலம்பாளையம் கிரா மத்தில் உள்ள அவரது கடையில், சுடசுட இலைகளில் மணம் பரப்பிக்கொண்டிருந்தன ஒரு ரூபாய் இட்லிகள். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கொரோனா சூழல் போன்ற காரணங்களால் விலைவாசி தாறுமாறாக எகிறியுள்ளது. ``எந்த நெருக்கடி வந்தாலும் நான் இட்லி விலையை ஏத்தலை கண்ணு'' என்று கண்கள் இடுங்கச் சிரிக்கிறார்.

கொரோனா காலகட்டத்தில் பசிக்கொடுமை தலைவிரித்தாடிய நிலையில், வடிவேலம் பாளையத்தில் பலரின் பசியை போக்கிய அன்னபூரணி, கமலா பாட்டி. இவரது உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பார்த்து நாடு முழுவதும் கமலா பாட்டிக்கு உதவிக்கரம் நீண்டன. கேஸ் ஸ்டவ், சிலிண்டர், கிரைண்டர், மிக்ஸி, அரிசி, பருப்பு எனக் கொடுக்கப்பட்டன. முக்கியமாக, தற்போது மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா கமலா பாட்டிக்கு சொந்தமாக வீடு, கடை கட்டிக்கொடுக்கும் பணியைத் தொடங்கியுள்ளார். இதற்கான பத்திரப்பதிவு முடிந்து கமலா பாட்டியிடம் பத்திரம் வழங்கப்பட்டுவிட்டது.

கடைசிவரை என் இட்லி ஒரு ரூபாய்தான்! - கோவை 
கமலாத்தாள் பாட்டி

அந்தக் காலை நேரத்தில் பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தார் கமலா பாட்டி. “வடிவேலம்பாளையம்தான் என் சொந்த ஊர். நாங்க விவசாயக் குடும்பம். எங்க அம்மா காலத்துல இருந்தே இட்லி, காபி மாதிரியான சில்லறை கடை வெச்சுருந்தோம். அம்மாவுக்கு நான் கூடமாட ஒத்தாசையா இருப்பேன். அஞ்சாவது வரைக்கும்தான் படிச்சேன். கல்யாணம் முடிஞ்சதும் நானும் இட்லி கடை தொடங்கினேன். 50 வருஷத்துக்கு மேல இட்லி சுட்டு வித்துட்டு இருக்கேன். ரொம்ப வருஷமா 50 காசுக்குத்தான் இட்லி கொடுத்துட்டு இருந் தேன். இப்ப வெலவாசினால (விலைவாசி) ஒரு ரூபாய்க்கு விக்கறேன். விறகு அடுப்புல சமைச்சப்போ, காலையில நாலு மணிக்கு எந்திருச்சு வேலையத் தொடங்கிருவேன்.

இப்ப கேஸ், கிரைண்டரு, மிஸ்ஸி (மிக்ஸி) எல்லாம் கொடுத்திருக்காங்க. அதனால காலைல அஞ்சரை மணிக்கு எந்திரிக்குறேன். என்ன தான் மிஸ்ஸி இருந்தாலும் எனக்கு சட்னி எல்லாம் கைல ஆட்டினாதான் திருப்தியா இருக்கும் கண்ணு. ரொம்ப முடியா தப்பதான் மிஸ்ஸில அரைப்பேன். சாம்பார், சட்னி வெச்சு எல்லாம் ரெடி பண்ணிருவேன். ஏழு மணியில இருந்து சாப்பிட வந்துருவாங்க. கூலிக்குப் போறவங்க எல்லாம் 10 ரூபாய்க்கு வகுறு நொம்ப (வயிறு ரொம்ப) தின்னுட்டுப் போவாங்க. பத்தரை மணிவரை வியாபாரம் இருக்கும்'' - சொல்லும்போதே கமலா பாட்டி யின் மனதிலும் அந்த நிறைவு.

``எல்லாம் முடிஞ்சுதான் நான் சாப்பிடுவேன். ஒருநாள் தவறாம தெனமும் மதிய நேரத்துல மாவு அரைப்பேன். தெனம் ஆறு கிலோ மாவு அரைச்சுடுவேன். விறகு அடுப்பு இருந்தப்போ ஓய்வே இருக்காது. மதியம் விறகு வெட்ட போய்டுவேன். இப்ப அந்த நேரத்துல கொஞ்சம் கண்ணு அசர முடியுது. இப்பவும் புள்ளைக விவசாயம் பண்ணிட்டுத்தான் இருக்காங்க. அதனால, காய்கறிங்க எல்லாம் காட்ல இருந்தே எடுத்துப்பேன். மளிகை சாமான் பக்கத்துல வாங்கிப்பேன்'' என்ற பாட்டியிடம் எல்லோரும் கேட்கும் அதே கேள்வியை நாமும் கேட்டோம்.

``எப்படி ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுக்க முடியுது பாட்டி?!''

``கடையில நான்தானே எல்லா வேலை களையும் பார்க்குறேன்... அதனால கட்டுப் படியாகிடும். கடன் வாங்கி மளிகை சாமான் எல்லாம் வாங்கி போட்டுக்குவேன். தெனம் வர்ற காசுல, கொஞ்சம் கொஞ்சமா மளிகை கடனை அடைச்சுடுவேன். இப்ப ஹெச்.பி, பாரத்னு ரெண்டு பேரும் எனக்கு இலவச சிலிண்டர் கொடுக்குறாங்க. கேஸ் ஸ்டவ் கனெக்‌ஷனும் கொடுத்துருக்காங்க. அரிசி யும் அப்பப்ப வந்துட்டு இருக்கு. இதெல்லாம் இல்லாமலே ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுத்துட்டு இருந் தேன். இப்போ முடியாதா என்ன?!'' என்று கேட்கும் பாட்டி, கடைக்கு வெளியே தயங்கியபடி நின்றிருந்த நான்கு சிறுவர்களை கவ னித்து, ‘அட உள்ள வாங்க சாமிகளா... காசெல்லாம் வேணாம் சாப்பிடுங்க' என்று பசியாற்றி அனுப்பிவிட்டு தொடர்ந் தார்... “இப்ப சுத்து வட்டார கிராமங்கள், கோயம்புத்தூர் டவுன், ஊட்டி, கேரளானு நிறைய இடத்துல இருந்து, ஏதோ டூரிஸ்ட் இடம் மாதிரி இங்க வந்து சாப்பிட்டுப் போறாங்க கண்ணு. ஞாயித்துக்கிழமை அதிக கூட்டம் வருது. அதனால, அன்னிக்கு ரெண்டு கிலோ எக்ஸ்ட்ராவா மாவு அரைப்பேன். பலர் உதவி பண்ணு வாங்க. காசுக்கு வழியில்லாத சிலர் சாப்பிட்டு அந்த திருப்தியை மட்டும் கொடுத்துட்டுப் போவாங்க. சிலவங்க வர்றப்ப இட்லி முடிஞ்சு போயிருக்கும். ‘பரவாயில்லை பாட்டி, உங்கள பார்த்ததே சந்தோஷம்’னு சொல்லிட்டுப் போவாங்க. இப்படி விதவிதமா மனுஷ, மக்கள பாக்குறதே மனசுக்கு உற்சாகமா, சந்தோஷமா இருக்கு.

முதல்வரா இருந்த எடப்பாடி பழனிசாமி, புது முதல்வராகியிருக்கிற மு.க.ஸ்டாலின்னு பலரும் என்கிட்ட பேசி, ‘எதுன்னாலும் கேளுங்க’னு சொன் னாங்க. இன்னும் எத்தனையோ பெரிய மனுஷங்க நேர்ல வந்து பாக்குறாங்க. நெறய விருது கொடுத்துட்டு இருக்காங்க. அவங்களா பிரியப்பட்டு வீடு, இடம் கொடுக்குறாங்க. இதெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்ல'' எனும் பாட்டி, தன் குடும்பம் பற்றி பகிர்ந்தார்.

கடைசிவரை என் இட்லி ஒரு ரூபாய்தான்! - கோவை 
கமலாத்தாள் பாட்டி

``என் கணவர் இறந்துட்டாரு. எனக்கு ரெண்டு பொம்பளப் புள்ளை, ஒரு பையன். எல்லாருக்கும் கல்யாணம் முடிஞ்சு, கொள்ளுப்பேரன், பேத்திங்க எடுத்தாச்சு. இப்போ என்னை நான்தான் பார்த்துக்குறேன். உடம்புல எந்தப் பிரச்னையும் இல்ல. தண்ணி எடுக்குறதுல இருந்து எல்லா வேலையும் நானேதான் செய்றேன். டயடெல்லாம் ஆகமாட்டேன். வேலை செய்யாட்டி தான் கஷ்டமா இருக்கும். கடைக்கு லீவே இல்ல. எத்தனையோ ஹோட்டல்காரங்க, `எப்படி ஒரு ரூபாய்க்கு கொடுக்குறீங்க?'னு ஆச்சர்யமா கேப்பாங்க. அவங்ககிட்ட நான், `உங்களால ஏன் முடியாதுனா, நீங்க ஆசைப்படறீங்க’னு சொல்லிடுவேன்'' என்று சிரித்த கமலா பாட்டி, நமக்கும் சுடச்சுட இட்லி, கொங்கு ஸ்டைல் குழம்பு, சட்னி யைப் பரிமாறினார்.

ஒரு ரூபாய் இட்லிக்கு சாதாரண சைடிஷ் இருக்கும் என நினைத்தால், காலிஃபிளவர், முருங்கை, உருளை, பருப்பு எல்லாம் போட்டு சுறுக்கென்று கொங்கு ஸ்டைலில் ஒரு குழம்பும், அருமையான தேங்காய்ச் சட்னியுமாக இட்லிகளை கணக்கே இல்லாமல் இறங்கவைத்தது. ‘வகுற நொம்ப சாப்பிடுங்க கண்ணு’ என இட்லிகளை அடுக்கிக்கொண்டே இருந்தார் பாட்டி.

``ருசியும் தரமும் சூப்பர்... எப்படி பாட்டி...'' என்றோம். ``மத்த கடை எல்லாம் சுவைக்கு என்னன்னமோ போடுவாங்க. அளவு அதிகமா கிடைக்க கண்டதை கலப்பாங்க. நான் வீட்டுக்கு செய்யுற மாதிரிதான் செய்வேன். காய்கறிங்க எல்லாம் நம்ம காட்லயே கிடைக்குது. சாப்பிடறவங்க ஆரோக்கியம் முக்கியம்'' என்றவர், தன் ஆரோக்கிய சீக்ரெட்டையும் பகிர்ந்தார்.

``அந்தக் காலத்துல சோளக்களி, ராகிக்களி, கம்மஞ்சோறு, சாமைச்சோறுதான் சாப்பிடுவோம். எப்பவாச்சுதான் அரிசி சோறுல கை வைப்போம். நான் இப்பவும் ஒருவேளை களிதான் சாப்பிடுவேன். அரிசு சோறு ரொம்ப ரொம்ப கம்மியாதான் தொடுவேன். கடைக்கு வர்றவங்க, ‘பாட்டி நீங்க நூறு வயசு வரைக்கும் நல்லாருக்கணும்’னு சொல்றாங்க. இனி நான் காசு சம்பாதிச்சு என்ன பண்ணப்போறேன் கண்ணு? இப்போ சொல்றேன்... என் கடைசி காலம்வரை என் இட்லி ஒரு ரூபாய்தான்'' என்றார் உறுதியான குரலில்.

கமலா பாட்டிக்கு அன்பும் நன்றியும்!

பாட்டி சொன்ன `கொங்கு ஸ்டைல் குழம்பு' ரெசிப்பி...

``துவரம்பருப்பை நல்லா வேகவெச்சிருவேன். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை, பட்டை, கிராம்பு, வெந்தயம் எல்லாத்தையும் சேர்த்து அரைச்சுக்குவேன். கிடைக்குற காய்கறிகளைத் தண்ணியில வேகப்போடுவேன். எல்லாம் வெந்ததும் வேகவெச்ச பருப்பு, ஆட்டின மசாலா, சாம்பார்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு எல்லாம் போட்டு கொதிக்கவிடுவேன். அப்புறம் புளியைக்கரைச்சு ஊத்தி, கொதிவந்ததும் தேங்காய் அரைச்சு ஊத்துவேன். குழம்புகூடி வந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை தாளிச்சுக் கொட்டி இறக்கிடுவேன். இதுக்கான அளவெல்லாம் தெரியாது... எல்லாமே என்னோட கையளவுதான், கைப்பக்குவம்தான்.''