Published:Updated:

ஆசையைத் தூண்டும் ஆன்லைன் ஆப்கள்... கடன் வலையில் சிக்காமல் தப்பிக்கும் வழிகள்!

ஆன்லைன் ஆப்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன் ஆப்கள்

LOAN

ஆசையைத் தூண்டும் ஆன்லைன் ஆப்கள்... கடன் வலையில் சிக்காமல் தப்பிக்கும் வழிகள்!

LOAN

Published:Updated:
ஆன்லைன் ஆப்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன் ஆப்கள்
ந்த ஆண்டில் கொரோனா தொற்றுநோய் காரணமாக, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்ததுடன், பலரும் கடன்காரர்களாக மாறியிருக் கிறார்கள். இந்த நிலையில், உடனடி யாகக் கடன் வேண்டும் என்று நினைக்கும் நடுத்தர வர்க்கத்தினரைக் குறிவைத்து, கடன் கொடுக்க பல்வேறு ‘லோன் ஆப்ளிகேஷன்கள்’ களமிறங்கியிருக்கின்றன. இந்த ஆப்ஸ்களில் சென்று சில அடிப்படை விஷயங்களை மட்டும் நாம் தந்தால் போதும், அடுத்த சில மணி நேரத்தில் கடன் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்துவிடுகிறார்கள்.

அதிகரிக்கும் ‘லோன் ஆப்’கள்...

சமீப காலமாக, இந்தியாவில், ஐ கிரெடிட், ஸ்மார்ட் காயின், கேபிட்டல் ஃபர்ஸ்ட், கேஷ் இ, கேஷியா உள்ளிட்ட ‘லோன் ஆப்’களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. உங்களிடம் ஸ்மார்ட் ஃபோன் இருந்தால் போதும், உங்களுக்கு எளிதில் கடன் கிடைத்து விடும். நீங்கள் எந்த ஆவணத்தையும் தூக்கிக்கொண்டு அலைய வேண்டிய தில்லை; எந்த விண்ணப்பத்தையும் நீட்ட வேண்டியதில்லை. ‘லோன் ஆப்’கள் மூலம் சிறிய மற்றும் பெரிய தொகைக் கடன்களை மிகவும் சுலபமாக வாங்கிவிட முடியும் என்கிற மாதிரி பல அனுகூலங்கள் இந்த லோன் ஆப்பில் உள்ளன.ஆனால், கடன் வாங்கியபிறகு, லோன் ஆப் நிறுவனங்கள் எப்படி நடந்து கொள்ளும் என்பதை குணசீலனின் கதையைக் கேட்டால், நமக்குத் தெரியும்.

பிரபு கிருஷ்ணா, பி.பத்மநாபன்
பிரபு கிருஷ்ணா, பி.பத்மநாபன்

மாட்டிக்கொண்ட குணசீலன்...

குணசீலன் என்பவருக்கு மோச மான நிதிச்சிக்கல். ஏற்கெனவே கடன் கொடுத்தவர் கழுத்தை நெருக்க, செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருந்த நேரம் அது. அவருடைய நண்பர் ரமேஷிடம், தனது கடன் பிரச்னைகளைச் சொல்லி புலம்பிக்கொண்டிருந்த போது, ரமேஷ் சொன்ன ஐடியா குணசீலனுக்கு சரியாகப்பட்டது.’ ‘லோன் ஆப்’ மூலம் இன்ஸ்டன்ட் கடன் வாங்கி, தற்காலிகமாகக் கடன் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்’ என்பதுதான் அந்த ஐடியா.

பிரபலமான ‘லோன் ஆப்’ ஒன்றின் வாயிலாக, கடனுக்கு விண்ணப்பிக்க, ஒரு சில நிமிடங்களிலேயே கடன் தொகை குணசீலனின் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆனது. கடன் கொடுத்தவருக்கு பணத்தைத் திரும்பத் தந்துவிட்டு, ‘அப்பாடா, ஒரு வழியாக பிரச்னை முடிந்தது’ என நினைத்தவருக்கு, மிகப் பெரிய பிரச்னையே இனிதான் ஆரம்ப மாகிறது என்று தெரியவில்லை.

அடுத்தடுத்த மாதங்களில் ‘லோன் ஆப்’ மூலம் வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலை குண சீலனுக்கு. கால அவகாசம் கேட்டார். கடன் தந்த ஆப் நிறுவனம் தரவில்லை. ‘லோன் ஆப்’ நிறுவனத்தினர், குணசீலணுக்கு போன் செய்து வெளியில் சொல்ல முடியாத டார்ச்சர்களை எல்லாம் கொடுக்க ஆரம்பித்தனர். ‘எளிதில் கடன் கிடைக்கிறதே’ என்று யோசிக்காமல் லோன் ஆப் மூலம் கடன் வாங்கியது தவறு’ என்பது, அப்போதுதான் அவருக்குப் புரிந்தது.

லோன் ஆப் சிக்கல்கள்...

‘லோன் ஆப்’ பயன்பாட்டி லுள்ள சிக்கல்கள் என்ன, லோன் ஆப் மூலம் கடன் வாங்குவதால் விளையும் நிதிப் பிரச்னைகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள தொழில்நுட்ப வல்லுநரான பிரபு கிருஷ்ணாவிடம் பேசினோம்.

ஆசையைத் தூண்டும் ஆன்லைன் ஆப்கள்... கடன் வலையில் சிக்காமல் தப்பிக்கும் வழிகள்!

‘‘நீங்கள் செல்போனில் லோன் ஆப்பை டவுன்லோடு செய்கிறீர்கள். அது, உங்கள் இ-மெயில் கணக்கை எடுத்துக் கொள்ளலாமா எனக் கேட்கும். நீங்கள் ‘ஓகே’ என அழுத்துவீர்கள். பின்பு, ஃபேஸ்புக் கணக்கைக் கேட்கும். அதற்கும் ‘ஓகே’ என அழுத்துவீர்கள். பின்பு, உங்கள் சம்பள விவரங்கள், ஆதார் எண் என எல்லாவற்றையும் ஆப் வாயிலாகவே கொடுப்பீர்கள். இதன்பிறகு, உங்களுக்கு லோன் கிடைத்துவிடும்.

இந்த வகைக் கடன்களுக்கு அடமானமாக எதையும் கேட்க மாட்டார்கள் என்பது நல்ல விஷயமாக உங்களுக்குத் தோன்றி னாலும், உங்களுடைய ஸ்மார்ட் போனில், நீங்கள் வைத்திருக்கும் அலைபேசி எண்கள், தனிப்பட்ட விஷயங்கள் என நீங்கள் நினைக்கும் புகைப்படங்கள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு எண்கள் என அனைத்து விவரங் களையும் அடமானம் வைத்துதான் கடன் வாங்குகிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

ஆப்ஸில் கடன் வாங்கினாலும் தப்பிக்க முடியாது...

‘நேரில் சென்று வட்டிக் கடையில் கடன் வாங்கினால் தானே பணத்தைக் கேட்டு பிரச்னை செய்வார்கள்; ஆப் மூலம் பணம் பெற்றால் என்ன செய்துவிட முடியும்’ என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். என்னைக் கேட்டால், லோன் ஆப்கள் மூலம் பணம் பெறுவதுதான் மிகப் பெரிய சிக்கலே. ஏனெனில், நீங்கள் நேரடியாக வங்கிக்கோ, தனி நபரிடமோ சென்று கடன் பெறும்போது, அவர்கள் சொல்லும் கடன் விதிமுறை களைக் கேட்டு தெரிந்த பிறகு, அவை உங்களுக்கு சரிப்பட்டு வரும் என்றால் மட்டுமே கடன் வாங்குவீர்கள். இல்லையெனில், வாங்க மாட்டீர்கள். ஆனால், லோன் ஆப்பில் நீங்கள் ‘I Agree’ என அழுத்தினால்தான் அந்த ஆப் வேலை செய்யும். இதன் மூலம், அவர்களின் எல்லா சட்டதிட்டங்களையும் ஏற்றுக் கொள்ளக் கட்டாயப்படுத்து வார்கள்.

ஆசையைத் தூண்டும் ஆன்லைன் ஆப்கள்... கடன் வலையில் சிக்காமல் தப்பிக்கும் வழிகள்!

தனியார் மூலம் பணம் வசூல்...

இந்த ஆப்கள் அனைத்தும் தனியார் ஏஜென்சிகள் மூலமே பணத்தை வசூலிக்கின்றன. கடன் பணத்தை வசூலிக்க அவர்கள் பலவிதமான வழிமுறை களைப் பின்பற்றுவார்கள். இது குறித்து லோன் ஆப் நிறுவனங் களிடம் புகார் செய்தால், எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். இந்தத் தனியார் எஜென்சியை நடத்துபவர்கள் முறையான அனுமதி பெற்று அலுவலகம் எல்லாம் வைத் திருக்க மாட்டார்கள் விதி முறைகளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் எங்கிருந்தோ இயங்கும் இத்தகைய கும்பல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது அவ்வளவு சுலபமல்ல.

என்றாலும், இதுபோன்ற தகவல் திருட்டுகள், சைபர் கிரைமில் வரும். இது தொழில் நுட்ப சட்டம் 2000-ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கம் இல்லாமல் உடனடியாக காவல்துறை மற்றும் நீதி மன்றத்தை அணுக வேண்டியது அவசியம்” என்றார்.

எதன் அடிப்படையில் கடன்?

ரூ.1,000 தொடங்கி ரூ.5 லட்சம் வரை இந்த ஆன்லைன் ஆப்கள் மூலம் கடனாகப் பெற முடியும். லட்சங்களில் கடன் பெற வேண்டு மென்றால், அதற் கேற்றாற்போல மாதச் சம்பளம் இருக்க வேண்டும் என்பது லோன் ஆப்கள் விதிக்கும் நிபந்தனை. சில ஆப்களில் ரூ.20,000 வரை கடன் பெறுவதற்குச் சம்பளச் சான்றிதழ் கூட தேவையில்லை.

இப்படி வாங்கும் கடனுக்குத் தேர்வு செய்யும் திட்டத்தைப் பொறுத்து அதற்கான கால அவகாசத்துக்குள் வட்டியுடன் சேர்த்து கடனைத் திரும்பிச் செலுத்த வேண்டும். இன்னும் சில ஆப்களில் மாதம்தோறும் வட்டி செலுத்தும்படியான திட்டங்கள் இருக்கின்றன.

32% வட்டி..

மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை யைச் சம்பளமாகப் பெறுபவர்களாக இருந்தால் மட்டுமே இதுபோன்ற திட்டங்களில் கடன் பெற முடியும். இதற்காக வசூலிகப்படும் செயல்பாட்டுக் கட்டணம் மிக மிக அதிகமாகும். வட்டி விகிதமும் 32 சதவிகிதத்துக்கு மேல் வசூலிக்கப்படும். ‘இது மாறுதலுக்கு உட்பட்ட வட்டி விகிதம்’ என்பதையும், ‘காலத்துக் ஏற்றாற்போல விதிமுறை களில்கூட மாற்றங்கள் இருக்கும்’ என்பதையும் சில லோன் ஆப்கள் தங்களுடைய ‘டேர்ம் அண்டு கண்டிஷன்களில்’ தெளிவாகவே சொல்லி இருப்பார்கள்.

அலையாமல் வாங்கலாம்...

லோன் ஆப் மூலம் கடன் வாங்குவதால் என்னென்ன நிதிப் பிரச்னைகள் விளையும் மற்றும் அவசர தேவைக்கு லோன் ஆப்களை அணுகாமல், வேறு எந்தக் கடன்களை மக்கள் பரிசீலிக்கலாம் என்பது குறித்து நிதி ஆலோசகர் பி.பத்ம நாபனிடம் பேசினோம்.

“வங்கியில் கடன் பெற வேண்டும் அலைய வேண்டும். இந்த ஆப்கள் மூலமெனில் உடனே வாங்கிவிடலாம் என்பதுதான் இந்தக் கடனை நோக்கி பலரும் வரக் காரணம். அதனால்தான் பலரும் ஆன்லைன் லோன் ஆப்கள் மூலம் கடன் பெற விரும்புகிறார்கள். இது ஒருவகையில் அனுகூலமாக இருந்தாலும், அதுவே ஆபத்தாகவும் அமைந்துவிடுகிறது. சின்ன மீனைப் போட்டு, பெரிய மீனைப் பிடிக்கும் கதைதான் இது.

கடன் வாங்கும்முன் கேட்க வேண்டிய கேள்விகள்...

அவசரத் தேவைக்கு கடன் வாங்கலாம் என்று யோசிக்கும் பலரும், எப்படியாக இருந்தாலும், ஏதாவது ஒரு வகையில் கடன் தொகை கையில் கிடைத்தால் போதும் என்றுதான் யோசிக் கிறார்களே தவிர, அந்தக் கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு, கடன் காலத்துக்குள் நாம் திருப்பிச் செலுத்தும் தொகை எவ்வளவு, வாங்குகிற கடனை நம்மால் திருப்பிச் செலுத்த முடியுமா என்பது பற்றி எல்லாம் யோசிப்பதே இல்லை. எந்தவொரு கடன் வாங்குவதாக இருந்தாலும் இந்தக் கேள்விகளை நீங்கள் கேட்டு, தெளிவான பதில் கிடைத்தால் அந்தக் கடன் வாங்கும் வேலையில் இறங்க வேண்டும்.

செயல்பாட்டுக் கட்டணம் அதிகம்...

லோன் ஆப் மூலமாகக் கடன் பெறும்போது, அதற்கான செயல் பாட்டுக் கட்டணம் மிகவும் அதிக மாக வசூலிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், கந்துவட்டியை விடவும் அதிகமான வட்டியை லோன் ஆப் நிறுவனங்கள் வசூலிக் கின்றன. இப்படியான ஒரு கடன், நமது கடன் சுமையை அதிகரிப் பதுடன், குடும்பத்தின் நிதிப் பிரச்னையை சரிசெய்ய எந்த வகை யிலும் பயன்படாது. அதனால் ஆன் லைன் லோன் ஆப்கள் மூலம் கடன் பெறாமல் இருப்பதுதான் நல்லது.

இதற்கு மாற்றாக, வீட்டிலோ, வங்கி லாக்கரிலோ தங்க நகைகள் இருந்தால் அதை அடமானம் வைத்து கடன் வாங்க முதலில் பரிசீலிக்கவும். ஏனெனில், இதற்கான வட்டி விகிதம் மிக மிகக் குறைவு. இரண்டாவதாக, அவசரத் தேவைக்கு பரிசீலிக்க வேண்டிய கடன், வங்கித் தனிநபர் கடன்தான். இந்தக் கடனுக்காக வங்கியை அணுகும் முன்பு, நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வட்டியில்லாமல் கடனைக் கேட்டுப் பாருங்கள். அல்லது அவர்களிடமே குறைந்த வட்டியில் கடனை வாங்கினாலும் பரவாயில்லை. அப்படி கிடைக்காதபட்சத்தில், வங்கியில் தனிநபர் கடன் பெறுவது நல்லது.

மூன்றாவதாக, தேவையைப் பொறுத்து கிரெடிட் கார்டு கடனைக் கூட பரிசீலிக்கலாம். அதாவது, வீட்டு உபயோகப் பொருள்களை அவசர மாக வாங்க வேண்டும் என்பதற் காகத்தான் நீங்கள் லோன் ஆப்களை அணுகுவதாக இருந்தால், வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கு வதற்கென்றே பல வங்கிகள் ஜீரோ பர்சன்டேஜ் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. அதை வாங்கி முறையாகப் பயன்படுத்தலாம்’’ என்றார்.

ஆப்கள் மூலமான கடன் நம்மை எளிதில் சிக்க வைக்கும் சிலந்தி வலை போன்றவை. அவற்றை அண்டாமல் இருப்பது நமக்கு நல்லது!

அந்தரங்க புகைப்படம் அனுப்பி, பெண்ணை மிரட்டிய ‘லோன் ஆப்’ கும்பல்!

மீபத்தில் சென்னையைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு கொரோனா ஊரடங்கு நேரத்தில் அவசரமாகப் பணம் தேவைப்பட்டது. கையிலிருந்த காசு முழுவதும் செலவாகிவிட்ட காரணத்தால், ஆன்லைன் லோன் ஆப் மூலம் 20,000 ரூபாய் கடன் பெற்றார் அந்தப் பெண். `ஐ கிரெடிட்’ என்ற லோன் ஆப் மூலம் ஏழு நாள்களில் 7,000 ரூபாய் வட்டியோடு சேர்த்து மொத்தம் 27,000 ரூபாயைத் திருப்பிச் செலுத்துவதற்கான திட்டத்தைத் தெரியாமலே தேர்வு செய்து கடன் பெற்றார்.

ஏழு நாள்களுக்குப்பிறகு, அவர் பணம் செலுத்தத் தவறியதால், பல சங்கடங்களைச் சந்தித்தார் அந்தப் பெண். முதலில், கடனை செலுத்தச் சொல்லி அந்தப் பெண்ணுக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் வந்தன. அவர், `எனக்கு அவகாசம் வேண்டும்’ என்று சொல்லி நாள்களைக் கடத்த, பின்னர், அந்தப் பெண்ணின் கைப்பேசியிலுள்ள அனைத்து எண்களும் டெக்னாலஜி மூலமாகத் திருடப்பட்டன. திருடப்பட்ட அனைத்து எண்களுக்கும் அந்தப் பெண் குறித்த கடன் விவரங்கள், ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து அனுப்பப்பட்டிருக்கின்றன. இதையடுத்து அந்தப் பெண்ணின் கைப்பேசியிலிருந்த சில அந்தரங்கப் புகைப்படங்கள், அவருக்கே வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், புகைப்படங்கள் அனுப்பப்பட்ட எண்ணுக்குத் தொடர்புகொண்டு விசாரிக்க, ``நீங்கள் பணம் பெற்ற நிறுவனத்திலிருந்துதான் இதுபோலச் செய்யச் சொன்னார்கள். ஒழுங்காகப் பணத்தைக் கட்டிவிடுங்கள்’’ என்ற பதில் கிடைத்திருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து ‘ஐ கிரெடிட்’ ஆன்லைன் லோன் ஆப் நிறுவனம், “கடன் வாங்கிய வாடிக்கையாளர்களை நாங்கள் மிரட்டுவதில்லை. இது போன்ற காரியத்தைச் செய்வது எங்கள் நிறுவனத்தின் வழக்கமும் இல்லை’’ என்று சொல்லி பணம் வசூலிக்கும் தனியார் ஏஜென்சிகள்மீது பழியைப் போட்டிருக்கின்றன” என விளக்கம் அளித்தது. இந்த இளம்பெண் அனுபவித்த தொல்லைகளை எல்லாம் அனுபவிக்கத் தயார் என்பவர்கள் ஆப்ஸ் மூலம் தாராளமாகக் கடன் வாங்கலாம்!

- நா.வருண்

பிட்ஸ்

ருகிற 21 - 23-ம் தேதி வரை ஐ.பி.ஓ மூலம் பங்குச் சந்தையில் தனது பங்குகளை வெளியிட இருக்கிறது ஆண்டனி வேஸ்ட் ஹாண்ட்லிங் செல் நிறுவனம். ஒரு பங்கு விலை ரூ.313-315.

பிட்ஸ்

2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 2251.25 மெகாவார்ட்ஸ் அலைக்கற்றை விற்பதன்மூலம் ரூ.3,92,332 கோடியைத் திரட்ட முடிவு செய்திருக்கிறது. இதை வாங்கும் நிறுவனங்கள் அடுத்த 20 ஆண்டுகளுக்கு இதைப் பயன்படுத்தலாம்!

பிட்ஸ்

லகப் புகழ்பெற்ற பி.எம்.டபிள்யூ (BMW) பைக்குகளில் 17 சதவிகித பைக்குகள் சென்னைக்கு அருகில் உள்ள டி.வி.எஸ் மோட்டார் தொழிற்சாலை யிலும், ஓசூரில் உள்ள தொழிற்சாலை யிலும் தயாரிக்கப் படுகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism