Published:Updated:

வெங்‘காயம்’! - அலறும் ஆட்சியாளர்கள்

விவசாயிகள், நுகர்வோர்கள் மட்டுமல்லாது ஆட்சியாளர்களையும் அலறவைக்கும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு. ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக வெங்காய விலை கிடுகிடு வென உயர்ந்து, அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பிரீமியம் ஸ்டோரி

மகாராஷ்டிரம்தான் டாப்!

மிழகத்தைப் பொறுத்தவரை வீடுகளில் சின்ன வெங்காயம் அளவுக்குப் பெரிய வெங்காயம் பயன்படுத்துவதில்லை. உணவகங்களில்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். பெரிய வெங்காயம் வடமாநிலங்களில்தான் அதிகம் விளைகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரம்தான் வெங்காயம் அதிகம் விளையும் மாநிலம். கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் கடுமையான வறட்சி, மழை என மாறி மாறி இருந்ததால், வெங்காய விளைச்சல் கடுமையான பாதிப்புக்குள்ளானது. இதனால், கடந்த ஆண்டு நாசிக்கில் வெங்காய விவசாயிகள் இருவர் தற்கொலை செய்துகொண்ட துயரச் சம்பவமும் நடந்தது.

கணிக்க இயலாத அளவுக்குப் பருவநிலை மாறுவதால் இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் சாகுபடியில் ஈடுபடவில்லை. இதனால், இந்தியாவின் வெங்காய உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி லாபம் பார்க்கத் துடித்த வியாபாரிகள், கடந்த செப்டம்பரில் அதிகளவு வெங்காயப் பதுக்கலில் ஈடுபட்டனர். அதனால், வெங்காயம் விலை கிலோ 80 ரூபாய் வரை உயர்ந்தது. மக்கள் கொந்தளித்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ஏற்றுமதிக்குத் தடை விதித்தது, மத்திய சேமிப்பு கிடங்குகளிலிருந்த வெங்காயத்தை வெளிச்சந்தைக்குக் கொண்டுவந்தது எனப் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது மத்திய அரசு. அதன் பிறகுதான் கிலோ 40 ரூபாய் அளவுக்கு விலை குறைந்தது. தீபாவளிக்குப் பிறகு இன்னும் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போது பெரிய வெங்காயம் கிலோ 80 ரூபாய் வரையும் சின்ன வெங்காயம் 100 ரூபாய் வரையும் விற்பனை யாகிறது. வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா சென்றுவிட்டது.

இது முதன்முறையல்ல!

வெங்காய விலை உயர்வு ஆட்சியாளர்களை அலறவைப்பது இது முதன்முறையல்ல. 1980-ம் ஆண்டு, ஜனதா கூட்டணி ஆட்சியின்போது இந்தியாவில் வெங்காயத்தின் விலை கிலோ ஐந்து ரூபாய் வரை உயர்ந்தது. அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், வெங்காய விலை உயர்வுதான் காங்கிரஸ் கட்சியின் பிரசார ஆயுதமாக இருந்தது. வெங்காய விலை உயர்வால் ஆட்சியாளர்கள்மீது மக்களுக்கிருந்த கடுமையான அதிருப்தியைப் பயன்படுத்தி இந்திரா காந்தி பிரதமர் ஆனார்.

வெங்‘காயம்’! - அலறும் ஆட்சியாளர்கள்

1998-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியிலும் வெங்காய விலை உயர்வு பெரும் பிரச்னையாக எழுந்தது. அப்போது ராஜஸ்தான், டெல்லி ஆகிய இரண்டு மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் வெங்காய விலை உயர்வை மையமாக வைத்து பிரசாரம் செய்த காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.

2010-ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சி. அப்போதும் உயர்ந்தது வெங்காய விலை. அதுவரை வெங்காயத்தால் பலனடைந்த காங்கிரஸ் திணறியது. பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்திப் பல ஆண்டு பகையைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்தன. ஆனால், ஏற்றுமதிக்குத் தடை விதித்து பிரச்னையைச் சமாளித்தார் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங். அதன் பின்னர், 2015-ம் ஆண்டும் பா.ஜ.க அரசு வெங்காய விலை உயர்வு பிரச்னையை எதிர்கொண்டது. தற்போது ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக வெங்காய விலை உயர்ந்திருப்பது பா.ஜ.க அரசுக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மழைதான் காரணம்!

மிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சந்தை தகவல் மையத்தின் முன்னாள் தலைவரும் பேராசிரி யருமான ரவீந்திரனிடம் பேசினோம். ‘‘இந்தியாவைப் பொறுத்தவரை மகாராஷ் டிரத்தில்தான் 30 சதவிகித வெங்காயம் உற்பத்தியாகிறது. மத்தியப் பிரதேசத்தில் 16 சதவிகிதம், கர்நாடகாவில் 11 சதவிகிதம் உற்பத்தியாகிறது. இந்தியாவின் மொத்த வெங்காய உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 1.2 சதவிகிதம்தான்!

வெங்‘காயம்’! - அலறும் ஆட்சியாளர்கள்

மழைக்காலங்களில் வெங்காய விலை ஏறுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இந்த முறை தொடர்ச்சியான விலையேற்றம் இருக்கிறது. இதற்கு வறட்சியும் முக்கிய காரணமாகிவிட்டது. அறுவடைக்குத் தயாராக உள்ள வெங்காயத்தையும் அறுவடை செய்ய முடியாத அளவுக்கு, மழை நீடிக்கிறது. இதனால், வயலிலேயே வெங்காயம் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகளவில் இந்திய வெங்காயத்துக்குதான் நல்ல வரவேற்பு இருக்கிறது. இப்போது நாம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரைப் பெரிய வெங்காயச் சாகுபடி மிகவும் குறைந்துவிட்டது. சின்ன வெங்காயம்தான் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. இது தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டுமே ஒரே நேரத்தில் விலை உயராது. இந்த முறைதான் அதுவும் நடந்துள்ளது. மழைக்காலம் முடிந்து அடுத்த விளைச்சல் சந்தைக்கு வரும்போதுதான் விலை குறையும். சில்லறை விற்பனையில் கிலோ 100 ரூபாய் வரை விற்பனையா கிறது. ஆனால், விவசாயிகளுக்கு கிலோவுக்கு 40 ரூபாய்க்கு மேல் கிடைப்பதில்லை’’ என்றார்.

அனைத்து மாதங்களிலும் சாகுபடி தேவை!

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன், ‘‘வெங்காயம் 70 நாள்களில் அறுவடையாகக் கூடிய பயிர். தற்போது வீரிய ரக வெங்காயம்தான் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. அதற்குப் பட்டம் தேவையில்லை. ஆண்டு முழுவதும் விளைவிக் கலாம். ஆனாலும், தமிழக விவசாயிகள் ஜனவரி முதல் மே மாதம் வரைதான் அதிகளவில் வெங்காயச் சாகுபடி செய்கிறார்கள். மழைக்காலங்களில் வெங்காயம் இருக்கும் திசை பக்கம்கூட விவசாயிகள் திரும்பிப் பார்ப்பதில்லை. ஆனால், தண்ணீர் தேங்காத மேட்டுப்பாங்கான நிலங்களில் மழைக்காலத்திலும் வெங்காயச் சாகுபடி செய்யலாம்.

வெங்‘காயம்’! - அலறும் ஆட்சியாளர்கள்

குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே அதிகம் விளைவிக்கப்படுவதால், சந்தையில் அடிக்கடி வெங்காயத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. வரத்து அதிகமாக இருக்கும் நேரங்களில் மிகவும் குறைந்த விலையும், வரத்து இல்லாத காலங்களில் அதிக விலையும் விவசாயிகளுக்குக் கிடைக்கிறது. திடீர் திடீரென உயரும் வெங்காய விலை நுகர்வோருக்கும் கலக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஆண்டு முழுவதும் சீரான வரத்து இருந்தால், எப்போதும் நிலையான விலை கிடைக்க வாய்ப்புள்ளது” என்றார்.

தற்காலிகத் தீர்வு ஏற்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், அனைத்து காலகட்டத்திலும் விவசாயிகள் வெங்காயம் விளைவிக்கத் தேவையானத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் தீட்ட வேண்டும்.

வெங்‘காயம்’! - அலறும் ஆட்சியாளர்கள்

வெங்காய வரலாறு!

வெங்காயத்தை உணவுப் பொருளாக அறிமுகப்படுத்தியவர்கள் கிரேக்கர்கள்தான். வெங்காயத்தின் தாயகம் இந்தியா என்றாலும் கிரேக்கர்கள் மூலமாகத்தான் உலகம் முழுவதும் பரவியது. பிரமிடுகள் கட்டிய கட்டடத் தொழிலாளர்களுக்குக் கஞ்சி போன்ற திரவ உணவுதான் அந்தக் காலத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ‘சைட் டிஷ்’ ஆக அறிமுகமானது தான் வெங்காயம். இதில் சல்ஃபர் அதிகம் உள்ளதால், பதப்படுத்தும் தன்மை இருக்கிறது. அதனால் இறந்த உடலைப் பிரமிடுகளில் பதப்படுத்தவும் கிரேக்கர்கள் வெங்காயத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

வெங்காயம் விற்ற பணத்தில் புல்லட்கள்!

மிழகத்தில் 1970-களில் பெரிய வெங்காயம் சாகுபடி துவங்கியது. பல்லடம், கொடுவாய், பொங்கலூர் பகுதிகளில் 90 சதவிகித விவசாயிகள் பெல்லாரி எனப்படும் பெரிய வெங்காயச் சாகுபடியில் ஈடுபட்டார்கள். திருநெல்வேலி மாவட்டம் பாவூர் சத்திரம் பகுதியிலும் பெரிய வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் வெங்காயம் விற்று லட்சாதிபதியானவர்கள் அதிகம். பல்லடம் அருகே 1978-ம் ஆண்டு கழுவேறிபாளையம் என்ற கிராமத்தில் வெங்காயம் விற்ற பணத்தில் ஒரே நேரத்தில் 18 புல்லட் மோட்டார் சைக்கிள்கள் வாங்கப்பட்டது அப்போதைய தலைப்புச் செய்தி.

தமிழகத்தில் தற்போது பெரிய வெங்காயச் சாகுபடி மிகவும் அரிதாகிவிட்டது. ஆந்திராவுக்குச் சென்று விதை வாங்கிவந்து நாற்றங்கால் விட்டு நடவுசெய்ய வேண்டும். மகசூல் நாள்கள் அதிகம். நாற்று முறை நடவு, அதிக மகசூல் செலவு போன்ற காரணங்களால் பெரிய வெங்காயச் சாகுபடி குறைந்துவிட்டது. தற்போது சின்ன வெங்காயம்தான் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில வருடங்களாகத் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலவும் வறட்சி காரணமாக சின்ன வெங்காயச் சாகுபடியும் குறைந்துவிட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு